வெண்ணிலவில் ஒரு கருமுகில்!(16)

1

பவள சங்கரி திருநாவுக்கரசு

 


சென்னையின் காலை நேரம் மிகச் சுறுசுறுப்பான அவசர நேரம்…. இடைவெளியே இல்லாமல் செவ்வெறும்பின் வரிசை போல வாகனங்களின் அணிவகுப்பு. அதிலும் லாவகமாக வளைந்து நெளிந்து உட் புகுந்து வெளிவரும் மூன்று சக்கர வாகனம்.(ஆட்டோ) ஆக மக்கள் அனைவரும் ஏதோ கோட்டையைப் பிடிக்கப் போகும் அவசரத்தில் ஓடிக் கொண்டிருக்கிறார்கள்! இன்றாவது சரியான நேரத்தில் அலுவலகம் சென்று சேர வேண்டுமே என்ற கவலையுடனான பரபரப்புடன் தலையில் தலைக்கவசத்தின் பாரமும் கசகசப்பும் சேர்ந்து கொள்ள எரிச்சலுடன் இரு சக்கர வாகன ஓட்டிகள்! பள்ளிக் குழந்தைகளை சரியான நேரத்தில் கொண்டு சேர்க்க வேண்டுமே இந்த போக்குவரத்து நெரிசலில் என்ற கவலையோடு வாடகை வாகன ஓட்டிகள், விமான நிலையமோ, பேருந்து நிலையமோ, ரயில் நிலையமோ குறிப்பிட்ட நேரத்திற்குள் சென்றடைய வேண்டுமே என்ற பதட்டம், இப்படி ஒவ்வொருவர் முகத்திலும் ஏகப்பட்ட கவலை ரேகைகள். தியானம் செய்துவிட்டு வந்தவர்கள், செய்யாமல் மனதை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பவர்கள் அல்லது எதையும் எளிதாக எடுத்துக் கொள்ளும் பக்குவம் வாய்ந்தவர்கள் என்று எந்த பாகுபாடும் அறிந்து கொள்ள இயலாத வகையில் காலை நேர பரபரப்பான சாலைகள்!

அன்றாடம் பழகிப்போன கூத்தாக இருந்தாலும், இன்று ஏதும் பிரச்சனை இல்லாமல் அலுவலகம் சென்று விடலாம் என்ற நம்பிக்கையை மட்டும் என்றும் இழக்காமல் ஒழுங்காகத் தன் இரு சக்கர வாகனத்தை ஓட்டிக் கொண்டு செல்வதில் கைதேர்ந்த வித்தைக்காரிதான் என்றாலும், போய்ச் சேர வேண்டிய இடம் வரை அந்த பரபரப்பு மட்டும் குறையாமலேதான் இருக்கும் அனுவிற்கும். அண்ணாநகர் பிரதான சாலையில் சென்று கொண்டிருகிறாள். இன்னும் தன் அலுவலகம் இருக்கும் வேளச்சேரி வரை உருட்டிக் கொண்டேதான் சென்று சேர வேண்டி இருக்கும். அதுவும் முதல் நாள் பெய்த மழையில் ஆங்காங்கே குண்டும் குழியுமாக இருக்கும் இடத்தில் நீர்த்தேக்கம், ஏமாந்து வண்டியை அதற்குள் விட்டால் அதோகதிதான். கண்ணில் விளக்கெண்ணையை விட்டுக் கொண்டு மிக முன்னெச்சரிக்கையுடன் ஓட்ட வேண்டும்.

சிகப்பு சிக்னல் விழுந்தவுடன் அணிவகுப்பு நிற்க, அனு சுற்று முற்றும் பொழுது போக்காக நோட்டம் விட்டாள். வலது புறம் ஒரு ஆட்டோவிலிருந்து ஒரு பையன் 12 அல்லது 13 வயது இருக்கலாம், நல்ல அழகான தெளிவான முகம், கண்களில் மட்டும் ஏதோ வித்தியாசமான பரபரப்பு. ஒரு நிலையான பார்வையாகத் தெரியவில்லை. சிரிப்பிலும் ஒரு மாற்றம். ஆனாலும் தன்னைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான். பாதி உடம்பு ஆட்டோவிலிருந்து வேளியே தொங்கிக் கொண்டிருக்க, அருகிலிருந்த ஒரு அம்மா, அந்தப் பையனின் தாயாகத் தானிருக்க வேண்டும். அவனை உள்ளே ஒழுங்காக அமரும்படி மிரட்டிக் கொண்டிருந்தார்கள். ஆனால் அந்தப் பையனோ கேட்பதாக இல்லை. அருகிலிருக்கும் என்னை கிண்டல் செய்வது போல

“ஏய் என்னா……..எங்கப் போற…. “ என்றான்.

‘என்ன இது இந்தப் பையன் பேச்சு வித்தியாசமாக இருக்கிறதே, ஆளுக்கும் பேச்சிற்கும் சமபந்தமே இல்லையே. ஏதாவது மனநலப் பிரச்சனையாக இருக்குமோ’ என்று யோசிப்பதற்குள்  அந்தப் பையன் கையில் வைத்திருந்த ஒரு சின்ன பிளாஸ்டிக் பென்சில் பெட்டியை எடுத்து அருகில் இருந்த அனுவின் மீது தூக்கிப் போட்டான். உடனே சிவ்வென அனுவின் முகம் சிவக்க, கோபம் தலைக்கேறியது. அறிவு கெட்டத்தனமாக இப்படி செய்கிறானே என்று எரிச்சல் வந்தது… ஆனாலும் அடுத்த வினாடி அந்த கோபம் இரக்கமாக மாறியது அவன் செய்கையினால்.உடலில் பாதியை வெளியே தொங்கவிட்டுக் கொண்டு ஏய் என்று திரும்ப அனுவை உரத்த குரலில் கூப்பிட்டான். அருகில் இருந்த அனைவரும் திரும்பிப் பார்த்ததால் வெட்கமாக இருந்தாலும், அவள் என்னப்பா என்று சாடையால் கேட்டாள். அவன் கண்களோ தூக்கி எறிந்த அந்த பென்சில் பெட்டி மேலே நிலைத்திருந்தது. உடலோ பெரும்பாலும் முக்கால் பாகம் வெளியே தொங்கிக் கொண்டிருந்தது. அருகில் இருந்த தாயின் பதட்டம் கூடி,

“ ஏய் சூரி, என்ன பண்ற………..இங்கப் பாரு….கன்னா…டேய்….     “

அந்தத்தாயின் அழைப்பு அந்தப் பையனின் நிலையில் எந்த ஒரு துளி பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. அவன் தொங்கியது தொங்கியபடி, அந்த பென்சில் பெட்டியையே வெறித்துப் பார்த்துக் கொண்டு, கையை அதன் புறம் நீட்டிக் கொண்டு, “ அது வேணும்…….அதான் வேணும்” என்றான் திரும்பத் திரும்ப……அருகில் தாய் பதறுவது தெரிகிறது. ஆட்டோ ஓட்டுநரும் அவனை திருப்பி விட முயற்சிக்க, அதற்குள் சிக்னலில் பச்சை விளக்கு மாறப் போவதற்கு இரு நொடி முன்பே மக்கள் வாகனங்களைக் கிளப்பத் தயாராகி விட்டார்கள். விதவிதமான இரைச்சலில் அந்தப் பையனின் குரல் அமிழ்ந்து போனாலும் அவன் தொங்கல் அதிகமானது. அப்படியே எட்டி அந்தப் பெட்டியை எடுக்க முயற்சித்தான். அனுவிற்கும் பதட்டம் தொற்றிக் கொண்டது. அந்தப் பெட்டியின் மீது அவள் கண்களும் சென்றது. எடுத்துக் கொடுத்து விடலாம் என்றால் அது சற்றே முன்னால் இருந்த அடுத்த் வண்டியின், பின் சக்கரத்தின் அருகேக் கிடந்தது. அவளால் அதை நெருங்குவது சாத்தியமில்லை.

இதற்குள் பச்சை விளக்கு பிரகாசிக்க அனைத்து வாகனங்களும் அவரவர் எல்லை நோக்கிய பயணத்தை தொடங்கி விட்டன. அனுவும் வேறு வழியின்றி கிளம்பினாலும் கண்கள் மட்டும் அந்த ஆட்டோவை விட்டு அகல முடியாத அளவிற்கு அந்தப் பையனின் சேட்டை தொடர்ந்து கொண்டிருந்தது.  தாயின் பதட்டமான குரலும் லேசாக ஒலித்துக் கொண்டே வந்தது. ஆட்டோ ஓட்டுநரின் கவனமும் சிதறும் அளவிற்கு அந்தப் பையனின் சேட்டைகள் அதிகமான போது வேறு வழியின்றி வண்டியை அவர் ஓரங்கட்ட வேண்டிய சூழலில் அந்த போக்குவரத்து நெரிசலில் அனு ஒரு சிறு உதவியாக தன் வண்டியை ஒரு கணம் ஒதுக்கி வழிவிட, அந்த இடைவெளியில் அந்தப் பையனின் தாயாரின் பதட்டமான முகம் முன்னால் வர, அனுவும் தன் வண்டியை அந்த ஆட்டோவின் பின்னாலேயே ஓரங்கட்டினாள்

அப்போதுதான் தெரிந்தது அந்தக் குழந்தை மனநலம் பாதிக்கப் பட்டிருப்பதும், அதனால் அந்தத் தாய் படும் சிரமமும். வாடிக்கையாக வரும் ஆட்டோக்காரர் என்பதால் குடும்பத்தில் ஒருவராகவே பழகுபவராதலாலும், அந்தப் பையனின் போக்குக்கு ஏற்றவாறு நடந்து கொண்டிருப்பது அந்த ஓட்டுநரின் மனிதாபிமானத்தை வேளிப்படுத்தியது. நாட்டில் நல்லவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்! உடன் பழகியவர்களுக்குக் கூட உதவி செய்யும் எண்ணம் துளியும் இல்லாமல் தன் சுயநலம் ஒன்றே குறியாக காரியம் ஆற்றும் எத்தனையோ சான்றோர்களை அன்றாடம் சந்திக்கிற கால கட்டத்தில் தன் வருமானத்தைப் பற்றிக் கூட சிறிதும் கவலைப் படாமல் அந்தக் குழந்தைக்காக பொறுமையாக செயல்படுவதைப் பார்த்து அனுவின் மனமும் கலங்கத்தான் செய்தது.

அவளும் வண்டியை நிறுத்தி ஏதேனும் உதவி தேவைப்பட்டால் செய்யலாமே என்று எண்ணினாள். அந்தப் பையன் என் பென்சில் டப்பா வேணும் என்று அடம் பிடித்துக் கொண்டிருந்தான். அவன் தாயின் சமாதான வார்த்தைகள் அவன் காதில் விழுந்ததாகவேத் தெரியவில்லை. அவன் சொல்வதையேத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தான்.ஆட்டோக்காரரும் வண்டியை அங்கு நிறுத்தி விட்டுச் செல்ல முடியாத சூழல். இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த அனு சற்றும் தயங்காமல் அவர்களை நெருங்கி,

“அம்மா, ஏதானும் உதவி வேண்டுமா?” என்று அன்பாக வினவினாள். மிக அழுத்தமான அந்த நேரத்தில் அனுவின் அன்பான விசாரிப்பு ஒரு ஊன்றுகோலாக இருந்தது.

“ஆம் அம்மா. நன்றி. இவன் ஒரு ஹைபர் ஆக்டிவ் ( லேசான மனநலம் பாதிப்பு) குழந்தை. அந்த பென்சில் பெட்டியை கீழே போட்டு விட்டு இப்போ வேணுமின்னு அடம் பிடிக்கிறான்…..அதான் என்ன பண்றதுன்னு தெரியல.”

“வேறு ஏதும் கொடுத்தால் வாங்கிக் கொள்வானா” என்று கேட்டுக் கொண்டே, தன் கைப்பையைத் திறந்து தேடுவதற்குப் போனாள்.

ஆனால் அந்த அம்மாவோ, சற்றும் தயங்காமல் “இல்லையம்மா, அதெல்லாம் பயன்படாது. அவன் எதைக் கொடுத்தாலும் வாங்கமாட்டான், அதே பென்சில் டப்பாவைத் தவிர..அதான் ஒன்னும் புரியல”

அனு உடனே, “இருங்கம்மா, நான் போய் அங்கே பார்த்துவிட்டு வருகிறேன். அதுவரை சமாதானப் படுத்துங்கள். கன்னா…நான் போய் அதே டப்பாவை எடுத்து வருகிறேன் சரியா,”

என்று கூறியபோது சில நிமிடங்கள் சூரி அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவன் உடனே அழ ஆரம்பித்தான்.அவளும் எப்படியும் அந்தப் பெட்டியைக் கொண்டு வந்து கொடுத்து விடுவது என்ற முடிவுடன் வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பினாள்.

அந்தப் போக்குவரத்து நெரிசலில் இந்தச் சிறிய பெட்டியைக் கண்டுபிடிப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல என்று அறிந்திருந்தாலும், வேறு வழியில்லை அந்தக் குழந்தையின் அழுகையை நிறுத்துவதற்கு. வளர்ந்து அழகாக நிற்கும் ஒரு சிறுவன் இப்படி தெருவில் நின்று அழுது கொண்டிருந்தால் போவோர், வருவோர் எல்லாம் வேடிக்கைப் பார்த்து காரணம்  வேறு கேட்கும் போது அந்தத் தாயின் மனம் படும் வேதனையை எண்ணிக் கூடப் பார்க்க இயலவில்லை அனுவிற்கு. இது போன்ற குழந்தைகளைப் படைத்த ஆண்டவன் மீதே கோபமாக வந்தது அவளுக்கு. ஆனால், அந்தக் குழந்தைகள் தான் உண்மையிலேயே ஆண்டவனின் குழந்தைகள். எந்த கபடமும் அறியாமல், தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்ற உணர்வு கூட இல்லாமல், தன்னால் தன்னைச் சேர்ந்தவர்களுக்கு எத்துனை துன்பம் என்ற வருத்தம் கூட உணராமல் ஒரு சித்தர் போல் தன் மனம் போன போக்கில் சென்று கொண்டல்லவா இருக்கிறார்கள். இந்தப் பெற்றோர் செய்த பாவம்தான் என்ன….இல்லையில்லை இந்தப் பெற்றோர் மிக உயர்ந்த ஆத்மாக்கள்.அதன் காரணமாகவே கடவுள் இது போன்ற குழந்தைகளைப் பராமரிக்க இவர்களைத் தேர்ந்தெடுத்துள்ளார். அந்த வகையில் நல்ல முறையில், அக்கரையுடன் பராமரிக்கும் இது போன்ற பெற்றோர்கள் வணக்கத்திற்குரியவர்கள். ஆண்டவனால் ஆசீர்வதிக்கப் பட்டவர்கள். பிறவிப் பயனை அடைந்தவர்கள் என்று கூடச் சொல்லலாம். காரணம் இவர்களுக்கு மறு பிறவி என்ற ஒன்றே இல்லாமல் போகலாம்.

அடடா, என்னென்னவோ நினைத்துக் கொண்டு நேரத்தைக் கடத்திக் கொண்டிருக்கிறோமே, அந்தக் குழந்தை அங்கு என்ன அழிச்சாட்டியம் செய்து கொண்டிருக்கிறானோ என்று நினைத்துக் கொண்டே தேடிக் கொண்டிருந்தாள். ஓரளவிற்கு நன்றாகவே நினைவிருந்தது அந்த இடம். காரணம் சிக்னல் அடையாளம்தான். அந்த இடத்தைச் சுற்றித் தேடினாள். ஆனால் கிடைக்கவில்லை. ஒரு வேளை வண்டிகளின் ஓட்டத்தில் இந்தச் சிறிய பெட்டி நகர்ந்துச் செல்ல வாய்ப்பிருக்கிறதே என்று இன்னும் சற்று தொலைவு நகர்ந்து பொறுமையாக தேடிக் கொண்டிருந்தாள்.எப்படியும் கண்டுபிடித்துக் கொடுத்துவிட வேண்டும் என்ற மன உறுதியுடன். சுற்று முற்றும் பார்த்தாள். அங்கு நடைமேடையில் ஒரு பிச்சைக்காரர் உட்கார்ந்திருந்தார். அவரைக் கேட்டுப் பார்க்கலாமா என்று தோன்றியது அவளுக்கு.

