கிரேசி மோகன்

Bhagavatha: Akrura Darshanam - Keshav
Bhagavatha: Akrura Darshanam – Keshav

கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….
————————————————————
”கண்ணன் வெண்பாக்கள்’’
—————————————————

ஓவியம் : கேஷவ்
ஓவியம் : கேஷவ்

பயமாசை கோபம், பொறாமைப் பழுக்கு,
மயமான மக்கு மனமே, -சயனம்,
அராவணை கொள்ளும், அரங்கன் பதத்தில்,
சரேலெனச் சேர சமத்து….(271)

கற்றது கையளவு, பெற்றது பையளவு,
உற்றதோர் சாம்பலே உன்னளவு, -சற்றிதை,
சிந்தி மடமனமே, சீர்மல்கும் ஆய்ப்பாடி,
நந்த குமாரனை நண்ணு….(272)

காலை எழுந்தவுடன், காலைப் பரத்திநின்று,
வேலைக்(கு) அலைவது வீண்மனமே, -நாளை,
நிகழ்த்தி நடத்தி, நிறைவேற்றும் கண்ணன்,
முகத்தில் சோம்பல் முறி….(273)

வாதாடி வம்படித்து, வாழ்ந்ததெலாம் வையமெனும்,
தீதாடி பிம்பத் திருக்கன்றோ, -சூதாடி,
தன்னனைத்தும் தோற்ற, தருமர்க்(கு) உதவிய,
கண்ணனை நெஞ்சே கருது….(274)

பார்த்தசாரதி பெருமாள் கருட வாகனம்….
————————————————————————-
கொள்ளும்புண் ணாக்கும், குதிரைக்(கு) அளித்தன்று,
வில்விஜயன் தேரை விரட்டியவன், -புள்ளமர்ந்து,
வல்லிக் குளத்தை, வலம்வருதல் காணாது,
பள்ளிக் கிடந்தொழிந்தேன் பாழ்….(275)

தவழ்ந்தான் தரையில், தயிர்மோர் திருட,
உவந்தான் எறிந்தான் உறிக்கு, -கவண்தான்,
சிவந்தான் இராதை, சினேகத் தொடர்பால்
அவன்தான் அனந்தன் அசைப்பு….(276)

 படத்திற்கு நன்றி:

http://bhagavatham.blogspot.in/

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *