ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் – 51
–சி. ஜெயபாரதன்.
(1883-1931)
ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள்
மூலம் : கலில் கிப்ரான்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
“நான் படுக்கை அறைச் சாளரத்தின் அருகிலிருந்து கண்ணிமைக் கதவுகளைத் திறந்து என் துருக்கி காபியை அருந்தும் போது, திருவாளர் பிதற்றுவாய் என் முன்னே துள்ளி வந்து தோன்றி அழுவார், முணுமுணுத்துப் புகார் செய்வார். பீடத்திலிருந்து இறங்கி வந்து எனது காபியைக் குடிப்பார். எனது சிகரெட்டைப் புகைப்பார்.” கலில் கிப்ரான். (Mister Gabber)
“நான் பணி செய்யப் போகும் போது திருவாளர் பிதற்றுவாய் என் பின்னால் வருவார் ! என் மூளை உணர்வைக் கிளரிவிட்டுச் செவியில் முணுமுணுப்பார் ! நானதைத் தவிர்க்க முயலும் போது, அவர் கெக்கரித்து மீண்டும் அர்த்தமற்ற வார்த்தைகளை நீரோட்ட வெள்ளம் போல் ஓட விடுவார்.” கலில் கிப்ரான். (Mister Gabber)
___________________
காரணம்
(Reasoning)
___________________
கல்வி அடிப்படை யற்ற காரணம்
உழப் படாத வயல் !
சத்துணவு இல்லாத மனித
உடம்பு !
கடையில் விற்கப் படாத
கடைச் சரக்கு !
அளவு பெருகி
மலிந்து போனால் மனிதருக்குச்
சலித்து போவது !
மிகுத்துப் போயின் காரணம்
மதிப்பு இழக்கும் !
கடையில் விற்கப் பட்டால் அதன்
நன்மதிப்பை அறிபவர்
உன்னத ஞானிகள் மட்டும்.
காரணத்தை மூடன் ஏற்று
ஆதரிப்ப தில்லை !
பைத்தியம் என்பான்
பித்தன் !
மூடன் ஒருவனை நேற்று
“எத்தனை மூடர் உள்ளார்
நம்மிடையே ?”
என்று கேட்டேன்.
“கண்டுபிடிக்க நேரம் ஆகும் !
முடியா தென்னால் ! என்பான்
கடின மான செயலா ?
ஞானியை மட்டும்
மானிடர்
எண்ணினால் போதுமே !
___________________
முதலில் தெரிந்து கொள்
உன் சுய மதிப்பை
அதன்பின் நீ
அழிந்து போக மாட்டாய் !
மூல ஆதாரம் அறிவதே
உனக்கு வழிகாட்டும் ஒளி ! அதுவே.
உண்மைக்
களங்கரை விளக்கு !
வாழ்க்கைத் தோற்றத்துக்கு
மூல ஆதாரம் உணர்வாய் !
அறிவை உனக்கு அளித்துளான்
இறைவன் !
அந்த ஒளியில் நீ
அவனை வழிபடு வதால்
உனக்குத் தெரிந்திடும்
உன் வலுவும் பலவீனமும் !
உன் விழியில் உள்ள தூசி
தொலைவில்
உனக்கே தெரியாது போனால்
பக்கத்து நபர் கண் தூசியைப்
பார்க்க மாட்டாய் !
ஒவ்வோர் நாளும் நீ
உன் மனச் சாட்சியை
உற்று நோக்கு !
குற்றங் களைத் திருத்திடு !
கடமையில் தவறினால்
காரண அறிவும்
கைவிட்டுப் போகும் !
காரண மூலமும்
பொய்யாகிப் போகும் !
___________________