காற்று வாங்கப் போனேன் – 50
— கே.ரவி.
சொற்களுக்குள் ஏறிக் கொண்டேன். என்ன செய்யப் போகிறாய்?
தம்பி, உனக்கும் எனக்கும் பதில் சொல்லவே வந்தது ஒரு கவிதை, 1978-ல்:
என்
சொற்களுக்குள் ஏறிக்கொள் சொர்க்கத்தைக் காட்டுகிறேன் – என்
கற்பனைப் புரவியையுன் கண்களில் பூட்டுகிறேன்
மேகங்களிலே தேகம் இழைத்து மேனி படைத்திடலாம்
மின்னலைப்போல் துள்ளித்துள்ளி வானில் குதித்திடலாம்
நிலாப்பிறையைத் துந்துபியாக்கி நாதம் எழுப்பிடலாம்
வானவில்லை வளைத்துக் கட்டி ஆடை நெய்திடலாம்
என்
சொற்களுக்குள் ஏறிக்கொள் சொர்க்கத்தைக் காட்டுகிறேன் – என்
கற்பனைப் புரவியையுன் கண்களில் பூட்டுகிறேன்
நீர்க்குமிழிக்குள் நினைவிழந்துபோய் நித்திரை செய்திடலாம் – அங்கு
நேர்ப்படுகின்ற காற்றை நமக்குக் காவல் அமர்த்திடலாம்
நட்சத்திரங்களை எல்லாம் நமது வார்த்தை வயிரங்களால்
வெட்கப்பட வைத்து நெஞ்சம் விம்மிப் புடைத்திடலாம்
என்
சொற்களுக்குள் ஏறிக்கொள் சொர்க்கத்தைக் காட்டுகிறேன் – என்
கற்பனைப் புரவியையுன் கண்களில் பூட்டுகிறேன்
உயிர்க்கருவுக்குள் ஊடுருவிப்போய் உண்மை யறிந்திடலாம் – அங்கு
வடிவம் எடுத்து வளரும் புதிய மாயம் உணர்ந்திடலாம்
உலக விளிம்புக் கோடிச்சென்றே உருண்டு விழுந்திடலாம்
விழுந்து கொண்டே வீரக் கதைகள் பேசிக் களித்திடலாம்
ஆனால் என்
சொற்களூக்குள் ஏறிக்கொண்டால் மீண்டுவர மாட்டாய்
சொற்களோடு சொற்களாகக் கரைந்துபோய் விடுவாய்
விழிதொடாத இடமெலாமென் மொழிநுழைந்து செல்லும்
அழிவிலாத அட்சரங்கள் அமரவாழ்வு நல்கும்
சொற்களுக்குள் ஏறிக்கொள் சொர்க்கத்தைக் காட்டுகிறேன் – என்
கற்பனைப் புரவியையுன் கண்களில் பூட்டுகிறேன்
அதோ அந்தக்
கானல் நீரைக் கடந்து சென்றால் கற்பகச் சோலை வரும்
கானல் நீரை எப்படிக் கடப்பது? கானல் நீர் ஒரு தோற்ற மயக்கம்தானே. அது மெய்யில்லையே! பிறகு அதை எப்படிக் கடந்து செல்வது? இருக்கும் ஒன்றைக் கடப்பதற்கு முயற்சி செய்யலாம். இல்லாத ஒன்றைக் கடக்க என்ன செய்ய முடியும்? இல்லாத ஒன்றைக் கடப்பது வெகு சுலபம். அது இல்லை என்பதை உணரும் கணமே அதைக் கடந்து சென்று விடுகிறோம். கானல் நீரைக் கடந்து செல்கிறோமோ இல்லையோ, இப்படிப்பட்ட வியாக்யான, விளக்கங்களை எல்லாம் கடந்து சென்றால்தான் கவிதையாகிய கற்பகச் சோலை வரும்!
புரிகிறது. ஆனாலும் அறிவு, அதான் நம்ம புத்தி சிகாமணி, எப்பொழுதும் இப்படிப்பட்ட வியாக்யானங்களைச் செய்து கொண்டுதான் இருக்கிறான். மனம், அதாங்க நம்ம மனோன்மணி, பாவம், இருதலைக் கொள்ளி எறும்பாய் தவித்துக் கொண்டுதான் இருக்கிறாள்.
பதினைந்து ஆண்டுகளுக்கு முன், ஒருநாள் மாலையில், சென்னை, மெரினா கடற்கரை சாலையில் நான் காலார நடந்து சென்று கொண்டிருந்தேன். என் கூட ஒரு நங்கையும் நடந்து வந்தாள். ஒளவையார் சிலையருகே வந்ததும், ‘வாக்குண்டாம்’ என்ற செய்யுளை உரக்கச் சொல்லிக் கொண்டே நடந்தேன். ஏன் என்று கேட்க வேண்டாம். நான் எதைப் பார்த்தாலும், எதைக் கேட்டாலும் அதை எப்படியாவது ஒரு கவிதையுடனோ, செய்யுளுடனோ தொடர்பு படுத்திவிடும் என் மனம். இந்தப் பைத்தியக்காரத்தனத்துக்குச் சமீப கால எடுத்துக்காட்டு ஒன்று சொல்கிறேன். எனக்கு மருத்துவர் எழுதிக் கொடுத்திருந்த மாத்திரையை என் ஓட்டுநர் சிவசங்கரன் வாங்கி வந்து கொடுத்ததும் அந்த மாத்திரையின் பெயரைப் பார்த்தேன். ரேஜோ டி (Razo D) என்று எழுதியிருந்தது. உடனே, ‘ரேஜோ, ரேஜோ டி என்னோட மருந்து’ என்று ‘யாரோ யாரோடீ’ என்ற திரைப்படப் பாடல் மெட்டில் என் மனம் முணுமுணுத்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்! பைத்தியம் முற்றி விட்டது.
சரி, மீண்டும் மெரினா கடற்கரை, ஒளவை சிலை, வாக்குண்டாம் என்ற சமாசாரத்துக்கு வருகிறேன். நான் அந்தச் செய்யுளைச் சொன்னதும் அருகில் நடந்து வந்த நங்கை அதன் அர்த்தத்தைக் கேட்டாள். அதை அப்படியே சொன்னாலே போதுமே, பொழிப்புரையே தேவையில்லையே என்று நினைத்து அர்த்தம் சொல்லத் தொடங்கியதும், என் குரலும், போக்கும் மாறிவிட்டதை உணர்ந்தேன். வேறு ஏதோ ஓர் அதிர்வுக்கு ஆட்பட்டு நான் பேசுவது போல் எனக்கே தோன்றியது. பேசினேன்:
வாக்கு உண்டாகும். சாதரணச் சொல் இல்லை வாக்கு என்பது. ‘மணிவாக்கு’ என்று பாரதி குறிப்பிட்டானே அந்த வாக்கு உண்டாகும். நல்ல மனம் உண்டாகும். அந்த ‘நல்ல’ என்ற சொல்லுக்குப் பொருள் தெரிய வேண்டுமா:
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனிபாம்பு இரண்டுமுடனே
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே
இந்த வாசகத்தைத் திரும்பத் திரும்பச் சொல்லிப் பார்க்க வேண்டும். அப்போது புரியலாம், ‘நல்ல’ என்ற சொல்லின் அர்த்தம். அத்துடன், மாமலராள் நோக்கு உண்டாகும். அதாவது, ‘மலரின் மேவு திருவே’ என்று பாரதி பாடினானே, அந்தத் திருமகளின் நோக்கு உன் மேல் விழும் என்பது ஒருபுறமிருக்க, மாமலராகிய இந்தப் பிரபஞ்சத்தையே ஆள்கின்ற நோக்கு உனக்கு ஏற்படும். பூக்கொண்டு தும்பிக்கையான் பாதம் சார்வாருக்கு என்று எளிதாக முடித்து விடக் கூடாது, தோழி! “மேனி நுடங்காது” என்ற சொற்றொடரை விட்டுவிடக் கூடாது. அதாவது மேனி வளையாமல், பூக்கொண்டு தும்பிக்கையான் பாதம் சார்வாருக்கு என்று படிக்க வேண்டும். இது என்ன குழப்பம்! மேனி வளைந்துதானே இறைவனைத் தொழுவது வழக்கம். அதுதானே நமஸ்காரம் செய்யும் முறை. மேனி வளையாமல் என்றால்…? மேனி வளையாமல் த்யான நிலையில் அமர்ந்து கொண்டு வணங்க வேண்டுமோ? இல்லை மகளே. மேனி வளையாமல், பூக்கொண்டு துப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதம் சார வேண்டுமாம்! அதாவது, த்யான நிலையில் அமர்ந்து கொண்டு, உன் மேனி வளையாமல் நிமிர்ந்து அமர்ந்து கொண்டு, தும்பிக்கையான் பாதத்தைச் சார வேண்டும். எது சார வேண்டும்? துப்பார் திருமேனி சார வேண்டும்! ஸ்தூல சரீரம் எனப்படும் திட்பவுடல் வளையாமல், நிமிர்ந்து த்யான நிலையில் அமர்ந்து கொண்டால், சூக்ஷ்ம சரீரம் எனப்படும் நுட்பவுடல் நீர்போல் தெளிவாக இருக்குமாம். வெறும் மேனி வளையாமல் த்யான நிலையில் உட்கார வேண்டும். மனம் அடங்கியிருக்க வேண்டும். அப்போது திருமேனியாக, தூய நீர்போல் ஆசாபாசங்கள் எதுவும் இன்றி நுட்பவுடல் துலங்கும். அப்போது அதில் பூக்கின்ற ஞான மலரைக் கொண்டு தும்பிக்கையான் பாதம் சார வேண்டுமாம். தும்பிக்கையைச் சொல்லி, அப்படிப்பட்ட கையுடையவனின் திருப்பாதத்தைக் காட்டுக்கிறாளே இந்தப் பாட்டி! கைகாட்டிக் கால்காட்டும் வித்தை என்ன வித்தையோ! தும்பிக்கை என்பது யோக மார்க்கத்தில், பன்னிரண்டு அங்குலத் தொலைவு பாயும் ஸ்வாஸத்தை, மூச்சுக் காற்றைக் குறிக்கும் ஒரு பரிபாஷை வழக்கு. அதன் பாதம் என்பதோ மூலாதாரச் சக்கரம் என்ற நுட்ப ஸ்தானம். அந்தத் திருப்பாதத்தைச் சேர்ந்தவர்க்கு என்று சொல்லாமல் ‘சார்வார் தமக்கு’ என்று சொல்கிறாளே!
சார்புணர்ந்து சார்பு கெட ஒழுகின் மற்றொழித்துச் சார்தரா சார்தரு நோய்
உலகப் பொதுமறையின் சாரத்தை அன்றோ பாட்டி இங்கே குறிப்பிடுகிறாள்!
இதையெல்லாம் கேட்டுக் கொண்டே அருகில் நடந்து வந்து கொண்டிருந்த நங்கையின் கண்கள் பனித்தன. “சார், இப்படியெல்லாம் இந்தப் பாடல் பற்றி நான் யோசித்ததில்லையே” என்று நாத்தழுதழுக்க அவள் சொன்னதும், “யோசித்து வருவதில்லை இது. யோகத்தில் வருவது!” என்று நான் பதில் சொன்னதாக ஞாபகம்!
ஏறக்குறையப் பன்னிரண்டு ஆண்டுகள் என் செயலாளராகப் பணிபுரிந்ததோடு, எங்கள் குடும்பத்தில் ஒருத்தியாகவே இருந்துவிட்டு, இப்பொழுது லண்டனில் சென்று வாழும் செல்வி ராணி ஶ்ரீநிவாசன் என்பவர்தான் அந்த நங்கை. இந்தச் சம்பவம் நடந்து பத்து ஆண்டுகளுக்குப் பிறகு லண்டனில், தான் ஒரு சொற்பொழிவு ஆற்றப் போவதாகவும், அதில் ‘வாக்குண்டாம்’ பாடலைப் பற்றிய விளக்கத்தைச் சொல்ல ஆசைப்படுவதாகவும் குறிப்பிட்டு, அந்த விளக்கத்தை மீண்டும் நினைவு படுத்தி எழுதுமாறு மின்னஞ்சல் மூலம் என்னைக் அவள் கேட்டிருந்தாள். கேட்டதும் வருமா விளக்கம்? யோசித்து வருவதில்லை பெண்ணே, அது யோகத்தில் வருவது என்று மனத்துக்குள் நினைத்துக் கொண்டு அவள் கேட்டபடி விளக்கம் அனுப்பாமலேயே விட்டுவிட்டேன். அவள் அந்தக் கூட்டத்தில் என்ன பேசினாளோ தெரியவில்லை.
இப்படியெல்லாம் வியாக்யானம் சொல்வது சரியா என்பது மிகவும் நியாயமான கேள்வி. ஆனால், ‘மறை’ என்று நம்பப்படும் படைப்புகளில் படிப்பவர் நிலைக்கு ஏற்ப வெவ்வேறு அடுக்குகளாக அர்த்தங்கள் பொதிந்திருப்பதை நாம் மறுப்பதற்கில்லை. ‘The Occult Element in Tamil speech’ என்று பாரதி ஓர் ஆங்கிலக் கட்டுரை எழுதியிருந்தான். அதில் மறை வல்லுநர்கள் பொதுவான சமூக மொழியைப் பயன்படுத்தும் போது கூடத் தாங்கள் சொல்லும் சொற்றொடர்களில் மறை பொருள் இருக்கும் வண்ணமே பேசுவார்கள் என்று குறிப்பிட்டுவிட்டு, ‘அப்படிப்பட்டவர்கள், ‘உட்கார்’ என்று சொன்னால், அது, உட்(கு)+ ஆர் எனப் பிரிந்து, ‘உள்ளமைதி பெறுக’ எனப் பொருள்தரக் கூடும் என்று எழுதியுள்ளான்.
பதினைந்து அண்டுகளுக்கு முன், மெரினா கடற்கரை சாலை ஓர் ஆரண்யமாக, அதாவது, வனமாக ஆனதும், அங்கே, நெருங்கியமர்ந்து கொண்டு ஓர் உபநிடதப் போக்கில் ராணியும் நானும், கார்க்கியும் யக்ஞவால்க்யரும் போல் உரையாடியதும் இப்போது மனத்திரையில் நிழலாடுகிறது. அதெல்லாம் ஒரு கண நேர அனுபவம். யோசித்து வாராது தம்பி. வெறும் புத்தி முயற்சியில் விரித்துப் பேசும் வியாக்யானம் இல்லையது. ஆட்கொள்ளப்பட்ட நிலையில் உள்ளிருந்து ஊற்றெடுத்து வரும் உணர்வு தம்பி. ஆங்கிலத்தில் ‘ஞானத் தாழிசை’ விளக்க நூலாகிய ‘த வெர்ஸஸ் ஆஃப் விஸ்டம்’ எழுதும் போது என்னை என் குருநாதர் அப்படிப்பட்ட நிலையில்தான் வைத்திருந்தார்.
‘தம்பட்டம் போதுமண்ணே’ என்று இடித்துரைக்கிறான் சிகாமணி.
தம்பட்டம் இல்லை தம்பி, தத்துவம். இப்பொழுது விஷயத்துக்கு வந்து விடுகிறேன்.
நம் திட்ப உடலைக் கடந்த நிலையில் இன்னோர் அதிர்வுக்கு நாம் வசமாவதுதான் ‘பரவசம்’ என்ற செய்தியைச் சொல்லத்தான் இந்தக் கதை. அப்படிக் கடந்த நிலையில் வசமாவதைத்தான் ‘பரவசம்’ என்று குறிப்பிடுகிறோம். ஆங்கிலத்தில் இதுதான் ‘எக்ஸ்டஸி’ எனப்படுகிறது. இதையே தத்துவ மொழியில் சொன்னால், ‘Transcendental Experience’.
வியாக்யானமே தேவைப்படாத என் பாடல் ஒன்றின் வரிகள் இப்பொழுது மேலும் சுடர் விட்டுப் பிராகாசிப்பதைப் பார்க்க முடிகிறது. பாரதியை நினைத்து எழுதிய அந்தப் பாட்டு முழுமையும் முன்பே ஒரு பகுதியில் தந்து விட்டேன். இருந்தாலும், பரவசம் பற்றிய விளக்கத்துக்குப் பிறகு மேலும் ஒளிபெற்று விளங்கும் அந்த வரிகளை மட்டும் இங்கே மீண்டும் நினைவு கூரலாம்:
கானல் நீரில் காணி நிலத்தைக் காண நினைத்தானே
காட்டு வழியில் பாட்டுச் சுடர்கள் ஏற்றி வைத்தானே
தேடிச் சென்ற திசையெல்லாம் பெருந் தீ வளர்த்தானே
தேகம் எடுத்ததனாலே அவனும் தேய்ந்து விட்டானே
கானல் நீரைக் கடந்து சென்றால் கற்பகச் சோலை வருமா, வராதா?
(தொடரும்)