இந்திய அமெரிக்கர்களின் திருமணப் பிரச்சினைகள்

2

நாகேஸ்வரி அண்ணாமலை

சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு இங்கொருவர் அங்கொருவராக வந்துகொண்டிருந்தாலும் 1960-களிலிருந்துதான் பலர் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களுக்கு படிப்பதற்கும் அதன் பிறகு அமெரிக்காவிலேயே வேலை பார்ப்பதற்கும் வர ஆரம்பித்தனர்.  இவர்களில் பலர் இந்தியா திரும்பிவிட்டனர்.  சிலர் அமெரிக்காவிலேயே தங்கிவிட்டனர்.  அவர்களுடைய பிள்ளைகள் அவர்கள் பெற்றோர்கள் அமெரிக்காவிற்கு வந்த பின் பிறந்தவர்களாகவோ அல்லது சிறு வயதினராகவோ இருந்தவர்கள்.  இந்தப் பிள்ளைகள் பெரியவர்களாக வளர்ந்து வரும்போது அமெரிக்கச் சமூகம் திருமணத்தைப் பொறுத்த வரை நிறைய மாறிவிட்டிருந்தது.

அவர்களுடைய பெற்றோர்களுக்கு இந்தியாவில் போல் தங்கள் பிள்ளைகளைக் கட்டுப்பாடோடு வளர்ப்பதா அல்லது அமெரிக்கப் பிள்ளைகளைப் போல் தாங்களாகவே துணையைத் தேடிக்கொண்டு தனித்து வாழ அனுமதிப்பதா அல்லது இந்தியாவிற்குச் சென்று அங்கு பெண்ணையோ பையனையோ பார்த்துத் தங்கள் பையனுக்கோ பெண்ணிற்கோ திருமணம் முடித்து வைப்பதா என்ற பிரச்னை எழுகிறது.  இதில் பையனைப் பெற்றவர்களை விட பெண்ணைப் பெற்றவர்களுக்குத்தான் கூடுதல் சிரமம்.

பையனைப் பெற்றவர்களுக்குப் பையன் அமெரிக்கப் பெண்களோடு ஊர் சுற்றினாலும், சேர்ந்து வாழ்ந்தாலும் கடைசியில் தாங்கள் பார்த்து முடித்துவைக்கும் பெண்ணைப் பையன் மணந்துகொள்வான் என்ற எண்ணம் இருக்கிறது.  மேலும் இந்தியாவில் ஆணின் கற்பை விட பெண்ணின் கற்பிற்குத்தானே அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம்.  அதனால் தங்கள் பையன் தவறு என்று இவர்கள் நினைப்பதைச் செய்தாலும் கடைசியாக ஒரு இந்தியப் பெண்ணை மணந்துகொண்டு பாந்தமாகக் குடும்பம் நடத்தினால் அது போதும் அவர்களுக்கு.

ஆனால் பெண்கள் விஷயத்தில் இன்னும் கொஞ்சம் கட்டுப்பாடோடு நடந்துகொள்ள விரும்புகிறார்கள். ஆனால் அது அவ்வளவு எளிதல்லை.  பிள்ளைகள் பள்ளியில் படிக்கும்போது மற்றப் பிள்ளைகள் செய்வது போல் செய்ய வேண்டும் என்று விரும்புகிறார்கள்.  அதைப் பெற்றோர் மறுத்தால் அதனால் சில விளைவுகள் ஏற்படுகின்றன.  சில பிள்ளைகளின் வளர்ச்சியையே அது பாதிக்கிறது.  சில இந்தியர்கள் அதிக இந்தியர்கள் வசிக்கும் பகுதிகளில் வாழ்வதால் தங்கள் குழந்தைகளை மற்ற இந்தியக் குழந்தைகளோடு மட்டும் பழகவிடுகிறார்கள்.  இந்தப் போக்கும் சில குழந்தைகளைப் பாதிக்கிறது.  குழந்தைகளை அமெரிக்கக் குழந்தைகள் போல் வளர்த்தால் அவர்கள் அமெரிக்கக் குழந்தைகள் செய்வது எல்லாவற்றையும் செய்ய வேண்டும் என்று அடம் பிடிக்கிறார்கள்.  அதிலும் ஆபத்து இருக்கிறது.

சிலர் தங்கள் பையன்கள் எப்படி நடந்துகொண்டாலும் இந்தியாவிலிருந்து பெண்களைத் தேர்ந்தெடுத்து வந்து தங்கள் பையன்களுக்கு மணம் முடித்து வைக்கிறார்கள்.  ஆனால் அப்படி இந்தியாவில் வளர்ந்த பெண்களுக்கு அமெரிக்கக் கணவனோடு குடும்பம் நடத்தவோ அமெரிக்க வாழ்க்கைக்குப் பழகிக்கொள்ளவோ அதிக நாட்கள் பிடிக்கிறது.  சிலரால் கடைசி வரை அது முடியாமல் போகிறது.  அப்படிப்பட்ட திருமணங்கள் விவாகரத்தில் முடிகின்றன.

அமெரிக்காவில் வளர்ந்த பெண்களைத் திருமணம் செய்துகொள்ள இந்தியாவில் வாழும் பல ஆண்கள் விரும்புவதில்லை.  இந்தியப் பெண் போல் எந்த ஆணோடும் எந்தத் தொடர்பும் இல்லாமல் இருந்திருப்பாளா என்ற ஐயம் இருந்துகொண்டே இருக்கிறது.  அமெரிக்காவிற்குப் போக வேண்டும் என்ற உந்துதலில் அமெரிக்காவில் வளர்ந்த பெண்களை மணந்துகொள்கிறார்கள்.  ஆனால் அவர்கள் மனைவியிடம் எதிர்பார்க்கும், கணவன் சொல்லைத் தட்டாமல் நடக்கும் ‘பண்புள்ள’ பெண்ணாக இருக்க வாய்ப்பு அதிகம் இல்லாதலால் அந்தப் பெண்களோடு குடும்பம் நடத்த முடியாமல் அந்தத் திருமணங்கள் விவாகரத்தில் முடிகின்றன.

இந்தியாவில் பெண்ணோ பையனோ குட்டையாகவோ நெட்டையாகவோ இருந்தாலும் பெற்றோர் எப்படியாவது தங்கள் பிள்ளைகளுக்கு ஏற்ற துணையைத் தேர்ந்தெடுத்துவிடுவார்கள்.  ஆனால் அமெரிக்காவில் அப்படித் தேர்ந்தெடுக்க முடியாதாகையால் குட்டையான சில பையன்களுக்குத் துணை கிடைக்காமல் அவர்கள் திருமணம் ஆகாமலே இருந்துவிடுகிறார்கள்.  குட்டையான ஆண்கள் அமெரிக்கப் பெண்களின் கண்களில் அழகனாகத் தென்பட மாட்டான்.அமெரிக்கப் பெண்களை வசீகரிக்க முடியாத குட்டையான இந்தியப் பையன்களால் இந்தியப் பெண்களையும் வசீகரிக்க முடியாது. இந்தியாவில் என்றால் வேறு எதையாவது காட்டித் திருமணத்தை முடித்துவிடுவார்கள். அது மாதிரிதான் பெண்கள் அதிகம் படித்துவிட்டாலும் இந்தியாவில் போல் பெற்றோர் தேர்ந்தெடுத்த பையனை மணந்துகொள்வதில்லை.  அவர்களில் பலர் திருமணம் செய்துகொள்ளாமலே இருந்துவிடுகிறார்கள்.  இந்தியச் சமுதாயத்தில் பெண்கள் திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பது கொஞ்சம் சிரமம் என்பதால் பெண்களும் எவ்வளவு படித்திருந்தாலும் பெற்றோர் பார்த்த பையன் கொஞ்சம் குறைவாகப் படித்திருந்தாலும் திருமணம் செய்துகொள்கிறார்கள்.  ஆனால் அமெரிக்கச் சமுதாயத்தில் பெண்கள் தங்களால் தனித்து வாழ முடியும் என்று நினைப்பதால் இந்திய அமெரிக்கர்களும் அந்தப் பாணியில் இருந்துவிடுகிறார்கள்.

 

இரண்டு பையன்களுக்குத் தாயான ஒரு இந்தியப் பெண் “ இரவு வீட்டிற்கு வந்துவிட வேண்டும் என்று என் பையன்களிடம் கறாராகச் சொல்லிவிட்டேன்” என்றார்.  அப்படி வந்துவிட்டால் அவர்கள் எந்தப் பெண்ணோடும் எந்த வித தகாத் உறவும் வைத்துக்கொள்வதில்லை என்று அந்தத் தாய் நினைத்துக்கொண்டு தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்கிறாள்.  “உங்கள் பிள்ளைகள் இந்த விஷயத்தில் எப்படி?” என்று இன்னொரு இந்தியப் பெண்ணைக் கேட்ட போது “நாம் சொன்னால் கேட்கவா போகிறார்கள்?  அதனால் அவர்கள் போக்கில் விட்டுவிட்டேன்”  என்றார்.  வேறு வழியில்லாமல் பிள்ளைகளின் திருமண விஷயத்தில் தலையிடாமல் இருக்கும் பெற்றோர்கள்தான் அதிகம்.

ஓரிரண்டு பெண்கள் அமெரிக்காவில் வளர்ந்தவர்களாக இருந்தாலும் பெற்றோர் பார்த்து முடிவு செய்த, இந்தியாவில் வளர்ந்த பையன்களைத் திருமணம் செய்துகொள்கிறார்கள்.  ஆனால் இப்படிச் செய்துகொண்டவர்கள் மிக, மிகச் சிலரே.  அமெரிக்காவில் வளர்ந்த பையன்கள் யாரும் இந்தியாவில் வளர்ந்த பெண்களைத் திருமணம் செய்துகொண்டு கடைசி வரை திருமணம் முறியாமல் இருந்ததாகத் தெரியவில்லை.

அமெரிக்காவில் வளர்ந்த பெண்களும் பையன்களும் அமெரிக்கக் கலாசாரத்தில் வளர்வதால் அதன்படி நடக்க விரும்புகிறார்கள்.  ஆனால் அவர்களுடைய பெற்றோர் தாங்கள் வளர்ந்த கலாசாரத்தைத் தங்கள் பிள்ளைகள் பின்பற்ற வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

இவர்களுடைய பிரச்சினை இதுவென்றால் இந்தியாவில் ஓரளவு படிப்பை முடித்துவிட்டு மேல்படிப்பிற்காக அமெரிக்காவிற்கு வரும் ஆண், பெண்களின் நிலை இன்னொரு வகையானது.  இந்தியக் கலாசாரத்தில் இவர்கள் முழுவதும் ஊறிப்போயிருப்பதால் இவர்கள் சமீபத்தில் அமெரிக்காவிற்கு வந்திருப்பவர்களைத் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறார்கள்.  உயர்ஜாதியைச் சேர்ந்த பலர் இப்படி வந்திருப்பதால் அவர்களுக்கு அவர்களுக்குள்ளேயே திருமணம் செய்துகொள்வது சாத்தியமாகிறது.  தங்கள் ஜாதியில் பலர் அமெரிக்காவில் இல்லாமல் இருப்பவர்களுக்கு அப்படித் திருமணம் செய்துகொள்வது கஷ்டமாகி விடுகிறது.  அதிலும் குறிப்பாக அமெரிக்காவிற்கு வந்து நிறையப் படித்துவிட்ட பெண்களுக்கு அமெரிக்காவில் வளர்ந்த பையன்களையும் பிடிக்கவில்லை.  இந்தியாவிற்குப் போய் இந்தியாவில் யாரையாவது மணம் செய்துகொண்டு வருவதும் சரியாக அமைவதில்லை.  பையன்களைப் பொறுத்த வரை பலர் இந்தியாவிலிருந்து பெண்ணை மணந்துகொண்டு வருவது நிறையவே சாத்தியமாகிறது.

அமெரிக்காவிலேயே வளர்ந்தவர்களானாலும் சரி, அமெரிக்காவிற்கு சமீபத்தில் மேல்படிப்பிற்காக வந்தவர்களானாலும் சரி உணவு, உடை போன்ற விஷயங்களில் ஓரளவு தங்களைப் பழக்கிக்கொள்கிறார்கள்.  திருமணம் என்று வரும்போதுதான் பல சிக்கல்கள் ஏற்படுகின்றன.  இங்கும் இல்லாமல் அங்கும் இல்லாமல் தத்தளிக்கிறார்கள்.

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “இந்திய அமெரிக்கர்களின் திருமணப் பிரச்சினைகள்

  1. அருமையான அலசல்.

    நடப்பு உண்மையைக் கூர்ந்து கவனித்து எழுதியிருக்கிறீர்கள்.

    அமெரிக்கச் சமூகம் குறித்தும் அங்கு வாழும் இந்தியர் குறித்தும் அவர்களின் திருமணச் சிக்கல்கள் குறித்தும் நன்கு புரிந்துகொள்ள முடிந்தது.

    தொடர்ந்து எழுதுங்கள்.

  2. வசிப்பிடம் மாறும் போது பண்பாடும் மாறுதலுக்குள்ளாகிறது. பொருளாதாரத்திற்காக இரு வேறு பண்பாட்டு வளையங்கள் ஒன்றையொன்று வெட்டிக் கொள்ளும் போது நடுவில் மாட்டிக் கொள்ளும் அமெரிக்க இந்தியர்களும் இந்திய அமெரிக்கர்களும் பரிதாபத்திற்குரியவர்களாகத் தெரிகிறார்கள். பண்பாட்டு ரீதியாக குழந்தைகள் எதிர்க் கொள்ளும் பிரச்சனைகளை இன்னும் ஆழமாக எழுதலாம். எனினும் இக் கட்டுரை நல்ல அலசல், தொடரந்து எழுதுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *