சுஜாதா சார்….கிரேசி மோகன்….
கிரேசி மோகன்
என்னமோ தெரியவில்லை எனக்கு இன்று ஏக மசக்கை, இந்தச் ஷணமே அமரர் ‘’சுஜாதாவின்’’ ‘’கற்றதும் பெற்றதும்’’ படித்தே ஆகவேண்டுமென்று….சுஜாதாவின் தோழரும் எனது நண்பருமான திரு.ரகுநாதன் அவர்களை தொடர்பு கொண்டேன்….உடனடியாக க.பெ வின் பாகம்-3 அனுப்பியதோடல்லாமல், மற்ற பாகங்களையும் வாங்கி அனுப்புவதாக கூறியிருந்தார்….ஏற்கனவே பல சுஜாதா புத்தக தானம் எனக்காக நிறைய செய்திருக்கிறார்….அவரிடம் சொன்னேன் ‘’இம்முறை ‘’கற்றதும் பெற்றதும்’’ தாங்கள் விற்றதும் அடியேன் வாங்கியதுமாக இருக்கட்டுமே என்று….மனுஷன் மறுத்து விட்டார்….பழையபடி க.பெ தும்மும் இலவச இணைப்பாகி விட்டது….ஓஸியில் படித்தால்தான் கிரேசிக்கு ஒட்டும் போலிருக்கிறது….மேலும் விற்க சுஜாதா என்ன வெறும்பொருளா….எழுத்தச்சன் அவர் பரம்பொருள் அல்லவா….எதற்கு இத்தனை முகாந்திரம் என்றால்….பாகம்-3 ல் சுஜாதா சார் என்னுடைய கவிதையை போட்டுள்ளார்….
ரீ-டெலிகாஸ்ட் செய்ததில் , அவருக்கு நான் காண்பித்த ‘’பெருமாளே சரிதானா’’ என்ற கவிதைகள் நினைவுக்கு வந்தது….அதில் ஒன்றுதான் க.பெ தும்மில் வெளியாகியிருந்தது….நன்றி ரகு சார்….
ரகுநாதன் சாரின் அன்புக் கட்டளைக்கேற்ப , சுஜாதாவின் ‘’ஸ்ரீரங்கத்து தேவதைகள்’’….இரா.முருகன் சாரின் ‘’ரெட்டைத் தெரு’’ பாதிப்பில் ‘’மை லவ்வாப்பூர் டைம்ஸ்’’ என்ற எனது மயிலை மந்தைவெளி அனுபவங்களுக்கு சுஜாதா சுழி போட்டு விட்டேன்….பார்ப்போம்….முருகனுக்கும், சுஜாதாவுக்கும் இருந்த மூளையும், திறனும் அடியேனுக்கு இருக்கிறதா என்று….
சுஜாதா சார் பரமபதம் எய்திய போது, அவரது ஸ்கெட்ச்சையும், ஒரு இரங்கல் வெண்பாவும் என்னால் இயன்ற அஞ்சலியாக செய்தேன்….அவைகளையும் இணைத்துள்ளேன்….
எழுத்தாளர் சுஜாதா மறைவால் வருந்தி
————————————————-
கதையா ? கவிதையா ? கட்டுரையா ? கேட்போர்க்(கு)
எதையும் வழங்கும் எழுத்துப் -புதையலே
ஸ்ரீரங்க தேவதையே ஏரங்க ராஜனே
பாரிங்கு நீரின்றி பாழ்….
சுஜாதா சாரிடம் அடியேன் படித்துக் காட்டிய ‘’பெருமாளே சரிதானே’’….
” பெருமாளே சரிதானே ”
—————————–
பால் குடத்தை நோக்கிப் படையெடுக்கும் எறும்புகளாய்
தோல் குடத்தைத் தொத்த வரும் தீவீர வியாதியெலாம்
மால் படுத்த அரங்கன் மணிவண்ணன் பேர் சொல்ல
வால் சுருட்டிக் கொள்ளுமாமே ,பெருமாளே சரிதானே….(1)
நாய் வால் நிமிர்த்தலுக்கு இணையான நாற்பதிலே
நோய்வாய் கிடந்து வளைந்த நேரத்தில்
தாய்போல் தேற்றி தூக்கி நிறுத்த வல்ல
மாயா ஜால மருந்தாமே பெருமாளே சரிதானே….(2)
கானல்நீர் இளமைக் காலம் கண்சிமிட்டும் நேரம்
கூனல் முதுகில் முதுமை மூப்பு மூட்டை பாரம்
நாணல் யமுனா நதி நாதன் திருநாமம்
பூணல் பொலிவாமே பெருமாளே சரிதானே….(3)
முயலாமை கதையாக முடிகின்ற வாழ்க்கையின்
இயலாமை தன்னை இளமையிலே உணர்ந்து
செயலாவையும் ஸ்ரீரங்கனுக் களித்தால்
பயமில்லையாமே பெருமாளே சரிதானே….(4)
கள் ஒழுகு மலர் தேடி கருவண்டு மொய்ப்பது போல்
உள் ஒழுகும் உணர்வுக்கு ஓடிவரும் ஒப்பில்லா
கள்ளழகன் கார்வண்ணன் காகுத்தன் கண்ணனென்று
தெள்ளமுதப் பிரபந்தம் சொல் பெருமாளே சரிதானே….(5)
சிலந்திதன் வலையில் சிக்கிடும் பூச்சியாய்
புலன்கள் ஐம்பொறி புகுந்து புலம்பாமல்
நலம்தரும் நாராயணன் நாமம் சொன்னால்
பலன் பரம் பதமாமே பெருமாளே சரிதானே….(6)
பத்தியம் இல்லாத பகாசுர வாழ்க்கையை
சத்தியம் என்றெண்ணி சஞ்சலம் அடைவோர்
நித்திய கல்யாண வைபவன் அருளால்
முத்தி அடைவாராமே பெருமாளே சரிதானே….(7)
இல்லாததை இருப்பதென்று எண்ணிக் குவித்து
செல்லாத இவ்வாழ்வை செலவழிக்க முயலாமல்
மல்லாண்ட மணிவண்ணன் மலர்பதம் பற்றினால்
எல்லாமும் தெளிவாமே பெருமாளே சரிதானே….(8)….கிரேசி மோகன்….
ஆஹா.அருமை அருமை. ஆழமாக மனதில் தைக்கும் ஆழ்வார் பாசுரம் போல அவருக்கு அளிக்கப்பட்ட நல்லமுது இந்தப் பா.
“perumaLae sarithaanee” is a good poetic work. kudos to mohan, esply i enjoyed the word structure in the following lines:
முயலாமை கதையாக முடிகின்ற வாழ்க்கையின்
இயலாமை தன்னை இளமையிலே உணர்ந்து
செயலாவையும் ஸ்ரீரங்கனுக் களித்தால்
பயமில்லையாமே பெருமாளே சரிதானே