கன்னித்தமிழும் கண்ணதாசனும்
—சுரேஜமீ.
கன்னித்தமிழும் கண்ணதாசனும்
தமிழ் மொழியின் ஆற்றல் பன்நெடுங்காலமாகத் தன்னைப் போற்றியவர்களுக்கு அடைக்கலம் தந்தது மட்டுமல்ல, அழியாப் புகழைக் கொடுத்தது. அற்றை நாட்களில் தமிழின் தொன்மையை; தமிழனின் பெருமையை காலம் தாண்டிக் கொண்டு செல்வதற்காக இலக்கியப் படைப்புகளை செய்தனர் புலவர்கள். ஆனால், இற்றை நாட்களில் தமிழால் தன்னை நிலைநிறுத்துவதோடு, செல்வமும் ஈட்டும் முயற்சியில் வெற்றி கண்டிருக்கிறார்கள்!
என்னடா தலைப்புக்கே இன்னும் வரவில்லையே என்ற வாசக உள்ளங்களின் கேள்வி என் செவிகளில் எட்டுகிற்து! இதோ அதற்கான விடை உங்கள் முன்னால்!
கன்னித்தமிழுக்குக் கிஞ்சித்தும் குறையாமல், தமிழ் எப்படி தன்னைச் சரண்புகுந்தவரை வாரி அணைத்து, அவர்தம் உள்ள வேட்கையையும்; வேண்டிய செல்வத்தையும், அழியாப் புகழையும் கொடுக்கிறதோ, அதற்கு நிகராக, தன் பெயரை உச்சரித்தாலே போதும்; வார்த்தைகளை வாரி வழங்கி; வான் புகழ் அடையச் செய்து; நல்லாரைக் கூட்டி; நலிதல் சிறிதுமின்றி நவில்தல் திறம்படச் செய்து, செல்வம் ஈட்டும் ஒரு தாரக மந்திரமாக …
‘கண்ணாதாசன்’ எனும் நாமம் இருக்கிறதென்றால், தலைப்பில் குறையும் உண்டோ? சொல்வீர்காள்!
கேட்டதும் கொடுப்பவன் தான் கிருஷ்ணன் என்றான்!
………………………………… இல்லை கண்ணதாசனும் தான்!!
என்பதை இன்றைக்கு தமிழ்நாட்டில் அவன் புகழ்பாடும் கவிஞர்கள், அறிஞர்கள், புலவர்கள் எனப் பட்டியல் நீளும்!
அவன் எழுதிய வார்த்தைகள் எவ்வளவு சத்தியமானவை என்று அனுபவித்தவர்கள் அறிவர்!
எத்தனையோ கவிஞர்கள் வந்தனர் அவனுக்கு முன்னாலும்; பின்னாலும்! ஆனால், அவர்களெல்லாம் வெறும் சருகுகளாகக் காற்றோடு அடித்துச் செல்லப் படுகின்றனர்; ஆனால், கவியரசரோ காற்றுக்கு கவிதை பாடியவராயிற்றே!
நதியில் விளையாடி கொடியில் தலைசீவி
நடந்த இளந் தென்றலே ……………………என்று!
இப்படித்தான் ஒரு பாடல் எழுதுவதற்காகக் கவிஞரின் வரவை எதிர்நோக்கி, திரைப்படத்தின் இயக்குநர், இசையமைப்பாளர் மற்றும் குழுவினர் காத்திருக்க, கவிஞரின் வருகை தாமதாமாகிக் கொண்டிருக்க, எம்.எஸ்.வி க்கோ, அடுத்த பட நிறுவனத்திற்கு, உடனடியாகச் செல்ல வேண்டிய நெருக்குதல் வேறு! முன்னும் பின்னும் அலைமோதி, கைக்கடிகாரத்தைப் பார்த்த மேனியில், கவிஞர் வரவில்லையே என பொறுமை இழந்து, ஒரு கடுஞ்சொல்லைப் பிரயோகிக்கப் பக்கத்திலிருந்தவர், கவிஞர் வந்தவுடன் அவர் காதில் போட்டுவிட்டார்!
கதையின் இயக்குனர் ஶ்ரீதர் அவர்கள், பாடலுக்கான சூழலைச் சொல்கிறார்…..
மருத்துவமனையில் புற்று நோய் காரணமாக அனுமதிக்கப் பட்டிருக்கும் கணவன், தான் எப்படியும் இறந்துவிடுவோம் என்பதை அறிந்து, அந்த மருத்துவமனையில் தனக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர், தன் மனைவியின் முன்னால் காதலர் என்பதையும் அறிந்து, தன் மறைவுக்குப்பின் தன் மனைவி அந்த மருத்துவரைத் திருமணம் செய்து கொள்ளவேண்டும் என சம்மதம் கேட்க, அதைக் கேட்ட மனைவியின் இதயம் சுக்கு நூறாக உடைய…..
பாடலின் இசைக்கு வார்த்தைகள் வர மறுத்த நேரம்தான், அந்த நண்பர் கவிஞரிடம், எம்.எஸ். வி, உங்களை இப்படிச் சொன்னார் என்று சொல்ல, கவிஞரால் நம்ப இயலாமல், ஏன்டா நீயா இப்படிச் சொன்னாய் என்று சட்டென்று கேட்க…
மீண்டும் ராகத்தோடு….
சொன்னது நீதானா? சொல்….சொல்…..என்னுயிரே என்ற பல்லவி பிறந்ததாக வரலாறு!
என்ன அருமையாக, ஆழமாக அந்தப் பாடலில் சொல்கிறார்….
மங்கலமாலை குங்குமம் யாவும் தந்ததெல்லாம் நீதானே
மணமகளை திருமகளாய் நினைத்ததெல்லாம் நீதானே
என்மனதில் உன்மனதை இணைத்ததும் நீதானே
இறுதிவரை துணையிருப்பேன் என்றதும் நீதானே…….
நண்பர்களே……இன்னும் எத்தனை எத்தனை பாடல்கள் நம் உணர்வுகளோடு ஒட்டி உரையாடுபவை? அதனால்தான் அவர் ஒரு அட்சயபாத்திரமாக அனைவருடைய எண்ணங்களிலும் இன்னமும் இருக்கின்றார்! எப்பொழுதும் இருப்பார்.
இயல்பான உணர்வுகளை இலக்கியமாய்த் தந்ததனால் இக்காலம் மட்டுமல்ல; எக்காலமும் நிலைத்திருக்கும் கவியரசர் கண்ணதாசன் திரையிசைப் பாடல்கள்!
அவன் பேச நினைப்பதெல்லாம் நான் பேசவேண்டும்
அவனியில் அவன்சொல்லின் ஆற்றல் உணர்த்திடவே!
அவருடைய பாடல்கள் பற்றி ஒவ்வொரு நாளும் உலகத்தின் தமிழினம் இருக்குமிடமெல்லாம், யாரோ ஒருவர் தன்னுடைய படைப்பாக, புத்தகமாக, பேச்சாக, கவியாக, பாடலாக என்று திறம்படப் புகழ் பாடிக்கொண்டேயிருக்கின்றனர் என்றால்,
சற்று யோசியுங்கள்……
தலைப்பு சரிதானே?
சந்திப்போம்….சந்திக்கும் வரை சிந்திப்போம்!
அன்புடன்
சுரேஜமீ