சுபாஷிணி திருமலை

செவ்வாய் மடிந்து புதன் எழுங்காலையே, கண்கள் அலைபேசியில் ‘செய்தி’ பெட்டியைப் பரபரப்பாகச் பார்க்கத் தொடங்கிவிடும். அவ்வளவுதான் எங்கிருந்துதான் உற்சாகம் பாய்ந்து ஒட்டிக் கொள்ளும் என்று தெரியாது… உடலில் உள்ளத்தில் உற்சாகத் துள்ளல்தான். அன்று வேலைகள் எல்லாம் ஒரு துரித கதியில் தான் நடக்கும். வேறு யாரும் புதியதாக வேலை வைத்து விடக் கூடாதே என்று பதைத்துப் பதைத்து இருக்கும். இதே மன நிலையில் தான் நிறுவனத்திற்குக் கிளம்பி, அன்றைய அலுவலக வேலைகளை முடிக்கும் வரை இந்தப் பதட்டம் நீடிக்கும். “மேடம் இன்று மாலையில் நீங்கள் …..” என்று யாராவது கேட்டுவிடப் போகிறார்களே என்று அச்சம் இருக்கும். அப்படி யாராவது கேட்டு விட்டாலோ, அவசர அவசரமாக ‘வேலை இருக்கின்றது’ என்று சொல்லி விடுவேன். இது என் தோழிகளுக்கும் நண்பர்களுக்கும் என் குடும்பத்தாருக்கும் பழகிவிட்டது. எனவே. அவர்களே முன்வந்து “புதன் கிழமை, மேடம் பிஸி” என்று கூறிவிடுவார்கள். அன்று, வழக்கமாக நான் உருகி உருகி காதலிக்கும் வான் மேகங்களும், வங்காள விரி குடாவும், என்னை ஏக்கமாய்ப் பார்க்கும். எப்படியாகிலும், என்னைத் தேடி மறுநாள் வரத் தானே போகிறாய். அப்போது உன்னைக் கவனித்துக் கொள்கிறோம் என்று தங்கள் ஊடலைக் காண்பிக்கும். எனக்கோ அன்று எதுவும் பெரிதாகத் தோன்றாது.

ஆட்டோ சீனிவாசனுக்கு அழைப்புப் போகும். அதுவரைப் பார்த்த வேலை தடைபடும். எல்லாவற்றையும் அடுக்கி அதன் அதன் இடத்தில் வைக்கத் தொடங்கி விடுவேன். மணி 5.30. என் கைப்பை, பின் அதன் இணைப்பை என்று எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு கையெழுத்துப் போடக் கிளம்பிவிடுவேன். “மேடம் இன்று புதன்கிழமை கிளம்புகின்றேன்” என்று பேரா அன்னி தாமசிடம் கூறிவிட்டு, தேவி, அருணா பை…பை…பை… என மின் தூக்கியிடம் ஒடிவருவேன். அப்போது தான் தலை போகிற அவசரம் போல் யாராவது குறுக்கே வருவார்கள். எல்லோர்க்கும் ‘போகிறேன்’ என்று பதில் தான். எங்கள் அலுவலுக உதவியாளர் ஜெயா கேள்விக் குறியாய் “நேரே வீட்டுக்குத் தானா” என்று நிற்பாள். ஏனெனில் அவள் வீடு என் வீட்டிற்குப் போகிற வழியில் தான் இருக்கின்றது. அவளுக்கும் ‘இல்லை’ என்ற பதில்தான். இத்தனையும் தாண்டி நிறுவன வாசலுக்கு வருவேன். பரந்துபட்ட விரிகுடா மலர்ந்து மல்லாந்து கிடக்கும். ‘கவியெனக் கிடக்கும் கோதாவரி’ என நதியைப் பாடிய கம்பன் நினைவில் வருவான். எத்தனை கவிகள் சேர்ந்தால் ஒரு கடல் ஆகும் என்று தோன்றும் போதே, கண்கள் ஆட்டோவைத் தேடும். கான்ஸ்டபிள் மீனா ‘மேடம்… ஆட்டோ அப்போதே வந்து விட்டது’ என்று என்னை நோக்கி வருவார். அவருக்கு ஒரு நன்றியாய் ஒரு அணைப்பு. ஆட்டோவில் அமர, சீனிவாசன் ஆட்டோவைக் கிளப்புவார். உடனே உடம்பு, உள்ளம் எல்லாம் அமைதியாய் அடங்கிவிடும். வங்கத்திற்கு இணையாக ஆட்டோ செல்லத் தொடங்க, இனி நானும் கடலும் தான். இந்த உரையாடல் மிகவும் அந்தரங்கமானது. என்னுடைய அத்துனை அந்தரங்கங்களையும் அதுதான் இதுவரைக் காப்பாற்றி வருகின்றது. இனியும் அந்த வேலையைச் செய்யும்.

ஆட்டோ கடற்கரைச் சாலையைக் கடந்து, ஐ ஜி அலுவலுகம் திரும்பி, தி நகர் நோக்கிச் செல்லத் தொடங்கியது. அது போய்ச் சேருமிடம், தக்கர்பாபா தொழில் நுட்பப் பள்ளி வளாகத்திலுள்ள “காந்தி கல்வி நிலைய”த்திற்குத்தான். இது வெங்கட் நாராயண சாலையில் உள்ளது. இத்தனை பரபரப்பும் அங்கு செல்வதற்குத் தான். இந்த கல்வி நிலையம் கடந்த 40 வருடங்களாக அங்கு செயல்பட்டு வருகின்றது. இதன் நிறுவனர் காந்தியவாதியான டி.டி. திருமலை அவர்கள். “வாருங்கள்! எல்லோரும் அமர்ந்து காப்பி குடிக்கலாம்” என்பார். அனைவரும் அன்பராய்க் கூடுவோம் என்பதுதான் இதன் தாத்பர்யம். “கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்” என்பதுதான் அவரது வாழ்வியல். இதையுணராவிட்டால் காந்தியை உணரமுடியாது.


காந்தியம் என்பது அன்பின் விரிவாக்கம் என்பது தான் அவரது புரிதல். காந்தியைக் கூறுகின்றேன் என்று தனியாக அமர்ந்து கூறியதில்லை. அவரது வாழ்வியலிலிருந்து, அவருடன் உரையாடலிலிருந்து அவர் மற்றவர்களிடம் கூடிடும் பாங்கிலிருந்து, சக மனிதர்களை மதித்துப் பாராட்டி, அக்கறைப்பட்ட பொழுது காந்தி தானாகவே வந்து அமர்ந்து விடுவார். காந்தியை, பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே கொண்டு செல்வது தான் இவரது சிறப்பான நோக்கமாக இருந்தது. அதைத்தான் “இவர் நிறுவிய காந்தி ‘கல்வி நிலையம்’ அவரது காலத்திலிருந்து செய்யத் தொடங்கி, அவர் மறைந்த இக்காலத்தும் செய்து வருகின்றது. இது தவிர, ஒவ்வொரு புதன் மாலை 6.45க்கு தொடங்கி, 7.30 வரை ஒரு நூலைப் படித்துவந்து பகிர்ந்து கொள்ள வேண்டும் என “புதன் கிழமை புத்தக விமர்சன வட்டம்” தொடங்கி கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேல் நடைபெற்று வருகின்றது. மணி 7.30 ல்லிருந்து 7.45 வரை அந்த நூலின் ஆசிரியர் இருந்தால் அவர் நம்முடன் பகிர்ந்து கொள்வார். இல்லாவிடில் அவ் வாரத்தில் ஏற்பட்ட ஏதாவது ஒரு பகிர்தலை வந்திருந்தவர்கள் நம்முடன் பகிர்ந்து கொள்வார்கள். இக் கூட்டத்தின் சிறப்பு என்ன வென்றால், நூலாசிரியரின் கருத்து மட்டும்தான் பகிர்ந்து கொள்ளப் படும். கூட்டமும் சரியாக 6.45 மணிக்குத் தொடங்கி 7.30க்கு முடிந்து விடும். இதில் எந்த வித மாற்றமும் இல்லை. ஒருவர் இருந்தால் கூட கூட்டம் நடைபெறும். நூல் பகிர்ந்து கொள்பவர் தாமதம் என்றாலும் கூட்டம் தொடங்கி விடும். இங்கு வருவதால் நம்மால் வாரம் ஒரு நூல் நம்மையறிந்து தெரிந்து கொண்டு விடுகின்றோம்.

அப்பாடா! அண்ணா சாலையில் நந்தனம் சிக்னல் வந்தாகி விட்டது. சிக்னலும் கிளியர். ஆட்டோ தக்கர் பாபா வளாகத்தில் நுழைந்து விட்டது. “சீக்கிரம் சீக்கிரம் சீனிவாசன்” என்று மனம் பதறுகிறது. சங்க இலக்கியத்தில் நிகழ்வொன்று பதிவாகியிருக்கிறது. தலைவன் பொருள் சம்பாதிப்பதற்காக தலைவியை விட்டுப் பிரிந்து சென்று இருப்பான். வேலை முடிந்ததும் தேரில் விரைந்து வருவான். தலைவன் தேரோட்டியிடம் “இன்னும் விரைந்து செல். தலைவி எனக்காக  காத்திருப்பாள், நான் எதிர்பாராது அவள் முன் நின்று மகிழ்ச்சிப் படுத்த வேண்டும். என்மனத்தின் வேகத்தை இத்தேரின் ஓட்டம் ஈடு கொடுக்க இயலவில்லையே! தடுமாறுகிறதே! விரைவாக ஒட்டு” என்று கூறுகிறான். அதே மன நிலைதான். விரைவாய் காந்தி கல்வி நிலையம் சேர்ந்து விட மாட்டோமா? கூட்டம் தொடங்குவதற்குள் அமர மாட்டோமா என்றிருந்தது. அலுவலகத்தை ஆட்டோ அடைந்து விட்டதும் பரபரப்பாக உள்ளே நுழைந்து முன் இருக்கையில் அமர்கின்றேன். அப்போதுதான் கூட்டமும் தொடங்குகிறது.

திரு. மணி அவர்கள் நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். அவர்தான் இன்றைய நூல் விமர்சகர். ஜான் ஹாவார்டு கிரிஃபின் எழுதிய “ப்ளாக் லைக் மீ” (BLACK LIKE ME) என்னும் ஆங்கிலப் புத்தகத்தை தெரிந்தெடுத்திருந்தார். இந்நூல் அவரது மகனுக்கும் (அமெரிக்காவில்) துணைப் பாட நூலாக இருந்திருக்கின்றது. இதை இவர் படித்தவுடன் உடனே இங்குப் பகிர வேண்டும் என்று எண்ணியிருக்கிறார். இது 1957 ஆம் ஆண்டு வெளியான நூல்.
ஜான் ஹாவர்டு கிரிஃபின் ஒரு அமெரிக்கர். அமெரிக்காவில் ஒரு இதழில் பத்திரிகையாளராக இருக்கிறார், நாவலாசிரியரும் கூட.

1957 ஆம் வருடம். ஒரு கறுப்பரை 4 வெள்ளையர்கள் அடித்துத் துன்புறுத்தினர். ஆனால் சட்டம் கறுப்பருக்குச் சாதகமாக இல்லை. இச்செய்தியைக் கேள்விப்பட்ட கிரிஃபின், மிகவும் சங்கடப் பட்டார். அக்காலத்தில் அமெரிக்காவில் ‘கருப்பு வெள்ளை’ நிற வெறி நிலவியிருந்தது கருப்பு என்றுமே அடிமைச் சங்கிலியில் பிணைக்கப் பட்டு இருந்தது. கல்வி, சுகாதாரம் போன்றவை மறுக்கப் பட்ட காலம். கிரிஃபினுக்கு, “கருப்பு நிறம் என்பதால் மனித நேயத்திற்குத் தகுதியில்லாதது என்றும், அவர்கள் வாழவே அருகதை இல்லாதவர்கள் என்றும், என்றும் வெள்ளையருக்கு அடிமை என்பது போன்ற எண்ணங்களை வெள்ளையர்கள் தாம் பிறக்கும் போதே பார்த்து வளர்க்கின்றனர்” என்பது ஒப்புக் கொள்ள முடியாத ஒன்றாகிறது. இந்த அடிமைத் தனத்தை அவர்கள் எவ்வாறு நேர் கொள்கிறார்கள் என்று அறிந்து கொள்ள விரும்பினார் கிரிஃபின். எனவே ‘நீக்ரோ’ இனத்தவருடன் நீக்ரோவாக இருக்கத் திட்டமிட்டார். கிரிஃபின் வெள்ளையர். எனவே தன் நிறத்தை மாற்ற முதலில் எண்ணினார். இதன் முதற்படியாக தோல் மருத்துவரிடம் சென்று தன் நிறத்தைக் கருப்பாக மாற்ற இயலுமா என வினவினார். அம் மருத்துவர் தன் வேறு சில மருத்துவ நண்பர்களோடு இணைந்து இவரது தோலை கருப்பாக மாற்ற ஒப்புக் கொண்டார். உடலில் வெளியில் தெரியும் பாகம் மட்டும் கருப்பாக மாற்ற முடிவுசெய்து, ஒரு சில சாயங்களைத் தயாரித்து, அவரைக் கருப்பாக மாற்றினார். அலர்ஜி ஏற்படாமலிருக்க மாத்திரைகளும் கொடுத்தனர்.

கிரிஃபின் இப்போது ஒரு கறுப்பர். நேற்றுவரை அவர் எந்த எந்த இடங்களுக்குப் போனாரோ அங்கெல்லாம் சென்றார். எல்லோரும் இவரைக் கறுப்பர் என்றே நம்பினார். வெள்ளையரை அனுமதிக்கும் எந்த உணவு விடுதியும் இவரை அனுமதிக்கவில்லை. நேற்று வரை தங்கிய விடுதிக்கும் இவர் செல்ல முடியாது. என்ன செய்வது என்று புரியவில்லை. அந்த விடுதி வாயிலில் அமர்ந்திருந்த நீக்ரோ ஷூ பாலிஷ் போடுபவனுடன் இவரும் அமர்ந்து கொண்டார். அவர்கள் தங்கும் இடத்தில் இவர் தங்கினார். “பொதுக் கழிப்பிடம்” 2ம் கறுப்பருக்கென்று தனியாக கட்டி விடப்பட்டு இருக்கின்றது. ஒரு நிறத்திற்கு இத்துணை வெறுப்பு இருக்குமா? என்று எண்ணி எண்ணி மாய்ந்து போகிறார். மெது மெதுவாக கறுப்பர்களிடம் பழகுகிறார். மார்ட்டின் லூதர் கிங் பேசும் கூட்டங்களுக்குச் சென்று, அங்கு கேட்கவரும் கறுப்பு இனத்தவரின் உணர்வுகளைக் கவனிக்கிறார். அவர்களுடன் உரையாடுகிறார். தாங்கள் வெள்ளையர்களோடு போட்டி போட முடியாது. தகுதியில்லையென்றே எண்ணியிருந்திருக்கிறார்கள். கறுப்பர்களுக்கு என்று அமெரிக்காவில் தெற்குப் பக்கத்தை ஒதுக்கி வைத்திருந்தனர். வெள்ளையரின் மனப்பாங்கு, கறுப்பர்களை நடத்தும் விதம் ஆகியவற்றைக் கவனிக்கும் போது நம் நாட்டில் ஹரிசனங்களை சாதி இந்துக்கள் நடத்திய விதம் நினைவிற்கு வருகிறது.

தற்போது கிரிஃபின் ஒரு கறுப்பர். அவர் ஒரு பஸ்ஸில் ஏறிப் பயணம் செய்கிறார். இந்த பஸ் பயணம் பலவித அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறது. எந்தக் கறுப்பருக்கும் அவர் இறங்கவேண்டிய நிறுத்தத்தில் பஸ் நிற்காது. டிரைவர் விருப்பப் படும் இடத்தில் தான் இறங்க வேண்டும். ‘ஒரு கறுப்பன் சொல்லி நாம் கேட்பதா?’ இந்த எண்ணப் பாங்கு அவன் வளரும் போதே வளர்கின்றது. நீண்ட பயணத்தில் நீக்ரோவிற்கு ‘டாய்லட்’ செல்ல வேண்டும் என்றால் பஸ் நிற்காது. கறுப்பர்களுக்குத் தனி பகுதி. வெள்ளையர்க்குத் தனிப்பகுதி. இதெல்லாம் கவனிக்க கவனிக்க கிரிஃபின் உடைய மனம் கலங்குகிறது.

தன்னால் என்ன செய்ய இயலும் என்று யோசிக்கிறார்! ஒரு முறை வெள்ளைக்காரர்கள் கிரிஃபினுக்கு தன் காரில் இடம் கொடுக்கின்றனர். இவருக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் இவருக்கு இடம் கொடுத்ததோ இவரை மனம் வதைத்து அவமானப் படுத்த வேண்டும் என்பதற்காகத் தான் என்று புரிந்தது. ஆனால் அவருக்கு இறங்க முடியாது என்பதை சாதகமாக்கிக் கொண்டனர். “கறுப்பு இனப் பெண்கள் வெள்ளையரின் ஆசைகளை நிறைவேற்றுபவர்கள். தங்கள் வறுமைக்காக அவர்கள் எதையும் இழக்கத் தயாராய் இருப்பார்கள். உன் மனைவி உன் பெண் எல்லோரும் இப்படித்தான்” என்று இவரை கிண்டல் செய்து கேலி செய்து மனம் மகிழ்ந்தனர். இன்னொரு முறை 55 வயது வெள்ளையர், பேரன் பேத்தி பார்த்தவர். ஒரு கம்பெனியை நிர்வகிப்பவர். அவரது கம்பெனிக்கு வேலைக்கு அமர்த்தும் நீக்ரோக்கள் இவரது உடல் ஆசைகளை நிறைவேற்றியே ஆகவேண்டும். அப்புறம்தான் வேலை நியமனம் என்றார், கிரிஃபினிடம். அவரால் எப்படி இப்படி மனம் கூசாமல் கூறமுடிகிறது என்று வேதனைப்படுகிறார். ‘உன்னிடம் இதுதான்’ என்று சொல்லிச் சொல்லி நீக்ரோக்களை முன்னேற விடாது செய்தனர். நாளடைவில் அதையே இவர்கள் நம்பவும் தொடங்கி அவர்களது எண்ணத்தில், இரத்தத்தில் அது ஊறிப் போய் விட்டது என்கின்றார்.

இதை நோக்கும் போது நம்நாட்டு, கேரள நம்பூதிரிகள் தலித் மக்களின் உணர்வுகளைச் சாகடித்து, தங்கள் காமத்தை அவர்களால் தீர்த்துக் கொண்டதும் அப்போது அவர்களுக்குத் ‘தீண்டாமை’ என்னும் சொல் மறந்து விடுவதும் நம் நினைவிற்கு வருகின்றது.

அமெரிக்காவில் கறுப்பர்களின் ஏழ்மையை வைத்து அவர்களின் உழைப்பை, உணர்வுகளைச் சுரண்டினர். இங்கு ‘சாதி’யை வைத்துச் சுரண்டினர்.
கிரிஃபினின் ஒரு வெள்ளிக் கிழமை நேரம். அன்று வங்கி மூடிவிட்டது. இனி  திங்களன்று தான் திறக்கும். இம்மாதிரி சமயங்களில் அங்கு கடைகளில் செக்குகளை வாங்கிக் கொள்வார்களாம். அந்த எண்ணத்தில் இவர் கஷ்டம் இராது என்று எண்ணிவிட்டார். அப்போது இவரது கையில் டாலரே இல்லை. ஒவ்வொரு கடையாக ஏறி இறங்குகிறார். பணமாகத் தர வேண்டாம். ‘செக்’ கைவைத்துக் கொண்டு பொருளாகத் தாருங்கள் என்று கெஞ்சுகிறார். அவரது நிறம் ‘கருப்பு’ என்பதால் மறுக்கப் படுகிறது. அலைந்து அலைந்து ஓய்ந்த போது, ஒரு கத்தோலிக்க சர்ச் நடத்தும் கடையில் இவரது ‘செக்’ மதிக்கப் படுகிறது. அன்று இவர் அடைந்த மன வேதனையைக் கடலில் கரைத்தாலும் கரையாது.

1957ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஒன்றிலிருந்து இருபத்தைந்து வரை இந்த கறுப்பு நிற சோதனையை மேற் கொள்கிறார். பின் நிறத்தை மாற்றுகிறார். 1958 ஆம் வருடம் ஜனவரி 4லிலிருந்து ஏப்ரல் 15 வரை இதை நூலாக வடித்து வெளியிடுகிறார். தொலைக்காட்சியில், செய்தித்தாளிலும், நேர்காணல்கள் வெளிவந்தன.

இதற்கு முன் இவர்கள் வீட்டுக்கு வந்த நண்பர்கள், உறவினர்கள் இந்த புத்தகம் வெளி வந்த பின் வருவதில்லை. வெள்ளையர் இனத்திலிருந்து இவர் ஒதுக்கி வைக்கப்பட்டார் என்று நூலைப் பகிர்ந்து முடித்தார் திரு.மணி அவர்கள். நூல் ஆசிரியரின் மன நிலையில் நின்று, உணர்வுப் பூர்வமாகப் பகிர்தல் இருந்தது. நாங்களும் உணர்ச்சி மேலிட அமைதியாய் இருந்தோம். மணி 7.30 என்றால் முடித்துவிட வேண்டும். அதனால் மணி அவர்கள் முடித்துவிட்டார்.

நிறுவன இயக்குனர் திரு. அண்ணாமலை எழுந்து ஒரு தகவலைத் தெரிவித்தார். இந்த புதன் கிழமையிலிருந்து ஒவ்வொரு நூலுக்கும் இணையான காந்தியக் கருத்துகள் பற்றி பகிர்ந்து கொள்ளலாம் என்பது திட்டம் எனக் கூறி, முதலில் அவர் இதைச் செயல் படுத்தினார்.

“தென்னாப்பிரிக்காவில் இந்தியர்களுக்காக சத்தியாக்கிரகம் நடத்திய காந்தி ஏன் அங்கிருக்கும் நீக்ரோக்களுக்காக குரல் எழுப்பவில்லை எனக் கேள்வி எழுந்தது. அதற்கு காந்தியே ஓரிடத்தில் இது பற்றிக் கூறியிருக்கிறார் என்றார். இந்தியருக்கு இணையாக நீக்ரோக்களும் அவமானப் பட்டனர். ஆனால் இதை நீக்ரோவே எதிர்த்து நின்றால்தான் வெற்றி பெற முடியும். அவர்கள்தான் அதற்குத் தகுதி உடையவர்கள். அவர்கள் கஷ்டத்திற்கு அவர்களே முதலில் குரல் கொடுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். கேரளாவில் வைக்கம் சத்தியாக்கிரகத்தின் போது, அக்கிரகாரத் தெருவில் தலித் மக்களை அழைத்துச் சென்றனர். அப்போது ஃபாதர் ஜோசப் தான் கலந்து கொள்ளலாமா என காந்தியை வினவியதற்கு, “கூடாது, இது இந்து மத சம்மந்தமானது. நீங்கள் கலந்து கொண்டால் மதப் பிரச்சனையாகி விடும்” என்று கூறி விட்டார்.

தென்னாப்பிரிக்காவில் ஜூலுக்கள் கலகம் நடந்தபோது, ஜூலுக்களை கொன்று குவித்தனர் ஆங்கிலேயர்கள். அப்போது சக மனித நேயம் என்னும் அடிப்படையில் அவர்களுக்கு மருத்துவ உதவி செய்ய ஓடினார். அடிபட்ட இடத்திலிருந்து மருத்துவ உதவி அளிக்கும் இடம் பல மைல்கள் தூரம். தானே ஒவ்வொருவராய் சுமந்து வந்து சிகிச்சையளித்தார்.
காந்தியின் நிலைப் பாட்டை நாம் உணர முடிகிறது.

நண்பர்களே! இந்த புதன் கிழமையின் பண்பும் பயனும் இது தானே!

 

காந்தி

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “பண்பும் பயனும் அது

  1. கிரிபினுக்கு ஏற்பட்ட பாதிப்பு தென்ஆப்ரிக்காவில்
    காந்திக்கு நிறையவே ஏற்பட்டது. அந்நிகழ்வுகள்
    பாரிஸ்டர் காந்தியை மகாத்மா காந்தியாக மாற்ற
    வழி வகுத்தது. கடையத்தில் கல்யாணி அம்மன்
    கோவிலில் உயர் ஜாதிக்கு மரியாதையும் கீழ்
    ஜாதிக்கு அவமரியாதையும் செய்யப்பட்ட போது
    பாரதி கீழ் ஜாதிக்காரர்களோடு சேர்ந்துகொண்டு
    தன் பூனூலை அறுத்து எறிந்தார். அந்த நாள் முதல்
    அவர் பூனூல் அணிவதில்லை என்பதை பாரதியின்
    மைத்துனி சொர்ணம்மாளும் புறங்காட்டாப்புலி
    சாமி சேர்வையும் சொல்லியிருக்கிறார்கள்.
    குற்றாலத்துக்கு ஒருமுறை காந்தி வந்த போது
    ஹரிஜனங்களுக்கு அருவியில் குளிக்கத தடை
    என்பதைக் கேட்டவுடன் தானும் அருவியில்
    குளிக்க மறுத்துத் திரும்பிவிட்டார்.
    இரா. தீத்தாரப்பன், இராஜபாளையம்.

  2. 1.ஒருவர் இருந்தால் கூட கூட்டம் நடைபெறும். நூல் பகிர்ந்து கொள்பவர் தாமதம் என்றாலும் கூட்டம் தொடங்கி விடும்.
    => பண்பு நம்பர் 1; காந்திஜி ஆதரித்து இருப்பார்.
    2.இதற்கு முன் இவர்கள் வீட்டுக்கு வந்த நண்பர்கள், உறவினர்கள் இந்த புத்தகம் வெளி வந்த பின் வருவதில்லை.
    => புரிகிறது. என்று நாமும் இதற்கு தயார் ஆகிறோமோ, அன்று தான் நமக்கு விடுதலை.
    3. உதட்டளவு தார்மீகம் ஒழியவேண்டும். அதர்மம் அதற்கு மேல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *