கிரேசி மோகன்

1984 என்று நினைக்கிறேன்….கிரேசி குழுவினருக்கு ‘பாம்பே ஷண்முகானந்தா’ சபையில் நாடகம் போடும் வாய்ப்பு கிட்டியது….அன்நாளில் பாம்பேயில் நாடகம் போடுவதென்றால் மதராஸ் குழுக்களுக்கு அமரிக்காவில் போட அழைப்பு கிடைத்த அளவுக்கு பிரசித்தம்….அவர்கள் மேஜர் சுந்தர்ராஜன் போன்ற மேஜர் குழுக்களைத்தான் கூப்பிடுவார்கள்….மைனர் குழு எங்களுக்கு கிடைத்தது தெய்வாதீனமே….அந்த சமயம் பார்த்து எங்கள் லேடி-ஆர்டிஸ்ட் திருமணம் செய்து கொண்டு விலக, புதிதாக வேறு ஒரு நாயகி….சுந்தரத் தெலுங்கி….பார்க்க சுந்தரம்(அழகு)….பேச்சு அவந்தரம்….அவளுக்கு வீடியோ பிரமாதம்….ஆடியோ அபத்தம்….

நாடகத்திற்கு 2 நாட்கள் முன்பு அவளுக்கு தமிழ் வசனம் ரிகர்சல்….கடைசி வரை மாதுவை தாய் பாஷையில் லேது என்றுதான் கூவிக் கொண்டிருந்தாள்….3000 பேர் அமரும் ஷண்முகானந்தாவில் ஒரு சிறுவன் மட்டும் அமர்ந்து எங்கள் ரிகர்ஸலை ரசித்துக் கொண்டிருந்தான்….குறிப்பாக அவன் குஷியாகி சிரித்தது , அந்த நாயகியின் ‘மாது-லேது’ மாற்றத்திற்குத்தான்….அந்தச் சிறுவனின் தாய் பாஷை தெலுங்காம்…அதனால்தானோ ‘லேது மாது’ பன்னை(PUN) வெகுவாக ரசித்தான்….சாயங்காலம் தினமும் சூறாவளி கச்சேரி செய்து கொண்டிருந்த அந்தச் சிறுவனின் வேண்டுகோளுக்கு இணங்கி, பிரத்யேகமாக(கிருஷ்ணருக்கு கீதை சொல்ல ஒரே ஒரு அர்ச்சுனன் கிடைத்தது போல) மேடை அலங்காரம் செய்து எங்கள் ‘மேரேஜ் மேட் இன் சலூன்’’ நாடகத்தைப் போட்டு அந்தக் குழந்தையை மகிழ்ச்சியில் ஆழ்த்தினோம்….”குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே’….ஒருவேளை அந்தக் குழந்தையைக் கொண்டாடி, அதன் ஆசீர்வாதத்தைப் பெற்றதாலோ என்னவோ இன்று எங்கள் குழு தெய்வத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது (சாக்லேட் கிருஷ்ணா)….அந்த தெய்வக் குழந்தை யார் என்பதை ‘கேசவ்’ சித்திரத்தில் காட்டியுள்ளார்….பார்க்க….கிரேசி மோகன்….

crazy

‘MANDOLIN கேட்க மகாவிஷ்ணு வுக்காசை
ஆண்டவன் கட்டளை ஆதலால் -மாண்டலின்(அமரராகி)
ஆனாரே, வாசிக்கப் போனாரே வைகுண்டம்,
‘ஈநாடுக்(கு) இங்கே இழப்பு’….கிரேசி மோகன்….

‘மலரும் மாண்டலின் நினைவுகள்’…..

‘வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார் மாண்டலின் ஸ்ரீனிவாசன்’….வைகுந்தத்தில் வாசித்து அவர் ஆத்மாவும் சாந்தி அடையும், அந்தப் பரமாத்மாவும் சாந்தி அடைவார்….

பின்குறிப்பு -எங்கள் ‘ஜுராஸிக் பேபி நாடகத்தில், பிறந்த குழந்தை ‘நர்ஸரி ரைம்’ பாடும்….அப்போது குழந்தையின் தந்தை மாது- என்ன ! அச்சப்பன் குழந்தை பாடறது….!

அச்சப்பன் -அவனுக்கு ‘மாண்டலின்’ கத்துக் கொடுங்கோ….யார் கண்டா பிற்காலத்துல ‘ஸ்ரீனிவாசன்’ மாதிரி ‘பிராடிஜியா’ பிரபலம் ஆகலாம்….(பலத்த கைத்தட்டலோடு நாடகம் நிறைவு பெறும்)…..
—————————————————————————————————————

———————————————————————————————————————–

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.