கண்ணன் அனுபூதி எழுதிய சந்தோஷத்தில் மால்மருகன் முருகன் வெண்பாக்கள் ”கந்தன் களிப்பு” என்ற தலைப்பில் எழுதினேன்… இன்று செவ்வேளுக்கு உகந்த செவ்வாயாய் இருப்பதால் பகிர்ந்து கொள்கிறேன்….இத்துடன் அடியேன் வரைந்த ”முருகர்” படத்தையும் இணைத்துள்ளேன்….கிரேசி மோகன்….

cra
கந்தன் களிப்பு
——————-

ஒயிலாய் குறத்தி ஒருபக்கம், வேழ
மயிலாள் மறுபக்கம் மேவ -மயிலம்
அமர்ந்த முருகா அருள்வாய் எனக்கு
திமிர்ந்த ஞானத் துணிவு….(1)….

மோனை எதுகையாய் ஆனை குறவள்ளி
மானை மணந்த தமிழழகா -சேனை
தளபதியே சூரன் தலைபறித்த சூரா
உளமதிலே உட்கார் உவந்து….(2)….

வள்ளி மகளோடு புள்ளி மயிலேறும்
வெள்ளி மலையோன் விழிமைந்தா -உள்ளிருக்கும்
ஆன்ம குகனே அகந்தை அழித்தெனக்கு
வான்வசம் ஆக்கிட வா….(3)….

விடையேறு பாகன் விழிவந்த வேலா
படையேறி வாழ்கின்ற பிள்ளாய் -கடையோரம்
வைத்தேன் கவியெழுதி விற்றுன் அனுபூதி
துய்த்தேன் தமிழ்வணிகத் தில்….(4)….

உடைந்தாலும் கண்ணாடி உள்ளதைக் காட்டும்
குடைந்தாலும் கற்பாறை கோயிலாகும் -அடைந்தாலும்
ஆறு கடலைத்தான் சேறும் அதுபோல
ஏறு மயிலோன்கண் ஏகு….(5)….

பாம்பன் ஸ்வாமிகள் கோயில்….
—————————————-
உப்பு மிளகிட்டு சுப்பனின் சன்னிதியில்
தப்புத்தப்(பு) என்றுகன்னத் தாளமிட்டு -அப்புறம்
பாம்பன் சுவாமிகள் பாதம் பணிந்தளிக்கும்
சாம்பலை நெற்றியில் சூடு….(6)….

பாம்பணைப் பள்ளிப் பெருமாள் மருகோனைத்
தாம்புனைந்தார் சந்தத் தமிழ்கொண்டு -பாம்பன்
குமர குருதாசர் கூறு கவசம்
அமரநிலை சேர்க்கும் அமுது….(7)….

சாம்பவி புத்திரனே சம்பு புதல்வனே
மாம்பழ வாயன் மருகோனே -பாம்பன்
அடிகள் அழைக்க அழகுமயில் ஏறி
சடுதியில் வந்தோய் சரண்….(8)….

தந்தைக்கு மிக்கதோர் மந்திரம் கூறிய
எந்தையே ஏரகக் கந்தனே -முந்தைப்
பழவினைகள் போக்கி புதுவினைக்கு ஞானக்
கிழவனாய் வந்தெனையாட் கொள்….(9)….

ஆறு முகம்கொண்டோய் ஆறு படைநின்றோய்
கோறும் அடியார் குறைதீர்க்கும் -மாறுபடு
சூரனைக் கொன்ற சுரமகள் கேள்வனே
பாரெனைத் தாயாய் பரிந்து….(10)….

கந்தா குஹாகடம்பா கார்த்திகே யாவென்று
உன்தாள் பணிந்து உவப்புடன் -அந்தாள்
அருணகிரி போலே வருணகவி பாட
தருணமிது தாராய் தமிழ்….(11)….

அண்ணா மலைதீபம், உண்ணா முலையுந்தி
விண்ணாளும் தேவர்தம் வெற்றி -எந்நாளும்
காப்பதற்குக் கையில் கதிர்வேல் கொண்டவனாம்
தீப்பொறி தோற்றத்தைத் தொழு….(OR)….
தீப்பொறி தோற்றத்தில் தோய்….(12)….

தை பூசத்தன்று எழுதியது….
———————————–
மைபூசும் மாதர்வாய் பொய்பேசப் புல்லரித்து
கைகூசும் காலம் கலவிடுவாய் -தைபூச
நன்நாளின் தெய்வத்தை நெஞ்சில் நிறுத்திடுவீர்
பண்ணாத பாவமும் பாழ்….(13)….

அறுபடையோன் புகழ்….
——————————————
திருவேரகம்(சுவாமி மலை)….
————————————-
குந்திக்கால் மண்டியிட்டு கூப்பியக் கைகொண்ட
தந்தைக்கு சொன்ன தனயனை -சிந்தைக்குள்
வேராக ஊன்றி விருட்ஷமாய் நட்டிடு
ஏரகச் செல்வனை ஏத்து….(14)….

பழமுதிர்சோலை
——————–
கூப்பாடு போட்டவுடன் கும்பல் கூடிடும்
தோப்பாய் இருந்து தனிமரமாய் -மூப்பால்
கிழமுதிரும் போதேனும் கந்தன்கை கோர்க்க
பழமுதிர் சோலைக்குள் புகு….(15)….

திருத்தணி
————–
விருத்தனாய் வந்து குறத்தியைக் கூடி
திருத்தணி மேவும் தலைவா -மருத்துவன்
வைதீஸ் வரன்பெற்ற வேலா யுதாவாழ்வில்
பொய்தீசல் சேராது போக்கு….(16)….

திருச்செந்தூர்
——————-
மாறுபடு சூரனுடல் வேறுபட வேலெய்து
கூறுபட வைத்த குருநாதா -சீறுகடல்
செந்தூரில் பத்தினிகள் சேர வளர்ந்திடும்
சிந்தூர வண்ணனைச் சேர்….(17)….

பழனி
——–
மாம்பழம் தந்தை மறுத்ததால் கோபித்து
தீம்பிழம் பாகி தவக்கோலம் -நாம்பழனி
குன்றினில் கண்டு களித்திட காட்சிதரும்
நின்றிடும் ஆண்டி நமக்கு….(18)….

திருப்பரங்குன்றம்
———————–
குரங்கென்ற நெஞ்சோடு கூடிக் குலாவி
தரங்குன்றி தாழ்ந்தோம், தவித்தோம் -பரங்குன்றில்
தெய்வானை கைப்பிடித்த தேவ சகாயனை
கைவாய்மெய் கொண்டு கருது….(19)….

சுரமகள் அத்தி குறமகள் வள்ளி
இருபுறம் சுத்தி இழைய -அறுபடை
வீட்டில் வசித்திடும் வேலா மயிலேறி
பாட்டில் வருவாய் பறந்து….(20)….

கண்ணனுன் காதலன் கந்தனுன் காவலன்
எண்ணனும் நெஞ்சேநீ எந்நாளும் -முன்னவன்
மாலனும் பின்வந்த வேலனும் நம்வாழ்வில்
காலமும் நேரமும் காண்….(21)….

மயிலவர்க்கு கொண்டை மயிலிவர்க்கு அண்டை
சயிலம் இருவர்க்கும் ஜாகை -துயிலிருப்பார்
வேலையில் மாலவன் வேலனோ தீயோர்மேல்
வேலை விடக்கண் விழிப்பு….(22)….

சரவணா கேளாய் ஒருவினா ஞானம்
பெறவொணா வண்ணமேன் பெற்றாய் -குருவெனால்
சீடன் தவித்திருக்க சும்மா இருப்பதோ
பாடமனு பூதி புகட்டு….(23)….

கரம்தாங்கும் வேலும் புறம்தாங்கும் நீல
நிறம்தாங்கும் வண்ணமயில் நோக்கும் -அறம்தாங்கும்
ஆறு முகமும் அணிசேவல் கொக்கரிப்பும்
கூறு தமிழ்மொழியும் காப்பு….(24)….

சிலம்பும் சிலம்பணி செவ்வேள் கழலும்
புலம்பும்புள் சேவலும் போகக் -கிளம்பத்
தயாராக நிற்கும் தணிகைவேல் நீல
மயூரமும் எண்ண முருகு….(25)….

மலையளவு குற்றமும் மங்கிடும், பொங்கும்
அலையுலவு செந்தூர் அழகன் -சிலையுருவை
எண்ணித் துதிப்போர்க்கு ஏத்திப் புகழ்வோர்க்கு
நுண்ணிய நூலாய் நலிந்து….(26)….

கதிராய் வெளிப்பட்டு கார்த்திகை மாதர்
உதிர முலைப்பாலை உண்டு -அதிரும்
அயில்வேலை அன்னை அளித்திட வாங்கும்
துயில்வோன் மருகன் துணை….(27)….

சொந்தம் எனக்குநீ பந்தம் எனக்குநீ
தந்தை எனக்குநீ தாயாராய் -வந்தருள்
பாலிக்க வேண்டும் பராசக்தி பாலனே
காளிக்கை வேலனே காப்பு….(28)….

எண்ஜாண் உடம்புக்கும் ஏகாக்ர சிந்தைக்கும்
பஞ்சா மிருதமும், பண்ணிரெண்டு -கண்ஜாடைக்
காதலும் போதுமே, ஆதலால் கந்தனின்
மீதுலாவு நெஞ்சே முனைந்து….(29)….

சந்தமிகு செந்தமிழில் கந்தரனு பூதியை
தந்த அருணகிரி தான்போலே -உந்தன்
திருப்பதிகள் சென்று திருப்புகழ் பாடும்
விருப்பதை நேர்நிறை வேற்று….(30)….

அய்யோ எனக்கிளை குய்யோ முறையிடாது
அய்யோ மணாளர் அணுகும்முன் -மெய்யோடும்
தேகான்ம பாவத்தை தாண்டி நிலைபெற
வாகா னவழிசொல்ல வா….(31)….

புரியும் தொழிலெனக்கு பொல்லாத சூரன்
சரியும் படிவேல் செலுத்தும் -அரியின்
சகோதரி மைந்தனின், சங்கரன் சேயின்
மகோதரன் தம்பியின்த மிழ்….(32)….

முதற்பொருளை ஈசன் நுதற்பொருளை வள்ளிக்(கு)
இதப்பொருளை சந்த இசைக்குப் -பதப்பொருளை
மாறா ஸ்திதப்பொருளை மாறன் கதைப்பொருளை
வீரம் விதைப்பொருளை வாழ்த்து….(33)….

பொய்பேசா வாக்கும் புறங்கூறா வார்த்தையும்
கைகூசா காரியமும் கொள்வோர்கள் -தைபூசத்
தானருளால் நற்கதியும் தேயா துருவனைப்போல்
வானுருளும் மீனாகு வர்….(34)….

உதித்ததது தீயாய் உருமாற்றம் சேயாய்
பதித்ததது பொய்கையில் பாதம் -துதித்த
நதித்தலை ஈசர்க்(கு) உதிர்த்ததது ஓமை
விதித்ததை மாற்றுமது வேல்….(35)….

வம்பை விலைகொடுத்து சம்பு விடம்வாங்கி
தெம்பிழந்து மன்மதன் தீய்ந்ததோர் -சம்பவத்தில்
திண்டாடும் தேவர்க்காய் உண்டான பிள்ளையை
கொண்டாடக் கைகளைக் கூப்பு….(36)….

மனத்துள்ளான் பூச தினத்துள்ளான் வள்ளி
வனத்துள்ளான் சூரன்மேல் வைத்த -சினத்துள்ளான்
அண்ட கனத்துள்ளான் ஆதி கணத்துள்ளான்
விண்ட ஷணத்துள்ளான் வேல்….(37)….

ஆனைக்(கு) இளையானை ஆனைக் களியானை
ஆணை அமரர்க்(கு) அளிக்கின்ற -ஆணை
வணங்கி எழுவானை வள்ளிகல் யாணம்
இணங்கிய யானை அணைப்பு….(38)….

அய்யம் தகளியா ஐந்துபுலன் நெய்யாக
பொய்யாம் விளக்கேற்றப் போந்தேனே -அய்யா
விளக்குமாறு என்னை விலக்கிடாது உன்னை
விளக்குமாறு வெண்பாவில் வா….(39)….

சுட்ட பழமா! சுடாத பழமாவென்(று)
இட்டனை அவ்வைக்(கு) இடையூறு -கொட்டினை
நாவல் பழத்தை நமுட்டு விஷமமாய்
சேவல் கொடியோய் சிரித்து….(40)….

வீசும்வெண் சாமரம் பேசும் தமிழுனக்கு
ஆசு கவியாகி ஆறுதிவ்ய -தேசமும்
கூடி அருண கிரியாகி சந்தத்தில்
பாடிக் களிக்கலாம் போது….(41)….

வயதுமிக சேர்ந்தும், வயோதிகம் நேர்ந்தும்
தயவை எதிர்பார்த்து தாழ்ந்தும் -அயர்வில்
கரணங்கள் ஓய்ந்தும் கலங்காது கந்தன்
சரணங்கள் பற்ற செழிப்பு….(42)….

பசித்தால் உணவு, படுத்தால் கனவு
நசித்தால் நமனார் நினைவு -அசத்தே!
இதற்குமேல் ஒன்றுண்டு இன்னதென்றால் ஆதி
முதற்கதன்பேர் ஆறு முகம்….(43)….

மண்டை தகளியா மானசீக நெய்யூற்றி
குண்டலினி ஜோதி கொளுத்திட -தண்டை
செறிகழல் சந்தம் செவிகளில் கேட்க
விரிகுழல் வள்ளியுடன் வா….(44)….

கோபுரமீ தேறி குதித்த அருணகிரி
தாபஜுரம் தீர்த்து தடுத்தாண்டு -நாபுறத்தில்
முத்தென வேலின் முனையால் எடுத்தளித்தோய்
புத்தென்னுள் பாம்பாய் புகு….(45)….

பாலூட்டும் அன்னையிடம் வேலூட்டம் பெற்றதனால்
மாலாட்டும் பீலி மயிலேறி -தேளாட்டம்
கொட்டுகின்ற சூரனை கூறாய் வகிர்ந்திட
விட்டகலும் தாய்ப்பாலை வேல்….(46)….

குகையாம் மனதில் குடியேறி கந்தா
புகைஐம் புலனை பொசுக்கு -பகையாம்
எனைப்போய் விரட்டி எனக்கு பதிலாய்
உனைப்போல் குடித்தனமாய் உய்….(47)….

வெந்த உளப்புண்ணில் வேலினைப் பாய்ச்சிமா
சந்தத் தமிழ்மலையாய் செப்பனிடு -கந்தன்
கடம்பன் குகனென்று காலமெல்லாம் கூவ
உடம்பை ஒயில்மயிலாய் ஓட்டு….(48)….

சாத்திரம் கற்றும் சதுர்வேதம் ஓதியும்
தூர்த்தெரி காட்டில் துடைத்தெறிவர் -நேத்திரம்
தன்வழி சேயை துதிப்போர்கள் இப்பிறவிப்
புண்வழிபோய் வாரார் பிறந்து….(49)….

காவலுக்கு வேலுமறை கூவலுக்கு சேவலும்
தாவலுக்கு வண்ணமயில் தோகையும் -ஆவலுக்கு
வள்ளியும் சீவலுக்கு வீரமும், கேவலம்நான்
எள்ளி நகையாட ஏன்….(50)….

ஈசான்ய மூளை இருந்து புறப்பட்டு
தீசார்ந்த சேயை, தினைப்புன -பூசாய்ந்த
மார்பனை தேவர்கள் சார்பனை பாவலர்கை
நூற்பனை நுண்பொருளை நண்ணு….(51)….

உடலே சதமென்(று) உனைநான் மறந்து
திடலாம் கிளர்ச்சியைத் தாண்ட -அடடா
திடலாடி பள்ளமாய் திடீரென்று ஆச்சே
கடலாடி கந்தனே காப்பு….(52)….

வேகாத வெய்யிலில் வேகா ததையுண்டு
வேகாதி வேகத்தில் வேண்டுதலாய் -போகாதே
கோயில் குளமென்று ! குன்றாடும் கந்தனை
வாயில் வளர்வெண்பா வாய்….(53)….

முருகா எனச்சொல்லி மூச்சை இழுமால்
மருகா எனமுடக்கு மூச்சை -குரு!கா
எனவோதி மூச்சை மனதின்றி விட்டால்
உனதாயுள் கந்தர்க்(கு) உவமை….(54)….

கரும்பில் சுவையாய் இரும்பில் சுமையாய்
வெறும்புல் விரிப்பில் வனப்பாய் -துரும்பிலே
மாயமாய் தூணிலே சீயமாய் வானிலே
மேயும் ஒளிக்கூட்ட மாய்….(OR)
வேயும் பரவெளியாய் வேல்….(55)….

தடந்தோள் முதல்வன் தமிழ்த்தாய் புதல்வன்
மடந்தை இருவர் மணாளன் -விடம்தோய்
கழுத்தர்க்(கு) உரைத்தான் எழுத்தை குருவாய்
வழுத்தி வணங்குவோம் வேல்….(56)….

பெண்டாண்டு பொய்பேசி பாழ்மது மாமிசம்
சண்டாளர் நட்பால் சகித்துண்டு -பண்டாய
வேதங்கள் போற்றும் பாதம் பணிந்திலேன்
ஏதம் பொறுத்தருள்வாய் ஏற்பு….(57)….

சொன்னால் வினையழியும் பின்னால் பிறப்பொழியும்
முன்னால் விலகும் மரணபயம் -முன்னாளில்
தாரகனை மாய்த்த தணிகையான் நாமத்தை
கூறகம் பூரிக்கக் கூவு….(58)….

இக்கா சினிக்கிங்(கு) இருப்பொன்றும் இல்லை
முக்காலே வீசம் முழுமாயை -நிக்காதே
இன்றே அறுபடை இல்லத்திற்(கு) ஏகிடு
நன்றே நடக்குமிதை நம்பு….(59)….

அற்பமாய் மாதர் அழகில் மயங்கிநம்
கற்பினைத் தோற்றோம் கசடறாய் -வெற்பிலே
பூக்கும் முருகனால் புண்ணியம் தேடுவோம்
காக்கும் கனகவேல் கை….(60)….

நன்றுலர்ந்து தீது நமைவாட்டும் நேரத்தில்
அன்றலர்ந்த பூவால் அருச்சிப்பாய் -கன்றலைந்த
கோகுல மாமனார் கொண்டமாப் பிள்ளையை
ஆகுலம் தீர்ப்பான் அவன்….(61)….

அஞ்சரி யாசனத்தை ஆளத்தேர் மாமனின்
குஞ்சரிப் பெண்ணின் கரம்பிடித்த -நெஞ்செரி
கண்டரின் தீநுதற்க் கண்பிறந்த கந்தனை
கண்டறியும் ஆவலே காப்பு….(62)….

மாலோலன் பெற்றபின் மண்ணில் தவழவிட்ட
ஆலோல வள்ளி அகமுடையான் -கோலோடு
தென்பழனிக் குன்றில் திகம்ப ரனாய்நிற்போன்
முன்கழுவிக் கொள்மும் மலம்….(63)….

கோதையின் கைப்பிடித்த யாதவத்தாய் மாமனின்
சோதரி பால்குடித்த சண்முகனை -சூதறி
யாதபுத்தி யால்தொழுது ஆதரிப்போர்க்(கு) ஆயுளுக்கும்
வாதபித்த ஜன்னி விலக்கு….(64)….

அரியின் திகிரியை அன்றுண்(டு) உமிழ்ந்த
கரியின்பின் வந்த குமாரா -சரியை
கிரியை அறியா கசடன் எனக்கு
நெறியை நினைவில் நிறுத்து….(65)….

பார்வதி துர்கா பரமேஸ் வரிதந்த
நேர்கதி செல்லும் நெடுவேலால் -சூர்விதி
தீர்த்தவனை சேவலாய் தோகையாய் தன்னுடன்
சேர்த்தவனை செந்தூரில் சேர்….(66)….

ஆனை துரத்திய மானை மருவிய
மோனை எதுகை மொழிமுருகா -”நானை”
தனித்துப் பிரித்து திருத்தும் ரமண
ஜனிப்பே அருணா சலா….(67)….

ஊசித் துளைக்காதில் ஒட்டகம் போய்வரும்
யோசித்த குப்பையும் யாப்பாகும் -நேசித்து
யாசித்து நிற்பான் எதிரியும் கைகட்டி
பேசிப்பார் கந்தன் புகழ்….(68)….

கணிகையர் கூடி பிணிவினையில் வாடி
இனிதுயிரை தற்கொலைக்(கு) ஈய -தணிகையான்
துள்ளிக் குதித்தவனை தாங்கிப் பிடித்துரைத்தான்
பள்ளித் தலம்சென்று பாடு….(69)….

கந்தர் அலங்காரம் கந்தன் அனுபூதி
தந்த அருணகிரிக்(கு) ஈடாக -கந்தன்
களிப்பமைய வேண்டி கைகூப்பு கின்றேன்
பலித்தலை கால்பாது காப்பு….(OR)
களிப்பயல் கண்ணனே காப்பு….(70)….

வேதாள பூதங்கள் பாதாள பாம்புகள்
தீதாளும் மானுடத் துன்பங்கள் -சேதாரம்
ஆகிடும் சக்தியின் அன்புமகன் கட்டளைக்கு
ஏகிடும் வேல்முன் எதிர்ப்பு….(71)….

தந்தை சுமந்தவன் தாயால் வளர்ந்தவன்
விந்தையச் சேயை வணங்காது -மொந்தையில்
கள்ளுண்டு மாதரார் காமநெறி கொள்ளாதே
முள்ளுண்(டு) எறியாய் மலர்….(72)….

கூனல் முதுகோடு காணல் குறையோடு
தோணல் எதுவுமின்றி தூங்காதே -போநல்
உபதேசம் தந்தைக்(கு) உரைத்தவெகு ஞான
மக(ன்)தேசம் சாமி மலைக்கு….(73)….

வேசை புலன்காட்டும் ஆசைப் பனிமூட்டம்
காசைக் கரியாக்கிக் கண்மூடும் -ஓசை
இடும்கந்தன் தண்டை இணையடிகள் பற்றி
திடம்கொண்டு தீர்ப்பாய் தினவு….(74)….

தள்ளாத காலம் தடியூன்ற இல்லத்தோர்
செல்லாத காசாக்கி சுண்டிடுவர் -பொல்லாத
புத்தியே கந்தன் புராணம் படித்திடு
நெத்தியை நீறால் நனைத்து….(75)….

கல்லிரும்பு கூர்வயிரம் கொண்ட கடினமெலாம்
புல்துரும்பாய் போய்வெட்கும் பார்மனம்முன் -வல்லியயிச்
சூரன் பொடிபட சீறிடும் வேல்திருச்செந்
தூரன் வழிக்குத் திரும்பு….(76)….

நீர்கொழித்த மண்ணில் நடுமரம் ஓங்குதலாய்
ஆறெழுத்தைக் கூறி அனுதினமும் -தேரிழுத்து
தீதொழித்த பாண்டவ தூதன் மருகனை
போதழைக்கப் பொங்கும் பலம்….(77)….

ஆவீர் அனைத்துமாய் ஆனதெல்லாம் போனதும்
சாவீர் ஜனிப்பதற்கு ஜென்மங்காள் -போவீர்
கயலூறும் பொய்கை வயலூரில் வாழும்
பயலாறைப் பார்க்கப் பலன்….(78)….

தலைப்பாகை கொண்ட மலைப்பான வாழ்வை
கலைப்பானே கூற்றன், கிராதகி -முலைப்பாலை
முட்டக் குடித்திடும் மாமன் மருகோனை
எட்டுக் குடிசென்று ஏத்து….(79)….

சூடுவாய் கொட்டாய் சுடச்சுட வார்த்தைகள்
சூடுவாய் பூனையாய் வாடுவாய் -சூடுவாய்
கந்தர் அலங்காரம் கந்தன் அனுபூதி
அந்த வெறிவாய்க்(கு) அவல்….(80)….

ஆத்தின்மேல் சோத்தின்மேல் கூத்தியார் கொங்கைமேல்
பூத்துக் கசங்காதே புல்நெஞ்சே -நூத்தின்மேல்
பாண்டவர் கொண்ட பகைதீர்த்தோன் பெண்ணுக்காய்
வேண்டும் மருமகன்மேல் வை….(81)….

என்னதான் செய்வது ஏரகச் செல்வனே
முன்னதாம் கர்மம் மயக்குதே -பின்னதாய்
வந்தயிவ் வெண்பாக்கள் உந்தனருள் ஆகட்டும்
சொந்த சரக்கென்றால் சோர்வு….(82)….

தாமரையாள் தங்கும் தடந்தோள் மணிமார்பன்
மாமறைகள் காத்தோன் மருகனே -”யாமிருக்க
அச்சமேன்” என்றபய ஆறுதல் தந்தவனே
உச்சரிப்பாய் என்னுள்ளே ஓம்….(83)….

தொட்ட குறைகுறைய விட்ட நிறைபெருக
பட்ட துயரகல போய்ச்சென்று -கஷ்டமொடு
அண்டி வருவோர்க்கு வண்டி அருள்குவிக்கும்
கண்டி கதிர்காமம் காண்….(84)….

கேட்ட தெலாம்கொடுக்கும் கேளா தனகுவிக்கும்
மாட்டேன் எனச்சொல்லா, மூடுபனி -மூட்டக்
கயிலை கபாலியும் கற்பகமும் கொஞ்சும்
மயிலை முருகன் மனம்….(85)….

உறிவள வெண்ணை உருகுநெய் பாலை
திருடுமுள மாமனின் தொண்டாய் -கிரிவலமாய்
சித்தம் ஒருமித்து செவ்வேள் மருகனின்
ரத்தி னகிரியைநீ சுத்து….(86)….

விண்வெற்றி கொள்ளவும் வீணரைக் கொல்லவும்
முன்நெற்றிக் கண்ணுதித்த மூலத்தை -பின்பற்று
பெண்கண் பொழிகின்ற போகத்தைப் பாராது
எண்கண் தரிசனத்திற்(கு) ஏங்கு….(87)….

பூண்டியில் ஈசனை பூஜித்த ஈராறால்
ஆண்டியே என்னை அணைத்தருள -பாண்டவ
பாஞ்சாலி மானத்தைப் போர்த்திய மாலவனின்
வாஞ்சை மருகோனே வா….(88)….

பணிக்கூனி யாலன்னை போவென்ற வாக்கை
அணிந்தா ரண்யம் அடைந்து -கனியை
இடகிழவி உண்ட இராமன் மருகோன்
வடபழனி செல்வோம் வா….(89)….

பாலை சரவணப் பொய்கைமார் போட்டிட
வேலை பராசக்தி வார்த்திட -ஆளாய்
உருமாறி பக்தர்க்(கு) உதவிடும் அன்புப்
பெருவா ரிதிக்கில்லை பூட்டு….(90)….

புள்ளி மயிலேறி பக்தர்க்(கு) அருள்வேலை
”துள்ளி வருகுதென” தோத்தரித்த -வல்லியூர்
பாரதிக் கண்ணனின் பாச மருகோனே
நேரெதிராய் வந்தென்முன் நில்….(91)….

தமிழ்வேலை சந்தம் உமிழ்வேலை சங்கம்
கமழ்வேலை ஈராறி கைகள் -தவழ்வேலை
காக்கும் அயில்வேலை நோக்க ஒயில்வேலை
தீக்கண் பயல்வேலை தீண்டு….(92)….

காற்று புகாகுகையில் கைதான நக்கீரர்
போற்றிப் புகழும் திருமுரு -காற்றுப்
படைநா யகன்வேற் படைதனை வீச
தடைவெற்(பு) அடைவு தரை….(93)….

சமாதான மான உமாதேவி ஈசர்
குமாரனின் சம்பவம் காண -இமாசலக்
கல்யாண பாரத்தைக் கொண்ட அகத்தியரின்
தொல்ஞான தேசிகனைத் தேடு….(94)….

நீராடிக் கார்த்திகையில் நீறாடி நேர்த்தியாய்
நீராடிப் பாடி நெடுங்குன்று -தோராடி
அல்லும் பகலும் அருளும் அருந்தமிழ்ச்
சொல்லின் பொருளில் சுகி….(95)….

சூல்தாங்கும் ஈசனுடன் வேல்தாங்கும் சக்தியுடன்
கால்தாங்கும் தேவர் குழாமுடன் -மால்தாங்கும்
பீலி மயிலேறி பத்தினிகள் பக்கமுற
மேலிருந்து வாழ்த்தும் முருகு….(96)….

நாதனை நான்முகன் வேதனையை ஈசர்க்கே
போதனை செய்த பிரணவத்தை -சேதுஅணை
கட்டிய மாமன்பெண் கட்டியமாப் பிள்ளையை
கட்டிப் பிடிக்கக் களிப்பு….(97)….

வேலனை ஈராறு தோளனை ஈசர்கண்
பாலனை வள்ளிமண வாளனை -மூலனை
முத்தமிழ் காவலனை முந்தியருள் ஏவலனை
உத்திரப் பங்குனியை உன்னு….(98)….

தலாப்பொருள் ஒன்று குலாவிடும் ஆறு
கலாமுகம் கொண்ட குமரன் -கலாப
மயிலேறி வள்ளி மகளானை சூழ்ந்த
ஒயிலோன் திருப்புகழ் ஓது….(99)….

சுராபதிச் சேனை உறாபகை வண்ணம்
கராதலம் வேல்கொண்ட கந்தா -பராபரைக்(கு)
உற்ற குமரனே பற்றினேன் பாதத்தை
சுற்றிவ ரச்செய் சபை….(100)….

கண்ணனைப் போலக் கடவுளிங்(கு) இல்லையென
கண்களை மூடிக் களித்திருந்தேன் -கண்ணனே
மாமனெனை ஒத்த மருகனிவன் என்றதால்
காமவேள் கந்தன் களிப்பு….(101)….
—————————————————————————

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.