சிங்களவரின் பிரித்தாளும் முயற்சிக்குக் கைகொடுக்காதீர்
மறவன்புலவு க. சச்சிதானந்தன்
(இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நடுக்குழு உறுப்பினர்)
2016க்குள் ஈழத் தமிழரின் ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கிய அரசியல் தீர்வு பெற்றுத் தருவோம் எனத் தமிழர் தேசியக் கூட்டமைப்பினர் உறுதியளித்துள்ளனர். தலைவர் இரா. சம்பந்தன் மீட்டும் மீட்டும் இந்த உறுதிமொழியைக் கூறிவருகிறார். தீர்வை நோக்கிய காய்களை நகர்த்துவதாகவும் எல்லாவற்றையும் வெளிப்படையாகப் பேசமுடிந்தால் தீர்வு எட்டமுடியாதென்பதையும் கூறி வருகிறார். அரசியலில் இத்தகைய நடைமுறைகள் வழமையே. உயிர் வாழ்வே தமிழருக்கு வினாக்குறியான இக்காலத்தில் தமிழர் தேசியக் கூட்டமைப்புக்கு முழுமையான, மனத் தடையற்ற ஆதரவைக் கொடுக்கவேண்டியது காலத்தின் கட்டாயம்.
2016 மார்கழி வரை காலக் கெடுவை நோக்கி, கட்டிறுக்கமான செயற் திட்டத்துடனும், சிங்கள அரசியல் தலைவர்களுடன் நல்லுறவைப் பேணியும், முஸ்லிம்களின் ஆதரவைப் பெற்றும், மலையகத் தமிழர்களுடன் உறவை வளர்த்தும், இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளின் நீதிக்கான அழுத்தப் பின்னணியில் தீர்வை நோக்கித் தமிழர் தேசியக் கூட்டமைப்பினர் முன்னேறுகின்றனர்.
தீர்வு எட்டப்படக்கூடாதென்பதிலும் தமிழரைத் தொடர்ந்து அடிமைகொள்ள வேண்டும் என்பதிலும் சிங்களத் தலைமை உறுதியாக உள்ளது. இதற்காகத் தமிழரிடையே கலகத்தைத் தூண்டிவிடுகின்றனர். சிங்களத் தலைமையின் இந்த முயற்சிக்குத் தெரிந்தோ தெரியாமலோ ஈழத் தமிழ் மக்கள் வாக்களித்து மக்களுக்காகப் பணிபுரிய வந்தவர்கள் கடந்த சில மாதங்களாக தனிப்பட்ட தாக்குதல்களும் அழாப்பி நியாயங்களும், கட்சி பிரித்தலும், நகை முரண்களும் நிறைந்த அறிக்கைப் போரில் ஈடுபட்டுப் பகைமை வளர்ப்பது போற்ற புறத்தோற்றம் இருப்பதால் சிங்களத் தலைமை தங்கள் திட்டம் வெற்றியடைவதாக எண்ணிப் புளங்காகிதம் அடைந்து வருகின்றனர்.
1965-1968 காலப்பகுதியில் தமிழரைப் பிரித்தாளும் சிங்களத் தலைமையின் சாணக்கியத்தை நேரில் கண்டிருக்கிறேன். அக்காலத்தில் அமைச்சராக இருந்த மு. திருச்செல்வம் அவர்களின் உதவியாளராக இருந்தேன். பெரியவர் செல்வநாயகம், தலைவர் ஜீ. ஜீ. பொன்னம்பலம், மு. திருச்செல்வம் மூவரும் பிரதமர் டட்லி சேனாநாயக்காவையும் மூத்த அமைச்சர் ஜே. ஆர். ஜெயவர்த்தனாவையும் சந்தித்த காலங்களில் அமைச்சர் திருச்செல்வத்தின் உதவியாளராக நானும் அங்கிருந்திருக்கிறேன். தமிழ்த் தலைவர்களை ஒருவருக்கு எதிராக மற்றவரைத் தூண்டும் அல்லது பயன்படுத்தும் வித்தையைச் சிங்களவர் நன்கறிந்திருந்தார்கள்.
1619இல் ஆட்சியை இழந்து 400 ஆண்டுகளாக ஆட்சி செய்யும் மரபையும் வழக்காறுகளையும் ஈழத் தமிழர் பெருமளவு மறந்து போயினர். 1815இல் ஆட்சியை இழந்த சிங்களவர் 100 ஆண்டு கால இடைவெளியில் ஆட்சி மரபை இழக்காமல் சாணக்கியங்களை மறக்காமல், வித்தைகளைக் கைவிடாமல் இருப்பதை நான் நேரில் கண்டிருக்கிறேன்.
மக்களாட்சி மரபில் கொள்கைக் கருத்துக் குரல்களைக் கேட்போம், அவை மாற்றுக் கருத்தாயிலென் எனக் கூறியிருப்பதே தமிழர் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் முதிர்ச்சியையும் சாணக்கியத்தையும் காட்டுகிறது. கொள்கை மாறுபாடுகளை வெளிப்படையாகக் கூறலாம், தமிழர் தேசியக் கூட்டமைப்பினர் அதை வரவேற்பர். தனிப்பட்ட தாக்குதல்களும் அழாப்பி நியாயங்களும், கட்சி பிரித்தலும், நகை முரண்களும் சிங்களவரின் பிரித்தாளும் முயற்சிக்குக் கைகொடுக்கும்.
2016 மார்கழி வரை காலக்கெடு விதித்து, ஒளிமயமான எதிர்காலத்துக்கான அரசியல் தீர்வை நோக்கித் தமிழர் தேசியக் கூட்டமைப்பு நகர்த்தும் முயற்சிகளுக்கு அப்பழுக்கற்ற, நெஞ்சார்ந்த, தங்குதடையற்ற ஆதரவைக் காலக்கெடு முடியும்வரை வழங்குவதே ஈழத் தமிழரின் திறமையான ஆட்சி மரபுக்கும் சாணக்கியத்துக்கும் சான்று. அவ்வாறாற்றுவதே நம் அனைவரின் கடன். நமக்காக நாமானால் நாளை நமதாகும்.