— திருமதி. சிவானந்தம் கனகராஜ்.

cloud-capabilities

இணைய ஆவண சேமிப்பு மற்றும் பகிர்தலுக்கான தளங்கள்

நாளும் நமது கணிப்பொறியில் பல வகையான ஆவணங்களை ( Documents ) உருவாக்கி பயன்படுத்துகிறோம். Microsoft Office ன் பல்வேறு மென்பொருட்களான MS Word, MS Excel, MS PowerPoint, இவையனைத்து மென்பொருட்களையும் நாம் அன்றாடம் பயன்படுத்தி வருகிறோம். அதே போல் பல வகையான படக் கோப்புகள், jpeg, gif, bmp மற்றும் zip கோப்புகள், pdf கோப்புகளை உருவாக்கி பயன்படுத்துகிறோம். மற்றவர்களோடு பகிர்ந்தும் கொள்கிறோம்.

நாம் உருவாக்கும் ஆவணங்களை கணினியில் சேமித்து வைக்கிறோம். Compact Disc, Pen drive, Hard disc போன்ற external storage device களிலும் சேமித்துப் பயன்படுத்தலாம். அப்படி சேமிக்கையில், அந்த உபகரணங்களை கையில் எடுத்துச் செல்வோம். அங்கனம் எடுத்துக் செல்லக் கூட தேவையில்லாது, இணையத்திலேயே சேமித்துக் கொள்ளும் வசதியும் இன்று உள்ளது. இணைய வசதி இருந்தால், எங்கு எப்போது வேண்டுமானாலும் நமது கோப்புகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.

நமது மின்னஞ்சலிலேயே நமது கோப்புகளை இணைத்து, பிறருக்கு அனுப்பவோ, பகிர்ந்து கொள்ளவோ செய்யலாம். ஆனால், மின்னஞ்சல் சேவை வழங்கும் ஒவ்வொரு நிறுவனமும் நாம் மின்னஞ்சலுடன் தரவேற்றும் கோப்புகளுக்கான அளவை நிர்ணயம் செய்துள்ளன. அவை நிர்ணயத்துள்ள அளவுக்கு மேலாக இருக்கும் கோப்புகளை அனுப்புவதென்பது இயலாது. இதற்காக வடிவமைக்கப்படவை தான், இந்த இணையவழி ஆவண சேமிப்பு மற்றும் பகிர்தலுக்கான தளங்கள்.

மின்னஞ்சல் சேவை நிறுவனங்கள் வழங்கும் அதிகபட்ச மின்னஞ்சல் அளவு வரம்பு ( Maximum Email Size Limit ) கீழ்வருமாறு:
cloud-capabilities new

மேற்குறிப்பிட்டிருக்கும் கோப்புகளின் அளவுக்கு மேல் மின்னஞ்சலில் இணைப்புகளாக கோப்புகளை அனுப்ப இயலாது. அது போன்ற சூழ்நிலைகளில், இணையத்தில் இருக்கும் ஆவண சேமிப்பு மற்றும் பகிர்தலுக்கு உதவும் இணைய தளங்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.

அத்தகைய சேவைகளை இலவசமாக இணையவழி வழங்கும் இணையதளங்கள் குறித்து இக்கட்டுரையில் காணலாம்.

கூகுள் டாக்ஸ் வியூவர் (Google Docs Viewer):
கூகுள் வழங்கும் சேவை இந்த கூகுள் டாக்ஸ் வியூவர். மைக்ரோசாப்ட் வோர்ட், நோட்பேட் போன்ற மென்பொருட்களை பயன்படுத்தி நமது ஆவணங்களை கோப்புகளாக சேமித்து வைப்போம். அத்தகைய கோப்புகளை நாம் தனி மென்பொருள் ஏதுமின்றி இணையத்திலேயே உருவாக்கி, சேமித்து, திருத்தங்கள் மேற்கொள்வது என அனைத்து வகையான வேலைகளையும் இணையத்திலேயே செய்து, கோப்புகளை சேமித்துக் கொள்ளலாம்.

word processors (சொல் செயலிகள்) வழங்கும் பல்வேறு சேவைகளும் இந்த இணையவழி சேவையின் வாயிலாக கிட்டுகிறது. எடுத்துக்காட்டாக, கோப்புகளில் திருத்தம் மேற்கொள்ளுதல் (Editing ), மெருகூட்டுதல் (styling), சேமித்தல் (saving) என தனி மென்பொருட்களில் செய்யும் அனைத்து செயல்களையும் இதிலும் மேற்கொள்ளலாம் .

ஆயிரத்திற்கும் மேற்பட்ட எழுத்துருக்கள், இணையதள இணைப்புகள் கொடுக்கும் வசதி, படங்களை நமது கணினியிலிருந்து பயன்படுத்திக் கொள்ளும் வசதி, ஓவியம் வரையும் வசதி, அட்டவணைகள் உருவாக்கிக் கொள்ளும் வசதி என ஒரு தனி மென்பொருளில் கிடைக்கும் அனைத்து வசதிகளும் இந்த இணையவழி சேவையின் மூலம் கிடைக்கப் பெறலாம். நமது கூகுள் மின்னஞ்சல் கணக்கினை பயன்படுத்தியே நமது கோப்புகளை சேமித்துக் கொள்ளலாம்.

கூகுள் வழங்கும் இந்த சேவையை கீழ்காணும் இணைய பக்கத்தில் பெறலாம்:
docs.google.com

ஸ்ரைப்டு (Scribd):
Scribd ன் உதவியுடன் நம்மால் நமது கோப்புகளை இணையத்தில் வெளியிட அல்லது மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும். கோப்புகளை பிறர் பயன்படுத்த கட்டணம் வசூலிக்கவும் செய்யலாம். நமது கோப்புகளை சேமிப்பதற்கென தனி கணக்கு உருவாக்கி அதில் நமது கோப்புகளை சேமித்துக் கொள்ளலாம். நாம் அங்ஙனம் சேமிக்கும் கோப்புகளுக்கான இணைய பக்க முகவரியின் உதவியுடன், அந்த கோப்புகளை இணையத்திலேயே வாசிக்க, தரவிறக்க என்று பல வசதிகளும் கிடைக்கின்றன.

இவை மட்டுமின்றி, கட்டுரைகள், கடிதங்கள், புத்தகங்கள், செய்தித் தாள்கள், பத்திரிகைகள், கவிதைகள், வியாபரத்திற்கு பயன்படுத்தப்படும் படிவங்கள், சட்ட ரீதியான ஆவணங்கள், சொற்பொழிவுகள், விளக்கக் காட்சிகள், சுற்றுலா வழிகாட்டிகள் என்று இணையத்தில் கிடைக்கும் பலவகையான ஆவணங்களையும் இந்த இணையவழிச் சேவையின் மூலம் சேமித்துப் பயன்படுத்தலாம், பிறருக்கு பயன்படுத்த, பகிர்ந்து உதவலாம்.

நாம் சேமித்து வைத்துள்ள கோப்புகளை, நமது இணைய பக்கங்களிலும், இந்த Scribd ன் உதவியுடன் வெளியிட்டுக் கொள்ளலாம்.

இந்த சேவையை கீழ்காணும் இணைய பக்கத்தில் பெறலாம்:
https://www.scribd.com/

ஸ்லைடு ஷேர் ( Slide Share):
நாம் அறிந்த தகவல்களை மற்றவருடன் பகிர்ந்து கொள்ளும் நோக்கோடு உருவாக்கப் பட்டது தான் இந்த slide share. ஆவணங்கள் (documents), காணொளிகள் (videos), விளக்கக் காட்சிகள் (presentations), இணையவழி கருத்தரங்கங்கள் (webinars), விளக்கக் காட்சிகள் (infographics ), PDF கோப்புகள், புகைப்படத் தொகுப்பு என்று பலவகையான கோப்புகள், பல்வேறு வடிவங்களில் தரவேற்றவும், பலருடன் பகிர்ந்து கொள்ளும் வசதியை இந்த இணையதளம் வழங்குகிறது.

இதில் பதினைந்து மில்லியனுக்கும் மேலான பலவகையான கோப்புகள் தரவேற்றம் செய்யப் பட்டுள்ளன. அவற்றில் தொழில்நுட்பம், கல்வி, வணிகம், ஆரோக்கியம் சார்ந்த தகவல்கள், பயணக் கட்டுரைகள் என்று பல வகையான தகவல்கள் நமக்கு கிடைக்கின்றன.

நாம் இங்கு தரவேற்றம் செய்யும் கோப்புகளை பிறருடன் பகிர்ந்து கொள்ளலாம். வலைபூக்கள் மற்றும் வலைதளங்களில் வெளியிடலாம், இணைப்பு வழங்கலாம்.

இந்த சேவையை வழங்கும் வலைப்பக்கம்
www.slideshare.net

ஸ்கை ட்ரைவ் (sky drive) / ஒன் ட்ரைவ் (one drive):
மைக்ரோ சாஃப்ட் நிறுவனம் வழங்கும் இணையவழி ஆவண சேமிப்பு வசதி தான் இந்த ஸ்கை ட்ரைவ். ஸ்கை ட்ரைவ் தற்போது ஒன் ட்ரைவ் என்று அழைக்கப் படுகிறது.

புகைப்படங்கள், காணொளிகள் , பலவகையான கோப்புகளை நாளும் பயன்படுத்துவோம், நமக்கு நெருக்கமானவர்களுடன் பகிர்ந்து கொள்வோம். அங்ஙனம் பகிர்ந்து கொள்வதற்கு இந்த ஒன் ட்ரைவ் நமக்கு உதவுகிறது.

ஒன் ட்ரைவ் தற்போது மைக்ரொ சாஃப்ட் வழங்கும் MS – Office மென்பொருட்களுடன் வருகிறது. இணையத்தில் பயன்படுத்த கிடைக்கும் இந்த மென்பொருட்களில் MS Word, MS Excel, MS PowerPoint, MS One Note ஆகியன அடங்கும்.

பயனர் ஒவ்வொருவருக்கும் ஒரு டெராபைட் (Terabyte) அளவுள்ள தகவல்களை சேமிக்கும் வசதியை வழங்குகிறது ஒன் ட்ரைவ்.

இதில் தரவேற்றும் கோப்புகளை பிறருடன் பொதுவில் பகிர்ந்து கொள்ளலாம். குறிப்பிட்ட சிலருடன் மட்டும் பகிர விரும்பினால், அவ்வாறும் செய்யலாம். பகிரும் கோப்புகளில், யார் மாற்றங்கள் செய்யலாம் என்பதையும் நாமே தீர்மானித்து, குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் மாற்றம் செய்யும் உரிமையையும் வழங்கலாம்.

இந்த சேவையை கீழ்காணும் இணையதளத்தில் பெறலாம்:
onedrive.live.com

இஸ்ஸூ (Issuu.com) :
இணையவழி ஆவண சேமிப்பு மற்றும் பகிர்தலுக்கான மற்றுமோர் தளம் இஸ்ஸூ. இங்கு சேமிக்கும் ஆவணங்களை பிறருடன் பகிர்ந்து கொள்ள இயலும். நமது வலைப்பக்கங்களில், புத்தகம் போலவே வாசிப்பதற்கு ஏதுவாக வெளியிட முடியும்.

பல துறை சார்ந்த தகவல்கள், கலை, கல்வி, தொழில் நுட்பம், திரைப்படம், பயணம், சுற்றுலா என பல துறை பற்றிய தகவல்களும் இங்கு கிடைக்கின்றன. நாமும் இதில் ஓர் கணக்கினை துவங்கி இணைந்து கொண்டால், நமக்கு தெரிந்த தகவல்களையும் உலகில் உள்ள பலருடனும் பகிர்ந்து கொள்ளவும் முடியும்.

இந்த சேவையை வழங்கும் இணையதளம்:
issuu.com

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.