படக்கவிதைப் போட்டி 21-இன் முடிவுகள்
-மேகலா இராமமூர்த்தி
கடலோரம் அமர்ந்தபடிக் கதைபேசும் காரிகையர், அழகானச் சிறகசைத்துப் பறக்கின்ற பறவைக்கூட்டம், வெகுதூரம் விரிந்திருக்கும் நுண்மைமிகு வெண்மணல் என்று கண்விரிய வைக்கின்ற கவினுறு காட்சிதன்னைத் தன் புகைப்படப் பெட்டிக்குள் சுருட்டிவந்து தந்திருக்கும் திரு. அருண் வீரப்பனுக்கும், இவ்வழகிய படத்தைப் போட்டிக்குகந்த படமென அடையாளம் காட்டியுள்ள வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் ஆசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பனுக்கும் வல்லமை இதழ் தன் நெஞ்சார்ந்த நன்றிகளை நவில்கின்றது.
கவிஞர்குழாம், தம் சிந்தனைச் சிறகுவிரித்துப் பறப்பதற்கும், வளமான கருத்துக்களை வாரி இறைப்பதற்கும் பொருத்தமான புகைப்படம்தான் இது!
இனி, கவிதைகளை ஒவ்வொன்றாய் இரசிக்கலாமா?
முதலாவது கவிதை கவிஞர் கவிஜியினுடையது. பாரதியின் புதிய ஆத்திசூடியைப்போல் நம் சிந்தனைக்கு உரம்சேர்க்கும் புதிய கருத்துக்களைப் பதிவுசெய்திருக்கிறார் இக்கவிதையில்.
…வீரம் செருக்கு
விதி தேடும் மதி
தாண்டு
சித்திரம் செய்
சிவப்பு கொய்
உறவாடு உயிரோடு
கணம் நாடு
அளவோடு அழகோடு
அலகாகினும்
அச்சோடு
கொத்தி தின்னும்
சுற்றம் அழுக்கு
யாத்திரை கசடற
முகத்திரை பற்றற
சட்டென சிலுசிலுக்கும்
கதவு கூடு
காகிதம் கிழி
காவலில் வழி
புரிந்தவை நன்று
புரியாமையும் தின்று
கொல்–வில்லென
புல்–சில்லென
நில்–சொல்லென
ஆதி– சொல்லும்– அந்தம்
மீதி சொல்லும் ஆதி
யாதும் தானே சேதி
பற…..அதற்கு மனதை
திற….
*****
’எழுபவை எல்லாம் பின்னர் விழுபவைதான்; பிறப்பவை எல்லாம் ஒருநாள் இறப்பவைதான்’ எனும் இயற்கையின் அறத்தை அழகாய் விளம்பியுள்ளார் திரு. ஜெயபாரதன்.
பொழுது விழுந்தது
சுழற்சியில்
புவி செய்த தவறால் !
புள்ளினம் கிளம்பின உடனே
தம்மிடம் நோக்கி !
எழுபசும் பொற்சுடர் தன்
இமைதனை மூடி
வானில்
மங்கிய தெங்கும்
காரிருள் மூடி !
[…]
எழுபவை எல்லாம் பின்னால்
விழுபவை தான் !
பிறப்பவை யாவும் புவியில்
இறப்பவை ஒருநாள் !
நித்தியம் என்றுலகில்
நிச்சயம் இல்லை !
இருளெனும் கோழி
அடைகாத்திட
அண்ட கோளமாம்
முட்டையை
மூடிடும்
தன் இறக்கையுள் !
மீண்டும்
பொழுதெனும் சேவல்
கூவும் காலையில் !
கோழிக் குஞ்சுகள் தோன்றும்
வாத்துக் குஞ்சுடன் !
புதிய நாள் பிறக்கும்
மீண்டும்
புத்துணர் வோடு !
*****
’வீட்டை மட்டும் சிந்திக்கும் கடுகுள்ளத்தை விட்டு நாட்டுக்கு என்ன செய்யலாம் எனச் சிந்திக்கும் இரு தாயுள்ளங்கள் இவை’ என்கிறார் திருமிகு. நித்தியலட்சுமி.
வீட்டின் நாலு சுவரையே
எத்தனை காலம் தான்
நாம் பார்த்துக் கொண்டிருப்பது என்று….
அழகிய கடற்கரையில் உட்கார்ந்து
நாட்டுக்கு நீ என்ன
நல்லது செய்யப் போகிறாய்
என்பதை மட்டுமே யோசிக்கிறாய் போல!!
*****
குற்றம் சுமத்தும் மாமியாரும் அவரைச் சுற்றமாய் அன்போடு பேணும் மருமகளும் இணைந்திருக்கும் அபூர்வக் காட்சியொன்றை நம் கண்முன் நிறுத்தியுள்ளார் திரு. எஸ். பழனிச்சாமி.
குற்றம் சுமத்தும்தன் மாமியாரை அன்போடு
சுற்றமாய் பார்த்து கடற்கரையில் – ஒற்றுமை
காட்டும் மருமகளைக் காணவே புள்ளினங்கள்
கூட்டமாய் வந்தது பார்.
*****
வீட்டு வேலைசெய்வதும் வாட்டும் கவலைகள் சுமப்பதுமே வாழ்வென்று கொள்ளாமல், மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம் என்று அவருடைய அனுபவங்களையும் கேட்டு நடப்பது நல்லது என்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.
வீட்டு வேலை யெலாம்முடித்து
வீணே பொழுதைப் போக்காமல்,
வாட்டும் கவலைகள் வலுவிழக்க
வயதில் மூத்தோர் அனுபவங்கள்
கேட்டு நல்லதே செய்திட்டால்
கேடு பெண்மைக் கணுகாதே,
கூட்டை நாடும் பறவைகள்போல்
குதூகலம் வாழ்வில் நிலைத்திடுமே…!
*****
’அடுப்படிச் சிறையினின்று விடுதலை பெறுவீர் நீர்!’ எனும் நம்பிக்கையை நங்கையரிடம் விதைக்கின்றன இப்பறவைகள் என்கிறார் திரு. மெய்யன் நடராஜ்.
அடுப்படி சிறைநின்று விடுதலை பெற்று
=அந்தியில் கடற்கரை குளிர்காற்று பெற்று
படுத்திடும் உயிர்வாழ்வின் பாடுகள் பற்றி
=பகிர்ந்திடும் தாய்மாரின் பரிபாஷை கேட்டு
நடுத்தர வாழ்வெனில்போ ராட்டம் என்றே
=நடுவான் பறவைகள் சிறகுகள் அசைத்து
தடுத்திட எம்போன்று நீங்களும் ஆவீர்
=நாளைக் கென்பதைமறப் பீர்என் கிறதோ?
*****
நன்னெடுங்கூந்தலை நீளவே வாரிப்பின்னி, நெற்றியிலே குங்குமம் துலங்கக் கடலோரம் அமர்ந்திருக்கும் பெண்டிரைப் பாங்குறக் காட்டியுள்ளார் திருமிகு. புனிதா கணேசன்.
…அடுப்பங்கரை விடுத்து அழகுப் பட்டுடுத்து
நெடுத்த கூந்தல் நீள வாரிப் பின்னலிட்டு –
எடுப்பாய்க் குங்குமமும் எடுத்தே நெற்றி இட்டு
[…]
படு துயரம் மூச்சு கடல் காற்றைச் சுவாசிக்க
விடு விடென நீங்கி புத்துணர்ச்சி பொங்கிற்று – கண்
படு தூரம் ஒன்றில் இரை தேடும் பறவைகளோ
கூடு திரும்பக் கண்டு மனம் வெம்பியதே வேதனையில்
நாடு விட்டுப் போன எம் பிஞ்சுகளும் என்று நம்
வீடு திரும்புமோ நாமும் மகிழ்ந்திருக்க– என்ற நினைவினிலே …
*****
’தன்னலமற்ற நட்புக்களின் மகிழ்ச்சி பொங்கும் தருணத்தில் நிகழ்கிறதே வசந்தத்தின் அரங்கேற்றம்!’ என்று குதூகலிக்கிறார் திருமிகு. தமிழ்முகில்.
…அலை ஓசைக்கு நடுவே
காலங்காலமாய் தொடர்ந்திடும்
தன்னலமிலா நட்புகளின்
மகிழ்ச்சி பொங்கும்
சிரிப்பலையும் – தோழிகளின்
மனமதன் நினைவுகளில் நீங்கா
ரீங்காரமாய் ஒலித்துக்
கொண்டே இருக்க
கொஞ்சும் புறாக்களாய்
சுதந்திரமாய் சிறகை விரித்து
பறந்த நாட்களெலாம்
கண்முன் விரிந்து
களிப்பூட்ட – மீண்டும்
இங்கோர் வசந்தத்தின்
அரங்கேற்றம் !
*****
வேற்றுமையிலேயே உழலுகின்ற மானிடர்களைக் கண்ட காகங்கள், ’எத்தனைப் பிறவிகள் இத்தரையில் எடுத்தாலும் மானுடப் பிறவி மட்டும் தமக்கு வேண்டவே வேண்டாம்!’ என்று தீர்மானம் எடுத்திருப்பதாய்க் கவி வடித்திருக்கிறார் திருமிகு. ஜெயஸ்ரீ ஷங்கர்.
ஒன்றே குலமென’ ஓங்கிய
காக்கைகள் ஒரே குடும்பமாய்
அவசரக் கூட்டம் கடற்கரையில்..!
[…]
கூட்டத்தின் உச்சத்தில்
இனியொரு பிறவிவரின்
பிறவி உள்ளமட்டும்
மானுடம் மட்டும்
வேண்டவே வேண்டாம்
எனக் ஒன்றுகூடிக்
கரைந்து பிரமாணம்
செய்து சிறகடித்தன
நிம்மதியில் சிலிர்த்தபடி
சிறகுகளை விரித்தன….!
*****
’நாதியற்ற மக்களுக்கு நீதியும், காக்கை பிடிக்கும் கூட்டத்திற்குத் தண்டனையும், ஆதரவற்ற முதியோர்க்குப் பாதுகாப்பும் கிடைக்கும் நாள் எந்நாளோ?’ எனும் தன் நியாயமான ஏக்கத்தைப் பதிவுசெய்திருக்கிறார் திருமிகு. லட்சுமி.
சுயநல உலகத்திலே
பொருளும்,புகழும்
பெரிதென வாழும் உலகத்திலே
என்ன சாதித்தோம் தோழியே!
கடற்கரை மணல் எண்ணிக்கைபோல
காக்கை பிடிக்கும் மனிதர் கூட்டம்
கிண்கிணியாய் நம்மைச் சுற்ற
கீழ்வானம் சிவப்பது எப்போது?
[…]
நாதியற்ற சேய்கள் கூட்டம்
தெருவெங்கும் பிச்சைக்காரர்களின் அணிவகுப்பு
தொலைய சட்டங்கள் எங்கே?
உழைத்து ஓய்ந்திருக்கும் முதியோர்
உடல் நலம் காக்க அன்னை தெரசாவுக்கு எங்கே போவது?
குடித்துக் குடி அழிக்கும்
கோணங்கி சமுதாயம் திருத்த வழி வரைவாயே!
[…]
தூது செல்லும் காக்கைகள்
சுயநலமில்லா வாஞ்சையோடு
நீ கொடுக்கும் தமிழ் தூது மடலுக்காக
விடியல் உலகைக் கொடுக்கும்
தமிழ்மகளைக் காணக் காத்திருக்கின்றன!
*****
’காலடிச் சுவடு தாங்கிய வெண்மணலும், சத்தமிட்டு உணவுண்ணும் கருங் காக்கைகளும் என்னவோர் முரணழகு!’ என்று மனம் பூரிக்கிறார் திருமிகு. வேதா இலங்காதிலகம்.
பட்டினப் பரபரப்பிலொரு மயங்கும் மாலை
பட்டு மாலை, படும் மாலை.
வெண் மணலில் காலடிச் சுவடு
வெண் மேகத்திலோ பறவைகளால் முகடு!
பொத்தாது மனதை விரித்துப் பரப்பி
சித்தம் மகிழும் பெண்களும், பலரும்
இத்தனை சுதந்திரமாய் மொத்தப் பறவைகளும்
சத்தமிட்டு உணவு பொறுக்குமழகு கூடேக!
*****
இரசனைக்கினிய கவிதைத் தோரணங்கள் கட்டியிருக்கும் கவிஞர்களுக்கு என் பாராட்டுக்கள்!
சரி…இவ்வாரத்தின் சிறந்த கவிஞர் யார்? இதோ அதனையும் அறிந்துகொள்வோம்.
’இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்லரணும் நாட்டிற் குறுப்பு’ என்பார் வள்ளுவப் பேராசான். ஆனால் இன்று நாட்டின் நிலை அவ்வாறா உள்ளது? இல்லையே…இயற்கை வளங்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாக இழந்துவருகின்றோம். மண்ணில்லை, மரமில்லை, மழையுமில்லை என்று எல்லாமும் இல்லையென்றாகிக்கொண்டிருக்கும் இந்தச் சூழ்நிலையை மாற்றவேண்டும்; இயற்கையைப் பேணவேண்டும் எனும் சமுதாயச் சிந்தனையைக் கவிதையில் ஓடவிட்டிருக்கும் திரு. இளவல் ஹரிஹரனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய்த் தேர்ந்தெடுக்கின்றேன்.
அவரின் கவிதை…
பார்த்தாயா தோழி
பறவைகள், ஒன்றாய்
சிறகடித்துச் செல்லும்
சித்திரக் காட்சியை.
கூடிக் கொண்டாடி
குறையொன்றும் காணாது
கூடு திரும்பும் இயல்பில்
கூறும் பாடத்தை.
[…]
மண்ணைப் பறித்தெடுத்து
மாநதியைப் பறிகொடுத்தோம்
மண்ணில் மனையெடுத்து
விளைநிலம் பறிகொடுத்தோம்.
மரத்தை வெட்டிவிட்டு
மாமழையைப் பறிகொடுத்தோம்
உரத்தைக் கெடுத்துவிட்டு
உடல்நலம் பறிகொடுத்தோம்.
இவ்வாறே எல்லாம்
எப்படியோ பறிகொடுத்து
எவ்வளவோ அவ்வளவும்
எல்லாமே பறிகொடுத்தோம்.
கடலன்னை மடியமர்ந்து
காற்றுவாங்கும் வேளையிது
உடன்வந்த உன்னிடத்தில்
உளக்கருத்தைப் பறிகொடுத்தேன்.
கூடுதிரும்பும் பறவைக்கு
கூடில்லை மரமில்லை
நாடிவரும் நிழலில்லை
நல்லவிதை எச்சமில்லை.
என்ன செய்ய என்னசெய்ய
இயற்கையைப் பேணுவோம்
இன்னும் என்ன உறுதிகொண்டு
இயற்கையாய் வாழுவோம்!
*****
அடுத்து நாம் காணவிருப்பது, மண்ணிலேயே இரை தேடிக்கொண்டிருக்கும் காகங்களே! அதைவிடுத்து விண்ணிலே இரை தேடுங்கள்! புவி குப்பையாகிவிட்டது என்று வேறு கோளம் சென்றுவிடாதீர்கள்; மண்ணிலே விதைகள் முளைப்பதற்கு உங்கள் துணை கட்டாயம் வேண்டும்! என்று எழிலார் கருத்துக்களைப் பொழிந்திருக்கும் கவியொன்றை!
…கூடிச் சென்று
கோடி விண்மீன்களை
கொத்தி இரை கொள்ளக்
கனவு கொள்
மணலில்
பெண்டிர் இருவர்
தலை மேல் இறுகக் கட்டிய வானம்
உடைந்து மழைப் பூக்கள் சிதற
கொஞ்சம் அலகால் திறந்து
உணர்த்துவாய் நீ
ஏ!பறவைகளே
மானுடன் மையல் கொண்ட புவி
குப்பை ஆவது தெரிந்து வருத்தத்தில்
எச்சத்தை அடையாளமாய்
விட்டு விட்டு வேறு கோளம்
சென்று விடாதீர்!
புதிய புவி விளைவித்தலில்
விதைகள் முளைப்பெடுக்க
நீ மீண்டு(ம்) வேண்டப்படுவாய்!!
இக்கவிதையை இயற்றிய திருமிகு. கார்த்திகாவுக்கு என் சிறப்பான பாராட்டுதல்கள்!
கவிதைப் போட்டிகளில் உற்சாகத்துடன் கலந்துகொள்ளும் நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றிகள்!
மீண்டும் சந்திப்போம்!
தேர்ந்தெடுக்கப்பட்ட இருவருக்கும் வாழ்த்துகள்
இவ்வாரக் கவிஞர்களுக்கு வாழ்த்துக்கள்!
வல்லமையில் பதிவிட்ட எனது முதல் கவிதையே சிறந்த கவிதையாய் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு தமிழன்னைக்கும், பாராட்டி மகிழும் அன்பு உள்ளங்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.
இவ்வாரச் சிறப்பாளர்களிற்கு – தேர்வாளர்களிற்கு
பங்கு பற்றிய அனைவருக்கும் வாழ்த்துகள்.
தாங்கள் தேர்ந்தெடுத்த இரண்டு கவிதைகளுமே மிகவும் அழகாக எழுதப் பட்டிருந்தது.
சரியான தேர்வு. பாராட்டுக்கள். நன்றிகள்.
ஜெயஸ்ரீ ஷங்கர்.