உலக குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம்
பவள சங்கரி
தலையங்கம்
அன்னையர் தினம், தந்தையர் தினம், மகளிர் தினம், குழந்தைகள் தினம், காதலர் தினம் போன்று பல்வேறு தினங்களைக் கொண்டாடி மறந்து விடும் விசயங்களில் இதுவும் ஒன்றுதான் என்று குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம் மறக்கக் கூடிய விசயமன்று. தொழிலாளர் தினம் இன்றளவிலும் கம்யூனிச சிந்தாந்தத்தைப் போற்றுபவர்களால் மட்டும் கொண்டாடப்படுகிறது. அமெரிக்காவில் ‘லேபர்ஸ் டே’ என்றும், ஆசியக் கண்டத்திலும் இந்தியாவிலும், மே தினமாகவும் கொண்டாடப்படுகிறது. இந்த மே தினமும் கொண்டாட்டத்தோடு முடிந்து உள்ளது. எந்த அரசுகளும் அரசியல் கட்சிகளும், இந்த ஒரு நாளில்கூட தொழிலாளர்களுடைய நலவாழ்வைப் பற்றி சிந்திப்பதாகத் தெரியவில்லை. இது இப்படியிருக்க நேற்று, வெள்ளிக்கிழமை 12- 06 – 2015, குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினமாகக் கொண்டாடப்பட்டது. ஐக்கிய நாடுகளின் ஓர் அங்கமான பன்னாட்டு தொழிலாளர் அமைப்பினால் (ஐ.எல்.ஓ) அங்கீகரிக்கப்பட்ட இந்த நாள் குழந்தைத் தொழிலாளர்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, 2002ம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. குழந்தைகளின் கையில், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு பற்றி பெரியவர்கள் எழுதிக்கொடுத்த பதாகைகளுடன் ஊர்வலம் போகவிட்டு அதோடு அந்த தினத்தை முடித்துவிட்டோம். நேற்று தமிழக அரசு மற்றும் நடுவண் அரசிடமிருந்தோ இது பற்றி எந்த அறிவிப்பும் வரவில்லை என்பது வேதனைக்குரிய விசயம்.
மத்திய ஒன்றிய பகுதியான பாண்டிச்சேரியில் குழந்தைத் தொழிலாளர் முற்றிலும் ஒழிக்கப்பட்டது என்ற பாராட்டிற்குரிய செய்தி ஆறுதலிக்கிறது. உலகளவில் 21.5 கோடி பேர் குழந்தை தொழிலாளர்களாக உள்ளதும், இதில் 11 கோடி குழந்தைகள் பாதுகாப்பற்ற சிரமமான வேலைகளில் ஈடுபட்டுள்ளனர் என்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் அறிக்கை தெரிவிக்கிறது. 5 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவது குற்றமாகக் கருதப்படுகிறது. அதோடு 2016ம் ஆண்டுக்குள் குழந்தை தொழிலாளர் முறை அறவே ஒழிக்கப்பட வேண்டும் என்ற இலக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சர்வதேச தொழிலாளர் அமைப்பின் ஆய்வின் படி, உலகளவில் குழந்தை தொழிலாளர் அதிகம் உள்ள நாடுகளில், இந்தியா 12 வது இடத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. நிலக்கரி சுரங்கம், தீப்பெட்டித் தொழிற்சாலை. செங்கல் சூளை, துணிக்கடை, கட்டுமானப் பணிகள் ஆகியவற்றில் குழந்தைகள் ஈடுபடுத்தப்படுகின்றனர். குறைந்த ஊதியத்தில், வார விடுமுறையின்றி ஒரு நாளைக்கு 12 மணி நேரத்துக்கு மேல் குழந்தைகள் வேலை செய்கின்றனர்.
வறுமை, பெற்றோரோ அல்லது பாதுகாவலரோ இல்லாத சில காரணங்களால் குழந்தைகள் பள்ளிக்குச் செல்லும் வயதில் வேலைக்குச் செல்ல வேண்டிய வேதனையான நிலைக்கு ஆளாகிறார்கள். பல நேரங்களில் தாங்கள் செய்வது குற்றம் என்று அறியாமலே போதை மருந்து கடத்தல் உள்ளிட்ட பல சட்ட விரோதமான செயல்களில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இன்று இந்தியாவில் உள்ள குழந்தை தொழிலாளர்கள் ஐந்தில் ஒரு பகுதியினர் உத்திரப் பிரதேசத்தில் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. மிகவும் பின் தங்கிய மாநிலமான பீகாரைவிட குழந்தை தொழிலாளர்களுடைய எண்ணிக்கை உத்திரப் பிரதேசத்தில் அதிகமாக இருப்பது வெட்கப்படவேண்டிய விசயம். அனைவருக்கும் கல்வி, குறைவற்ற உணவு என்ற நிலையை என்று அடைகிறோமோ அன்றுதான், நம் நாடு வல்லரசு ஆவதற்கான பயணத்தில் நாம் முதற்படி வைத்தவர்களாக ஆகிறோம். இதைவிடுத்து வெற்று கோசங்களால் மட்டுமே இந்தியாவை வல்லரசாக உருவாக்க முடியாது. கல்வித் துறையிலும், தொழில் துறையிலும், பொருளாதாரத் துறையிலும் மிகுந்த மாற்றங்களைக் கொண்டுவர வேண்டியது நடுவண் அரசிற்கு காலத்தின் கட்டாயமாக உள்ளது. இந்த நேரத்தில், ‘கிரை’ என்ற சைல்ட் ரைட்ஸ் அண்ட் யூ (Child Rights and You)அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கை மிகவும் அதிர்ச்சியளிக்கக்கூடியதாக உள்ளது. ஆண்டுதோறும் 2.2 என்ற விகிதத்திலேயே குழந்தைத்தொழிலாளர் முறை குறைந்து வருவதாகவும், ஒரு கோடிக்கும் அதிகமான குழந்தைகள் இன்னமும் இந்தியாவில் குழந்தைத் தொழிலாளர்களாக இருப்பதாகவும் இந்த அமைப்பின் ஆய்வறிக்கை கூறுகிறது. இது ஆண்டு தோறும் 2.2 என்ற விகிதத்தில் மட்டுமே குறைந்து வருவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிப்பது குறிப்பிடத்தக்கது.