என் பார்வையில் கண்ணதாசன்
–சு. சித்ரா தாமோதரன்.
என் பார்வையில் கண்ணதாசன்
பணம் தான் முக்கியம் என்று நினைப்பவனுக்கு மகிழ்ச்சி இருப்பதில்லை. மகிழ்ச்சி மட்டுமே போதும் என்று நினைப்பவனுக்கு போதிய பணம் இருப்பதில்லை. தூங்குபவனுக்கு பஞ்சு மெத்தை கிடைப்பதில்லை. பஞ்சு மெத்தை இருப்பவனுக்கு தூக்கம் வருவதில்லை. இப்படித்தான் – வீட்டிலிருக்கும் அரிசியை விற்று மது அருந்துபவனின் பிள்ளை பசிக்காக மதுப்பாட்டில்களை பொறுக்கி விற்பது போல வாழ்க்கை பல முரண்பாடுகளைக்கொண்டது.
இந்த வாழ்க்கையில் தான் எத்தனை தோல்விகள்? விரக்திகள்? கஷ்டங்கள்? வாழ்க்கை தரும் இன்னல்களை துணிந்து சந்தித்து – மகிழ்ச்சியாக வாழ்தல் தான் வாழ்வின் அடிப்படை நோக்கம். நாம் வேதனையாக இருக்கும்போது நம் மனதுக்கு மிகவும் பிடித்தவரின் அருகாமை எவ்வளவு இதமாக இருக்குமோ அதே அளவுக்குத்தான் வாழ்க்கையில் கஷ்டப்படும் ஒவ்வொரு மனிதனுக்கும் கண்ணதாசனின் தத்துவப் பாடல்கள் மனதிற்கு இதமளிக்கிறது.
பூமிக்கு அடியில் தான் புதையல் கிடைக்கும். பூமிக்கு மேலே ஒரு புதையல்- அவர்தான் கண்ணதாசன். அவர் சக மனிதனை படித்தார். ஆதலால் வாழ்க்கையோடு இணைந்த பாடல்களை படைத்தார். அவரின் ஒவ்வொரு பாடலும் வைர கிரீடத்தில் உள்ள மாணிக்கக்கல் போன்றது. அரசுப்பேருந்து செல்லாத கிராமத்துக்குக்கூட ஆங்கிலப் பள்ளி வேன்கள் எளிதில் சென்று வருவதைப் போல, மேல்தட்டு மக்கள் மட்டுமே படித்து புரிந்துகொள்ளும் தினசரி வாழ்க்கைக்குத் தேவையான அத்தனை தத்துவங்களையும் எளிமைப்படுத்தி சாமான்ய மக்களிடம் கொண்டு சேர்க்க முடிந்ததே அவரின் சிறந்த பலம்.
நீண்ட நேரம் தூங்கி சோம்பேறி என்ற பெயர் வாங்காதே, அடுத்தவர் பொருளை திருடாதே, ஏமாற்றாதே, நீயும் ஏமாறாதே என்று வளரும் பிள்ளைகளுக்கு அவரை விட புத்திமதியை மிகச் சிறப்பாக சொல்பவர் யார் உண்டு?
“தைரியமாக சொல் நீ மனிதன் தானா? மனிதன் தானா?” என்று மது அருந்தும் மனித சமுதாயத்தை பார்த்து நேருக்கு நேர் கேட்ட தைரியம் அவருக்கு மட்டுமே உரித்தாகும்.
மனதுக்கு வாஞ்சையான வார்த்தைகளை விட அசல் வாழ்க்கையைச் சொல்லும் வார்த்தைகளுக்கு வலிமை அதிகம். சந்தோஷமாய் இருப்பவனை விட கஷ்டத்தில் இருப்பவனுக்குத்தான் அவரின் தத்துவப்பாடல்களின் அர்த்தம் மிகத் தெளிவாய் புரியும்.
அகல் விளக்கின் திரியைத் தூண்டி விடுவது போலத்தான் அவரின் ஒவ்வொரு பாடலும் நம்பிக்கையைத் தூண்டும். வாழ்க்கையில் தற்கொலை முடிவு வரை சென்றவர்கள் அவரின்,
“மயக்கமா? கலக்கமா?
மனதிலே குழப்பமா?
வாழ்க்கையில் நடுக்கமா?”
என்ற பாடலைக்கேட்டு தங்கள் முடிவை மாற்றிக்கொண்டு மீண்டும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்றால் அது மிகையல்ல.
எந்தப் பயிற்ச்சியாளரும் இல்லாமலே, எந்த பயிற்சியும் எடுக்காமலே மிக வேகமாக ஓடும் வீராங்கனை இந்தக்காலம். காலத்தினாலும் அழிக்க முடியாத பல பாடல்களின் மூலம் அவர் மக்களின் மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார். மானுட சமுதாயமும், அவர்களுக்குத் தத்துவப்பாடல்களின் மேல் உள்ள ஈர்ப்பும் இருக்கும்வரை அவரின் புகழ் சற்றும் குறையாது.
கண்ணதாசனின் பெயரும், புகழும் சிலேட்டில் எழுத்தப்பட்ட எழுத்துக்கள் அல்ல அழிவதற்கு, கல்வெட்டில் பொறிக்கப்பட்ட எழுத்துக்கள் அழியாது.