பவள சங்கரி

தலையங்கம்

சமீபத்தில் மிகவும் சுவாரசியமான ஒரு கதை படித்தேன். அன்று சனிக்கிழமை. 12 மணியளவில் ஒரு வீட்டின் கதவைத் தட்டி தபால்காரர் ஒரு தபாலைக் கொடுக்கிறார். அந்த வீட்டு அம்மணி அதைப் பிரித்துப் பார்க்கிறார். அதில் அன்று வெளியான ஒரு பிரபலமான திரைப்படத்திற்கு சில நுழைவுச் சீட்டுகள் மற்றும் குடும்பத்துடன் சென்று ஒரு பெரிய உணவு விடுதியில் உணவருந்த பரிசுக் கூப்பன்களும் இருந்தன. இதை அனுப்பிய நான் யார் என்று தெரிகிறதா என்ற வாசகத்துடன் வாழ்த்துக்களும் இருந்த அதைக் கண்ட அந்த அம்மணிக்கு இன்ப அதிர்ச்சி. கணவனிடம் உடனே சென்று காண்பிக்க அவரும் சற்றே யோசிக்க, பின் குடும்பமே சேர்ந்து இந்தப் பரிசுகளை அனுபவித்துவிட்டு பின்பு இதைப்பற்றி யோசிக்கலாம் என்ற முடிவிற்கு வந்தவர்களாக மகிழ்ச்சியுடன் கிளம்பிச் சென்று ஆனந்தமாக திரைப்படமும் கண்டு களித்து, உணவு விடுதியிலும் சென்று மனமார உணவருந்திவிட்டு வீடு வந்து சேர்ந்தால், அங்கு பூட்டைத் திறக்க வேண்டிய வேலை கூட இல்லாமல் வீடு பறக்க திறந்திருந்ததோடு வீட்டிலுள்ள அனைத்து விலையுயர்ந்த பொருட்களும் காணாமல் போயிருந்தன. மேசையில் கொட்டை எழுத்தில் ஒரு வாசகமும் இருந்ததாம். ‘பரிசு வழங்கிய நான் யாரென்று இப்போது தெரிந்ததா’ என்று. இந்தக் கதையைப் படித்தவுடன் எனக்குத் தோன்றியது இன்றைய நம் பரிதாப நிலைதான்.

தைப்பொங்கலுக்கு 100 ரூபாய் பணம், ஒரு கிலோ சக்கரை, கரும்பு 2 அடி துண்டு, பச்சரிசி என தமிழக அரசு வழங்கும் இலவசங்களைப் பெற முண்டியடிக்கும் மக்கள் வெள்ளம். இது போன்ற இலவசத் திட்டங்களுக்காக அரசாங்கத்தால் ஆண்டொன்றிற்கு ரூ. 20,000 கோடி செலவிடப்படுகிறது. கீழ்தட்டு மக்கள் வளம் பெறுவதற்காகவே இந்த இலவசங்களை அள்ளி வழங்குவதாக அறிவிப்புகளும் வந்த வண்ணம் உள்ளன. எதிர்கட்சிகளும் இதற்கு விதி விலக்கு அல்ல. இலவசங்கள் எனும் கையூட்டுகளைக் கொடுத்து மக்களின் வாக்குகளையும், அவர்தம் உரிமைகளையும் கவருகிறார்கள். ஆண்டொன்றிற்கு சுமாராக 20,000 கோடி ரூபாய் என்றால் ஐந்தாண்டுகளில் ஒரு இலட்சம் கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. இவர்கள் இலவசமாக வழங்கக்கூடிய பொருட்கள் பெரும்பாலும் தரமற்றவையாக இருப்பதும், அவைகள் பெரும்பாலும் பழுது பார்க்கும் மையங்களில் இருப்பதே கண்கூடாகக் காணப்படுகிறது. அதாவது இந்த ஒரு இலட்சம் கோடி ரூபாயானது தண்ணீர்ல் கரைந்த பெருங்காயமாக காணாமல் போய்க்கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் திரு எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்தபோது துவக்கப்பட்ட காகித ஆலை நிறுவனம் குறித்து சிந்திக்காமல் இருக்க முடியவில்லை. இந்த காகித ஆலை இன்று வளர்ந்தோங்கி இந்தியாவின் ஒரு தலை சிறந்த நிறுவனமாக மிளிர்வதைக் காணமுடிகிறது. இதை உருவாக்க சுமாராக 500 கோடி ரூபாய் செலவிடப்பட்டு இன்றும் நேரடியாகவும், மறைமுகமாகவும் பல ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பும், வழங்கி செழிப்புடன் அன்றாடம் இலாபத்தை ஈட்டிக்கொண்டிருக்கின்றது. இத்தனை ஆண்டுகளில் இந்த ஒரு இலட்சம் கோடி ரூபாயில் இது போன்று எத்தனை ஆலைகளை நிறுவி வேலை வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கலாம். இன்றைய தமிழ்நாட்டின் பொருளாதாரம் தடுமாறாமல் செழிப்புடன் இருக்க உத்திரவாதமாகியிருக்கலாம். இலாபத்தை ஈட்டித் தரும் வேலை வாய்ப்பைப் பெருக்கி மக்கள் வாழ்வில் நிரந்தர ஒளியேற்றியிருக்க வழியமைத்திருக்கலாம். ஒரு வேளை இலவசங்கள் வழங்கியேத் தீர வேண்டும் என்ற கட்டாயம் இருக்கும்பட்சத்தில் இலவசப் பொருட்கள் தயாரிப்பை அந்நிய நிறுவனங்களுக்கு அளிக்காமல், பல ஆண்டுகளுக்கு முன்பு துவக்கப்பட்ட மின்னணுசார் துறை மூலமாக உற்பத்தி செய்திருந்தால் பல ஆயிரம் படித்த பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கியிருக்கலாம் . இந்த வாய்ப்பை அந்நிய நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்டதால் ஏற்பட்ட இழப்பை கருத்தில் கொள்ளவேண்டும். இதனால் தனியார் நிறுவனங்களே தரமற்ற பொருட்களை வழங்கி கொள்ளை இலாபம் ஈட்டியுள்ளனர். நாட்டின் பொருளாதாரத்தில் உண்மையான அக்கறையுடனும், தனிப்பட்ட மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காகவும் சூலுறைத்து மேம்படுத்தக்கூடியத் திட்டங்களை எந்தக் கட்சியினரும் அறிவிக்காதது வேதனைக்குரியதாகும்.

இன்றைக்கு ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது பிப்ரவரி 24ஆம் தேதி 2009ஆம் ஆண்டில் பதவியேற்ற பின்பு தம்முடைய முதல் உரையில் அமெரிக்க அதிபர் ஒபாமா, அந்த காலகட்டத்தில் அமெரிக்க பொருளாதாரம் மிகவும் நலிவடைந்த நிலையில் இருந்ததையும், வியாபாரம், வேலை வாய்ப்பு, தொழில்துறை என அனைத்தும் முடங்கிக் கிடந்த நிலையை எடுத்துக்கூறி, தம் நாட்டை பலம் பொருந்திய நாடாக உருவாக்கி, முன்னேற்றப் பாதைக்கு இட்டுச் செல்வதாக சூலுறைத்ததை, இன்று பலவற்றை சாதித்துக் காட்டியதை இன்று பட்டியலிட்டுள்ளதைக் காணும்போது நமக்கும் இது போன்ற சாதனைப் பட்டியலை எடுத்துரைக்கும் தலைவர்கள் அமையவில்லையோ என்று ஏக்கம் கொள்ளத்தான் செய்கிறது.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “களவு போகிறோமா?

  1. முற்றிலும் உண்மை!  சிந்திக்க வேண்டிய கருத்துக்கள்… 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *