வல்லமை – சிந்தனை, செயல், முன்னேற்றம் – தலையங்கம்

0

பவள சங்கரி

நீ பாதி நான் பாதி!                                                                                                                                                          

இன்பம், துன்பம், அமைதி, பேரின்பம் எனும் உணர்வுகள் ஏற்றுக் கொள்ளப் பெற்று கரு வழியாகத் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் மறை பொருள் சுரங்கம் தான் மனித மனம் அல்லவா. இத்தகைய பேராற்றலுடைய  மனதின் மதிப்பை நாம் உணருகிறோமா? ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துகிறோமா? விஞ்ஞானத்தோடு நம் மெய்ஞ்ஞானமும் கலக்கும் போது நம் வாழ்க்கை எத்தகையதொரு நிறைவான வாழ்க்கையாக அமையும் என்பதை எண்ணிப்பார்த்திருக்கிறோமா? நம் சக மனிதர்களின் துயர் பற்றி சிந்தித்திருக்கிறோமா?

சமீபத்தில் என் நண்பர் ஒருவரைச் சந்தித்தேன் நீண்ட நாட்களுக்குப் பிறகு.நல்ல நகைச்சுவை உணர்வு உடையவர் அவர்! மனிதரிடம் பேச ஆரம்பித்தால் பொழுது போவதே தெரியாது. அப்படித்தான் பேசிக் கொண்டிருக்கும் போது இடையில் மனைவியைப் பற்றி விசாரித்து விட்டு,

“ என்னங்க, 50-50 தானே” என்றேன் பூடகமாக.

அவரும் ”ஆமாங்க…கட்டாயம்.அதிலென்ன சந்தேகம்.அவங்க 90% வீட்டு வேலை செய்தால், நான் 10% உதவி செய்கிறேன்.நான் 90% டிவி பார்த்தால் அவங்க 10% பார்க்கிறாங்க! ஆக சராசரியா 50-50 “, என்கிறார்.

காலம் காலமாக நாம் நீ பாதி நான் பாதி என்று கூறிக் கொண்டிருக்கிறோம் ஆனால் யதார்த்தம் என்று ஒன்று இருக்கிறதே! கடந்த 20, 25 ஆண்டு காலங்களில் பல மாற்றங்கள் ஏற்பட்டுத்தான் இருக்கிறது.ஆண்கள் குடும்ப வாழ்க்கையில் அதிக ஈடுபாடு கொண்டுதான் இருக்கிறார்கள். பணி நேரத்தில் இருப்பதைவிட இல்லத்தில் இனிமையாக பொழுதை கழிப்பதற்கு மனதளவில் அதிகம் விரும்புவது கண் கூடாகத் தெரிகிறது.

இருப்பினும் முழு நேரப் பணிக்குச் செல்லும் பெண்களின் கணவன்மார்கள் கூட, அவர்களுக்கு உதவியாக பெரிதாக ஏதும் செய்வதில்லை.வேலைக்குச் செல்லும் மனைவிகள் சராசரியாக, வாரத்திற்கு குறைந்தது 26 முதல் 28 மணி நேரமாவது வீட்டுப் பணிகளில் செலவிடுகிறார்கள். கணவன்மார்களோ ஒரு மணி நேரம்தான் செலவிடுகிறார்களாம். ஒரு ஆய்வு இதை உறுதி படுத்தியுள்ளது.பொதுவாக கணவன்மார்கள் செய்யக் கூடிய ஒரே வேலை கடை கன்னிக்குச் சென்று வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்கி வருவதுதான். வீட்டுப் பணியில் சரியான பங்கீடு இருப்பதில்லை என்பதே பெரும்பாலான பெண்களின் குறையாக உள்ளது.

இந்த இடத்தில்தான் இருவரும் சரிசமம் என்பது அர்த்தமற்றுப் போகிறதாக பணிக்குச் செல்லும் பெண்கள் குறைபட்டுக் கொள்கின்றனர். விடுமுறை நாட்களில் ஆனந்தமாக சோபாவில் படுத்து உறங்கிக் கொண்டிருக்கும் ஆண்களைப் பார்த்து பெருமூச்சு விட்டுக் கொண்டே அன்றும் ஓடி ஓடி அதிகமாக உழைக்கும் பெண்கள் மனம் நோகாமல் என்ன செய்ய முடியும்? நீ பாதி நான் பாதி என்று அழகாக பாடிக் கொண்டே பணியைத் தொடர வேண்டியதுதானா ஏக்கத்துடனே? குடும்ப பாரத்தை சரியாக பங்கிட்டுக் கொள்ளும் அப் பெண்களின் பாரத்தையும் கணவன்மார்கள் சரியாகப் புரிந்து கொண்டு அதனைப் பகிர்ந்து கொள்ளும் போது வாழ்க்கை ஓடம் இன்னும் அமைதியாக இன்பமாக உல்லாசமாக ஓட வாய்ப்பு அதிகம் உள்ளதல்லவா?

மகிழ்ச்சியான தம்பதி
நன்றி

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *