இசைக்கவி ரமணன்

 

img311

ஒன்பது துளைகள் வைத்தவன் வைத்தான்

உயிர் ஒரு சிறிதும் கசியவில்லை

உடல்விழும் தருணம் உயிர்பறந்தோட

ஒருதுளை கூடத் தேவையில்லை!

 

ஒருபெரும் வீரன் தைத்தான் தைத்தான்

உயிர்பிரியாமல் தடுக்க

உள்ளம் உயிருக்கு விடைதரும் வரையில்

உடலைப் பூமியில் இருத்த!

 

தொன்மைப் பாட்டன் துண்டுப் புண்ணியம்

போலச் சரத்தில் கிடந்தான்

தோள்வரைப் பெயரன் தொடுத்த அம்புகள்

துளைக்கத் துளைக்க நெகிழ்ந்தான்

 

தூரே எரிந்து தொலையும் கதிரினும்

கொடுமை குருதிச் சிவப்பு

துகில்விழும் நேரம் சும்மா இருந்த

நாணம் அதைவிடச் சிவப்பு

 

வீழ்வதும் வெல்வதும் வீரர்க் கியல்பு

வெற்றியும் தோல்வியும் ஒன்றே

வீழ்ந்த தெவர்க்கு? வெற்றி எதற்கெனும்

விவேகம் ஒன்றே தீர்ப்பு

பாழ்சப தத்தால் பாதகர் பக்கம்

பாட்டன் பாவம் தவித்தான்

பலவித மாயறம் பார்த்தவன் சபையினில்

பாஞ்சா லியைக்கை விட்டான்

 

சபதமும் தவறு சபையினில் அவளைக்

கதற வைத்ததும் தவறு

சண்டா ளரினைத் தண்டிக்காமல்

ஏவல் செய்ததும் தவறு

மிகவோர் உயரிய தளத்தி லிருந்து

மேதினிக் கிறங்கி வந்தான்

மீண்டும் எறிந்திட நின்ற கங்கையை

மன்னவன் தடுக்க உயிர்த்தான்

 

அங்கே பிசகிய விதிதான் இங்கே

அம்புக ளாகத் தைக்கும்

அறம் பிழைத்ததால் உடலில் உயிரை

அணுவணு வாக வதைக்கும்

பங்க மடைந்து பாவம் கழுவப்

படுத்தான் அம்பில் பாட்டன்

பரந்தாமனே பக்கத்திருந்து

பரிவுடன் பார்க்கப் பார்த்தான்!

 

இமையின் முடியே சரமாய்த் தைத்தும்

இருவிழி திறந்தே இருந்தது

இடைவெளி வழியே எதிரே சிரித்த

இடையனைப் பார்த்துப் பனித்தது

அமைந்த வானைப் பார்த்துத் தன் கதை

அனைத்தும் ஒருமுறை படித்தது

அங்கே கங்கைத் தாய்வருவாளா

அகல முயன்று தவித்தது

 

செய்த பிழைகளை எய்த அம்புகள்

சிறிது சிறிதாய்க் கழுவ

சிதையும் உடலின் சித்தத்தினிலே

செப்பரு ஞானம் விரிய

எய்தது தானே என்னும் தெளிவில்

விதியும் கதியும் கலக்க

எழுந்து விழுந்தவன் விழுந்து எழுந்தான்

எஞ்சிய வர்கள் வியக்க!

 

03.09.2014 / புதன் / 16.30

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *