பவள சங்கரி

அன்பிற்கினிய நண்பர்களே!

11733407_861553573898843_2086625688_n
வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

129265103@N08_rஅருண் வீரப்பன் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (18.07.2015) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர், தமிழ் இலக்கிய ஆராய்ச்சியாளர் திருமதி மேகலா தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பல முறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இது, கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்கு பெற அழைக்கிறோம்.

புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்த மேகலா இராமமூர்த்தி கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்றவர். அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009 ம் ஆண்டுகளில் (ஆர்லாண்டோ & அட்லாண்டா) கவியரங்கம், இலக்கிய வினாடி வினா நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். புறநானூறு, குறுந்தொகைப் பாடல்களில் அதிக நாட்டமும், இலக்கியக் கூட்டங்களில் சுவைபட பேசுவதிலும் வல்லமை பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

பதிவாசிரியரைப் பற்றி

14 thoughts on “படக்கவிதைப் போட்டி – 21

  1. கொண்டு, கொள் வந்ததை…

    கொண்டு, கொள்
    வந்ததை
    இளைப்பாறிக் கிட 
    மும்மாரி நினைவு 
    கற்ற பின்னும் கல் 
    கள் பின்னும் கள்
    உற்றது உனது 
    பெற்றதும் மற்றதும் 
    சத்தம் உரை 
    உரைத்தலின் நடை 
    வீரம் செருக்கு 
    விதி தேடும் மதி 
    தாண்டு 
    சித்திரம் செய் 
    சிவப்பு கொய்
    உறவாடு உயிரோடு 
    கணம் நாடு 
    அளவோடு அழகோடு 
    அலகாகினும்
    அச்சோடு 
    கொத்தி தின்னும் 
    சுற்றம் அழுக்கு
    யாத்திரை கசடற 
    முகத்திரை பற்றற 
    சட்டென சிலுசிலுக்கும் 
    கதவு கூடு 
    காகிதம் கிழி  
    காவலில் வழி  
    புரிந்தவை நன்று 
    புரியாமையும் தின்று 
    கொல்-வில்லென 
    புல்-சில்லென 
    நில்-சொல்லென
    ஆதி- சொல்லும்- அந்தம் 
    மீதி சொல்லும் ஆதி 
    யாதும் தானே சேதி 

    பற…..அதற்கு மனதை 
    திற….

    கவிஜி 

  2. அத்தமனம்.

    சி. ஜெயபாரதன்

    பொழுது விழுந்தது
    சுழற்சியில்
    புவி செய்த தவறால் !
    புள்ளினம் கிளம்பின உடனே 
    தம்மிடம் நோக்கி !
    எழுபசும் பொற்சுடர் தன் 
    இமைதனை மூடி 
    வானில்
    மங்கிய தெங்கும் 
    காரிருள் மூடி !
    கரு மதி முகத்தில்
    மஞ்சள் பூசி 
    கவரப் போகுது 
    பட்டொளி வீசி  ! 
    காதலர் வரவில்லை !
    காத்துள்ள 
    மாதர் இருவர் 
    ஏமாந் துள்ளார் 
    ஏங்கிய வண்ணம் !
    கை விட்ட கணவரோ 
    பொய் சொல்லிப் போனார்
    வேறோர்
    காரிகைய ரோடு !
    எழுபவை எல்லாம் பின்னால்
    விழுபவை தான் !
    பிறப்பவை யாவும் புவியில்
    இறப்பவை ஒருநாள் !
    நித்தியம் என்றுலகில்
    நிச்சயம் இல்லை !
    இருளெனும் கோழி
    அடைகாத்திட 
    அண்ட கோளமாம்
    முட்டையை
    மூடிடும்
    தன் இறக்கையுள் !
    மீண்டும்  
    பொழுதெனும் சேவல்
    கூவும் காலையில் !
    கோழிக் குஞ்சுகள் தோன்றும்
    வாத்துக் குஞ்சுடன்  ! 
    புதிய நாள் பிறக்கும்
    மீண்டும்
    புத்துணர் வோடு !

    +++++++++++
     

  3. படக்கவிதை போட்டி- 21
    வீட்டின் நாலு சுவரையே
    எத்தனை காலம் தான்
    நாம் பார்த்துக் கொண்டிருப்பது என்று….
    அழகிய கடற்கரையில் உட்கார்ந்து
    நாட்டுக்கு நீ என்ன
    நல்லது செய்யப் போகிறாய்
    என்பதை மட்டுமே யோசி!க்கிறாய் போல!!

  4. கூடு திரும்பும பறவைகள்

    பார்த்தாயா தோழி
    பறவைகள், ஒன்றாய்
    சிறகடித்துச் செல்லும்
    சித்திரக் காட்சியை.

    கூடிக் கொண்டாடி
    குறையொன்றும் காணாது
    கூடு திரும்பும்  இயல்பில்
    கூறும் பாடத்தை.

    மனிதர் தொலைத்துவிட்ட
    மனிதம் மீட்பதற்கு
    இனியும் வழியென்ன
    இயற்கைதான் மீட்டெடுக்கும்.

    மண்ணைப் பறித்தெடுத்து
    மாநதியைப் பறிகொடுத்தோம்
    மண்ணில் மனையெடுத்து
    விளைநிலம் பறிகொடுத்தோம்.

    மரத்தை வெட்டிவிட்டு
    மாமழையைப் பறிகொடுத்தோம்
    உரத்தைக் கெடுத்துவிட்டு
    உடல்நலம் பறிகொடுத்தோம்.

    இவ்வாறே எல்லாம்
    எப்படியோ பறிகொடுத்து
    எவ்வளவோ அவ்வளவும்
    எல்லாமே பறிகொடுத்தோம்.

    கடலன்னை மடியமர்ந்து
    காற்றுவாங்கும் வேளையிது
    உடன்வந்த உன்னிடத்தில்
    உளக்கருத்தைப் பறிகொடுத்தேன்.

    கூடுதிரும்பும் பறவைக்கு
    கூடில்லை மரமில்லை
    நாடிவரும் நிழலில்லை
    நல்லவிதை எச்சமில்லை.

    என்ன செய்ய என்னசெய்ய
    இயற்கையைப் பேணுவோம்
    இன்னும் என்ன உறுதிகொண்டு
    இயற்கையாய் வாழுவோம்

                இளவல் ஹரிஹரன் மதுரை.

  5. பறவைகள் காணும் அதிசயம்!

    குற்றம் சுமத்தும்தன் மாமியாரை அன்போடு
    சுற்றமாய் பார்த்து கடற்கரையில் – ஒற்றுமை
    காட்டும் மருமகளைக் காணவே புள்ளினங்கள்
    கூட்டமாய் வந்தது பார்

  6.                   இனி இந்த வானத்தில் -கார்த்திகா AK

    கால்களை தரையினின்று 
    உந்தி மேலே எழு 
    உயரம் விரும்பாத
    இறகுகள் உதிர்வதற்கு 
    தடை சொல்லாமல் 
    புதிதாய் முளைப்பாய் நீ 

    கூடிச் சென்று 
    கோடி விண்மீன்களை 
    கொத்தி இரை கொள்ளக்
    கனவு கொள் 

    மணலில் 
    பெண்டிர் இருவர்  
    தலை மேல் இறுகக் கட்டிய வானம்
    உடைந்து மழைப் பூக்கள் சிதற  
    கொஞ்சம் அலகால் திறந்து 
    உணர்த்துவாய் நீ 

    ஏ!பறவைகளே 
    மானுடன் மையல் கொண்ட புவி  
    குப்பை ஆவது தெரிந்து வருத்தத்தில் 
    எச்சத்தை அடையாளமாய் 
    விட்டு விட்டு வேறு கோளம்
    சென்று விடாதீர்!
     
    புதிய புவி விளைவித்தலில் 
    விதைகள் முளைப்பெடுக்க
    நீ மீண்டு(ம்) வேண்டப்படுவாய்!!

  7. விண்ணில் பறவையாய்…

    வீட்டு வேலை யெலாம்முடித்து
         வீணே பொழுதைப் போக்காமல்,
    வாட்டும் கவலைகள் வலுவிழக்க
         வயதில் மூத்தோர் அனுபவங்கள்
    கேட்டு நல்லதே செய்திட்டால்
         கேடு பெண்மைக் கணுகாதே,
    கூட்டை நாடும் பறவைகள்போல்
         குதூகலம் வாழ்வில் நிலைத்திடுமே…!

    -செண்பக ஜெகதீசன்…

  8. அடுப்படி சிறைநின்று விடுதலை பெற்று 
    =அந்தியில் கடற்கரை குளிர்காற்று பெற்று
    படுத்திடும் உயிர்வாழ்வின் பாடுகள் பற்றி
    =பகிர்ந்திடும் தாய்மாரின் பரிபாஷை கேட்டு
    நடுத்தர வாழ்வெனில்போ ராட்டம் என்றே
    =நடுவான் பறவைகள் சிறகுகள் அசைத்து
    தடுத்திட எம்போன்று நீங்களும் ஆவீர்
    =நாளைக் கென்பதைமறப் பீர்என் கிறதோ?
     

  9. கடுகளவு மணல் துகள்கள் கிடந்த கரை

    அடுப்புக் களை தீர்க்க, ஆறி அமர்ந்திருக்க- நின்று
    கடுத்த கால்கள் இங்கு நீட்டி ஓய்வெடுக்க
    அடுப்பங்கரை விடுத்து அழகுப் பட்டுடுத்து
    நெடுத்த கூந்தல் நீள வாரிப் பின்னலிட்டு –
    எடுப்பாய்க் குங்குமமும் எடுத்தே நெற்றி இட்டு
    இடுப்பில் சாவியையும் விரைந்து சொருகிவைத்து
    மிடுக்காய் வீதியிலே நடந்ததோ நட்புடனே…..
    மடுக்கள் கடந்து வந்து மதகும் கடந்து வந்து
    கடுகளவு மணல் துகள்கள் கிடந்த கரை அடைந்து
    படு துயரம் மூச்சு கடல் காற்றைச் சுவாசிக்க
    விடு விடென நீங்கி புத்துணர்ச்சி பொங்கிற்று – கண்
    படு தூரம் ஒன்றில் இரை தேடும் பறவைகளோ
    கூடு திரும்பக் கண்டு மனம் வெம்பியதே வேதனையில்
    நாடு விட்டுப் போன எம் பிஞ்சுகளும் என்று நம்
    வீடு திரும்புமோ நாமும் மகிழ்ந்திருக்க- என்ற நினைவினிலே ,,,

    புனிதா கணேசன்
    17.07.2015

  10. கடலும் கரையும்
    கைகோர்த்து மகிழ்ந்தாட
    அலையும் நளினமாய்
    இங்கே நடமாட
    அலை ஓசைக்கு நடுவே
    காலங்காலமாய் தொடர்ந்திடும்
    தன்னலமிலா நட்புகளின்
    மகிழ்ச்சி பொங்கும் 
    சிரிப்பலையும் – தோழிகளின்
    மனமதன் நினைவுகளில்  நீங்கா
    ரீங்காரமாய் ஒலித்துக்
    கொண்டே இருக்க
    கொஞ்சும் புறாக்களாய்
    சுதந்திரமாய் சிறகை விரித்து
    பறந்த நாட்களெலாம்
    கண்முன் விரிந்து
    களிப்பூட்ட – மீண்டும்
    இங்கோர் வசந்தத்தின்
    அரங்கேற்றம் !

  11. கடலோரக் கனவிது 
    அத்தனையும் பாரங்கள் 
    சுமந்த மனங்கள் இறக்கி 
    வைத்தக் கால்தடங்கள்…! 

    தீவு மன மனிதர்களாய்  
    மனக்குறை குப்பைகளைக் 
    கொட்டிச் சென்றதும் 
    பிரச்சனையின் வடிகால் 
    கடலோரமெனக் கொண்டதும்..!

    சுதந்திரச் சிறகுகள் 
    முறிக்கப்பட்ட மனித 
    முகங்களும் மனங்களும் 
    பொற்காலம் விலகிச்சென்று 
    போறாதகாலம் எழுந்து 
    நிற்கும் கறைக் கோலம் 
    வாழ்வின் அலங்கோலம் 
    கடற்கரை மணல் கூறும்..!

    ‘ஒன்றே குலமென’ ஓங்கிய  
    காக்கைகள் ஒரே குடும்பமாய்
    அவசரக் கூட்டம் கடற்கரையில்..!
    சிந்திய கடலைச் சுண்டலும் 
    கை நழுவிய வடையும் கூட 
    கோணப் பார்வைக்கு 
    துச்சமானது  எச்சமானது..!

    கூட்டத்தின் உச்சத்தில் 
    இனியொரு பிறவிவரின் 
    பிறவி உள்ளமட்டும் 
    மானுடம் மட்டும்
    வேண்டவே வேண்டாம் 
    எனக் ஒன்றுகூடிக் 
    கரைந்து பிரமாணம் 
    செய்து சிறகடித்தன 
    நிம்மதியில் சிலிர்த்தபடி 
    சிறகுகளை விரித்தன….!

    கடலோர மணல்கள் 
    அத்தனைக்கும் சாட்சியாய் 
    கேட்டுக் கொண்டிருந்தது 
    மாதர்களின் மனக்குறையை…!

    – ஜெயஸ்ரீ ஷங்கர்.

  12. பரந்த அந்திவானம்
    அகண்ட அலைகடல்
    பாதங்களைப் பற்றி 
    முத்தமிடும் மணற்பரப்பு..
    கண்களுக்கு விருந்தாக 
    காகத்தின் ஒற்றுமை  
    காதுக்கு மருந்தாக 
    இயற்கையின் தாலாட்டு 
    முகத்தை வருடும் 
    இனிய தென்றல் 
    துணையாக அருகமர்ந்த 
    மனத்துள் இறுக்கத்துடன் 
    எனது செல்ல மகள்..!
    கடந்த காலங்களை 
    கடலையோடு சேர்ந்தே 
    அசைபோடும் போது 
    நிகழ்கால நிதரிசனங்கள்
    இழந்ததை வரிசைப்படுத்த 
    நான் பார்த்த காலம் ஏதும் 
    நீ பார்க்கவில்லை…
    இனியொரு நாளும் 
    எதுவும் வரப்போவதுமில்லை…
    முதுமைக்கு இளமை 
    ஒருநாளும் பகையில்லை..!
    காகத்தை பார்த்தல்லவா 
    கற்றுக் கொள்ள 
    வேணும் நாமும்…!
    ததும்பிய மனங்களோடு 
    இனிமைகளைப் பகிர்ந்ததும் 
    எறும்பென ஊறும் 
    மனச் சிக்கல்கள்  
    காற்றோடு விடுபட 
    மகளின்  மன 
    விலங்கி லிருந்த
    இறுக்கமும் தளர்ந்திட
    உள்ளத்தின் சிறகுகள் 
    உயர்ந்தன..விரிந்தன..!

    ஜெயஸ்ரீ ஷங்கர்.

  13. அந்தி சாயும் நேரம்தான்
    ஆற்றுப்பக்கம் பேசிய ஆயிரம் பேய் கதை
    ஆண்டாண்டு பேசினாலும்
    ஆயுள் முழுக்கத் தீராது!
    தோள் கொடுக்க தோழி
    நேசம் எல்லாம் இப்புவி உலகில்
     கானல்நீராய் தெரியுதடி!
    சுயநல உலகத்திலே
    பொருளும்,புகழும்
    பெரிதென வாழும் உலகத்திலே
    என்ன சாதித்தோம் தோழியே!
    கடற்கரை மணல் எண்ணிக்கைபோல
    காக்கை பிடிக்கும் மனிதர் கூட்டம்
    கிண்கிணியாய் நம்மைச் சுற்ற
    கீழ்வானம் சிவப்பது எப்போது?
    மண்ணுக்குள்ளே பிறப்பவர் யாரும்
    மக்காப் பொருளாய் இருப்பதில்லை!
    இடுக்கண் களைய வரும் நட்புபாலம்
     புவி உலகைக் காக்காதா!
    கற்ற பெண்கள் யாவருமே
    காக்கை உண்ண உணவிட
    அடுக்களை மந்திரம் போதுமா?
    புவி ஆளும் பெண்களுக்கு
    கவி பாடவும் நேரம் உண்டே!
    உலகைத் திருத்தும் வரைபடத்தை
    ஒப்பனையுடன் சமர்ப்பிப்பாய்!
    நாதியற்ற சேய்கள் கூட்டம்
    தெருவெங்கும் பிச்சைக்காரர்களின் அணிவகுப்பு
    தொலைய சட்டங்கள் எங்கே?
    உழைத்து ஓய்ந்திருக்கும் முதியோர் 
    உடல் நலம் காக்க அன்னை தெரசாவுக்கு எங்கே போவது?
    குடித்துக் குடி அழிக்கும் 
    கோணங்கி சமுதாயம் திருத்த வழி வரைவாயே!
    குடியும்,புகையும் அழிந்துவிட
    புதிய உலகம் காண்பாயோ!
    பகிர்ந்து உண்ணும் காக்கைகூட
    இன்று பகிராநிலை உண்டென்றால்
    காரணம் ஏன் தோழி!
    வான்கொடைத் தூறல்
    தேக்கநிலை இடம்மாறி
    அடுக்ககத் திட்டங்களான
    அவலநிலை என்று மாறும்?
    இன்னொரு காமராசர் காந்தி கக்கன்
    இவர்களைத் தேடி யார் செல்வது?
    தூது செல்லும் காக்கைகள்
    சுயநலமில்லா வாஞ்சையோடு
    நீ கொடுக்கும் தமிழ் தூது மடலுக்காக
    விடியல் உலகைக் கொடுக்கும்
    தமிழ்மகளைக் காணக் காத்திருக்கின்றன!

  14. படவரி 21  
    கூடேகும் வண்ணக் கோலம்.

    பட்டினப் பரபரப்பிலொரு மயங்கும் மாலை
    பட்டு மாலை, படும் மாலை.
    வெண் மணலில் காலடிச் சுவடு
    வெண் மேகத்திலோ பறவைகளால்  முகடு!
    பொத்தாது மனதை விரித்துப் பரப்பி
    சித்தம் மகிழும் பெண்களும், பலரும்
    இத்தனை சுதந்திரமாய் மொத்தப் பறவைகளும்
    சத்தமிட்டு உணவு பொறுக்குமழகு கூடேக!

    வரிகளாக்கம்.
    பா வானதி வேதா. இலங்காதிலகம்.
    டென்மார்க்.
    18-7-2015

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *