பாடல் பெற்ற தலம் – திருவலிதாயம் (பாடி)
ஸ்ரீஜா வெங்கடேஷ்
இன்று பாடி என்ற பெயரால் அனைவராலும் அறியப்படும் ஊர் முன்னொரு காலத்தில் , திருவலிதாயம் எனவும் சிந்தாமணி புரம் எனவும் வழங்கப்பட்டு வந்தது. சென்னையை அடுத்த இந்தப் பகுதியில் மிகவும் பழைமை வாய்ந்த கோயிலான அருள்மிகு திருவல்லீஸ்வர ஸ்வாமி திருக்கோயில் அமைந்துள்ளது. அந்தக் கோயிலையே நாம் பாடல் பெற்ற தலம் என்ற தலைப்பின் கீழ் காணப் போகிறோம்.
பாடியில் லூகாஸ் டிவிஎஸ் பேருந்து நிறுத்ததில் இறங்கினால் பக்கத்திலேயே படவட்டம்மன் கோயில் இருக்கிறது. சிறிய கோயிலானாலும் அம்மன் சக்தி வாய்ந்தவள் என்பதால் கூட்டத்திற்குக் குறைவிருக்காது.அங்கிருந்து நேராகப் பிரியும் பாதையில் சிறிது தொலைவு சென்றால் அழகிய கம்பீரமான கோயில் நம் கண்களுக்குத் தென்படுகிறது. கோயில் மிகப் பழமையானது என்பதை அதன் கட்டடங்களே உணர்த்துகின்றன. நுழைந்ததும் துவஜஸ்தம்பம் , அதை சுற்றிலும் நீண்ட நெடிய தூண்கள் , அமைதியான வெளிப் பிரகாரம் என அமைதியான சூழ்நிலையில் அமைந்திருக்கிறது இந்தத் திருக்கோயில்.
திருஞான சம்பந்தரால் பாடப் பெற்ற புகழை உடையது இந்தத் திருத்தலம். பத்தரோடு … எனத் தொடங்கி பத்து பாடல்கள் இயற்றியுள்ளார். இவ்வாறு பத்து பாடல்கள் கொண்ட தொகுப்பிற்கு தமிழ் இலக்கணம் இட்டிருக்கும் பெயர் தான் பதிகம் . அவர் இறைவனை வலிதாய நாதர் எனவும் இறைவியை தாயம்மை எனவும் விளித்துப் பாடுகிறார்.ஆனால் அர்ச்சனையில் இறைவனை திருவல்லீஸ்வர ஸ்வாமி என்றும் அம்பிகையை ஸ்ரீ ஜகதாம்பிகா என்றும் குறிப்பிடுகிறார்கள். பொதுவாக எல்லா சிவன் கோயில்களிலும் சிவன் சன்னதி தனியாகவும் , அம்பாள் சன்னதி வேறொரு இடத்தில் தனியாகவும் தான் இருக்கும். சிவனையும் , அம்பாளையும் மூலஸ்தானத்தில் வைத்து ஒருசேர நம்மால் காண முடியாது. ஆனால் திருவலிதாயம் இதற்கு விதி விலக்கு. ஈஸ்வரன் சன்னதியும் , அம்பாள் சன்னதியும் ஒன்றுக்கொன்று செங்குத்துக் கோணத்தில் அமைந்திருக்கின்றன. அதனால் நாம் இருவரையும் அவர்கள் மூலஸ்தானத்தில் வைத்தே ஒரு சேர தரிசித்து ஆனந்திக்கலாம். இத்தலத்தில் அம்பாள் சன்னதிக்கு எதிரே உள்ள மண்டபத்தில் மேற்கூரையில் அஷ்ட லட்ஷிமியும் , அஷ்ட திக்குப் பாலர்களும் பொறிக்கப் பட்டுள்ளனர் என்பது மற்றொரு சிறப்பம்சமாகும்.இங்கு முருகருக்கென்று ஒரு தனி சன்னதி அமைந்திருக்கிறது .ஈசன் சன்னதியின் மூலஸ்தானம் அரை வட்ட வடிவமாக விளங்குவதால் இங்கு பிரதோஷம் மிகவும் விசேஷம். ஈசன் சன்னதிக்கு எதிரே வெளியில் செல்லும் வாயில்களின் இருபுறமும் சூரிய சந்திரர்கள் பொறிக்கப் பட்டிருப்பர்கள் இது நியதி. ஆனால் இங்கு சந்திரனுக்குப் பதிலாக விநாயகர் எழுந்தருளியுள்ளார் என்பது கவனிக்க வேண்டிய விஷயம்.
இங்குள்ள தீர்த்தம் முக்தி தீர்த்தம் எனப் படுகிறது. மேலும் இங்கு அனுமன் தீர்த்தம் , பரத்வாஜ தீர்த்தம் உள்ளிட்ட மொத்தம் ஐந்து தீர்த்தங்கள் உள்ளன. தல விருட்சங்களாக கொன்றையும் , பாதிரியும் விளங்குகின்றன.இக்கோயிலின் தல வரலாறு பற்றி கோயிலின் தலமை குருக்கள் திரு.ஞான சம்மந்த சிவாச்சாரியாரிடம் கேட்டோம். அவர் மிகுந்த உற்சாகத்தோடும் பக்திப் பெருக்கோடும் சொன்ன வரலாறு இதோ. கருக்குருவியின் (வலியன் குருவி) வயிற்றில் தோன்றிய பரத்வாஜர் என்ற முனிவர் ஒரு சமயம் மேனகையின் சாபத்துக்கு ஆளாகிறார். அந்தச் சாபம் நீங்கவும் , குருவி வயிற்றில் பிறந்தவன் என்று மற்றவர்கள் கேவலமாகப் பேசுவதைத் தடுக்கவும் இக்கோயிலில் உள்ள தல விருட்சமான சரக் கொன்றை மரத்தின் கீழிருந்து சிவ பெருமானை பூஜித்து வழிபட்டு வர சாப விமோசனம் அடைத்தார் என இக்கோயில் வரலாறு கூறுகிறது என்றார் அவர். மேலும் கூறுகையில் கல்வி கேள்விகளில் சிறந்தவர் உதத்திய முனிவர். அவரது மனைவி அழகே உருவான மமதை என்பவள் . அவள் கருவுற்றிருக்கும் சமயம் உதத்திய முனிவரின் இளைய சகோதரனான வியாழ முனிவர் , மமதையின் அழகில் மயங்கி தகாத முறையில் நடந்து கொள்ள முய்ற்சி செய்ய அவளின் சாபத்துக்கு ஆளாகிறார். அந்த சாபத்தினால் மிகவும் அல்லலுற்ற வியாழ முனிவருக்கு ரிஷி மார்க்கண்டேயர் சாப விமோசனத்திற்கான வழியைக் கூறுகிறார். அதன் படி வியாழ முனிவரும் ஈசனைக் குறித்து தவமியற்ற இரத்தின வனமான திருமுல்லைவாயிலுக்கும் , வேல வனமான திருவேற்காட்டிற்கும் இடையே உள்ள விருத்த ஷீர நதி தீரத்தில் உள்ள வலிதாயம் என்ற இந்தத் திருத்தலத்திற்கு வந்து கடுந்தவம் புரிந்து சாப விமோசனம் பெற்றார். என்று மற்றொரு சாப விமோசன வரலாற்றையும் விளக்கமாகக் கூறினார்.
இத்திருத்தலத்தில் சாப விமோசனம் பெற்றவர்களின் பட்டியல் அகத்தியர் , சந்திரன் , யமன் , அக்னி , ராமர் , அனுமான் ,லவகுசர்கள் , மன்மதன் , இந்திரன் திருமால் என நீளுகிறது. ஒவ்வொருவருக்கும் ஒரு கதை சொல்லப் படுகிறது, அவை அனைத்திற்கும் இங்கு இடம் போதாதென்பதால் முக்கியமான இரண்டை மட்டும் குறிப்பிடுகிறேன்.
இது வியாழ பகவான் சாப விமோசனம் பெற்ற தலமாதலால் இது குருஸ்தலமாக விளங்குகிறது. இங்கு குருவுக்கென்று தனி சன்னதி ஒன்றும் சமீபத்தில் கட்டப் பட்டுள்ளது. படிக்கும் குழந்தைகள் நல்ல ஞாபக சக்திக்கும் , நிறைய மதிப்பெண்கள் பெறுவதற்கும் இங்குள்ள குரு பகவானை வணங்கி வழிபடுகின்றனர். அதனால் பயனடைத குழந்தைகள் ஏராளம் என்று கூறினார் சிவாச்சாரியார்.
மேலும் இத்திருத்தலத்தில் எழுந்தளியுள்ள எம்பெருமானுக்கு திருவல்லீஸ்வரர் எனப் பெயர் வந்த காரணத்தையும் விளக்கினார் திரு.ஞான சம்மந்த சிவாச்சாரியார். ஒரு முறை பிரம்மாவின் புதல்விகளான கமலை , வல்லி என்பவர்கள் சிவனையே மணாளனாக அடைய நினைத்து தவமியற்றினர். அதைத் தெரிந்து கொண்ட சிவ பிரான் தான் சக்திக்கு ஒரு பாதி உடலை அளித்து விட்டதால் அவர்களை மணக்க இயலாத நிலையில் உள்ளதாக எடுத்துக் கூற அதில் உள்ள உண்மையை உணர்ந்த அவர்கள் சிவபெருமனைவிடப் புகழில் சற்றும் குறையாத அவரது மகனான விநாகரைத் திருமணம் செய்து கொண்ட இடமாதலால் இங்குள்ள ஈஸ்வரர் , திருவல்லீஸ்வரர் என அழைக்கப் படுகிறார் என்றும் தெரிவித்தார்.
திருஞான சம்பந்தர் மட்டுமல்ல , அருணகிரியார் தான் பாடிய திருப்புகழிலும் திருவலிதாயத்தில் குடி கொண்டுள்ள எம்பிரான் முருகனை, மருமல்லியார்… எனத் தொடங்கும் பாடலின் மூலம் வணங்கியுள்ளார். அவர் மட்டுமல்ல கருணையின் மறு வடிவமாகத் திகழ்ந்த இராமலிங்க அடிகளார் , திருவருட்பாவில் இங்குள்ள ஈசனை
சிந்தை நின்ற சிவாநந்தச் செல்வமே
எந்தையே எமை ஆட்கொண்ட தெய்வமே
தந்தையே வலிதாயத் தலைவ நீ
கந்தை சுற்றும் கணக்கது என் கொலோ!
எனக் கசிந்துருகுகிறார். இவர் வலிதாய நாதன் மீது பத்து பாடல்கள் பாடியுள்ளார்.
மிகவும் பழம் பெருமை வாய்ந்த இந்தத் திருக்கோயில் முதலில் வெறும் மரத்தடிக் கோயிலாகவும் , பின்னர் மரக் கோயிலாகவும் இருந்தது. சோழர் காலத்தில் தான் கற்கோயில் கட்டப்பட்டது என்பதை இங்கேயுள்ள கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. திருத்தலங்கள் என்பவை சைவ சமயக் குரவர்களான நாயன்மார்களால் பாடப் பட்ட பேறு பெற்றவை. அத்தகைய திருத்தலங்கள் தொண்டை நாட்டில் மொத்தம் முப்பத்து இரண்டு. அவற்றுள் திருவலிதாயம் இருபத்தியோராவதாக விளங்கும் பெருமை பெற்றது . இங்கே முன்னாட்களில் ஆயர் குலத்தவர் அதிகம் வசித்து வந்த்தால் பாடி என்னும் பெயர் பெற்றது.,
சென்னையிலிருந்து பாடி செல்ல ஏராளமான பேருந்துகள் உள்ளன. எளிதாகப் போய் விடலாம். கோயில் காலை 6:30 யிலிருந்து 12 வரை திறந்திருக்கும் மீண்டும் மாலை 3:30 யிலிருந்து 8:30 வரை திறந்திருக்கும். இது குடும்பத்தோடு செல்ல ஏற்ற இடம். அப்படிச் செல்லும் போது நம் குழந்தைகளுக்கு இக்கோயிலின் பழம் பெருமைகளையும் அதைப் பேணிப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தையும் சொல்லிக் கொடுக்கலாம். அதனால் அவர்களுக்கு பக்தி மிகுவதோடு சமூகப் பொறுப்பும் ஏற்படும்.
அனைவரும் திருவலிதாயம்(பாடி) செல்வோம் , திருவல்லீஸ்வரர் , ஸ்ரீ ஜகதாம்பிகையின் அருளைப் பெறுவோம்
திருவலிதாயம் கோவில் வரலாற்றை பற்றி அருமையாக சொன்னதற்கு நன்றி.
திருவலிதாயம் செல்வோம். கடவுளின் அருள் பெறுவோம்.
Oho. Padi’s old name Thiruvalithayam is news for me. Thanks for the information.