வருமானத்திற்கு வேறு வழியா இல்லை?

1

பவள சங்கரி

தலையங்கம்

‘குடி குடியைக் கெடுக்கும்’ என்பது சர்வ சாதாரணமான வழக்கு மொழியாகிவிட்டபோதிலும் ஏனோ அது எப்போதும் ஆட்சியாளர்களின் செவியில் மட்டும் விழுவதே இல்லை. மது விற்பனையினால் அரசிற்கு கனிசமான வருமானம் வருவது மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவது நல்லது அல்ல. நாட்டு மக்களின் நலனில் சற்றேனும் அக்கறை எடுக்க வேண்டியதும் ஆட்சியாளர்களின் கடமை. திருவள்ளுவர் முதல் காந்தியடிகள் வரை குடிப்பழக்கத்தின் தீமையை எடுத்துரைத்துள்ளனர். இருந்தபோதிலும் வருமானத்தை மட்டுமே கருத்தில்கொண்டு மதுவிலக்கை அமல்படுத்தாமல் இருப்பது மக்களின் மனதில் வெறுப்பையே அதிகரிக்கச் செய்கிறது. இன்று மாணவர்களையும் இந்தக் குடிப்பழக்கம் தொற்றிக்கொண்டது வேதனையான விசயம். பெண்களும், மாணவ, மாணவிகளும் குடி போதைக்கு அடிமையாகி வருவதை ஊடகங்கள் தொடர்ந்து வெளியிட்டுக்கொண்டிருக்கின்றன. இதனால் காட்டுத் தீ போல பரவும் செய்திகள் மேலும் பல இளைஞர்களை சீரழிக்க வழி வகுக்கின்றன. வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலேயே, அதாவது மனிதன் அநாகரிக நிலையில் இருந்த காலத்திலேயே கள் போன்ற போதை தரும் பொருளை காய்ச்சி உண்டது குறித்த தகவல்கள் சங்க இலக்கியங்கள் மூலம் தெரிய வருகின்றன. இருப்பினும் இந்த அளவிற்கு நாட்டில் குடி போதையால் குடி நோயாளிகள் ஏற்படுத்தும் சமுதாயச் சீரழிவுகள் சமீப காலங்களில்தான் மிகவும் அதிகரித்துள்ளது. குறிப்பாக மிக எளிமையாகக் கிடைக்கும்படி தெருவிற்கு தெரு திறக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடைகள்தான் இதற்கு முக்கிய காரணம் என்றாகிறது. ஏதோ ஒரு காரணம் வைத்துக்கொண்டு, இன்று சிறுவர்கள், இளைஞர்கள் முதற்கொண்டு மது அருந்தும் பழக்கம் பரவலாகிக்கொண்டு வருகிறது. இந்த நேரத்திலாவது அரசு தன் கடமையை உணர்ந்து பூரண மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்த வேண்டும். அதற்கு முதற்கட்டமாக, டாஸ்மாக் கடைகள் குறிப்பிட்ட நேரம் மட்டும் திறந்து இருக்கும்படியும், மது அருந்துபவர்களின் வயதுக் கட்டுப்பாட்டை நிர்ணயம் செய்து, அதனை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கும் சட்டமும் ஏற்படுத்த வேண்டும்.

மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி தம் உயிரைத் தியாகம் செய்துள்ள காந்தியவாதி சசி பெருமாள் அவர்களின் தியாகத்திற்கு அஞ்சலி செலுத்துவதும், உதவித் தொகை வழங்குவதும் மட்டும் அவருக்கு செலுத்தும் நன்றியாகாது. அவர் விரும்பியபடி மதுவிலக்கை அமல்படுத்த முயற்சி எடுக்க வேண்டும். ஏற்கனவே இவர் சென்னை மெரினா கடற்கரையில் இதே காரணத்திற்காக, காந்தி சிலை அருகே 33 நாட்கள் உண்ணா விரதம் இருந்ததும் குறிப்பிடத்தக்கது. ஒரு மனிதாபிமானமிக்க நல்ல கோரிக்கைக்காக தம் இன்னுயிரை ஈந்துள்ள திரு சசி பெருமாள் அவர்களுக்கு உரிய மரியாதை செலுத்த வேண்டியதும் அரசின் கடமை. நம் தமிழ்நாட்டில் அரசு ஏற்று நடத்த வேண்டிய பணிகள் பல இருக்க வருமானத்தை மட்டுமே கணக்கில் கொண்டு சமுதாயத்திற்கு பேரழிவை ஏற்படுத்திக் கொண்டிருக்கிற மதுக்கடை வியாபாரத்தை மட்டும் ஏற்று நடத்துவதுதான் பெரும் அவலத்தை ஏற்படுத்துகிறது. அதற்கு முன்பு கள்ளச் சாராயமும், விசச் சாராயமும் ஏற்படுத்தியிருந்த அழிவைக் காட்டிலும் இது மோசமானதாக இருக்கிறது. நம் தமிழ்நாட்டின் கலாச்சாரமே சீர்கெட்டுப் போவதற்கு இதுவும் ஒரு காரணியாகும் அபாயம் வந்துவிட்டது. அதனால் தமிழகத்தில் அனைத்து மதுக்கடைகளையும் உடனடியாக தமிழக அரசு மூட வேண்டும்; அதாவது முழு மதுவிலக்கை அமுல்படுத்த வேண்டும். இப்படிச் செய்வதால் தேவையற்ற வன்முறைகளை கட்டுப்படச்செய்யவும் முடியும். கேரள மாநிலத்தில் 21 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் மது வாங்கி அருந்துவதற்கு அனுமதியில்லை. இதை கட்டாயமாகக் கடைபிடிக்கிறார்கள். ஆனால் நம் தமிழ்நாட்டில் குறைந்தபட்சம் இந்தக் கட்டுப்பாடு கூட இல்லை என்பதே இளைஞர்கள் மற்றும் சிறுவர்களின் சீரழிவிற்கு வழிவகுக்கிறது. பொதுவாக இயற்கையாக புளிக்க வைத்து தயாரிக்கப்படும் மது வகைகளை தயாரிப்பதற்குரிய கால அவகாசமும் செலவினமும் அதிகமாவதால், செயற்கையான ஆல்கஹால் பொருட்களைச் சேர்த்து குறைந்த விலையில் விற்பதால், இது உடல் ஆரோக்கியத்திற்கு மேலும் கேடு விளைவிக்கிறது. பிற மாநில மதுவகைகளை விட தமிழகத்தில் விற்கப்படும் மது மிக அதிகமாக உடல் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்ற கருத்தும் நிலவுகிறது. அதோடு கிட்டத்தட்ட ஆண்டொன்றிற்கு ரூபாய் 35,000 கோடிக்கு வியாபாரம் நடந்து, 20,000 கோடி வரை இலாபம் கிடைக்கக்கூடிய இத்தொழிலை சரியாக முறைப்படுத்தவும் இல்லை. விற்பதற்கும், வாங்குவதற்கும் பில் போடுவதோ அல்லது இரசீது கொடுப்பதும் இல்லை. இதனால் யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் மது வாங்கி அருந்த முடிகிறது. குறைந்தபட்சம், மதுக்கடைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்துவதன் மூலமாக சிறுவர்கள் மற்றும் இளைஞர்களை கட்டுப்படுத்த வாய்ப்பு இருக்கும். குடி போதையில் தகராறு செய்பவர்களையும், வண்டி ஓட்டுபவர்களையும் கடுமையாகத் தண்டிக்கும் சட்டம் வரவேண்டும். இந்தியாவில் குஜராத் மாநிலம் தவிர அனைத்து மாநிலங்களிலும் மது விற்பனை இருந்தாலும், ஆரோக்கியமற்ற சூழலில் விற்கப்படும் மதுவினால் அதிக உயிரிழப்பு , உடல் நல பாதிப்பு , குடும்ப சீர்கேடுகள் தமிழகத்தில் மட்டும் தான் மிக அதிகம் .

இவையனைத்திற்கும் மேலாக நம் நாட்டில் கனிம வளங்களும், இயற்கை வளங்களும் குவிந்து கிடக்கும்போது அதில் முழு கவனம் செலுத்தினாலே நல்ல வருமானம் பார்க்க முடியும். அவைகளை தனியார் வசம் ஒப்படைத்துவிட்டு மக்களின் ஆரோக்கியத்தை குலைத்து அதில் வரும் வருமானம் கொண்டுதான் இலவசங்கள் வழங்க வேண்டுமென்பதில்லை. தில்லியில் செயல்படுவது போல நம் தமிழகத்திலும் அரசு பேருந்துகள் இயற்கை எரிவாயு மூலம் இயங்க ஆரம்பித்தாலே, எரிபொருள் செலவு கனிசமாகக் குறையும் என்பதால் பல ஆயிரம் கோடி வருமானம் பெற முடியுமே. மணல் கொள்ளைத் தடுப்பு, கிரானைட் நேரடி விற்பனை, தேவையற்ற இலவசங்கள் வழங்கும் திட்டம், மின்சாரம் வழங்குவதின் முறைகேடுகள், உணவு வழங்கல் துறையில் உள்ள குறைபாடுகள் போன்றவற்றை கட்டுப்படுத்தி சீரமைத்தாலே மிகப்பெரும் தொகை வருமானமாகப் பெற முடியும் எனும்போது இப்படி பொது மக்களின் வாழ்வாதாரத்தையே சீர் குலைக்கும் மது விற்பனை அவசியம்தானா என்பதை போர்க்கால நடவடிக்கையில் முடிவெடுக்க வேண்டிய அத்தியாவசியத் தேவையில் நம் தமிழக அரசு இப்போது உள்ளது என்பதே நிதர்சனம்.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “வருமானத்திற்கு வேறு வழியா இல்லை?

  1. மதுவின் தீமையையும்,  மக்களின் நன்மையையும், குறிப்பாக இளைஞர்களின் நலனையும் குறிவைத்து எழுதிய “வருமானத்திற்கு வேறு வழியா இல்லை?” என்ற திருமதி. பவள சங்கரியின் கட்டுரை தெளிவாகவும், நடுநிலையோடும் பதியப் பட்டுள்ளது பாராட்டத்தக்கது. “இடித்துரைப்பார் இல்லா ஏமரா மன்னனாக” இல்லாமல் இடித்துரைப்பார்  இருந்தும் “ஏற்கா” மன்னனாகவே தமிழகத்தின்  ஆட்சியாளர்கள் 1971முதலே இருந்து கொண்டு வருவது தமிழகத்தின் சாபக் கேடோ?..
    அன்பன்,
    மீ.விசுவநாதன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *