தலைநகரில் நடந்த இழிசெயல்….

0

பவள சங்கரி

தலையங்கம்

பாலியல் வன்முறைக்கு பெயர்போன நகரமாக நம் தலைநகர் தில்லி மாறி வருவது வேதனைக்குரியது. தில்லியில் சென்ற ஆண்டைக்காட்டிலும் அதிகமான பாலியல் வன்முறை வழக்குகள் பதிவாகி உள்ளன. கடந்த 2014-ம் ஆண்டில் மட்டும் 1,800 வழக்குகள் பதிவாகி உள்ளன. 2013-ம் ஆண்டில் 1,440 வழக்குகள் பதிவாகி இருந்தன. தில்லியில் கடந்த 2014-ம் ஆண்டில் மட்டும் பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவம் தொடர்பாக 15,265 வழக்குகள் பதிவாகி உள்ளது. இது நம் நாட்டில் பெண்களுக்கு எதிராக நடைபெற்ற வன்முறைகளில் 4.5 சதவீதமாகும்.

நம் நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் கடந்த 2011 ஆம் ஆண்டு முதலே வெகுவாக அதிகரித்து வருகின்றன. தேசிய குற்ற ஆவணங்கள் பதிவுத் துறை தகவலின்படி 2011ல் 2,28,650 வழக்குகள், 2012ல் 2,44,270 வழக்குகள் மற்றும் 2013ல் 3,09,546 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. முக்கியமாக குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளும் அதிகரித்துள்ளன. இது தொடர்பான புகார்கள் மீது 2011ல் 33,098, 2012ல் 38,172, 2013ல் 58,224 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. அதாவது, 2013 ஆம் ஆண்டு தரவுகளின்படி பெண்களுக்கு எதிரான வன்முறை இந்தியாவில் 27% அதிகரித்துள்ளது.

2013 ஆம் ஆண்டில் 33,707 பாலியல்  புகார்கள் பதிவாகியுள்ளன. அதாவது 15 நிமிடங்களுக்கு ஒரு பாலியல் பலாத்காரம் என்ற எண்ணிக்கையில் நடந்துள்ளது. சிறுமிகளைப் பாலியல் பலாத்காரம் செய்யும் புகார்கள் 45% அதிகரித்துள்ளது. தேசிய குற்றப்பதிவு மையம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தின்படி, கடந்த 2001 முதல் 2011-ம் ஆண்டு வரை 48 ஆயிரத்து 338 குழந்தைகள் பாலியல் பலாத்கார கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். 10 ஆண்டுகளில் இதன் விகிதம் 336 சதவீதம் அதிகரித்துள்ளது என்பது கொடுமையிலும் கொடுமை. மனிதாபிமானம் என்ற ஒன்று மொத்தமாக செத்துக்கொண்டிருப்பதையே இது காட்டுகிறது.

தலைநகரில் சமீபத்தில் நடந்த சம்பவம் ஒவ்வொரு இந்தியரும் வெட்கித் தலை குனிய வேண்டிய ஒரு நிகழ்வு. உலகமே அறியாத ஒரு இரண்டரை வயது குழந்தைக்கும், ஐந்து வயது குழந்தைக்கும் கூட பாதுகாப்பு இல்லாத நிலை. இதன் பின்னணியாக மின்வெட்டு, போதைப் பொருட்கள், இன்னும் ஏதேதோ காரணங்கள்… காரணிகளை ஆய்ந்து குற்றங்களை களைவதை விடுத்து தில்லி முதல்வர் பிரதமரைக் கைகாட்டுவது வருத்தத்திற்குரியது. இவ்வளவு பெரிய பிரச்சனைக்கு பொறுப்பேற்காமல் வெகு எளிதாக தவிர்க்க நினைப்பது தலைமைப் பதவியில் இருப்பவருக்கு முறையல்ல. குற்றவாளிகளை உடனடியாகக் கண்டுபிடித்து தண்டனையை வழங்க வேண்டும். குற்றவாளிகள் சட்டத்தின் ஓட்டையில் நுழைந்து வெளிவராதவாறு சட்டம் கடுமையாக்கப்பட வேண்டும். பாலியல் வன்கொடுமைகளுக்கு, குறிப்பாக பிஞ்சுக் குழந்தைகளுக்கு துன்பம் இழைக்கிற கொடூரர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும். இவையனைத்திற்கும் மேலாக காவல் துறை மேலும் அதிக விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டியது அவசியம். இது போன்ற ஒரு கொடுமை இனி எப்போதும் நடைபெறாது என்ற உறுதியெடுக்க வேண்டும்.

கடுமையான இந்த சூழலில் பெற்றோரும் மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டியது அவசியம். உறவுகள், பழகியவர்கள் என யாராக இருப்பினும் குழந்தைகள் அளவறிந்து நெருங்கும்படி விழிப்புடன் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். பதிவு செய்யப்பட்ட பெரும்பாலான பாலியல் வல்லுறவு வழக்குகளில் 94 சதவிகித வழக்குகளில், குற்றவாளிகள் பாதிக்கப் பட்டவர்களுக்குத் தெரிந்தவர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது . பணிக்குச் செல்லும் பெண்கள் தங்கள் குழந்தைகளுக்குத் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வதில் அதிக கவனமுடன் செயல்பட வேண்டும்.

சற்றுமுன் கிடைத்த செய்திகளின்படி இது போன்ற குற்றங்களைக் களைவதற்கும், இதற்குரிய தண்டனைகளை கடுமையாக்குவதற்கும் துணை முதல்வர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது என்பது சற்று ஆறுதலான விசயமாக உள்ளது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *