அன்பெனும் பிடியுள் …

0

— உமாஸ்ரீ.

கீழ்த்திசையில் மெல்லென எழும் உதயசூரியன் தன் தங்கக்கதிர்களை அழகாகப் பரப்பினான்.

“மதுரம் அப்பார்ட்மெண்ட்ஸ்” பெயருக்கேற்ற மாதிரி அழகான இருபது வீடுகள் கொண்ட கம்பீரமான அடுக்கு மாடி குடியிருப்பு. ஏ பிளாக், பி பிளாக் என்று இரண்டு பிரிவுகள் உண்டு. சென்னைக்கு அருகிலிருக்கும் கோவூரிலுள்ள அந்தக் குடியிருப்பு சமீபத்தில்தான் கட்டி முடிக்கப்பட்டது.

”வாட்ச்மேன், வாட்ச்மேன்“ பத்மா உரத்த குரலில் அழைத்தாள்.

ரத்தன் கீழேயிருந்து அண்ணாந்து பார்த்து “இதோ வந்துட்டேம்மா“ என்று குரல் கொடுத்து விட்டு மேலேறிச் சென்றான்.

பத்மா அவனுக்கு ஒரு தட்டில் நாலு இட்லியும் ஒரு தம்பளிரில் கொஞ்சம் சாம்பரும் சாப்பிட கொடுத்தாள்.

”ரொம்ப தேங்ஸ்ம்மா“ அதை வாங்கிக் கொண்டு ரத்தன் தன்னிருப்பிடம் சென்றான்.

நேபாளி வாட்ச்மேன் ரத்தன் அவன் மனைவி மாயா மற்றும் மகள் மீனுவுடன் தரைத் தளத்திலிருக்கும் ஒரு அறையில் தங்கியிருக்கிறான். கட்டிட வேலை ஆரம்பித்த நாள் முதல் வாட்ச்மேனாக வேலை செய்து கொண்டிருக்கிறான்.

ரத்தன், மாயா இருவரும் பத்து வருடங்களுக்கு மேலாக தமிழ் நாட்டில் வசிப்பதால் அவர்களுக்கு தமிழ் பேச வரும் . குழந்தை மீனு தமிழை தாய் மொழி போல் மிக அருமையாகப் பேசுவாள். அவளை நேபாளி குழந்தை என்று யாராலும் நம்ப முடியாது. அவ்வளவு அழகாக தமிழ் உச்சரிப்பு இருக்கும்.

பத்மா அவள் கணவன் பாலுவுடன் பி பிளாக்கில் முதல் தளத்திலிருக்கும் அவர்கள் வீட்டுக்கு வந்து ஒரு வாரம்தான் ஆகிறது. அவர்கள்தான் முதன் முதலில் குடி வந்தவர்கள். பாலுவுக்கு ஒரு தனியார் கம்பெனியில் விளம்பரப் பிரிவில் வேலை. பத்மா இல்லத்தரசி. கல்யாணம் ஆகி பத்து வருடங்கள் ஆகிவிட்டது . இன்னும் குழந்தை, குட்டி உண்டாகவில்லை. போகாத கோவிலில்லை. செய்யாத பரிகாரங்களில்லை பார்க்காத மகப் பேறு மருத்துவர் இல்லை. கர்ப்பப் பையில் கட்டியிருப்பதால் குழந்தை பிறக்க வாய்ப்பில்லை என்று டாக்டர் சொல்லிவிட்டார். செயற்கை முறையில் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்றால் செலவு அதிகமாக இருக்கிறது என்று பார்த்தார்கள்.

“இந்தப் பிளாட் எனக்கு மிகவும் பிடிச்சிருக்கு. பில்டர் ரொம்ப நன்றாக கட்டியிருக்கிறார்“ என்றாள் பத்மா.

நம்ப இரண்டு பேருக்கு இந்தப் பிளாட் கொஞ்சம் பெரிசுதான், கடவுள் அனுக்கிரகம் இருந்தால் என்று பாலு ஆரம்பித்ததும் “இந்த வீட்டில் நமக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்” என்று முடித்தாள் பத்மா.

அவள் சொல்லி முடித்தவுடன் பரட்டைத் தலையுடன் ஒரு சிறுமி வீட்டுக்குள் வந்தாள். அழுக்கு கவுன் அணிந்திருந்தாள். முகத்திலே ஒரு குறுகுறுப்பும் கண்களிலே ஒரு துருதுருப்பும் இருந்தன.

பத்மாவிற்கு அவளைப் பார்த்தவுடனே மிகவும் பிடித்துப் போய்விட்டது.

”குட்டி உன் பேர் என்ன?“

என் பேர் மீனு. நீங்கள் புதுசா குடி வந்திருக்கீங்களா ஆண்ட்டி” ? மழலை குரலில் கேட்டாள்.

குழந்தையின் மழலைத் தமிழ் பத்மாவை ஈர்த்தது. ”குட்டி நன்னா தமிழ் பேசறியே? எப்படி கத்துண்டே?“ புன்சிரிப்புடன் கேட்டாள்.

”எனக்கு எப்படியோ பேச வந்துவிட்டது.“

பாலுவைப் பார்த்து “பாருங்கோன்னா, ஒரு நேபாளி குழந்தை எவ்வளவு அழகா தமிழ் பேசறது“ என்றாள்.

”உன் வயசென்ன? படிக்கிறாயா குட்டி?“

“எனக்கு ஐந்து வயசு. படிக்கிறதுன்னா என்ன ஆண்ட்டி?”

மீனு பள்ளிக்கூடம் போக ஆரம்பிக்கவில்லையென்பது பத்மாவுக்குப் புரிந்தது. குழந்தை அவளருகில் வந்தது.

” குட்டி இங்கே உட்கார். நான் பூஜை செய்து முடித்ததும் உனக்கு பிரசாதம் கொடுக்கிறேன்” மீனு ஒர் ஓரமாக உட்கார்ந்தாள்.

பத்மா பூஜை செய்ய ஆரம்பித்தாள். தினமும் அம்பாளை வழிபாடு செய்வது அவள் பழக்கம். அங்கே நிவேதனத்திற்காக வைத்திருந்த திராட்சையைப் பார்த்தவுடனே மீனுவின் கண்கள் பளிச்சிட்டன. குழந்தையால் ஆசையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. “ஹை” என்று கத்திக் கொண்டே திராட்சையின் அருகில் சென்று தன் சிறிய கையில் கொஞ்சம் திராட்சையை எடுத்து வாயில் போட்டு கொண்டாள்.

அதை கவனித்த பாலு கோபத்துடன் கைகளை ஆட்டி “ஏய் , ஸ்டாப்“ என்று கத்தினான். மீனு பயத்துடன் பாலுவைப் பார்த்தாள்.

”அபசாரம் பண்ணி விட்டாய். சுவாமி நிவேதனத்தை தொடலாமா? நீ எந்த சாதி?” இங்கே வா” கண்களை உருட்டி அதட்டினான்.

”நான் குழந்தை சாதி” மீனுவிடமிருந்து பதில் வந்தது.

”என்ன, என்ன ? —— “ மீண்டும் உரக்கக் கத்தினான்.

” குழந்தை சாதி “ என்றாள் மறுபடியும்.

” க்ளுக்” என்று சிரித்தாள் பத்மா. “குட்டி உங்களுக்கு சரியான பதிலை கொடுத்து விட்டாள். கடவுள் பக்தர்களிடம் சாதி பார்ப்பது இல்லை. நாம் மட்டும் ஏன் சாதி பார்க்கவேண்டும். குழந்தைக்கும் தெய்வத்திற்கும் வித்தியாசம் ஒன்றுமில்லை. குழந்தை சாப்பிட்டது, அம்பாளே சாப்பிட்ட மாதிரி. குழந்தையை எதுவும் சொல்லாதீங்க“ என்று சொல்லிவிட்டு, குட்டி பூஜை முடிந்தவுடன் உனக்கு பிரசாதம் கொடுக்கிறேன். நடுவில் சாப்பிடாதே.“ என்றாள் கனிவுடன்.

பூஜை முடிந்தவுடன் பிரசாதத்துடன் மீனு கீழே போய் விட்டாள்.

மாலை மயங்கி இரவுப் பொழுது வந்தது. சாப்பிடும்போது பாலு, “மீனுவுக்கு அதிக இடத்தைக் கொடுத்து விடாதே. அந்தக் குழந்தையின் வளர்ப்பு சரியில்லை போல் தெரிகிறது. சாப்பிடற பொருளைப் பார்த்தாலே பறக்கிறது. அதுவுமில்லாமல் அது ஒரு நேபாளி குழந்தை.“

”குழந்தை என்றால் அப்படிதானிருக்கும். நேபாளியாகயிருந்தாலென்ன? “யாதும் ஊரே, யாவரும் கேளிர்“ என்று கேட்டதில்லையா?”

”அவள் என்ன சாதியோ?”

குழந்தையிடம் சாதி பார்க்கதீங்க. எல்லோரையும் சரி சமமாக நேசிக்க வேண்டும். என் சிநேகிதி மைதிலி என்பவளின் குடும்பம் சென்னையிலிருக்கிறது. அவர்கள் குடும்பத்திற்கு உதவி செய்து முன்னுக்கு கொண்டு வந்த மாரீஸ் ஃப்ரீட்மன் என்ற போலந்து நாட்டுக்காரருக்கு அவர் செய்த உதவிக்காக ஒவ்வொரு வருடமும் பித்ரு காரியம் செய்து வருகிறார்கள் தெரியுமா? சாதி என்பது நாம் நினைப்பதில்தான் இருக்கிறது. நமக்குத்தான் இன்னும் குழந்தை பிறக்கவில்லை. எவ்வளவோ முயற்சி செய்தாகிவிட்டது. பலனெதுவுமில்லை. எப்போது விடிவு வருமென்று தெரியவில்லை.”

”புது வீட்டுக்கு வந்துவிட்டோமல்லவா? சீக்கிரம் குழந்தை பாக்யம் கிடைக்கும்.”

ஒரு மாதத்திற்குள்ளேயே அந்தக் குடியிருப்பில் ஒருவர் பின் ஒருவராக எல்லா வீடுகளிலும் குடி வந்து விட்டார்கள். பத்மாவிற்கு இப்போதெல்லாம் பக்கத்து வீடு, எதிர் வீடுகளில் உள்ளவர்களுடன் பேசிக் கொண்டிருப்பதிலேயே நேரம் போய் விடுகிறது.

ரத்தன் எல்லோரிடமும் நட்பாகப் பழகினான். ஆனால் அவன் வீட்டில் மட்டும் முரடனாக நடந்து கொண்டான்.

வாட்ச்மேன் மனைவி மாயா “பணமில்லாததால்தான் மீனுவை பள்ளிக்கூடம் அனுப்பமுடியவில்லை“ என்றாள். மீனு பள்ளி போகவில்லையேயென்று பத்மா மிகவும் வருந்தினாள். ”சீக்கிரம் அவளைப் பள்ளிக்கூடம் சேருங்க, நான் பண உதவி செய்கிறேன்” என்றாள்.

மீனு நினைத்தபோதெல்லாம் பிளாட்சிலுள்ள வீடுகளுக்குப் போவாள். பத்மாவிற்கு அவள் வரும்பொழுதெல்லாம் பட்டாம்பூச்சி சிறகடித்து வருவதுபோலிருக்கும். வீட்டுக்குள் இங்கும் அங்கும் அலைவாள். பத்மாவின் புடவை முந்தானையை பிடித்திழுப்பாள். சமையலறையின் மேடைமீது ஏறி அமர்ந்து கொள்வாள். ஏராளமான கேள்விகள் கேட்பாள். அவள் செய்யும் குறும்புகள், கேட்கும் கேள்விகள் தரும் தொல்லைகள் பத்மாவிற்கு இன்பத்தைக் கொடுத்தன. அவளை ஒருபொழுதும் கடிந்து கொள்ள மாட்டாள்.

பத்மாவிற்கு பாரதியாரின் பாடல்கள் என்றாள் மிகவும் பிரியம். முறையாக பாட்டு கற்றுக் கொண்டவள் அவள். சமயம் கிடைக்கும் பொழுதெல்லாம் பாரதியார் பாடலை பாடிக் கொண்டிருப்பாள். ஒரு நாள் அவள் அப்படிப் பாடிக் கொண்டிருக்கும் போது மீனு வந்தாள். கண்கள் விரிய பத்மாவைப் பார்த்தாள். “எனக்கு பாட்டு சொல்லிக் கொடுங்கள் ஆண்ட்டி” என்று குழைந்தாள். நான் பாடுவதை நீ திருப்பிப் பாடு என்ற பத்மா பாரதியின் ஒரு பாட்டை பாட மீனுவும் அந்த வரிகளைத் திரும்பி பாடினாள். பத்மாவிற்கு பரம திருப்தி.

அடுத்த நாள் பத்மா வேலயாயிருக்கும் போது வந்த மீனு முதல் நாள் கற்றுக் கொண்ட பாரதியின் பாடலை பாடிக்கொண்டிருந்தாள். குழலினும் இனிய மழலைக் குரலில் அவள் பாடிய பாரதியின் வரிகள் பத்மாவின் காதுகளில் தேனாக பாய்ந்தது.

” வெண்ணிலவு நீயெனக்கு, மேவுகடல் நானுனக்கு
பண்ணுசுதி நீயெனக்கு, பாட்டினிமை நானுனக்கு “

அந்த இனிய வரிகளைக் கேட்டு மகிழ்ந்த அவள் உற்சாகத்துடன்

“கண்ணின் மணி போன்றவளே ! கட்டியமுதே ! கண்ணம்மா “ என்று பாடி மீனுவை கட்டி அணைத்து உச்சி முகந்தாள்.

“குட்டி ஞாபகம் வைச்சிண்டு ரொம்ப நல்லா பாடறே “ என்று பாராட்டினாள்.

இரவு கணவனிடம் ”மீனுவுக்கு ஒரு தடவைதான் பாரதியாரின் பாட்டைச் சொல்லிக் கொடுத்தேன். கற்பூர புத்தி குழந்தைக்கு . அப்படியே பிடித்து கொண்டுவிட்டது. ஒரு நேபாளி குழந்தை பாரதியாரின் பாட்டை ரொம்ப நல்லா பாடுகிறது ” சொல்லிச் சொல்லி மாஞ்சி போனாள்.

பாலு இப்பொழுதெல்லாம் சாதியை பற்றிப் பேசுவதில்லை. எதற்காக வீணாக சாதியைப் பற்றிப் பேச வேண்டும். அப்புறம் பத்மாவிடம் வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டும். அவனுக்கும் மீனுவிடம் பாசப் பிணைப்பு ஏற்பட்டுவிட்டது.

”மீனுவின் சூடிக்கை யாருக்கு வரும்? கண் பார்த்ததை கை செய்யுமென்பார்கள். இவளுக்கு காது கேட்பதை வாய் பாடுகிறது. அவள் மாதிரி ஒரு குழந்தை நமக்கு பிறக்க வேண்டும்” என்றான்.

ஒரு நாள் மீனு வரவில்லை என்றதும் பத்மாவிற்கு கவலையாயிருந்தது. உடம்பு சரியில்லையென்று கேள்விப்பட்டு போய் பார்த்துவிட்டு வந்தாள். அடுத்த நாள் மீனு வந்தவுடன்தான் அவளுக்கு உயிர் வந்த மாதிரியிருந்தது.

ஒரு நாள் பாலு அலுவலகத்திலிருந்து சீக்கிரம் வந்துவிட்டான். பத்மா அவனுக்கு காபி கொண்டு வந்தாள். காபியை பருகிக்கொண்டே பத்மாவின் முகத்தைப் பார்த்தான். அவள் முகம் வாடியிருந்த்து. ஏதோ யோசித்துக் கொண்டிருந்தாள்

அவள் தோளை குலுக்கி, “என்ன யோசித்துக் கொண்டிருக்கிறாய்?“ என்றான்.

“நமக்கு பிறக்கப் போகும் குழந்தையைப் பற்றி யோசித்துக்கொண்டிருக்கிறேன். எனக்கு எந்த குழந்தையைப் பார்த்தாலும் ஏக்கமாகயிருக்கிறது. எவ்வளவு செலவு ஆனாலும் பரவாயில்லை. நான் என் நகையைக் கொடுக்கிறேன். அதை விற்று செயற்கை முறையில் சிகிச்சை செய்து குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும். குழந்தையின் மழலைச் சொல்லை சீக்கிரம் கேட்க வேண்டுமென்பது என் அவா.“ என்றாள்.

”அடுத்த வாரம் லீவு போடுகிறேன். டாக்டரிடம் போகலாம். உன் மனம் கவலையாய் இருப்பதுபோல் தெரிகிறது. இன்று சீக்கிரம் வந்துவிட்டேன் அல்லவா? வா, பீச்சுக்கு போய் கொஞ்ச நேரம் உட்கார்ந்துவிட்டு வரலாம்.”

அவர்கள் வீட்டின் கதவை பூட்டிவிட்டு புறப்பட்டார்கள். பீச்சின் மணலில் உட்கார்ந்து மனம் விட்டுப் பேசினார்கள். அப்போது யாரோ இரண்டு பேர் ஒரு குழந்தையை முரட்டுத்தனமாக தூக்கிக் கொண்டு போவது பத்மாவின் கண்களில் பட்டது. பத்மா அந்த குழந்தையை ஒரு வினாடி உற்றுப் பார்த்தாள். எங்கேயோ பார்த்த கண்களாக தோன்றின. குழந்தை திமிறிக் கொண்டு கீழேயிறங்க முயற்சித்தது.

”நம்ம குட்டி மாதிரியிருக்கிறது. வாங்க அவங்களைப் பிடிக்கலாம்”, மீனு, மீனு என்று கத்திக் கொண்டே வேகமாக அந்த ஆட்களை நோக்கி ஓடினாள். பாலுவும், அங்கிருந்த நான்கைந்து நபர்களும் அவள் பின்னாடி ஓடி வந்தனர்.

இரண்டு பேரும் குழந்தையைப் போட்டுவிட்டு ஓட்டம் எடுத்தார்கள். பத்மா கூறியது சரியாகத்தான் இருந்தது. அந்தக் குழந்தை வேறு யாருமில்லை, மீனுதான். பொது மக்கள் துரத்திச் சென்று ஓடியவர்களைப் பிடித்து தர்ம அடி போட்டார்கள்.

மீனு அழுதுக் கொண்டிருந்தாள். பயத்துடன் பத்மாவின் கையை கெட்டியாகப் பிடித்து கொண்டாள்.

” குட்டி, அழாதே. இங்கே எப்படி வந்தாய்?“

” ஆண்ட்டி, அப்பா என்னை இங்கே விட்டுவிட்டு போய்விட்டார்………….. “, அழுகையை நிறுத்தவில்லை.

” குட்டி, அழாதே. வா வீட்டுக்குப் போகலாம் “ என்று கூறியவுடன் குழந்தை அழுகையை நிறுத்தியது. சுண்டல் வாங்கிக் கொடுத்தவுடன் குழந்தை ஆர்வத்துடன் சுண்டலைச் சாப்பிட்டது.

வீடு திரும்பியவுடன் அவர்களை எதிர்கொண்ட வாட்ச்மேன் கையில் பீடியுடனும் வாயில் புகையுடனுமிருந்தான். மீனுவைப் பார்த்து “பிசாசே வந்துட்டயா? உன்னை தொலைக்கனுமுன்னு பார்த்தால் முடியலியே! உன்னை என்ன செய்வதென்று தெரியல. செலவு அதிகமாக இருக்கு. வர்ற வருமானத்திலே குடும்பம் நடத்த முடியல. என் வீட்டுக்காரிக்கு இப்போது மூணு மாதம். வேறே வழி தெரியாமல் மீனுவை பீச்சில் விட்டு விட்டு வந்தேன். பிசாசு, எப்படியோ உங்க கூட வந்துட்டது” அவள் தலைமயிரைப் பிடித்து இழுத்தான்.

மீனு வலியால் துடித்தாள். பத்மா அதிர்ச்சி அடைந்தாள்.

” உங்களுக்கு குழந்தையின் அருமை தெரியவில்லை. குழந்தையை போய் யாராவது பீச்சில் வேண்டுமென்றே விட்டுவிட்டு வருவார்களா? இனிமேல் இப்படி செய்தால் நான் காவல்துறையிடம் புகார் செய்வேன் “ என்றாள் கோபத்துடன்.

“நாங்க என்ன செய்யறது. விலைவாசி அதிகமாய் போய்விட்டது. இன்னொரு குழந்தை வேறு மாயாவுக்கு பிறக்கப் போகிறது? எப்படி எங்களால் சாமாளிக்க முடியுமென்று தெரியவில்லை” என்றான் ரத்தன்.

“குழந்தையை பள்ளிக்கூடம் அனுப்பி படிக்க வையுங்கள். பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள்; அடிக்காதீங்க; அவள் தங்கக் கம்பி” என்று சொல்லிவிட்டு பாலுவும் பத்மாவும் அங்கிருந்து நகர்ந்தார்கள்.

பத்மாவின் முகத்தில் வருத்தம் படர்ந்திருந்தது.

“கவலைப் படாதே பத்மா, நமக்கு சீக்கிரத்தில் குழந்தை பிறக்கும்.”

“யாருக்கு ஒரு பொருள் பிரியமாயிருக்கிறதோ அவருக்கு அப்பொருளைக் கடவுள் அளிப்பதில்லை. வேண்டாதவருக்குப் பார்த்துக் கொடுக்கிறார். நாம் குழந்தை வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். நமக்கு இன்னும் குழந்தை பிறக்கவில்லை. குழந்தை வேண்டாம் என்று நினைக்கும் வாட்ச்மேனுக்கு கேட்காமலேயே கடவுள் குழந்தையைக் கொடுக்கிறார் “ அவளால் அழுகையைக் கட்டுப் படுத்தமுடியவில்லை.

“கடவுள் அருள் இருந்தால் கண்டிப்பாக நமக்கு குழந்தை பாக்யமுண்டு. நீ கவலைப் படாதே” பாலு அவள் முதுகைத் தட்டிக் கொடுத்தான்.

ஒருநாள் காலை கதிரவன் உதித்து கொஞ்ச நேரம் ஆனது. பத்மா குளித்துவிட்டு நெற்றியில் குங்குமத்தை வைத்துக் கொண்டு, கூந்தலை அள்ளி முடிந்துகொண்டு வரவேற்பறையிலுள்ள சோபாவில் அமர்ந்திருந்தாள். அன்று டாக்டரிடம் போய் செயற்கை முறையில் குழந்தை பெற்றுக் கொள்ள சிகிச்சை ஆரம்பிக்க வேண்டுமென்பதால் அவள் மனம் பரபரப்பாகயிருந்தது.

பாலுவும் தயாராகிவிட்டான். ஒரு தோல் பையை கையில் வைத்திருந்தான். இதில் இரண்டு இலட்ச ரூபாய் இருக்கிறது. சிகிச்சை ஆரம்பிப்பதற்கு இந்தப் பணம் போதுமென்று நினைக்கிறேன். தேவையானல் இன்னும் பணம் புரட்டுகிறேன். இன்றே டாக்டர் விமலாவைப் பார்த்து சிகிச்சை ஆரம்பிக்கலாம். இனிமேல் தள்ளிப்போடவேண்டாம். கிளம்பலாமா?“

இருவரும் புறப்படும்போது ரத்தன், மாயா, மீனு மூவரும் வந்தார்கள். மாயா சோகமாக தென்பட்டாள். மீனுவின் கையைப் பிடித்திருந்தாள்.

“அம்மா சமீபத்தில் நேபாளில் ஏற்பட்ட பயங்கர நில நடுக்கத்தில் என் அப்பாவும் அண்ணனும் மரணமடைந்து விட்டார்கள் என்ற விசயம் இப்போதுதான் தெரிந்தது. நாங்கள் இபோது நேபாளுக்கு கிளம்பிக் கொண்டிருக்கிறோம். என் அப்பாவுக்கு அங்கு கிராமத்தில் கொஞ்சம் நிலம் இருக்கிறது. அதனால் அங்கேயே தங்கிவிடலாம் என்று முடிவு செய்திருக்கிறோம். இனிமேல் சென்னை திரும்பி வர மாட்டோம். இது வரை நீங்கள் செய்த உதவிக்கு நன்றி” என்று சொல்லி விட்டு கிளம்பினார்கள்.

மீனு திரும்பித் திரும்பி பார்த்துக் கொண்டே சென்றாள்.

அவர்கள் ஊரை விட்டு போகப்போகிறார்கள் என்று கேள்விப்பட்டதும் பாலு திடுக்கிட்டான். பத்மாவுக்கும் மீனு போயே போய்விட்டாள் என்பதால் துக்கம் அவள் நெஞ்சை அப்பியது. கன்றை பிரிந்த பசுவின் சோகத்திலிருந்த அவள் விம்மி விம்மி அழுதாள்.

பாலு அவள் கண்ணீரைத் துடைத்துவிட்டு “அழாதே பத்மா. உன் மனநிலை எனக்குப் புரிகிறது. மீனு போனால் என்ன ? நாம் டாக்டரைப் பார்க்கத்தானே இப்போது புறப்பட்டுக் கொண்டிருக்கிறோம். நமக்கு கடவுள் ஒரு குழந்தையை நிச்சயம் கொடுப்பார்.” என்று ஆறுதல் சொன்னான்.

அப்போது “ஆண்ட்டி” என்று கூவிக் கொண்டே மீண்டும் வந்தாள் மீனு.

“என் அம்மாவின் கையை உதறிக் கொண்டு நான் வந்து விட்டேன். நான் உங்களுடனே இருக்கிறேன். அம்மா கூட நேபாள் போக மாட்டேன். அம்மா வந்தால் நான் இல்லையென்று சொல்லிவிடுங்கள்” பத்மாவின் பின்னால் ஓளிந்து கொண்டது குழந்தை.

பாலு தன் மனசுக்குள் ” இதென்ன சினிமா கதை மாதிரி இருக்கிறது. முதலில் குழந்தை வருகிறது. அம்மாவும் அடுத்து வந்து நாங்கள் இந்த ஊரை விட்டு போகப்போவதில்லை என்று சொல்லுவாள் போலிருக்கிறதே?” என்று நினைத்தான்.

அவன் நினைத்தமாதிரியே மாயா வந்து விட்டாள்.

“மீனு என் கையை உதறித் தள்ளிவிட்டு வந்துவிட்டாள். அவள் இங்கு வந்தாளா?”

பத்மா தன் கை விரலை பின் பக்கம் காட்டி அங்கிருக்கிறாள் என்பதை சைகையால் காண்பித்தாள்.

“மீனு இனிமேல் உங்களுடனேயே இருக்கட்டும். எங்க வீட்டுக்காரர் ஊருக்குப் போகும்போது மீனுவை ஏதாவது ஒரு ரயில்வே ஸ்டேஷனில் இறக்கிவிட்டு போய்விடலாம் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார். அவர் அப்படி செய்தாலும் செய்வார். கொஞ்சம் கூட கருணையில்லாத மனுசன். எங்கேயோ என் குழந்தை கஷ்டப்படுவதை விட உங்களிடம் வளர்வதுதான் பொருத்தமானது. நான் அவர் கிட்டே சொல்லிக்கிறேன்.”

பத்மாவிற்கு இன்ப அதிர்ச்சி ஏற்பட்டது. கனவா அல்லது நிஜமா என்று அறிய கையை கிள்ளிவிட்டுக் கொண்டாள். பாலுவுக்கும் வியப்பு தாங்க முடியவில்லை .

“உங்கள் விருப்பப்படியே நாங்கள் மீனுவை வளர்க்கிறோம்…………… அவள் எங்களுக்கு சொந்தக் குழந்தை மாதிரி. குழந்தை என்பது கடவுள் கொடுக்கும் வரம். குழந்தைகளுக்கு நல்ல பெற்றோர் அமைவது கடவுள் தரும் வரப்பிரசாதம். கடவுள் மீனுவை எங்களுக்கு கொடுத்த வரமாக எடுத்துக் கொண்டு அவளுக்கு நல்ல கல்வி, உணவு, உடையெல்லாம் கொடுப்போம்.மீனு இனிமேல் நன்றாகயிருப்பாள்” என்ற பத்மா கணவனைப் பார்த்து ” கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தது மாதிரி நாம் குழந்தைக்காக சிகிச்சை பெற டாக்டரைப் பார்க்க போய்க் கொண்டிருக்கும் போது குழந்தையே நம்ம வீட்டுக்கு வந்துவிட்டாள். இன்னும் என்ன பார்த்துக் கொண்டிருக்கீங்க? பையில் வைத்திருக்கும் பணத்தில் கொஞ்சம் பணத்தை மாயாவிடம் கொடுங்கள். அவர்களுடைய செலவுக்கு உபயோகமாகயிருக்கும் “ என்றாள் .

பாலு தோல் பையிலிருந்து ஒரு ஆயிரம் ரூபாய் கட்டை எடுத்து மாயாவிடம் கொடுத்துவிட்டு தன் தலைமேல் இருகரங்களையும் கூப்பினான்.

மீனு மாயாவையே பார்த்து கொண்டிருந்தாள்.

” மீனு நான் வாரேன். ஆண்ட்டிதான் இனிமேல் உனக்கு அம்மா. அவங்க சொல்ற மாதிரி நடந்து கொள் “ என்று சொல்லி விட்டு விழி நிறைய கண்ணீருடனும், கை நிறைய பணத்துடனும் மனசு நிறைய நிம்மதியுடனும் அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள்.

மகிழ்ச்சிப் பரவசத்திலே பத்மா திக்குமுக்காடிவிட்டாள்.

” ஏன்னா, மீனு நம்ம வீட்டுக்கு வருவாள் என்று நான் கொஞ்சம் கூட எதிர் பார்க்கவில்லை. அவளுக்கு நல்ல உணவு, உடை கொடுத்து நன்றாக வளர்ப்போம். நேபாளி குழந்தையாகயிருந்தாலும் தமிழ் நன்றாக பேசுகிறாள். அவளுக்கு தமிழ் கல்வி அளிப்போம். நல்லா வளர்த்து ஆளாக்குவோம்“ குழந்தையின் கனனத்தில் மகிழ்ச்சியுடன் முத்தமிட்டாள். குழந்தையை பாசத்தோடு பார்த்தாள்.

“சாக்லெட் வேண்டும் அம்மா“ என்று சிணுங்கினாள் மீனு.

”அம்மா“ என்ற வார்த்தை காதில் விழுந்ததும் பத்மா மெய்ச்சிலிர்த்து பரவசமடைந்தாள்.

”மச மசவென்று நிக்காம கடைக்குப் போய் குழந்தை கேட்டதை வாங்கிட்டு வாங்க “ உரிமையுடன் கணவனை அதட்டினாள்.

”நான் கடைக்குப் போய் குட்டிக்குச் சாக்லெட், புத்தாடையெல்லாம் வாங்கி வருகிறேன்” கிளம்பினான் பாலு.

தாயும் மகளும் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்தனர். “ அம்மா, நல்ல அம்மா ” என்ற மீனு தன் குட்டிக் கையால் பத்மாவின் இடுப்பை கட்டிப் பிடித்தாள்.

பத்மா அநத அன்பெனும் பிடியுள் சிக்கினாள்.பின்பு அந்தப் பிடியிலிருந்து மெல்ல விடுபட்டாள்.

குதுகலத்துடன் தத்தரிகிட தத்தரிகிட தித்தோம் ! தத்தரிகிட தத்தரிகிட தித்தோம் ! முணுமுணுத்துக் கொண்டே நர்த்தனமாட தொடங்கினாள்.

***** நிறைவு *****

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *