சுற்றுச்சூழல் ஆளுகையை கட்டமைக்க

–து. சிவக்குமார்.

Save our beautiful environment-vallamai

இன்றைய உலகில் நாம் சந்தித்து வரும் பெரும் பிரச்சனைகளில் மிகமுக்கியமான ஒன்று சுற்றுச்சூழல் பாதிப்பு. இந்தச் சுற்றுச்சூழல் பாதிப்பு என்பது எவ்வளவு மோசமான விளைவுகளைத் தந்துகொண்டிருக்கின்றது என்பது பற்றி நாம் அன்றாடம் ஊடகங்கள் வாயிலாகவும் பத்திரிக்கைகள் மூலமும் தெரிந்துகொண்டிருக்கிறோம். மேலும் பல நிகழ்வுகள் இந்தச் சுற்றுச்சூழல் பாதிப்பையும், இயற்கை பேரழிவையும் நம் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்துகின்றன. இந்தப் பாதிப்பிற்கும், பேரழிவிற்கும் யார் காரணம் என்று பார்த்தோமேயானால் அதில் நிச்சயம் மனித குலத்தின் அபார வளர்ச்சி மற்றும் அதன் செயல்பாடுகள்தான் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

இந்தச் சுற்றுப்புறச்சூழல் மேம்பாடு குறித்து பல்வேறு நாடுகள் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தியும், செயல்படுத்தியும் வருகின்றன. இயற்கைப் பேரிடர், பருவநிலை மாற்றம், பசுமை இல்ல வாயுக்கள் போன்ற பிரச்சனைகள் இன்று பெரும் சவாலாக உள்ளது. வேகமான வளர்ச்சி நடவடிக்கைகள், தொழில்நுட்ப வளர்ச்சி, தொழிற்சாலைகளின் அதீத வளர்ச்சி மற்றும் செயல்பாடுகள், அதன் தாக்கம் ஆகியவை இந்தச் சுற்றுச்சூழலிலும் எதிரொலிக்கத் தொடங்கியது. மேலும் உலகமயமாதல் மற்றும் நவீனமயமாக்கல் என்ற கொள்கைகளினால் இன்று சுற்றுச்சூழல் பாதிப்பு என்பது தீவிரமடைந்து அதன் உச்சத்தை தொட்டுக்கொண்டிருக்கிறது. சுற்றுச்சூழல் சீர்கேடு என்பது மனிதர்கள் தொடர்பான ஒன்றல்ல மாறாக உலகில் இருக்கும் அனைத்து உயிரினங்களுக்கும் தொடர்பானதும் கூட. இந்த மாற்றங்கள் என்பது மனிதர்களையும் அவர்களின் சமூக வளர்ச்சிக்கும் பெரும் பாதிப்பை உண்டாக்கும். தொழிற்சாலைகள் மூலம் அதிகரித்து வரும் கார்பன்-டை-ஆக்ஸைடு உள்ளிட்ட பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றம் காரணமாக நம் நாட்டில் வெள்ளம், வறட்சி ஆகியவை தொடர்ந்து ஏற்படுகின்றன. காடுகள் அழிப்பு உள்ளிட்டவற்றாலேற்படும் சூழியல் மாற்றங்கள் இந்தியாவிற்கு பெரும் சவால்களை ஏற்படுத்தி வருகின்றன. இதற்கு இந்திய அரசும் உலகளவில் ஐ. நா-வும் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றன.

ஒரு புதிய சுற்றுச்சூழல் ஆளுகையை கட்டமைக்க இந்தியாவும் இன்ன பிற நாடுகளும் உலகளவில் ஒன்றிணைந்து பல்வேறு சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான சட்டங்களையும், திட்டங்களையும் இயற்றி நடைமுறைப்படுத்தி வருகின்றன. இருப்பினும் இயற்கைப் பாதுகாப்பு தொடர்பான சட்டங்களை இயற்றுவதிலும் அதனை நடைமுறைப்படுத்துவதிலும் அரசுக்கு ஒரு தெளிவற்ற பார்வையும், ஒரு குழப்பமான நிலையும் உள்ளன. இந்தியாவில் மத்திய மாநில அரசுகள் இந்தச் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் போதுமான அக்கறை செலுத்துவதில்லை மாறாக அது வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் காடுகளை அழிப்பது, ஆறுகளின் போக்குகளை மாற்றி அமைப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு இயற்கையைப் பாதுகாப்பதற்குப் பதில், இயற்கைச் சுரண்டலுக்கு வித்திடுகிறது. இந்தச் சூழலில் ஒரு நிலையான, பாதுகாப்பான ஒரு புதிய சுற்றுச்சூழல் ஆளுகையை எப்படி கட்டமைக்க முடியும் என்பது பற்றி இந்தக் கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளது.

பருவ நிலை மாற்றம் – ஒரு பார்வை
இன்று சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் இயற்கைப் பேரழிவு என்பது புவி வெப்பம் அதிகரிப்பு, வறட்சி, அதிக மழைப்பொழிவு, பசி பட்டினி, பொருளாதாரச் சீர்குலைவு போன்றவற்றால் ஏற்படுகின்றன. மேலும் மின்சாராம், தண்ணீர் பற்றாக்குறை, இயற்கைச் சீற்றம் போன்றவையும் ஏற்படுகின்றது. இதற்கெல்லாம் காரணம் இந்தப் பருவநிலை மாறுபாடு. இந்தப் பருவ நிலை மாற்றங்களால் விவசாயம், மக்களின் ஆரோக்கியம், இயற்கை அமைப்பு, தண்ணீர் விநியோகம் மற்றும் மக்களின் வாழ்வாதாரங்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. மேலும் எண்ணற்ற தாவர இனங்கள், விலங்கினங்கள் இந்தப் பருவ நிலை மாற்றத்தால் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றன. இந்த மாற்றத்தின் வெளிப்பாடாக வறட்சி, வறுமை, தண்ணீர் தட்டுப்பாடு, விவசாயம் போன்றவை பெரிதும் பாதிக்கப்படுகின்றன.

அதுமட்டுமின்றி ஆறுகளில் கடுமையான நீர்த்தட்டுப்பாடு உண்டாகின்றன. இதனால் நதிநீர் பங்கீடு தொடர்பான பிரச்சனைகளில் அண்டை நாடுகளுடனும், அண்டை மாநிலங்களுடனும் சண்டையிட்டு நீர் பெறும் ஒரு சூழல் இன்று நம் நாட்டில் நிலவுகிறது. மேலும் இந்தப் பருவநிலை மாற்றத்தால் வெப்பம் அதிகரித்து கடல் மட்டம் உயருகின்றது. இதனால் கடற்கரை ஒட்டிய விவசாயப் பகுதிகளில் கடல் தண்ணீர் புகுந்து அந்த நிலம் விவசாயத்திற்கு பயனற்றதாக மாறிவிடுகிறது. கடல்மட்ட பாதிப்பினால் பாதிக்கப்படும் 27 நாடுகளில் இந்தியாவும் ஒரு நாடு என்று சர்வதேச சுற்றுச்சூழல் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. மேலும் அதிகப்படியான பசுமை இல்ல வாயுக்களின் விளைவாக வளிமண்டலத்தில் அதிகமான கார்பன்-டை-ஆக்ஸைடு நிறைந்து புவியை சூடாக மாற்றி வருகிறது.

இன்று வளிமண்டலத்தில் அதிகப்படியான கார்பன்-டை-ஆக்ஸைடை வெளியிடுவது அமெரிக்க மற்றும் ஐரோப்பிய கண்டங்களால்தான். சுமார் 75 சதவிகித அளவில் இவ்விரு கண்டங்களும் கார்பன்-டை-ஆக்ஸைடை வெளியிடுகின்றன. இந்தச் சூழலில் இந்தியாவும் அதிகமான கார்பன்-டை-ஆக்ஸைடு வாயுவை வெளியிடுகின்றன. இதனால் காற்று மாசுபாடு அடைந்து பல்வேறு நோய்கள் பரவுகின்றன. உலகசுகாதார அமைப்பின் ஆய்வு அறிக்கையின்படி இந்தியாவில் சுமார் 5 இலட்சம்பேர் இந்தக் காற்று மாசுபாட்டினால் பாதிப்படைகின்றனர் என்று தகவல் அறிக்கை தெரிவிக்கிறது. மேலும் இந்தக் காற்றுக் காற்று மாசுபாட்டினால் நீர் மாசுபாடு அடைகின்றது. இந்தியாவில் நீர் மாசுபாட்டால் 21 விதமான தொற்றுநோய்கள் பரவுகின்றன. இதனால் ஆண்டுக்கு சுமார் 1000 பேர் இந்த நீர் மாசுபாட்டால் இறக்கின்றனர் என்று உலகசுகாதார ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. இதற்கு முக்கியக் காரணம் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் நச்சுப்புகை மற்றும் அதிகமான போக்குவரத்துப் பயன்பாடும்தான். இந்தியாவில் சுமார் 1.5 மில்லியன் மக்கள் கரியமில வாயுவை வெளியிடும் வாகனங்களைப் பயன்படுத்துவதாக ஒரு ஆய்வு அறிக்கை கூறுகிறது.

சமீபத்தில் வெளியான தேசியக் காற்றுத் தர நிர்ணய குறியீட்டில் காற்று மாசு அதிகம் உள்ள நகரங்களில் டெல்லி முதலிடமும், கான்பூர் மற்றும் சென்னை ஆகிய நகரங்கள் காற்று மாசு அதிகம் உள்ள முதல் பத்து நகரங்களில் இடம் பெற்றுள்ளன. கடந்த ஆண்டு உலக சுகாதார ஆய்வு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் உலக அளவில் மொத்தம் 20 நகரங்கள் மிகவும் காற்று மாசுபட்ட நகரங்களாக அறிவிக்கப்பட்டன. இதில் உள்ள 20 நகரங்களில் 13 நகரங்கள் இந்திய நகரங்களாகும். மேலும் கடந்த ஆண்டு வெளியிட்ட சுற்றுச்சூழல் மேம்பாட்டு குறியீட்டில் 174-ஆவது நாடாக இந்தியா இடம் பெற்றுள்ளது. மொத்தம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்ட நாடுகள் 178. இதில் இந்தியா இடம்பெற்றிருக்கும் இடத்தை பார்க்கும்பொழுது சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டில் எவ்வளவு மோசமான இடத்தை நாம் பெற்றுள்ளோம் என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். இதற்கு மத்திய மாநில அரசுகள் தகுந்த நடவடிக்கை எடுக்க இயலாமலும், போதுமான நெறிமுறைகளை வகுக்க முடியாமலும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டிய சூழ்நிலை இன்று நிலவுகிறது.

அதேபோல் விவசாயம் என்பது இந்தப் பருவநிலை மாறுபாட்டால் முற்றிலும் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பருவமழை பொய்த்து காலநிலை மாற்றத்தால் போதுமான அளவு விவசாய உற்பத்தி செய்ய முடியாத சூழ்நிலை இன்று உருவாகி உள்ளது. தெற்காசிய நாடுகளில் 4 முதல் 10 சதவிகித அளவில் விவசாய உற்பத்தி இந்த ஆண்டுக்குள் குறைந்துவிடும் என்று உலக உணவு மற்றும் விவசாய அமைப்பின் ஆய்வறிக்கை தெரிவிக்கின்றது. விவசாய உற்பத்தி குறைந்தால் வறுமை ஏற்படும் அபாயம் இன்று நிலவுகிறது. இந்த வறுமையின் காரணமாக ஆண்டுதோறும் 5.6 மில்லியன் குழந்தைகள் இந்தியாவில் இறக்கின்றன. மேலும் இந்த வறுமையின் காரணமாக ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுகின்றது. உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் குறைந்த உடல் எடையுடன் குழந்தைகள் இந்தியாவில்தான் அதிகம் பிறக்கின்றன.

கடந்த 1971 மற்றும் 2004 ஆகிய இடைப்பட்ட ஆண்டுகளில் வெப்பநிலை உயர்வால் பனிமலை உருகி இமயமலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள 50 கோடி மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். கடந்த 35 ஆண்டுகளில் கங்கோத்ரி பனிமலை உருகி சுமார் 17 மீட்டர் வரை கடல்மட்டம் உயர்ந்துள்ளது. இந்தப் பேரழிவின் விளைவுதான் உத்தரகாண்டின் கோரத்தாண்டவம். இந்தப் பருவநிலை மாற்றத்தால், வானிலை மாற்றம், அதிக மழைப்பொழிவு, கடுமையான வறட்சி போன்றவை மத்திய இந்தியாவிலும் அதனை ஒட்டியுள்ள நகரங்களிலும் கடந்த பத்தாண்டுகளில் பன்மடங்கு உயர்ந்துள்ளது. 2009-ஆம் ஆண்டு நிகழ்ந்த அதிகமான வெள்ளப்பெருக்கால் ஆந்திராவும் கர்நாடகமும் பெரிதும் பாதிக்கப்பட்டன. இந்தப் பேரழிவிற்கு சுமார் 2 மில்லியன் மக்கள் குடிநீர் தட்டுப்பாட்டாலும், உணவு தட்டுப்பாட்டாலும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். 2005-ஆம் ஆண்டு மும்பையில் பெய்த கனமழைதான் இந்தியாவில் ஒரே நாளில் பெய்த அதிக கனமழையாகும். 24 மணி நேரத்தில் சுமார் 994 மி.மீ மழை மும்பையில் பதிவானது. இப்படி கடுமையான வறட்சி மற்றும் அதிக மழைப்பொழிவு போன்றவற்றிற்காக இந்திய அரசு ஆண்டுதோறும் ரூ. 800 கோடி வறட்சி நிவாரணமாக செலவழிக்கின்றது. மேலும் சுமார் 350 மில்லியன் இந்தியர்கள் வறட்சியால் கடந்த பத்தாண்டுகளில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். 18 மாநிலங்களில் 300 பில்லியன் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர் இந்தக் கடுமையான வறட்சி மற்றும் அதிக மழைப்பொழிவால்.

இப்படி பல்வேறு நிலைகளில் சுற்றுப்புறச் சூழல் பாதிப்பு காரணமாக நாம் இயற்கை வளத்தை இழந்து வருகிறோம். இந்தச் சூழலில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய மாநில அரசுகளின் திட்டங்கள் மற்றும் அதன் செயல்பாடுகளினால் சுற்றுச்சூழல் மேம்பாடு அடைந்திருக்கிறதா, அதன் மூலம் மக்களின் வாழ்வாதாரம் சிறப்படைந்திருக்கின்றதா என்றால் அது கேள்விக்குறிதான். இந்தச் சூழலில் மத்திய மாநில அரசுகள் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதிப்படுத்த அதன் நிர்வாகத்திலும், ஆளுகையிலும் மாற்றம் கொண்டுவர வேண்டும். அதன்மூலம் ஒரு சிறந்த சுற்றுச்சூழல் ஆளுகையை இந்தியாவில் கட்டமைக்க முடியும்.

உள்ளாட்சி அமைப்புகளின் பங்கு
உள்ளாட்சி அமைப்புக்கள் சுற்றுச்சூழல் ஆளுகையிலும், அதன் பாதுகாப்பை உறுதி செய்வதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. 73-ஆவது மற்றும் 74-ஆவது சட்டத்திருத்தம் பஞ்சாயத்து அமைப்புக்களை வலுப்படுத்தவும் அதனுடைய பங்கேற்பை உறுதிப்படுத்தவும் வழிவகை செய்கிறது. ஆனால் இந்த உள்ளாட்சி அமைப்புக்களுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கு ஏதேனும் பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளனவா அல்லது ஏதேனும் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளனவா என்று பார்த்தோமேயானால், சட்டத்திருத்தத்தில் நேரடியாக பஞ்சயாத்து அமைப்புக்கள் சுற்றுச்சூழல் ஆளுகையில் பங்கேற்காது அதனுடன் தொடர்புடைய செயல்பாடுகளில் ஈடுபட்டு சுற்றுச்சூழலைப் பாதுகாக்க உள்ளாட்சி அமைப்புகள் வழிவகை செய்கிறது. உதாரணமாக உள்ளாட்சி அமைப்புக்களுக்கு வழங்கப்பட்டுள்ள 29 பணிகளில் சமூக காடுகளைப் பராமரித்தல், பண்ணைக் காடுகளை உருவாக்குதல், திடக்கழிவுகளை மேலாண்மை செய்தல், நீர் நிலைப் பகுதிகளை மேலாண்மை செய்தல் போன்ற பணிகள் உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

இந்தப் பணிகளின் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்வதிலும், அதன் நிர்வாகத்திலும், ஆளுகையிலும் உள்ளாட்சி அமைப்புக்கள் பங்கேற்க முடியும். மேலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது மக்கள் பங்கேற்போடும், அவர்களின் ஒத்துழைப்போடும் கீழ்மட்டத்தில் இருந்து உருவாக வேண்டிய ஒரு பாதுகாப்பு இயக்கம். அந்தப் பாதுகாப்பு இயக்கம்தான் சிறந்த ஒரு சுற்றுச்சூழல் ஆளுகையை கட்டமைக்க வழிகோலும். சுற்றுச்சூழல் ஆளுகையை கட்டமைக்க மக்களோடு நேரடித் தொடர்பில் உள்ள உள்ளாட்சி அமைப்புக்கள் இதற்கு பெரிதும் உதவுகின்றன. மேலும் இந்த உள்ளாட்சி அமைப்புக்கள் பல்லுயிர் பெருக்கச் சட்டம், பேரிடர் மேலாண்மைச் சட்டம் ஆகியவற்றின் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் உதவி செய்கின்றன. கேரளாவில் உள்ள உள்ளாட்சி அமைப்புக்கள் பல்லுயிர் பெருக்கச் சட்டத்தின் மூலம் அந்தந்தக் கிராமப் பஞ்சாயத்துக்களில் பல்லுயிர் பெருக்கப் பதிவேடுகளை பராமரித்து வருகின்றன. இதன் மூலம் தாவர இனங்களைக் கண்டறிந்து பாதுகாக்கவும், விலங்கினங்களைப் பாதுகாக்கவும், விவசாய மற்றும் தரிசு நிலங்களைப் பராமரித்துப் பயன்படுத்திடவும் இந்தப் பதிவேடுகளின் மூலம் உள்ளாட்சி அமைப்புக்கள் உதவுகின்றன. மேலும் பேரிடர் மற்றும் வெள்ள காலங்களில் நிவாரணங்களை வழங்கிட, துரிதமாக பேரிடர் நிவாரணப் பணிகளைச் செய்திட இந்த உள்ளாட்சி அமைப்புக்களுக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது மாவட்டப் பேரிடர் மேலாண்மை ஆணையம் மூலம்.

மேலும் இந்த உள்ளாட்சி அமைப்புகள் சுற்றுச்சூழல் சார்ந்த முடிவுகளை எடுப்பதற்கு கிராம சபையின் மூலமும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளன. மேற்குத்தொடர்ச்சி மலையின் சுற்றுச்சூழல் ஆய்வுக்காக மத்திய அரசு அமைத்த கஸ்தூரிரங்கன் குழு பரிந்துரை செய்ததுபோல் மத்திய மாநில அரசுகள் சுற்றுச்சூழல் அல்லது கனிமவள சம்பந்தமான முடிவுகளை எடுக்கும்போது அப்பகுதிகுட்பட்ட கிராம சபையின் ஒப்புதலோடு முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது. இப்பரிந்துரையின் மூலம் உள்ளாட்சி அமைப்புக்கள் மற்றும் கிராம சபையின் மூலம் ஒரு சிறந்த ஆளுகையை சுற்றுச்சூழல் பாதுகாப்பில் கட்டமைக்க நம்மால் முடியும் என்பது தெளிவாகிறது. எனவே நிலைத்த சுற்றுச்சூழல் ஆளுகையை கீழ்மட்ட அளவில் கட்டமைக்க உள்ளாட்சி அமைப்புக்கள் பெரிதும் உதவுகின்றன.

என்ன செய்யவேண்டும்?
சுற்றுச்சூழல் ஆளுகையை கட்டமைப்பதில் மத்திய மாநில மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மட்டுமின்றி தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், உயர்கல்வி நிறுவனங்கள், நிதி மற்றும் சமூக ஆணையங்கள், இளைஞர் நற்பணி மன்றங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆகியோர் கிராம அளவிலும், மாவட்ட அளவிலும் மற்றும் மாநில அளவிலும் சுற்றுச்சூழல் ஆளுகையை கட்டமைக்க ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். மேலும் மக்களின் ஒத்துழைப்பும் அவர்களை முடிவெடுத்தலில் பங்கேற்க வைப்பதன் மூலமும் ஒரு மிகச் சிறந்த சுற்றுச்சூழல் ஆளுகையை தேசிய அளவில் நம்மால் கட்டமைக்க முடியும். சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் பசுமை நண்பர்கள் குழுவாக ஒன்றிணைந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வுப் பிரச்சாரங்களை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும். சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வுப் பயிற்சிப் பட்டறைகளை மாணவர்களுக்கும், சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கும் அரசுத்துறைகள், தொண்டு நிறுவனங்கள் அல்லது உயர்கல்வி நிறுவனங்கள் மூலம் பயிற்சிகளை வழங்கிட அரசு முனைந்திட வேண்டும். இதன் மூலம் நிலைத்த நீடித்த சுற்றுச்சூழல் ஆளுகையை நம் இந்தியாவில் கட்டமைக்க முடியும். இதனால் எதிர்கால சந்ததியினர் வளமுடன் வாழ நாம் உதவ முடியும்.

உதவிய நூல்கள்:
க. பழனித்துரை, “அதிகாரப்பரவலின் அடிப்படைகள்”, இராஜீவ்காந்தி பஞ்சாயத்துராஜ் ஆராய்ச்சி இருக்கை, காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம், காந்திகிராமம், 2007.
க. பழனித்துரை, “பருவநிலைமாற்றமும் உள்ளாட்சியும்”, இராஜீவ்காந்தி பஞ்சாயத்துராஜ் ஆராய்ச்சி இருக்கை, காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம், காந்திகிராமம், 2007.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *