கவிஞர் காவிரிமைந்தன்.

 

Paalum_Pazhamum1

 

 

1961ல் வெளிவந்த திரைப்படம் பாலும் பழமும். நடிகர் திலகமும் கன்னடத்துப்பைங்கிளி என்றழைக்கப்படும் சரோஜா தேவியும் போட்டி போட்டு நடித்திருக்கும் அற்புதக் காவியம்! விஸ்வநாதன் ராமமூர்த்தி இருவரிசையில் அனைத்துப்பாடல்களும் அமரத்துவம் பெற்றவை! கவிஞரிடம் வார்த்தைகள் இப்படி வரிசையாய் வந்து காத்திருக்கும் என்று பலரும் பலமுறை சொல்கிறார்களே… அதற்கான சத்திய சாட்சியான பாடல்கள்!

இன்றைக்குக் கூட இணையதளத்தில் ஒரு தொலைக்காட்சி நேர்முகத்தைக் காணும் பேறு பெற்றேன்! ஆம்.. கவிஞர் பஞ்சு அருணாசலம் அவர்கள் கண்ணதாசன் பாடல் எழுதிய தருணங்களைப் பற்றியெல்லாம் சுவைபட எடுத்துரைத்த காட்சியில் மெய்மறந்துபோனேன்!

Paalum_Pazhamumகதையை முழுதாய் கேட்கும் பழக்கமில்லாமல்… எந்த இடத்தில் பாடல் இடம்பெற வேண்டுமோ அந்தக் காட்சியமைப்பை … அவ்விடத்துக் கதையை மட்டும் கேட்பாராம்! ம்… சரி… என்ன டியூன் போட்டிருக்கிங்க என்று இசையமைப்பாளர் பக்கம் திரும்புவாராம்! அடுத்த சில நொடிகளில் பாடல்… (ஏதோ முன்பே எழுதிவைத்ததை எடுத்துத் தருவதுபோல்) வந்து விழுமாம்! இதையும் தாண்டி இன்னும் பல படங்களில் கவிஞரே… ஒரு ஐந்து அல்லது ஆறு பாடல்கள் வேண்டும்… எந்த இடங்களில் என்பதை நீங்களே முடிவு செய்து எழுதித்தாருங்கள் என்கிற வகையினரும் உண்டாம்! கேட்க கேட்க ஆனந்தம் மேலிட்டது! ஒரு சூரியன்… ஒரு சந்திரன்… ஒரு கண்ணதாசன் என்றே எனக்குப் பட்டது!

இதோ இந்தப் பாடல்.. படத்தின் பெயரைத் தாங்கி.. அன்பின் பூரணமாய் விளங்கிய மனைவி நோய்வாய்ப்பட்டு படுத்தபடுக்கையாய் இருக்கிறார்! அழகுநிலாவை மடியில் எடுத்து ஆனந்தத்தேன் ஊட்டும் கதாநாயகன் தன் பொறுமையால், பண்பட்ட நடிப்பால், அமைதியாய்… உள்ளம்உருகவைக்கும் உன்னத ஆற்றலால் உயிரூட்டமிக்க பாடல் தருகிறார்!

பாடல்… அது கதையோடு இணைந்து நடந்து வருகிறது! வார்த்தைகள் ஒவ்வொன்றும் இயல்பானவையாக… சராசரி மனிதன் உச்சரிக்கும் எளிமையானவையாக அமைவதுதான் கண்ணதாசன் பாடலின் தனிச்சிறப்பு! இப்பாடலை இசையமைத்து எழுத வைத்தார்களா? அல்லது எழுதிவிட்டு இசையமைத்தார்களா என்று உறுதியாய் சொல்லமுடியாத அளவு பாடலும் இசையும் இணைந்து காட்சிதருகின்றன!

கணவன் – மனைவி ஒருவரையொருவர் எப்படித் தாங்க வேண்டும் என்கிற இலக்கணம்காட்டும் திரைப்படம்! குறிப்பாக உடல்நலம் குன்றிடும்போது … காட்டவேண்டிய அக்கறை, பரிவு, பாசம், கருணை, இவைகளை எள்ளளவும் குறையின்றி இருவருமே நடிப்பில் பரிணமித்திருப்பது இப்படத்தின் முக்கிய அம்சமாகும்!

உச்சமாய் கவிஞர் தொட்டுக்காட்டும் வரிகளைப் பாருங்கள்… ஈன்ற தாயை நான் கண்டதில்லை… எனது தெய்வம் வேறெங்குமில்லை… உயிரைக்கொடுத்தும் உனை நான் காப்பேன்… உதயநிலவே கண்துயில்வாயே…

இல்லறவாழ்வில் இதயவீணை மனைவிதான் என்பதை நிரூபணம் செய்துவைக்கிற பாடலிது! இதயம் முழுவதும் அன்பில் ஆட்சிநடத்திடும் அன்புத் துணைவியை எண்ணி உருகிடும் கணவன் உச்சரிக்கும் அத்தனையும் அன்புமலர்களே!

டிஎம்.செளந்திரராஜன் தனக்கே உரித்தான பாவணைகளுடன் பாடிய பாடலிது! அச்சரம் பிசகாத உச்சரிப்பிற்கு அவரைவிட இங்கே வேறு யார்? இயக்குனர் ஏ.பீம்சிங் அவர்களின் வெற்றிப்படைப்புகளில் பாலும் பழமும் பவித்ரமானது!

பாலும் பழமும் கைகளில் ஏந்தி
பவழ வாயில் புன்னகை சிந்தி
கோல மயில் போல் நீ வருவயே
கொஞ்சும் கிளியே அமைதி கொள்வாயே

பிஞ்சு முகத்தின் ஒளியிழந்தாயே
பேசிப் பழகும் மொழி மறந்தாயே
அஞ்சி நடக்கும் நடை மெலிந்தாயே
அன்னக் கொடியே அமைதி கொள்வாயே

உண்ணும் அழகைப் பார்த்திருப்பாயே
உறங்க வைத்தே விழித்திருப்பாயே
கண்ணை இமைபோல் காத்திருப்பாயே
காதற் கொடியே கண் மலர்வாயே

ஈன்ற தாயை நான் கண்டதில்லை
எனது தெய்வம் வேறெங்கும் இல்லை
உயிரைக் கொடுத்தும் உனை நான் காப்பேன்
உதய நிலவே கண் மலர்வாயே

(பாலும்)

____________________________________________________
படம்: பாலும் பழமும் (1961)
பாடல்: கண்ணதாசன்
இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
குரல்: டி எம் சௌந்தரராஜன்

காணொளி: https://www.youtube.com/watch?v=KBRKgeC_qZU

http://youtu.be/KBRKgeC_qZU

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.