நடுவன் அரசு முழுமையாக செயல்படுமா?

0

பவள சங்கரி

தலையங்கம்

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் அப்பழுக்கற்றவர் என்று ஆளும் கட்சியினரும் மற்றும் அவர் சார்ந்த காங்கிரசு கட்சியினரும் தெரிவித்து, தலைவர் திருமதி சோனியா காந்தியின் தலைமையில் ஊர்வலமாகச் சென்று அவருக்கு முழு ஆதரவு தெரிவித்துள்ளனர். திரு மன்மோகன்சிங் ஆட்சியில் இருந்தபோது அந்தத் துறைக்கும் பொறுப்பானவராக இருந்தபோதும் நிலக்கரி ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடந்திருப்பதாக சிஏஜி தெரிவித்துள்ளது. அப்போது இதே காங்கிரசு கட்சியினர் இல்லை என்று மறுத்தனர். நடுவர் நீதிமன்ற ஆணைப்படி நிலக்கரி சுரங்கங்களின் ஒதுக்கீடுகளை ரத்து செய்து புதிய ஒதுக்கீடும் செய்யப்பட்டு அதன் மூலமாக அம்மாநில அரசிற்கும், மத்திய அரசிற்கும், பல ஆயிரம் கோடி ரூபாய் அதிகமாக வருவாய் கிடைத்தது. இதில் பிர்லாக்கள் குற்றம் சாட்டப்பட்டனர். நிலக்கரித் துறை மத்திய செயலாளரும் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். முன்னாள் பாரதப் பிரதமர் குற்றம் சாட்டப்படவில்லை. விசாரணைக்காக மட்டுமே அழைக்கபட்டுள்ளபோதும், காங்கிரசு கட்சியினர் ஏன் பொங்கியெழ வேண்டும் . அவர் பிரதமராக இருந்தபோதுதான் இந்த முறைகேடுகள் நிகழ்ந்துள்ளன. ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனால் அரசுக்கு பல ஆயிரம் கோடி இழப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்த ஒதுக்கீடுகளை செய்தது நிலக்கரித்துறை செயலாளரா, இந்தப் பொறுப்பில் இருந்த பிரதமரின் அலுவலகமா, இவைகளெல்லாம் தம் கண் முன்னால் நடந்ததை தடுக்காமல், கண்டிக்காமல் இருந்த பொருளாதார மேதையான திரு மன்மோகன்சிங் அவர்களின் நிர்வாகத் திறமையின் குறைபாடுதான் காரணமா என்பதுதான் இப்போதைய கேள்வி. இப்படியொரு பூதாகரமான பிரச்சனையைத் தடுத்து நிறுத்தக்கூடிய அதிகாரம் தலைமைப் பதவியில் இருந்த ஒருவருக்கு இல்லையென்றால் அந்த அதிகாரம் யாரிடம் இருந்தது. அந்த பிர்லாக்களை வளரவிட்டதுதான் யார். நாட்டின் வளத்தை அழிக்கக்கூடிய கறையான் புற்று போன்ற பிரச்சனையை வேரறுத்து, முறைப்படுத்த முடியாத சூழ்நிலையென்றால், அவர் தம்முடைய பதவியிலிருந்து விலகியல்லவா இருக்கவேண்டும். நடந்த தவறுகளுக்கு முழுப் பொறுப்பேற்க வேண்டியவர் மன்மோகன் சிங் அவர்களே என்பது சிறு பிள்ளையும் அறியும் உண்மை.

இன்று கோல்கேட் ஊழல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. முன்பு அலைக்கற்றை ஒதுக்கீடும் பரபரப்பாக பேசப்பட்டது. அதனுடைய இன்றைய நிலை என்ன? அலைக்கற்றை ஒதுக்கீட்டின் மூலம் இன்றைய நிலவரப்படி அரசிற்கு வருமானம் 1 இலட்சம் கோடியைத் தாண்டிவிட்டது. இன்னும் பகிர்மானம் முடியவில்லை. இதன் மூலம் மொத்தமாக 2 இலட்சம் கோடி வருமானம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படியென்றால் முன்னால் ஏற்பட்ட இழப்பின் வீரியம் எவ்வளவு.. யார்யாரெல்லாம் இதில் பாதுகாக்கப்பட்டுள்ளார்கள் என்பதும் வெளிச்சத்திற்கு வரவேண்டிய உண்மைகள். இதற்கும் நடுவர் மன்ற ஆணைகள்தான் விடை சொல்லுமோ தெரியவில்லை.

இயற்கை எரிவாய்வு கிணறுகள் இதுவரை எத்தனை ஒதுக்கப்பட்டுள்ளன. அவற்றில் எத்தனை உற்பத்தியில் உள்ளன. உற்பத்தி செய்யப்படாத மற்ற கிணறுகளின் நிலை என்ன. ஓஎன் ஜிசி இதனை எடுத்து ஏன் செயல்படுத்த முனையவில்லை. இந்தியாவில் கிடைக்கும் இயற்கை எரிவாயுவிற்கு இந்தியக் குடிமகனான அம்பானிக்கு எதற்காக டாலரில் பணப்பரிமாற்றங்கள் நடக்க வேண்டும். அதன் உற்பத்தி செலவாக அவர்களுக்கு வழங்கப்பட்ட தொகை ஏன் இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டது? இதற்கெல்லாம் விடை சொல்லப்போகிறவர் எவர்? இதனால் அரசிற்கும் மக்களுக்கும் ஏற்பட்டுள்ள இழப்பீடு பல இலட்சம் கோடி. அமெரிக்காவில் செல் கேஸ் மூலமாக உலகப் பொருளாதாரத்தையே மாற்றியமைத்துள்ளார்களே அதை ஏன் நாம் கருத்தில் கொள்ள முடியவில்லை. இந்த இயற்கை எரிவாயுவை பயன்பாட்டிற்கு முழுமையாகக் கொண்டுவந்தால் அதன் விலை லிட்டருக்கு 12 அல்லது 13 ரூபாய் மட்டுமே வரும் என்பது வல்லுநர்களின் கருத்தாக இருக்கும்போது, அதை செயல்படுத்தி மக்களின் சுமையைக் குறைக்க ஏன் முன்வர முடியவில்லை. இப்போதைய நடுவன் அரசும் இதன் அடிப்படையில் செயல்படுத்தாமல் இருப்பதன் பின்னணி என்ன என்பதும் இந்த கோல்கேட் ஊழல் போல எப்போது வெளிச்சத்திற்கு வந்து மத்திய அரசிற்கும் மக்களுக்கும் பயன் கிடைக்க வழிவகுக்கப்போகிறது என்பதும் புரியாத புதிராகவே உள்ளது. நிலக்கரி புதிய ஒதுக்கீட்டின் மூலமாக மின்சார உற்பத்தி பெருமளவில் செலவினம் குறைந்து, அதனுடைய பயன் கடைநிலை மக்களைச் சென்றடையும் என்பதும், அதுபோல அலைக்கற்றை ஒதுக்கீட்டின் மூலமாக கிடைக்கக்கூடிய வருவாயால் பயன்பாட்டாளர்களுக்கு உரிய கட்டணமும் குறையும் என்பதும், இயற்கை எரிவாயுவின் மூலமாக செலவினம் கணிசமாகக் குறைந்து மக்களுக்கு மிகப்பெரிய பயன் கிடைக்கும் என்பதும் நடுவன் அரசு கண்களில்பட்டும் இன்னும் செயல்படாமல் இருப்பதன் காரணமும் புரியவில்லை.

வாழ்க பாரதம்!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *