ஊக்கமது கைவிடேல்

0

-ராமலக்ஷ்மி

நரேனுக்கு அந்த மின்மடலை வாசித்ததும் வியர்த்து விறுவிறுத்துவிட்டது. இதை எப்படித் தன் மேலதிகாரியிடம் சொல்லப் போகிறோம் என்கிற பதற்றத்தில உடல் கூட லேசாக நடுங்கியது.

அவன் அந்த மென்பொருள் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்து ஒரு வருடமே ஆகிறது. ஒரு பெயர் பெற்ற நிறுவனத்தில் பல வருடங்கள் வேலை செய்த அனுபவத்தில் அதைத் தொடங்கிய ரவிசங்கர் இன்று பலரும் போற்றும் அளவுக்கு அதைப் பெரிய இடத்துக்குக் கொண்டு வந்துள்ளதைக் கொண்டாடாத பத்திரிகைகள் இல்லையெனலாம்.

அப்படிப்பட்ட நிறுவனத்தில் அதுவும் எம்.டி.யிடம் நேரடியாக ரிப்போர்ட் செய்யும் பதவியில் தான் இருப்பதில் அவனுக்குச் சற்றுப் பெருமிதமே. பொறுப்புகளைச் சரிவரச் செய்ய வேண்டுமென்கிற அக்கறையோடு ஒரு பதற்றமும் எப்போதும் தன்னோடு ஒட்டிக்கொண்டிருப்பதைத் தவிர்க்க முடியவில்லை நரேனுக்கு.

அவனது மேற்பார்வையில் இருந்த பிராஜக்ட் முடிவடையத் தாமதமானதில் அதிருப்தி கொண்ட அந்த வெளிநாட்டுக் கஸ்டமர் அடுத்து கொடுக்கவிருந்த சுமார் ஒரு கோடிக்கான பிராஜக்ட் ஆர்டரை ரத்து செய்வதாக மெயிலின் வாசகங்கள் கூறின. ஒருவாறாக சுதாரித்துக்கொண்டு அடுத்த அறையிலிருந்த ரவிசங்கருக்கு அதை மடை மாற்றினான். பின் வியர்வையை அழுந்தத் துடைத்துக்கொண்டு அவரது அறைக்குள் நுழைந்தான்.

“வாங்க நரேன் வாங்க. இப்பதான் உங்க மெயிலைப் பார்த்தேன்.”

கூலாகப் பேசும் ரவிசங்கரைப் பிரமிப்புடன் பார்த்தான்.

“என்ன பாக்குறீங்க. எப்படி இந்த மாதிரி டென்ஷனில்லாம இருக்கிறேன்னா” லேசாகச் சிரித்த ரவிசங்கர், “முதல்ல உட்காருங்க” என்றார்.

“ஆடிப் போயிட்டா மாதிரி தெரியுது. தண்ணியைக் குடிங்க முதல்ல”

நொந்து வந்த தன்னை ரிலாக்ஸ் செய்ய உதவும் மேலதிகாரி இன்னும் இன்னும் உயர்வாகத் தெரிந்தார்.

“பாருங்க நரேன். இதெல்லாம் நாம சமாளிக்க வேண்டிய சவால்கள். ஒவ்வொரு முனையிலிருந்தும் கத்தி போல பிரச்சனைகள் பாய்ந்து வந்த படிதான் இருக்கும் கேடயத்தைத் தயாராப் பிடிச்சிருந்தும் கூட. சரி, இந்த பிராஜக்ட் முடிய இன்னும் எத்தனை நாள் ஆகும்? தாமதத்துக்கான காரணங்களைச் சரியா அவர்கள் ஏற்றுக்கொள்ளும்படி எடுத்துச் சொன்னீர்களா இல்லையா?”

“சொன்னேன் ரவி.” முதலாளியானாலும் அதிகாரியானாலும் யாவரும் யாவரையும் பெயர் சொல்லி அழைப்பதே அங்கு வழக்கம். அந்தக் அலுவலகத்தில் நரேனைக் கவர்ந்த பல நல்ல விஷயங்களில் இதுவும் ஒன்று.

சரியான காரணங்களை எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவர்கள் ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டதை நரேன் சொல்லச் சொல்ல, முகத்தில் எந்த மாறுதலுமின்றிக் கவனமாகக் கேட்டுக்கொண்டார் ரவிசங்கர்.

“இது போன்ற நல்ல கஸ்டமர்களை நாம் இழக்க நேரிட்டால் அது பெரிய நட்டம்தான். முடிந்த வரை பிராஜக்டைத் துரிதப்படுத்தி தற்போது வாய்தா வாங்கியிருக்கும் தேதிக்கு முன்னதாகவாவது அனுப்பப் பாருங்கள். அடுத்த ஆர்டரைப் பற்றி இப்போது ஏதும் பேச வேண்டாம். அவர்களது கோபம் தணியட்டும். அப்புறமாக முயலலாம். ஏன் நீங்களே நேரில் கூட போய்ப் பேசிக்கலாம்.””

“அதெப்படி ரவி, அதற்குள் நம்ம போட்டிக் கம்பெனிகளில் யாராவது முந்திக்கொண்டால்.. ஒரு கோடி… பரவாயில்லையா?”

“பொருள் வரும் போகும், பரவாயில்லை. நாம் ஊக்கத்துடன் உழைத்து மறுபடி ஈட்டிட இயலும். ஆனால் பெயர்..” எனச் சொல்லும் போதே தொலைபேசி ஒலிக்க அதை ஒரு கையால் எடுத்து “ஹலோ” என்றவர், அவரது மேசையில் அவரைப் பார்க்க இருந்த புகைப்படச் சட்டம் ஒன்றை அவனைப் பார்க்கத் திருப்பி வைத்தார். ஆள்காட்டி விரலால் தட்டி கண்களாலேயே பேசினார், அதைப் பார்க்குமாறு. அதில் கைப்பட எழுதப்பட்ட சில குறள்கள். அவர் விரல் சுட்டிய இடத்தில்:

“உள்ளம் உடைமை உடைமை; பொருளுடைமை
நில்லாது நீங்கி விடும்.”

தொலைபேசி உரையாடல் நீண்டு செல்ல, அதைத் தவிர்க்க இயலாத ரவிசங்கர் ‘நீங்கள் சென்று உங்கள் வேலையைத் தொடரலாம்’ என்பது போலத் தலையசைத்து விடை கொடுக்க, நரேன் மறக்காமல் குறள் இருந்த சட்டத்தை அவரை நோக்கித் திருப்பி வைத்தான். திரும்பி நடக்கையில் கூடவே அவனுக்கு நினைவுக்கு வந்தது:

“வெள்ளத்து அனைய மலர்நீட்டம்; மாந்தர்தம்
உள்ளத்து அனையது உயர்வு.”

*** *** *** *** ***

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.