மனதில் நிறைந்த மக்கள்திலகம்
— எஸ். பழனிச்சாமி.
லண்டனில் பி.பி.சி. தமிழோசை ரேடியோவிற்கு முதன் முதலாக அளித்த பேட்டியில் எம்.ஜி.ஆர் அவர்கள் தன்னுடைய வாழ்க்கை வரலாற்றை, சுருக்கமாக இப்படிச் சொல்லி இருந்தார்.
‘இலங்கையிலே பிறந்து கேரளாவில் வளர்ந்தேன். என்னுடைய இரண்டரை வயதில் என் தந்தை இறந்து விட்டார். என்னுடைய தந்தையும், பாட்டனாரும் பெரும் லட்சாதிபதிகளாக இருந்தவர்கள். பெரும் பணக்காரர்கள். வசதியும் வாய்ப்பும் மிகுந்தவர்கள். ஆனால் கேரளத்தில் மருமக்கத்தாயம் என்ற ஒரு வழக்கம் இருந்த காரணத்தால் அதாவது குழந்தைகளுக்கு தன் தந்தையின் சொத்துக்கள் இல்லை என்ற காரணத்தால் நாங்கள் அனாதைகளாக்கப்பட்டோம். என் தாயினுடைய அரவணைப்பில்தான் நாங்கள் வளரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. என் தந்தை மாஜிஸ்ட்ரேட்டாக இருந்தார், பிரின்சிபாலாக இருந்தார். அவர் பிரின்சிபாலாக இலங்கையிலே பணியாற்றும்போது கண்டியில்தான் நான் பிறந்தேன். தந்தை இறந்தபிறகு ஐந்து வயதிற்குள்ளேயே தமிழகத்துக்கு வந்து விட்டேன். முதன்முதலாக நான் எழுதப் படிக்கக் கற்றுக் கொண்ட மொழி தமிழ். எனக்கு அறிவு தெரிந்த நாள் முதல் பார்த்துக்கொண்டும் பழகிக் கொண்டும் இருக்கின்ற மக்கள் தமிழ் மக்கள். என் உடம்பில் இத்தனை ஆண்டுகளாக குருதி வளர்ந்திருக்கிறது, என் உடலில் சூடு தணியாமல் இருக்கிறதென்றால், நான் வளர்ந்திருக்கிறேன், வாய்ப்புப் பெற்றிருக்கிறேன் என்றால் அது தமிழ் கூறும் நல்லுலகம் தந்த வாய்ப்பாகும். ஆகவே அந்த தமிழ் மக்களுக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்ற ஆர்வம் என்னை அறியாமலே என்னை உந்தித் தள்ளிக் கொண்டிருக்கிறது. என் தாயின் அரவணைப்பில் வளர்ப்பில் வளர்ந்த காரணத்தால் எனக்கு அதிக கல்வி கற்றுக் கொள்ள முடியவில்லை. ஏழாவது வயதில் நாடகக் கம்பெனியில் சேர்ந்து விட்டேன். அதன் பிறகு 1935 ல் சினிமாவில் நடிக்கத் துவங்கினேன். 1929-30 என்ற கால கட்டத்திலேயே நான் காங்கிரஸ் கட்சியில் அங்கத்தினராக இல்லாவிட்டாலும், ஒரு ஊழியனாக இருந்தேன். 1933-34 காலகட்டத்தில் அதில் அங்கத்தினராக பதிவு செய்து கொண்டு விட்டேன். அதன் பிறகு சில நாட்கள் இருந்து, எனக்கு அங்கே செயல்பட்ட முறைகளிலே குறைபாடுகள் கண்டதாக எண்ணியதால், விருப்பு வெறுப்பற்ற நிலையில் நான் வளர வேண்டும் என்று நினைத்த காரணத்தால் அதிலிருந்து விலகி, அரசியலில் எந்தவித தொடர்பும், ஈடுபாடும் இல்லாமல் இருந்தேன். ஆனால் அன்று முதல் நான் ஒரு தேசியவாதியாக எப்பொழுதுமே இருந்து கொண்டிருப்பவன். அது மட்டுமல்ல மகாத்மாவின் கொள்கையிலே பிடிப்பும் நம்பிக்கையும் கொண்டவன். அவைகளையெல்லாம் ஒருங்குசேர நான் தமிழகத்திலே கண்ட தலைவன் பேரரறிஞர் அண்ணாதான். அவருடைய புத்தகங்களைப் படித்து விட்டு அவருடைய நியாயமான கோரிக்கைகள்தான் தமிழகத்துக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்று கருதியதால் திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர்ந்தேன். அண்மையில் 1972ம் ஆண்டு அக்டோபர் 10ந் தேதி அன்று குற்றமற்ற நான் வெளியேற்றப் பட்டேன். வெளியேற்றப்பட்ட பிறகு தொண்டர்களுடைய, மக்களுடைய விருப்பத்தின்படி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற அமைப்பை நான் உருவாக்கினேன். இப்பொழுது அதில் நான் முதல் தொண்டனாக இருக்கின்றேன் என்று சொல்லுகின்றார்கள். நான் அதிலே பணியாற்றிக் கொண்டிருக்கின்றேன்.’
அதே பேட்டியில் பிரிட்டனில் உள்ள மக்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் உங்களுடைய அனுபவம் என்ன என்ற கேள்விக்கு எம்.ஜி.ஆர் அவர்கள் இப்படி பதில் சொல்லியிருப்பார்.
‘1930ம் ஆண்டு மதுவிலக்குப் போராட்டத்தில் மறியல் செய்த நேரங்களில் எல்லாம் பிரிட்டிஷ் ஆதிக்கம் வெளியேற வேண்டும் என்ற எண்ணத்தோடு போராடியவன். அதே பிரிட்டனுக்கு வந்து இங்கு மக்களைக் காணும்போது, இன்று காமன்வெல்த் அமைப்பிலே அங்கத்தினரான இந்தியக் துணைக்கண்டத்துக்கும் பிரிட்டனுக்கும் உள்ள உறவையும், பிரிட்டிஷ் மக்கள் இந்தியர்களை மதிக்கின்றார்கள் என்பதையும் இங்கு நான் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். ஆண்டான் அடிமை என்பது நிலைமை மாறி, சுதந்திர பங்காளி என்ற நிலையிலே இந்தியரும் ஆங்கிலேயரும் இணையும் போது அதிலே மகிழ்ச்சியும் பெருமிதமும் இருக்கிறது என்பதை நான் இங்கு காணுகிறேன்.
பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள், இந்திய மக்களுக்கு அவர்களது மொழியாலும், செயலாலும் இந்தியர்களின் சுதந்திர உணர்வைத் தூண்டி விட்டார்கள். அவர்கள் நமக்கு அரசியல் சிந்தனைக்கு ஆக்கம் அளிக்கக்கூடிய சூழ்நிலையை உருவாக்கியவர்கள் என்று நான் சொல்வேன். ஆங்கிலத்தை அடிப்படையாகக் கொண்டு, ஆங்கிலேயர்கள் மூலமாக ஆங்கிலம் கற்று உலக விஷயங்களையும், விஞ்ஞான உயர்வையும் அறிந்து பிறகு அவர்களை நாட்டை விட்டு வெளியேற்ற ஆங்கிலம் பயன்பட்டது.’
இந்தப் பேட்டியில் இருந்து எம்.ஜி.ஆர் அவர்களுக்கு இருந்த தமிழ் மக்களுக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தையும், நம் இந்திய நாட்டின் மீது அவருக்கு உள்ள பற்றையும் தெரிந்து கொள்ள முடிகிறது. அவர் அரசியலில் வெற்றி பெற்றதற்கு அடிப்படையான விஷயங்கள் என்ன என்பது இப்போது தெரிகிறதல்லவா?
எம்.ஜி.ஆர் அவர்களின் வாழ்க்கை வரலாறும், அவருடைய திரைப்பட மற்றும் அரசியல் செயல்பாடுகளும் தமிழகத்தோடும், தமிழ் மக்களோடும் இரண்டறக் கலந்து விட்ட ஒன்றுதான். அனைவரும் அறிந்த விஷயங்கள்தான். இன்று வரை எம்.ஜி.ஆர் என்ற மந்திரச் சொல் தமிழர்களிடையே எத்தகைய மதிப்பையும் மரியாதையையும் பெற்றிருக்கிறது என்பதும் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.
சிறு வயதில் வறுமையில் வாடினாலும் பல நல்ல குணங்களை அவர் தன் தாயிடமிருந்து கற்றுக் கொண்டார். அந்தக் குணங்களே அவரை வாழ்க்கையில் உச்சத்திற்கு கொண்டு சென்றது. தன் தாயிடம் அவர் கொண்ட அன்புதான் பின்னாளில் அரசியலில் காலடி எடுத்து வைத்த போது தாய்க்குலத்தின் பேராதரவைப் பெற்றுத் தந்தது.
ஆரம்ப காலத் திரைப் படங்களிலும் தாய் சொல்லைத் தட்டாதே, தாயைக்காத்த தனயன், தாய்க்குத் தலை வணங்கு, தாய்க்குப் பின் தாரம், தாய் மகளுக்கு கட்டிய தாலி, தெய்வத்தாய், தாயின் மடியில், கன்னித்தாய், குடியிருந்த கோயில், ஒரு தாய் மக்கள் என்று தாயை முன்னிலைப் படுத்தியே அவருடைய படங்களின் தலைப்புகள் அமைந்தன. மாபெரும் வெற்றியையும் பெற்றுத் தந்தன.
சினிமாத்துறையைப் பொருத்தவரை நடிப்பு மட்டுமல்லாது, தயாரிப்பு, இயக்கம், வினியோகம் என்று பல துறைகளிலும் ஈடுபட்டு வெற்றி பெற்றார். சினிமாவைப் பற்றி அணுஅணுவாக அறிந்து வைத்திருந்தார். பொதுமக்களின் பார்வையிலிருந்து சினிமாவை அணுகினார். எந்த மாதிரி கதையம்சம் கொண்ட படங்கள் மக்களைக் கவரும் என்பதை நன்றாக தெரிந்து வைத்திருந்தார். அந்த ஞானமே திரையுலகில் அவரது மாபெரும் வெற்றிக்கு வழிவகுத்தது. அவர் மொத்தம் 136 படங்கள் நடித்திருக்கிறார். அதில் 86 படங்கள் 100 நாட்களுக்கு மேல் ஓடி வெற்றி வாகை சூடி இருக்கிறது.
சிறு வயதில் பிழைப்புக்கான ஒரு தொழிலாக நாடகங்களில் நடிக்க ஆரம்பித்து, பின் சினிமாவில் நுழைந்த எம்.ஜி.ஆர் அவர்கள் ஒரு கட்டத்தில் திரைப்படத் துறையில் வல்லுனர் ஆனார். தான் நடிக்கும் திரைப் படங்களில் கதை, வசனம், பாடல்கள், இசை, இயக்கம் என்று ஒவ்வொன்றிலும் அவரது தாக்கம் இருக்கும். அவர் சொல்வது போல் எல்லாம் அமைந்து படம் வெளியானால் நிச்சயம் அந்தப் படம் வெற்றிப் படமாக இருக்கும். அந்த அளவிற்கு அவரது அறிவாற்றலும், ஆளுமையும் வியாபித்து இருந்தது.
அவருடைய திரைப்பட வெற்றி ஃபார்முலாவை பயன்படுத்தி இன்றும் ஒரு சில படங்கள் வெற்றி அடைகின்றன. இருந்தாலும் அவருடைய திறமைக்கும், ஈடுபாட்டிற்கும் சமமாகச் சொல்லக் கூடிய ஒருவரை காண்பது அரிது. திரைப்படங்களில் அவருடன் பணியாற்றிய யாருடைய பேட்டியை படித்தாலும், ‘எம்.ஜி.ஆர் அவர்கள் யாரைச் சந்தித்தாலும், சாப்பிட்டீர்களா என்றுதான் முதலில் கேட்பார்’ என்று சொல்லி இருப்பார்கள். அந்தளவுக்கு மனிதநேயத்தோடு வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்.
இசையமைப்பாளர்கள், இசையமைக்கும் போது சரணத்துக்கும், பல்லவிக்கும் என பலப்பல மெட்டுக்களை எம்.ஜி.ஆரிடம் போட்டுக் காண்பிப்பார்களாம். ஆனால் அவரோ, இதில் கொஞ்சம் அதில் கொஞ்சம் என்று எடுத்து இதை சரணத்திலும், அதைப் பல்லவியிலும் போடுங்கள் என்பாராம். இசையமைப்பாளர்களுக்கு அது வினோதமாக இருந்தாலும் அதே போல் செய்து கொடுப்பார்களாம். அந்தப் பாடல் வெளியாகும்போது மிகப்பெரிய வரவேற்பைப் பெறுமாம். எம்.ஜி.ஆரின் படப்பாடல்கள் இன்றளவும் ரசிக்கத் தக்கதாக இருப்பதற்குக் காரணம் அவருடைய ஞானம்தான்.
எம்.ஜி.ஆருக்காக பெரும்பாலான பாடல்களைப் பாடிய மறைந்த T.M. சௌந்திரராஜன் அவர்கள், எம்.ஜி.ஆருக்காகவே தன் குரலை சிறிது மாற்றிப் பாடியதாக ஒரு பேட்டியில் சொல்லி இருப்பார். தனக்குத் திருப்தி ஏற்படும் வரை பாடகர்களைப் பாட வைத்து, பிறகு அவர்களுக்கு வழக்கமான சம்பளத்துடன், மனமுவந்து சன்மானமும் கொடுப்பார் என்றும் அவர் சிலாகித்துச் சொல்லி இருப்பார்.
தன்னுடைய படத்தின் கதைகளில் மனிதாபிமானமும், தர்மமே இறுதியில் வெல்லும் என்ற கருத்துடைய காட்சிகளும் அமையும்படி பார்த்துக் கொண்டார். தன்னுடைய பாடல்களில் தன் கொள்கைகளையும், லட்சியங்களையும் வெளிப்படுத்தினார். நேர்மறைச் சிந்தனைகளையும், உற்சாகம் கொடுக்கும் வார்த்தைகளையும் அவருடைய திரைப்படப் பாடல்களில் காணலாம்.
உன்னை யறிந்தால் நீ உன்னை யறிந்தால்
உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை
வணங்காமல் நீ வாழலாம்
மானம் பெரிதென்று வாழும் மனிதர்களை
மானென்று சொல்வதில்லையா – தன்னைத்
தானும் அறிந்துகொண்டு ஊருக்குச் சொல்பவர்கள்
தலைவர்கள் ஆவதில்லையா
மாபெரும் சபைதனில் நீ நடந்தால்
உனக்கு மாலைகள் விழ வேண்டும் – ஒரு
மாற்றுக் குறையாத மன்னவன் இவனென்று
போற்றிப் புகழ வேண்டும்
என்று திரைப்படப் பாடலுக்கு வாயசைத்து நடித்தவர், அந்தப் பாடல் சொல்லும் அர்த்தத்துக்கு ஏற்ப வாழ்ந்தும் காட்டினார்.
உழைப்பாளி வர்க்கத்தின் ஒரு அங்கமாக அவர் நடித்த பெரும்பாலான படங்களின் கதாபாத்திரங்கள், அவரை தத்தம் குடும்பத்திலும், சமூகத்திலும் ஒருவர் என்று மக்கள் கருதும்படி செய்தது. அதனால் மிக எளிதாக மக்கள் மனதைக் கவர்ந்தார் எம்.ஜி.ஆர் அவர்கள்.
தேவை உள்ளவர்களுக்கு அவர் செய்த உதவிகள் வள்ளல் என்ற பட்டத்தை அவருக்குப் பெற்றுத் தந்தன. மக்களின் அடிப்படைத் தேவைகளுக்காகப் போராடும் வகையிலான அவரது கதாபாத்திரங்கள் அவரை மக்களின் தலைவராக முன்னிறுத்தி மக்கள்திலகம் என்ற பட்டத்தையும் பெற்றுத் தந்தது.
இது போன்ற அவரின் செயல்பாடுகள் மக்கள் மத்தியில் அவரைப் பற்றி மிக உயர்ந்த பிம்பத்தை ஏற்படுத்தியது. அதுவே சினிமாவில் மட்டுமல்லாது, பின்னாளில் அவரது அரசியல் பிரவேசத்தின் போதும் மாபெரும் ஆதரவையும் வெற்றியையும் அவருக்குப் பெற்றுத் தந்தது.
சிறுவயதில் பசியின் கொடுமையை அனுபவித்த காரணத்தினால், அவர் முதல்வராகப் பதவி ஏற்ற பிறகு, பள்ளியில் சத்துணவுத் திட்டத்தை கொண்டு வந்து, படிக்கும் குழந்தைகள் பசியால் வாடாது இருக்க ஏற்பாடு செய்தார். அது இன்றளவும் தொடர்கின்றது. மதிய உணவுத் திட்டம் பெருந்தலைவர் காமராஜர் உருவாக்கியது என்றாலும், எம்.ஜி.ஆர் அதை விரிவு படுத்தினார்.
பாரத், டாக்டர் போன்று எத்தனையோ பட்டங்களையும் பதவிகளையும் பெற்றவர் எம்.ஜி.ஆர். இறுதியில் அவரது மறைவுக்குப் பின் இந்திய அரசின் மிக உயரிய விருதான பாரத ரத்னா பட்டமும் அவருக்கு வழங்கப்பட்டது. ஒரு நடிகராகவும், மக்கள் தலைவராகவும் வாழும் போதும் மறைந்த பின்னும் மக்கள் மனத்தில் நிலைபெற்றிருப்பவர் எம்.ஜி.ஆர். இன்னும் பல காலம் அவருடைய புகழ் நிலைத்து நிற்கும் என்பது உறுதி.
பொன்மனச் செம்மல் என்றும், புரட்சித் தலைவர் என்று போற்றப்படும் எம்.ஜி.ஆர் அவர்களின் வாழ்க்கை, போராட்டங்களை எதிர்கொண்டு வாழ்க்கையில் முன்னேறி சாதனை படைக்கத் துடிக்கும் எல்லோருக்கும் மிகச்சிறந்த பாடமாக இருக்கும் என்பது நிச்சயம்.