ஸ்ரீ ராமதாசர்
திருவேற்காடு என்றாலே நம் நினைவுக்கு வருவது அருள்மிகு கருமாரியம்மன் கோயில்தான். என் திருமணம் வரை இந்த அம்மன் யாரென்றே எனக்குத்தெரியாது , என் திருமணம் ஆன கையோடு என்னை சென்னையில் ஷண்முகராயன் தெருவில் நடேசனார் நிகேதனில் இருந்த ஸ்ரீகருமாரிஅம்மன் கோயிலுக்கு என் நாத்தனார் அழைத்துச்சென்றார். அங்கு ஒரு பெரியவர் நெற்றியில் பெரிய அளவு குங்குமப்பொட்டுடன் கழுத்தில் மாலையுடனும் கையில் வேப்பிலைக் கொத்துடன் அமர்ந்திருந்தார். புது இடம், புது மனிதர்கள், புது அனுபவம் . நான் இது போல் பார்ப்பது முதல் தடவை. உடம்பெல்லாம் பயத்தில் நடுங்கியது. அந்த பெரியவர் திரு நடேசனார் அவர்கள். பின்னால் அவர் இடத்திற்கு வந்து திருவேற்காடு அம்மன் கோயில் அமைத்த திரு ராமதாசர் அவர்களின் குரு.
அங்கு குழுமியிருந்த பெண்மணிகள் “ஓம் சக்தி பராசக்தி” என்றும், பின் “கற்பூரநாயகியே கனகவல்லி… காளி மகமாயி கருமாரியம்மா” என்ற பாடலைப்பாட பின் ஒருவர் அந்தக் குருவின் கையில் சந்தனம் பூசி, கங்கணம் போல் பூமாலை சுற்றிக் கழுத்திலும் பெரியமாலை போட்டு, பின் ஒரு பித்தளைத்தட்டில் பெரிய கற்பூரக்கட்டியை வைத்ததும் அங்கிருக்கும் பெண்மணிகள் பாய்ந்து வந்து அவருக்கு ஆரத்தி காட்டினர் . பின் அவர் அப்படியே சுழல ஆரம்பித்து பின் “கோவிந்தா”’ என்று கூக்குரல் கொடுத்தார். அவ்வளவுதான் கருமாரியம்மன் அவர் மேல் வந்துவிட்டது என்று என் நாத்தனார் சொன்னார். நான் பயத்தில் என் கண்களை மூடிக்கொண்டேன். நான் அமர்ந்திருந்தது ஆறாவது வரிசை ஆனாலும் அந்த அம்மனை நேருக்கு நேர் என்னால் பார்க்க முடியவில்லை. அத்தனை சக்தி. என் வாய் “காமாட்சி தாயே”என்று விடாமல் ஜபித்துக்கொண்டிருந்தது. வரிசையாக, ஒவ்வொருவராக அவரிடம் போய், அவர் முன் அமர, அவரும் அவர்கள் வந்த காரணத்தைக் கூறி அதற்குச் செய்ய வேண்டிய பரிகாரமும் கூறி வேப்பிலைக்கொத்தால் அவர்கள் தோளை அடித்து நகர வைத்தார் ஒரு வரிசை முடியும் முன்னே திடீரென்று என் பக்கம் திரும்பி ”உம்…..வா இங்கே!” என்று என்னைக்கூப்பிட்டார்.
நான் கண்களை மூடிக்கொண்டிருந்ததால் என் நாத்தனார் என்னை உலுக்கி ”அம்மன் கூப்படறா பார். பயப்படாமல் போ.” என்றார். நான் ”நீங்களும் வாங்கோ எனக்கு ரொம்ப பயமா இருக்கு” என்றபடி அவர் கையை இறுக்கிப் பிடித்துக்கொண்டேன். பின் அவர் முன் அமர்ந்தேன். ”ஆரத்தி எடு!” என்றாள் அம்மன். நானும் அவளுக்கு ஆரத்தி எடுத்தேன். பின் என் உடலில் தலையிலிருந்து வேப்பிலையைத் தடவி ”எதுக்கு பயப்படறே! நான் எப்பவும் உன்னைக் காத்து வருவேன்!” என்றபடி என் கையில் இரண்டு எலுமிச்சம்பழமும் பின் ஒரு பிடி சாம்பலும் கொடுத்த பின் என்னைப் பற்றி, என் திருமணம் பற்றிச் சொல்ல ஆரம்பித்தாள். எல்லாமே கவிதை போன்ற மரபுத் தமிழ். சில, எனக்குப் புரியவில்லை. பின்னால் அவர் சொன்னதை வேறு ஒருவர் எனக்குப் புரியும் தமிழில் புரிய வைத்தார். எல்லாமே நூற்றுக்கு நூறு உண்மை. அப்படியே மலைத்துப் போனேன். பின் அங்கிருந்த ஒரு கருமாரி அம்மனின் போட்டோவை எடுத்து அப்படியே ஆவேசத்துடன் உடலைக் குலுக்கி, மூன்று சுற்று ஆடிய பின் எனக்குக் கொடுத்தாள். அதை அப்படியே வாங்கிக்கொண்டு அவள் காலில் விழுந்தேன். என்னை இருவர் தூக்க மெள்ள அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன். இன்றும் அந்தக் கருமாரியம்மனின் படம் தான் என் பூஜை அறையில் இருக்கிறது.
அன்றைய தினத்திலிருந்து இந்த நாள் வரை, அந்த அம்மன் என் கூடவே இருந்து அருள் புரிவதை உணருகிறேன். அத்துடன் அம்மனையே தன் மூச்சாக நினைத்து தன் வாழ்க்கையையேஅர்ப்பணித்த திரு ராமதாஸர் அவர்களும் என் நினைவில் தினமும் வருவார்.
காடு மேடாய் இருந்த திருவேற்காடு இன்று அன்னை ஆட்சிபுரியும் ஆலயமாக மாறியது இவரால்தான். திருவேற்காடு மட்டுமில்லை, மேலும் பல நலிந்து போன கோயிகள் இவரின்சேவையினால் குடமுழுக்கு விழா கண்டு புத்துயிர் பெற்றன. தவத்திரு ராமதஸர் அம்பாளுடைய அருளை பரிபூரணமாகப் பெற்றவர். தினமும் திருவேற்காட்டிற்குச் செல்வார். அங்கு அம்மன்தேரில் வீதியுலா நடக்க ஆரம்பிக்கும் போதே இவர் மேல் அம்மன் வந்து ஆட ஆரம்பிப்பார். இவர் கரத்தில் ஒரு நீண்ட வாள் கொடுக்க, அதையும் வைத்தபடி துள்ளித் துள்ளி தன்னையும் மறந்து ஆடுவதைக் காண, நாம் நம்மையே மறப்போம். யார் இந்த தவத்திரு ராமாதாசர்?உத்திரமேரூரை அடுத்த கீழாமூர் எனும் ஊரில் திரு சடகோப நாயிடுவுக்கும், திருமதி இரத்தனம்அம்மையாருக்கும் வேதாசலம் என்ற பெயரில் பிறந்த தவசீலர் தான் திரு. ராமதாசர். இவர் பிறந்த இடம் திருக்கழுக்குன்றம். அவர் தந்தை அப்போது தலைமைக்காவலராக பணியாற்றி வந்தார்.
திருமால் மேல் அளவுகடந்த பக்தி ஏற்பட்டு, வேதாசலம் என்ற பெயரை ”இராமதாசர்” என்றுமாற்றிக் கொண்டார். பின் ஆரம்பப் படிப்பு திருக்கழுக்குன்றத்தில் முடிந்து பின் உயர்நிலைப் படிப்புக்காக சென்னை வந்தார். படிக்க முடியாமல் பல தடைகள் ஏற்பட்டும் மனம் தளராமல்தனது உறவினர் இல்லத்தில் தங்கி, அவர்களுடைய வீட்டுப்பணிகளும் செய்து, பின் கல்வியையும்தொடர்ந்து முடித்தார். பின் ஆன்மீகத்தில் எப்படி நுழைந்தார்? குரு எப்படி கிடைத்தார்? என்பதை அடுத்த பாகத்தில் எழுதுகிறேன்.
திருவேற்காடு பின்னணி நீங்கல் சொல்லித்தான் தெரியும். அடுத்த பாகத்திற்குக் காத்திருக்கிறோம்.