தன்னுயிர் பிரிவதைப் பார்த்தவரில்லை …
— கவிஞர் காவிரிமைந்தன்.
கவிஞர் வாலி எழுதிய இந்தப் பாடலின் பல்லவியைக் கேட்டு கவியரசு கண்ணதாசன் வியந்து வாலி அவர்களைப் பாராட்டினாராம்!
உயிருக்கு உயிராக வாழ்ந்திருந்து ஒன்றையொன்று பிரிய நேர்ந்தால் அங்கு உருகிவிடும் துயருக்கு எல்லைகளில்லை. இயற்கை எழுதும் கணக்கும் தீர்ப்பும் மனதுக்கு என்றுமே புரிவதில்லை. உறவின் பிரிவில் துடித்துக் கதறும் உள்ளம் பாவம் இனி என்ன செய்யும்? திரையில் இதுபோல் காட்சிகள் வந்தால் பிரிவின் வழியை வார்த்தையில் சொல்லும் வித்தகம் தெரிந்த கவிஞர்கள் உண்டு. அவருள் நம்மைக்கவர்ந்த கவிஞர்கள் கண்ணதாசன் – வாலி எனலாம்.
ஆம்,. கவிஞர் வாலி எழுதிய இந்தப் பாடலின் பல்லவியைக் கேட்டு கவியரசு கண்ணதாசன் வியந்து வாலி அவர்களைப் பாராட்டினாராம்!
தன்னுயிர் பிரிவதைப் பார்த்தவரில்லை
என்னுயிர் பிரிவதைப் பார்த்து நின்றேன், நான்
என்னுயிர் பிரிவதைப் பார்த்து நின்றேன் …
கவித்துவம் என்பதோ, கவிதை என்பதோ, எதைச் சொல்கிறோம் என்பதல்ல, எதை எப்படிச் சொல்கிறோம் என்பதே. இதுவரை சொல்லிய விஷயத்தைத்தான் இன்னுமொரு புதிய விதத்தில் கவிஞர் கையாளும்போது அந்தப் பாடல் தனித்துவம் பெறுகிறது. அதற்கு இந்தப் பாடல் சாட்சியாகிறது! எண்ணிப் பார்க்கும்போது இன்னும் பிரம்மிப்பாக இருக்கிறது. பிரிவை இப்படியும் சொல்லலாம் அல்லவா? எனவேதான் கவிஞர் வாலியின் தமிழ், தமிழ் மக்களின் உள்ளங்களைக் கவர்ந்திருக்கிறது. வாழும் தமிழே வாலி என வலம் வரச் செய்கிறது!
பணம் படைத்தவன் திரைப்படத்திற்காக மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைப்பில், பி. சுசீலா குரலில், எம்.ஜி.ஆர், கே.ஆர்.விஜயா நடிப்பில், ஒரு இனிமையான பாடல், சோகத்திலும் ஒரு சுகம் இழையோடுகிறது கேளுங்கள் …
தன்னுயிர் பிரிவதை …
காணொளி: https://www.youtube.com/watch?v=m6K4iHRN5vU
தன்னுயிர் பிரிவதைப் பார்த்தவரில்லை
என்னுயிர் பிரிவதைப் பார்த்து நின்றேன்
தன்னுயிர் பிரிவதைப் பார்த்தவரில்லை
என்னுயிர் பிரிவதைப் பார்த்து நின்றேன் நான்
என்னுயிர் பிரிவதைப் பார்த்து நின்றேன்
என்னுடனே எந்தன் பூ உடல் வாழும்
உன்னுடனே எந்தன் பொன்னுயிர் போகும்
தன்னுயிர் பிரிவதைப் பார்த்தவரில்லை
என்னுயிர் பிரிவதைப் பார்த்து நின்றேன்
நான் என்னுயிர் பிரிவதைப் பார்த்து நின்றேன்
தெய்வத்தை நினைத்தேன் தேரென்று வளர்ந்தேன்
தென்றலை நினைத்தே பூவென்று மலர்ந்தேன்
தேரென்றும் இல்லை பூவென்றும் இல்லை
கண்ணீரில் காலம் செல்ல வேறென்ன வேண்டும்
கண்ணீரில் காலம் செல்ல வேறென்ன வேண்டும்
மன்னனை நினைத்தே மாளிகை அமைத்தேன்
வள்ளலை நினைத்தே மையலை வளர்த்தேன்
மாளிகை இல்லை மன்னனும் இல்லை
கண்ணீரில் காலம் செல்ல வேறென்ன வேண்டும்
கண்ணீரில் காலம் செல்ல வேறென்ன வேண்டும்
தன்னுயிர் பிரிவதைப் பார்த்தவரில்லை
என்னுயிர் பிரிவதைப் பார்த்து நின்றேன்