சர்வதேச மகளிர் தினம்!
பவள சங்கரி
தலையங்கம்
ஆண்டு தோறும் மார்ச் 8ம் தேதி உலகெங்கும், சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. 1789ம் ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி பிரான்சு நாட்டில் பெண்களால் பெரும் கிளர்ச்சி ஏற்பட்டுள்ளது. சுதந்திரத்துவம், சமத்துவம், பிரதிநிதித்துவம் போன்றவற்றை முன்னிறுத்தி துவக்கப்பட்ட இந்தக் கிளர்ச்சிதான் உலகெங்கும் பெண்கள் தங்கள் உரிமைக்காகப் போராட்டம் நடத்தும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தியது. சர்வதேச மகளிர் தினம் கொண்டாட வித்தாக அமைந்ததும் இந்தக் கிளர்ச்சிதான். மிக முக்கியமாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நாளாகவே இது கொண்டாடப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்ட இந்த நாளில் பல நாடுகளில் பொது விடுமுறை நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 1921ம் ஆண்டிலிருந்து, 94 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8ஆம் தேதியை நாம் மகளிர் தினமாகக் கொண்டாடி வருகிறோம். சமீபக் காலங்களில்தான் நம் இந்தியாவில் மகளிர் தினக் கொண்டாட்டங்கள் சூடுபிடித்துள்ளன. நம் நாட்டில் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகள், மகளிருக்கான உரிமைகள், இட ஒதுக்கீடுகள், ஆண், பெண் பாலின சமநிலையில் வேறுபாடு போன்ற பல்வேறு பிரச்சனைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாக உள்ளது.
நாட்டில் முதல் முறையாக பாலியல் வன்முறைக்காக தூக்கு தண்டனை கொடுக்கப்பட்ட சம்பவம் நிர்பயா என்ற பிசியோதெரபி – மருத்துவக் கல்லூரி மாணவிக்கு பேருந்தில் நடந்த பயங்கரம். 13 நாட்கள் தொடர் போராட்டத்தில் துடிதுடித்து இறந்தார் நிர்பயா.
சர்வதேச மகளிர் தினமான இன்று, அமெரிக்கப் பெண்களுக்கு எதிரான புதிய வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் அதிபர் பாரக் ஒபாமா கையெழுத்திட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இச்சட்டத்திற்கு பல தன்னார்வ அமைப்புகளும் வரவேற்பு அளித்துள்ளன. 1994ல் கொண்டு வரப்பட்ட பாலியல் வன்முறை தடுப்புச் சட்டம், தற்போது மேலும் கடுமையாக்கப்பட்டுள்ளது. நாட்டின் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளுக்கும், நேர்மறை வளர்ச்சிக்கும் இச்சட்டம் வித்திடும் என்றும், தங்களது கலாச்சாரத்தில் மாற்றம் ஏற்படச் செய்யும் எனவும், உள்நாட்டு பிரச்சனைகளுக்கு தீர்வு காண வழிவகுக்கும் என்றும் ஒபாமா குறிப்பிட்டுள்ளார். குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னார்வ அமைப்புகள் உதவி செய்யும் வகையில் இந்தச் சட்டம் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
நம் இந்தியாவில் குழந்தைகள் பிறப்பு எண்ணிக்கையில் பெருமளவு குறைந்திருந்தாலும், பெண் குழந்தைகளின் எண்ணிக்கை மேலும் குறைந்து வருவது கருத்தில் கொள்ளவேண்டிய செய்தி. 2010 ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மொத்தப் பெண்கள் எண்ணிக்கை 9,893,708 ஆகவும், ஆண் குழந்தைகளின் எண்ணிக்கை 11,004,520 ஆகவும் இருந்தது. அதாவது 5.44% ஆண் குழந்தைகளுக்கு, 4. 69% பெண் குழந்தைகளே பிறந்துள்ளன. இது எதிர்காலத்தில் பலவிதமான பிரச்சனைகளை உருவாக்கக்கூடும் என்பது சமூக ஆர்வலர்களின் கணிப்பு. உடனடியாக இதற்கான தீர்வைக் காண்பதும் அவசியமாகிறது. இந்தியாவில், இரண்டு சதவிகித பெண்கள் மட்டுமே 18 வயதிற்கு கீழ் திருமணம் செய்துகொள்கிறார்கள். 20 சதவிகிதத்திற்கும் குறைவான பெண்களே திருமணத்திற்கு முன்பே கணவனை அறிந்தவர்களாக இருக்கிறார்கள். 40 சதவிகிதத்தினர் தங்கள் திருமணம் குறித்து ஏதும் சொல்ல முடியாதவர்களாக இருக்கிறார்கள். வரதட்சணையாக குறைந்தபட்சம் ரூ.30,000 முதல் அதிகபட்சமாக கார் அல்லது இரு சக்கர வாகனங்கள் போன்றவைகளும் கூடுதலாக வழங்கப்படுகிறது.
உலகிலேயே மிகக் குறைவான பெண் தொழிலாளர்கள் வரிசையில் நம் இந்தியா 11ம் இடத்தில் இருக்கிறது என்கிறது ஒரு ஆய்வறிக்கை. சென்ற பதினைந்து ஆண்டுகளில், அதிகமான வேலை வாய்ப்பு இருந்த பத்து துறைகளில், எட்டில் பெண்களின் பங்களிப்பு மிகக் குறைவாகவே இருந்தது. பெண்கள் விரும்பி ஏற்கும் மற்ற இரண்டு துறைகளான ஆசிரியர் மற்றும் கைவினைப் பொருட்கள் போன்றவற்றில் அதிகமான பங்களிப்பு இருந்தாலும், அதுவும் பாதிக்கும் குறைவாகவே இருக்கிறது.
அரசியலைப் பொறுத்தவரை பெண்களின் சுய உரிமைகள் சார்ந்த தீர்மானங்களில் பெரும்பாலும் ஆண்களின் அரசியல் ஆதிக்கம் சார்ந்த முடிவுகளே எடுக்கப்பட்டுள்ளன. 16 வது மக்களவையைப் பொறுத்தவரை எப்பொழுதையும்விட மிக அதிக அளவிலான பெண்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்தாலும், 62 என்ற எண்ணிக்கை 11 சதவிகிதமே ஆகும். நரேந்திர மோடி அவர்களின் அரசாங்கத்தில் 66 அமைச்சர்களில், 8 பேர் மட்டுமே பெண்கள். அமைச்சரவையில் 23 சதவிகித பெண்களே உள்ளனர். மாநிலங்களில் 10 சதவிகிதத்திற்கும் குறைவான பெண் சட்ட மன்ற உறுப்பினர்களே உள்ளனர். நாகாலாந்து, மிசோரம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் பெண் சட்டமன்ற உறுப்பினர்களே இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. மாநிலங்களில் பெண் அமைச்சர்களும் மிகவும் குறைவாகவே 7 சதவிகிதம் மட்டுமே உள்ளனர். எட்டு மாநிலங்களில் பெண் அமைச்சர்களே இல்லை. மூன்று பெண் அமைச்சர்கள் மட்டுமே உள்துறை அமைச்சகப் பொறுப்பேற்றுள்ளனர். அதில் இருவர் முதல் அமைச்சர்கள். இருவருக்கு மட்டுமே நிதி அமைச்சகப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. நாடாளுமன்றம், சட்டமன்றத்தில் 33 விழுக்காடு பெண்களுக்கு பிரதிநிதித்துவம் இன்னும் எட்டாக் கனியாகவே உள்ளது என்பது வெள்ளிடைமலை. அது சட்டமாக்கப்பட வேண்டும் என்பதும் நிதர்சனம்.
திருமதி பவழசங்கரி ,
நீங்கள் எழுதிய உலக மகளிர் தின கட்டுரை மிகவும் அருமை.
ரா. பார்த்தசாரதி
This is an excellent overview of the status of women all over the world. Kudos to you Pavala.