அவரை நெருங்கி ஒரு 5 ரூபாய் தாளை தட்டில் போட்டுவிட்டு, “ஐயா, இங்கு ஏதும் பென்சில் பெட்டி கிடந்ததா. பார்த்தீர்களா. ஒரு குழந்தை அதை கீழே போட்டு விட்டு அழுது கொண்டு இருக்கிறது” என்றாள்.

அந்தப் பெரியவரோ, அவளை ஏற இறங்கப் பார்த்து விட்டு, சற்று யோசித்து விட்டு, பின்புறம் திரும்பிப் பார்த்தார். அதே திசையில் அனுவின் கண்களும் பயனித்தன. நல்ல வேளையாக ஒரு சிறிய பெண் குழந்தை அந்தப் பெட்டியை கையில் வைத்து அழகு பார்த்துக் கொண்டிருந்தது. அதைப் பார்த்தவுடன் அவளுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவேயில்லை!அந்தப் பெரியவருக்கு நன்றி சொல்லக் கூடத் தோன்றாமல் வேகமாக நகர்ந்தாள் அந்தக் குழந்தையை நோக்கி. அந்தக் குழந்தையோ இவளைப் பார்த்தவுடன் என்ன நினைத்ததோ முதலில் அந்தப் பெட்டியை தன் பாவாடைக்குள் வைத்து மறைக்கப் பார்த்தது. அதைப் பார்க்கப் பாவமாக இருந்தாலும் கேட்டு வாங்குவதைத் தவிர வேறு வழியில்லை அவளுக்கு. எப்படியும் சமாதானம் செய்து வாங்கி விடலாம் என்று நினைத்து மெதுவாக பேச்சுக் கொடுத்தாள் அந்தக் குழந்தையிடம். ஆனால் அந்தக் குழந்தையோ அம்மா….என்று உரக்க கூப்பிட ஆரம்பித்தது. உடனே எங்கிருந்தோ ஒரு பெண் வேகமாக ஓடி வந்தாள், ஏண்டா கண்ணு என்று கேட்டுக் கொண்டே…..

அந்தப் பெண்ணிடம் நடந்தவைகளையெல்லாம் வேகமாக எடுத்துரைத்தும் அவளுக்கு திருப்தி இல்லை. தன் குழந்தையிடம் இருந்து வாங்கிக் கொடுக்க மனம் இல்லை அவளுக்கு. அதற்கு மேல் அந்த குழந்தையும் அந்தப் பெட்டியை இறுக அணைத்துக் கொண்டது, எங்கே அனு பிடுங்கிக் கொள்வாளோ என்ற பயத்துடன். முதலில் அவள் தாயை சமாதானப் படுத்தி அடுத்து குழந்தையிடம் போகலாம் என்றால் அதற்கெல்லாம் வழியே இல்லாதவாறு அந்தப் பெண் சற்றும் மரியாதை இல்லாமல், “இன்னாமே, குழந்தை கையில இருக்கறத புடுங்கப் பாக்கற” என்று அரம்பித்து விட்டாள்.

ஆனாலும் இதை எப்படியும் வாங்கிக்கொண்டு போகவில்லையென்றால் அந்தப் பையன் பாவம் என்ன பாடு படுத்திக் கொண்டிருக்கிறானோ என்ற கவலையில், சட்டென கைப்பையைத் திறந்து ஒரு 20 ரூபாய் நோட்டை எடுத்து அந்தப் பெண்ணிடம் கொடுத்து ஒரு புதிய பெட்டியும், பென்சிலும் இந்தக் குழந்தைக்கு வாங்கிக் கொடுத்து விடு என்று சொல்லவும் ஒரு வழியாக அந்தப் பெண்ணும் சம்மதித்து அந்தக் குழந்தையிடமிருந்து பெட்டியை வாங்கிக் கொடுத்தாள்.ஒரு வழியாக பெட்டி கிடைத்த திருப்தியில் வண்டியை கிளப்பிக் கொண்டு ஓடினாள் ஆட்டோ நிறுத்தி வைத்த இடத்திற்கு.

அங்கு இன்னும் அழுகையை நிறுத்தாத அந்தச் சிறுவன், ஆட்டோ ஓட்டுநர் ஒருபுறம் சமாதானம் செய்து கொண்டிருக்க, அந்த அம்மா யாருக்கோ செல்பேசியில் தொடர்பு கொள்ள முயன்று கொண்டிருந்தார். அனுவின் கையிலிருந்த பென்சில் பெட்டியைப் பார்த்த வினாடியே சூரி அழுகையை நிறுத்தி விட்டு சிரிக்க ஆரம்பித்தான். மகன் அழுகை சத்தம் நின்றதைக் கேட்டு சட்டெனத் திரும்பிப் பார்த்த அந்தத் தாய்க்கு அனுவின் கையிலிருந்த பென்சில் பெட்டியை ஆசையாக வாங்கிக் கொண்டிருக்கும் மகனைப் பார்த்தவுடன் ஆனந்தக் கண்ணீரே வந்து விட்டது. அனுவை ஓடிச் சென்று கட்டிக் கொண்டாள். அனுவிற்கும் இது போன்று ஒரு மன நிறைவு ஒரு புதிய அனுபவமாகவே இருந்தது. அந்த அம்மாவும் அனுவைப் பற்றி விசாரித்து விட்டு தன் வீட்டு முகவரியும் கொடுத்து அவளை வரும்படி அழைத்தார். அனுவும் மிகவும் அக்கரையாக,

“ஏனம்மா, தனியாக சூரியை கூட்டிக் கொண்டுவந்து சிரமப் படுகிறீர்கள். வீட்டில் வேறு யாரும் இல்லையா”, என்று கேட்க

“இல்லையம்மா, சூரியின் அப்பா வியாபார விசயமாக அலைந்து கொண்டிருப்பவர். சூரிக்கு ஒரு அக்கா மட்டும்தான். அவளுக்கும் இருந்தால் உன் வயதுதான் இருக்கும். அவளும் இப்போது வேலை நிமித்தமாக அமெரிக்காவில் இருக்கிறாள். அவள் பெயர் ரம்யா. இவனை தினமும் நான் தான் அருகில் இருக்கும் சங்கல்ப் பள்ளிக்கு அழைத்து வருவேன். இவர் எங்களுக்கு பல காலமாக ஆட்டோ ஓட்டிக் கொண்டிருக்கிறார். சூரியைப் பற்றி நன்கு அறிந்தவர். அதனால் கவலைப் படாமல் வந்து கொண்டிருந்தேன். பெரும்பாலும் ஒழுங்காக வந்து விடுவான். ஏதோ சில நாட்கள் தான் இது போல டென்சன் பண்ணி விடுவான். பாவம் உனக்கும் சிரமம். எங்கேயோ அவசரமாகச் சென்று கொண்டிருந்தீர்கள் போல இருக்கிறதே” என்றார்.

அனுவும் அலுவலகம் செல்ல நேரம் ஆகி விட்டபடியால் தன்னைப் பற்றிய விவரங்களை ஓரளவிற்குச் சொல்லி விட்டு திரும்பவும் வீட்டிற்கு வருவதாகவும், தன் தொலைபேசி எண்ணையும் கொடுத்து ஏதேனும் உதவி தேவையானால் எந்த நேரமும் அழைக்கும்படியும் சொல்லிவிட்டுக் கிளம்பினாள்.

ஆண்டவனின் விளையாட்டை நினைத்தால் வேடிக்கையாகத்தான் இருக்கிறது. ரம்யாவோ இந்தியா வந்தவுடன் முதல் வேலையாக மாறனின் தந்தையைப் பார்த்து அவந்திகாவின் விசயமாகப் பேச வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருக்கும் அதே நேரம் ரம்யாவின் குடும்பத்தில் அனுவைக் கொண்டு இணைத்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறான்……..

தொடரும்.

 

படத்திற்கு நன்றி

 

சென்னை போக்குவ்ரத்து நெரிசல்

 

சங்கல்ப் பள்ளி —

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “வெண்ணிலவில் ஒரு கருமுகில்!(16)

  1. சென்னையில் வரத்துப்போக்கு நெரிசல் இருந்தாலும் கதையில் இல்லை. மேல்கோட்டை செல்வப்பிள்ளை நினைவு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.