ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்-பகுதி 4

அண்ணாமலை சுகுமாரன்

முதல் பால் —வீட்டுநெறிப் பால்

——————-—————————————
அதிகாரம்  ௧ ( 1 )     பிறப்பின் நிலை

============================
இதுவரை ஔவையின் ஞானக் குரலில் முதல்   இரண்டு  குறள்களைப் பார்த்தோம் .முதல் குறள் அனைத்து அற நூல்களைப் படிப்பதின் பயன் ‘ஆதியாக நின்ற அறிவை உணர்வதே’ என்றது .இரண்டாவது குறள் பரம்பொருளின் சக்தியுடன் கூடிய அனைத்துப்  பிறப்புக்களும்  ஐம்பூதங்களையும் ,அது பல விகிதத்தில் மாறி மாறி ‘தரமாறிடில்’, பஞ்சீகரணம் எனும் வினை கொண்டு  பிறப்பு அமைகிறது என்றது .

நூல்கள்  படித்ததின் பலன்கள் மற்றும் பிறப்பு எவ்வாறு அமைகிறது எனக் கூறியபிறகு ,

பிறப்பு என்பது எவ்வாறு வாழ்வின் துயரங்களில் சிக்குகிறது ,வாழ்வின் இலக்கு எனன ,பிறப்பின் புருஷார்த்தம் எனும் பயன் தான் எனன என்பதை அடுத்த இரண்டு குறள்களும் சுருக்கமாக சூத்திரம் போல் குறுகத்தறித்துக்  கூறுகிறது .

குறள் எண் 3

“ஓசை பரிச முருவஞ சுவை நாற்றம்
ஆசை படுத்து மளறு

ஓசை = சத்தமும்
பரிசம் =ஸ்பரிசமும்
உருவம் = ரூபமும்
சுவை = ரசமும்
நாற்றம் = கந்தமும்
(ஆகிய தன்மாத்திரைகள் )–
ஆசைபடுத்தும் = ஆசையில் சம்பந்தப்பட்டால்
அளறு = சேறுவாகும்
பஞ்ச தன்மாதிரைகளே ஆசையுடன்  சம்மந்தப்படும்  போது அவை  சேறு ஆகும்

பஞ்ச மாபூதங்களினால் உண்டான இவ்வுடலில்
பஞ்சமாபூதங்களில் ஆகாயம் எனும் பூதம்
ஓசை எனும் சப்த தன்மாத்திரையை உண்டாக்குகிறது .

வாயு எனும் பூதம் ஸ்பரிசம் எனும் தன் மாத்திரையை உண்டாக்குகிறது .

தேயு எனும் அக்னி எனும் பூதம் உருவம் எனும் தன்மாத்திரை
உருவாகக் காரணம் ஆகிறது .

அப்பு எனும் நீர் எனும் பூதம் சுவை எனும் தன்மாத்திரை உருவாகக் காரணம் ஆகிறது .

பிருத்திவி எனும் நிலம் என்ற பூதம் , நாற்றம் எனும் தன்மாத்திரை உருவாகக் காரணம் ஆகிறது .

ஆக பஞ்ச பூதங்களும் பஞ்ச தன்மாத்திரைகளை உருவாக்குகின்றன

இந்த பஞ்ச தன்மாத்திரைகள் தனித் தனியே    மனதுடன் சேர்ந்து ஞானேந்திரியங்களான மெய் ,வாய் கண் மூக்கு செவி இவைகளுடனும் கர்மேந்திரியங்களுடனும் இணைந்து எல்லா செயல்களையும் புரிகின்றன .
ஆனால் இவைகளுடன் ஆசை எனும் வேகம் சேரும் போது இந்த தன்மாத்திரைகளும் ,இந்திரியங்களும் புரியும் செயல்கள் உலகாயமான மாயச் சேற்றில் சிக்கி உழலச் செய்கிறது .

இங்கு ஆசை என்பது நமது வினையின் சஞ்சித கர்மத்தாலும், பிராரர்த்தம் எனும் நடைபெறும் கர்மச் சுமையாலும் ஏற்படுகிறது .

பூர்வப் பிறப்பின் எச்சங்கள் ஆசைகளை ஏற்படுத்தும் காரணியாக அமைகிறது. ஆசைகளை ஏற்படுத்தும் சூழ்நிலைகளும் தானே ஏற்படுவதில்லை. அவை நமது கர்ம வினையைப் பொருத்ததே .

முன்பு கண்டதையேக்  காண்பதும் ,முன்பு தின்றதையேத் தின்னத் தூண்டுவதும் ஆசையின் இயல்பு ,இதுவே மனிதனின் இயல்பு .
ஆசையில் இருந்து விலகி நிற்பது என்பது மனம் பொருந்தி நிற்க நாம் ஏற்படுத்தும் மாற்று ஏற்பாட்டைப் பொருத்ததே ஆகும் .

எனவே ஆசை எனும் வேகம் நமது புலன்களுடன் சம்பந்தப்படாத போது செயல்களில் ஒரு உத்தமத் தன்மை ஏற்படுகிறது .

மேலும் கரமச் சுமை ஏற்படுவதில்லை .இதையே ’வேகம் கெடுத்தாண்ட’ என்கிறார் மாணிக்க வாசகப்பெருமான் .

மனம் ஆசை வயப்பட்டு இந்திரியங்களுடன் பொருந்தி செயல் படும் போது உலக பந்தம் ஏற்படுகிறது .

‘ஆசை அறுமின்’ எனக் கூறிவிட்டு இனி அடுத்தக் குறளைக் காணலாம் .

-தொடரும்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *