சு. கோதண்டராமன்

காழிப்பிரான்

vallavan-kanavu121

வேதநெறி தழைத் தோங்க மிகுசைவத் துறைவிளங்கப்
பூதபரம்ப ரைபொலியப் புனிதவாய் மலர்ந்தழுத
சீதவள வயற்புகலித் திருஞான சம்பந்தர்
பாதமலர் தலைக்கொண்டு திருத்தொண்டு பரவுவாம்

-சேக்கிழார்

தென்னைமர உச்சியில் லிங்கத் திருமேனியைத் தாங்கி நின்ற விச்வேசரின் பேரன் சிவபாத இருதயர். அவர் ஒரு நாள் வழக்கம்போல் தன் குழந்தையை அழைத்துக் கொண்டு குளத்துக்குப் போனார். சூரிய உதயத்துக்கு முன் நீரில் மூழ்கிக் குளித்து அனுஷ்டானங்களைச் செய்வது அவரது வழக்கம்.

மேற்படியில் குழந்தையை உட்கார வைத்தார். ‘இங்கேயே சமர்த்தாக உட்கார்ந்திரு. அப்பா குளித்துவிட்டு வருகிறேன்’ என்று சொல்லிப் படி இறங்கினார். சித்திரை மாதம். குளத்தில் நீர் நிரம்பியிருக்கவில்லை நாலைந்து படிகள் இறங்கித்தான் நீரை அடைய வேண்டியிருந்தது. கங்கை, யமுனை, கோதாவரி, ஸரஸ்வதி, நர்மதை, சிந்து காவேரி ஆகிய புண்ணிய தீர்த்தங்கள், தான் குளிக்கும்  நீரில் கலந்து அதைப் புனிதப்படுத்த வேண்டும் என்று வேண்டிக் கொண்டார்.  தான் அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்கள் தன்னை விட்டு நீங்க வேண்டுமென்று உள்ளத் தூய்மைக்காக அகமர்ஷண சூக்தம் சொல்லி நீரில் மூழ்கினார். அவரது தலை தண்ணீருக்குள் மறைந்த நேரம் பார்த்துக் குழந்தை அழுதது. ‘குழந்தைக்குப் பசி நேரம் இல்லையே, என்னைக் காணவில்லை என்று அழுததோ’ என்று நினைத்துக் கொண்டே நீரிலிருந்து தலையைத் தூக்கிய அவர் திரும்பிப் பாராமலேயே, ‘பயப்படாதே, அப்பா இதோ வந்துவிட்டேன்’ என்று சொல்லிக் கொண்டே மேலும் இரண்டு முழுக்குகள் போட்டார். உடல் அழுக்கும் உள்ள அழுக்கும் நீங்கப் பெற்றவராக அவர் படியேறி மேலே வந்த போது குழந்தை அழவில்லை. அது பால் ஒழுகும் வாயுடன் சிரித்துக் கொண்டிருந்தது.

‘ஏது இந்தப் பால்? யார் கொடுத்திருப்பார்கள்?’

“பசித்ததா, குழந்தாய்? யார் அப்பா உனக்குப் பால் கொடுத்தது?” என்று வினவினார்.

குழந்தை விடையளித்தது. “அவன் காதில் தோடு அணிந்திருந்தான் அப்பா.”

‘யாரோ ஆண் வந்திருக்கிறான் போலும். அவன் எதற்குக் குழந்தைக்குப் பால் கொடுக்க வேண்டும்? பொதுவாக ஆண்கள் குழைதான் அணிவார்கள். இவன் வித்தியாசமாக இருந்ததால் குழந்தை மனதில் அந்த அடையாளம் நன்றாகப் பதிந்திருக்கிறது போலும்.’

குழந்தை மேலும் பேசியது, “அவன் காளை மீது வந்தான்.”

‘காளை பூட்டிய வண்டியில் வந்திருப்பான். குழந்தை சொல்லத் தெரியாமல் சொல்கிறது’ என நினைத்துக் கொண்டார்.

“அவன் தலையில் ஒரு சந்திரன் இருந்தது, அப்பா.”

‘தலையில் சந்திரனா? குழந்தைகளுக்குக் கற்பனை அதிகம். எதையோ பார்த்துவிட்டு சந்திரன் என்கிறது போலும்.’

“சுடுகாட்டுச் சாம்பலைப் பூசியிருந்தான் அப்பா.”

‘யாரேனும் காபாலிகனோ?’ முற்காலத்தில் காபாலிகர் என்ற சிலர் உடல் முழுவதும் சுடுகாட்டுச் சாம்பலைப் பூசிக் கொண்டு திரிந்ததாகக் கேள்விப்பட்டிருக்கிறார். இவர் பார்த்ததில்லை. ‘அப்படி யாரேனும் வந்துவிட்டானோ? விஷம் கலந்த பாலைக் கொடுத்திருப்பானோ?’ சிவபாத இருதயருக்கு அச்சம் ஏற்பட்டது

“என் மனதைக் கவர்ந்த திருடன் அப்பா அவன்.”

‘அந்தக் காபாலி குழந்தையைப் பயமுறுத்தவில்லை. இதற்கு மகிழ்ச்சி ஊட்டி இருக்கிறான்.’ சற்றே ஆறுதலாக இருந்தது.

“முற்காலத்தில் தன்னை வழிபட்ட பிரம்மாவுக்கு அருள் புரிந்தவன்.”

“என்னது இது? நீ என்ன சொல்கிறாய், குழந்தாய்?”

“பிரமாபுரத்தில் இருக்கின்ற பெம்மான்.”

“என்னது? நம் சிவனா? என்னென்னவோ புதிர் போட்டு என்னைக் குழப்பிவிட்டாயடா குழந்தாய். சிவன் கொடுத்த பாலையா குடித்தாய்? அதனால்தான் இவ்வளவு அழகாகப் பேசுகிறாயா? எங்கே மறுபடியும் சொல்.”

“தோடுடையசெவி யன்விடையேறியோர் தூவெண்மதிசூடிக்

காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர்கள்வன்

ஏடுடையமல ரான்முனை நாட்பணிந் தேத்தவருள்செய்த

பீடுடையபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.”

குழந்தை தாளம் போட்டுக் கொண்டு இசையுடன் பாடியது. மெய் மறந்தார் சிவபாத இருதயர். என்ன அழகு! என்ன இனிமை! இவனுக்கு இசை கற்பித்தது யார்? எனக்கே தெரியாத தமிழ்ப் பாடல் இலக்கணத்தை இவன் எங்கே கற்றான்? பல இதழ் கொண்ட  தாமரைப் பூவை ஏடுடைய மலர் என்கிறானே, என்ன சொல்லாட்சி!

“எங்கே, மறுபடியும் சொல்?”

மழலைக் குரல் இனித்ததா, இசை இனித்ததா, பாடலின் அமைப்பு இனித்ததா, பாடலின் பொருளான சிவம் இனித்ததா? மயங்கினார் தந்தை

அவருக்கு அனுஷ்டானத்தில் மனம் செல்லவில்லை. ‘வீட்டுக்குப் போய் செய்துகொள்ளலாம். பகவதி இதைக் கேட்டால் மகிழ்வாள். உடனே வீட்டுக்குப் போகவேண்டும்.’ குழந்தையைத் தோளில் சார்த்திக் கொண்டு ஈர ஆடைகளைக் கையில் எடுத்துக் கொண்டு போனார். போகும்வழி எல்லாம் அந்தப் பாடலைத் திரும்பத் திரும்பச் சொல்லச் சொல்லிக் கேட்டுக் கொண்டே போனார். அவருக்கு அந்தப் பாடல் மனப்பாடம் ஆகிவிட்டது.

“பகவதீ, உன் பிள்ளை பாட்டுப் பாடுகிறான் கேள். பாடடா குழந்தாய்”

தாய் கேட்டாள்.

“எவ்வளவு அழகாகப் பாடுகிறான்! நீங்கள் சொல்லிக் கொடுத்தீர்களா?”

“இல்லை. அவனாகவே பாடினான்.”

“அவனாகவேயா?”

“அதே பாடலையே திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருக்கிறீர்களே, இன்னும் கேளுங்கள்” என்றது குழந்தை.

அதற்குள் அந்தப் பாடலை ஓலையில் எழுதி வைத்துக் கொண்டார் தந்தை. ஏடும் எழுத்தாணியும் எடுத்து வந்து, “பாடடா, குழந்தை” என்றார்.

குழந்தை அதே நட்டபாடைப் பண்ணில் பாடத் தொங்கியது. அவற்றின் சுவையை அனுபவித்தபடியே ஏட்டில் எழுதிவந்தார் தந்தை.

ஆமை ஓடு, நாகம், பன்றியின் பல் இவற்றை மாலையாக அணிந்தவன், கபாலம் ஏந்தி பிச்சை எடுப்பவன், தொழுதவர்கட்கு அருள்பவன், கங்கை நீர் நிரம்பிய சடைமுடியன், பெண்கள் உள்ளத்தைக் கவர்பவன், மும்மதில்களையும் அம்பு எய்தி அழித்தவன், கொன்றை மலர் அணிந்தவன், இடப்பாகத்தே உமையைக்  கொண்டவன், வேதத்தைப் பாடிக்கொண்டும், ஆடிக்கொண்டும் இருப்பவன், மழுவாயுதம் கொண்டவன், கரத்தில் அனலை உடையவன், நடனமாடித் திரிந்தவன், கயிலை மலையைப் பெயர்த்த ராவணனின் வலிமையை அழித்தவன், திருமாலும், நான்முகனும் தேடிச் செயலற, அண்ணா மலையாய் நிமிர்ந்தவன், மத யானைத் தோலை உரித்துப் போர்த்தவன். பித்தன்  என்று இறைவனின் தோற்றத்தையும் வீரச் செயல்களையும்  பலவாறாக வர்ணித்த குழந்தை ஒவ்வொரு பாட்டிலும் இத்தகையன் பிரளய காலத்திலும் அழியாது நிலை பெற்ற இந்தப் பிரமபுரம் மேவியிருக்கிறான், அவனே என் உள்ளம் கவர் கள்வன் என்றது.

இந்த இறைவனைத் தொழப் புண்ணியம் இன்மையால் புத்தர்களும் அறிவற்ற சமணர்களும் பிழைபட்ட கருத்துக்களைச் சொல்லித் திரிகிறார்கள் என்று சொல்லி முடித்தது.

“இந்தப் பத்துப் பாடல்களையும் நீயேதான் இயற்றினாயா, வேறு யாரிடமிருந்தாவது கற்றுக் கொண்டாயா?” என்று கேட்டாள் தாய். விடையும் பாட்டாகவே வந்தது.

‘இறைவனிடம் மனத்தைப் பதித்து உணரும் ஞானசம்பந்தனாகிய நான்தான் இயற்றினேன்’ என்று உறுதி செய்தது குழந்தை. அது மட்டுமல்ல. ‘இப்பதிகத்தை ஓதுபவர்களின் பழவினைகள் தீர்தல் எளிதாகும்’ என்றும் சொல்லியது.

எல்லாத் தாய்மார்களும் தங்கள் தங்கள் குழந்தையைத் தெய்வ அம்சமாகத்தான் கருதுவார்கள். ஆனால் பகவதி அவ்வாறு கருதிப் பெருமைப்படுவதற்குத் தக்க நியாயம் இருந்தது.

தந்தை அனுஷ்டானங்களை முடித்துக் கொண்டு குழந்தையை எடுத்துக் கொண்டு கோவிலுக்குச் சென்றார். அதற்குள் அவரது மனைவி மூலமாக அக்கம் பக்கத்தவருக்குச் செய்தி பரவி விட்டது. அத்தனை பேரும் இந்தத் தெய்வக் குழந்தையைக் காணக் குழுமினர்.

கோவிலில் குழந்தை தக்கேசிப் பண்ணில் இனிமையாகப் பாடுகிறது. உள்ளத்திலிருந்து தமிழ் பொங்கி வந்தது. பல நாள் சாதகம் செய்த பாடல் போலத் தங்கு தடை இன்றிப் பாடுகிறது.

பத்துப் பாடல்களை முடித்தபின் அவனது தாய் மனதில் தோன்றிய கேள்வி எல்லோர் மனதிலும் தோன்றியது. அதற்கு விடையளிக்கும்  முறையில், “தன்னார்வஞ்செய் தமிழின்விரகனாகிய நான் உரைத்த இந்தத் தமிழ்மாலையைப்  பல நாளும் பாடி ஆடுங்கள், பரலோகம் நிச்சயம்”  என்று கூறி முடித்தது. அனைவரும் வியந்து போற்றினர்.

மறுநாள் சிவபாத இருதயர் அனுஷ்டானங்களை முடித்தபின், குழந்தை கேட்டது, “இந்தக் காழி தவிர வேறு எங்கு கோயில்கள் உள்ளன?”

“இதோ சற்றுத் தூரத்தில் கோலக்கா உள்ளது. அங்கும் உன்னை அழைத்துப் போகிறேன்” என்றார்.

தந்தை தோளில் அமர்ந்து குழந்தை வர, காழி அன்பர்கள் யாவரும் உடன் வந்தனர்.

கோலக்கா கோவிலை அடைந்ததும் உள்ளூர் மக்களும் கூடிவிட்டனர். குழந்தை இறைவனை வணங்கி தக்கராகப் பண்ணை இசைத்து அதில் ஒரு பதிகம் பாடுகிறது.  கேட்ட அன்பர்கள் ‘இது விட்ட குறை தொட்ட குறைதான். சென்ற பிறவியில் தமிழும் இசையும் முழுமையாகக் கற்றிருந்தால் அன்றி இவ்வாறு பாடமுடியாது’ என்றனர் சிலர்.

“நமது ஊர்க் குளத்தை வருணிக்கிறது பாருங்கள், ஆற்றிலிருந்து நீர் பாயும் மடையில் வாளை மீன் துள்ளி விளையாடுவதையும் அங்கு மகளிர் நீராடுவதையும் எவ்வளவு அனாயாசமாக ஒரு வரியில் கூறிவிட்டது பாருங்கள்” என்றார் மற்றொருவர்.

“நிழலார் சோலை நீலவண்டினம் குழலார் பண்செய் கோலக்காவு என்று வர்ணிக்கிறதே, என்ன அழகு!” என்று வியந்தார் மற்றொருவர்.

“நேற்று காழியில் பாடிய இரண்டு பதிகங்களும் இரு வேறு பண்கள். இன்று வேறு பண். இசைக் கலையை முழுமையாகக் கற்றவர் தவிர மற்ற யார் இது போலப் பாடமுடியும்?” என்று வியந்தார் மற்றொருவர்.

“பாவம் போக வேண்டுமென்றால் சமணர்களைப் போல் உடம்பைத் துன்புறுத்திக் கொள்ள வேண்டாம் என்கிறது இக்குழந்தை. இந்தப் பாடல்களைப் பாடினாலே இறைவன் வசப்படுவான். பாவத்தை நீக்கி விடுவான்” என்றார் மற்றொருவர்.

“எவ்வளவு அழகாகக் கைகளைத் தட்டித் தாளம் போடுகிறது. பாவம், தாளம் போட்டுப் போட்டுப் பிஞ்சுக் கைகள் கன்றிவிட்டனவே” என்று பரிதாபப்பட்டனர் சிலர். சற்றுநேரத்தில் குழந்தையின் கைகளில் யாரோ ஒரு தாளத்தைக் கொண்டுவந்து கொடுத்தார்கள்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *