உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம் நடத்திய செல்பேசிக் கணிமை 2016 – பன்னாட்டு பயிலரங்கம் – தொடக்க விழா

0

செய்தி வெளியீடு :

62f15411-9cb4-493f-b2c4-9d7c01f88b75

உத்தமம் என்றழைக்கப்படுகின்ற உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம் தமிழ்இணையக் கல்விக் கழகத்தின் கூட்ட அரங்கில் செல்பேசிக் கணிமை 2016 என்னும் பொருண்மையில் பன்னாட்டு பயிலரங்கத்தின் தொடக்க விழா 05.02.2016ஆம் நாள் காலை 10.00 மணிக்குத் தொடங்கியது.

தொடக்க விழாவிற்கு முனைவர் நாகராசன் தலைமை தாங்கினார். திரு லோகசுந்தரம் முன்னிலை வகித்தார். உத்தமத்தின் தலைவர் இனியநேரு வரவேற்புரை ஆற்றினார். பன்னாட்டு பயிலரங்கின் நோக்கங்களை உத்தமத்தின் செயல் இயக்குநர் செல்வமுரளி எடுத்துரைத்து அறிமுகவுரையாற்றினார். தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் இணை இயக்குநர் முனைவர் தனலெட்சுமி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.

தொடர்ந்து மாலை வரை பல்வேறு அமர்வுகள் நடைபெற்றன. இதில் இளங்கோவன் செல்பேசியில் பதிப்பங்கள் சந்தை மற்றும் வாய்ப்புகள் என்ற தலைப்பில் உரையாற்றினார். அதில் “மின்பதிப்பில் இன்றையச் சந்தை நிலவரம் அதில் குறுஞ்செயலிகளுக்கான தேவை முதலியவற்றை விரிவாக எடுத்துரைத்ததோடு அவரின் Cadcraf நிறுவனத்தினர்  பத்திரிகைகளுக்கும் தற்பொழுது செய்து கொடுத்திருக்கும் குறுஞ்செயலிகளைச் செயல்படுத்திக் காட்டினார். மேலும், குறுஞ்செயலிகள் தயாரிப்பில் உள்ள பல்வேறு உத்திகளை எடுத்துரைத்தார்.  AJ.பாலசுப்பிரமணியம் தமிழ்க் குறுஞ்செயலிகளின் சந்தை மற்றும் வேலை வாய்ப்புகள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அதில் மூர்ஸ் விதிகளின் அடிப்படையில் ஒரு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி, வீழ்ச்சி அதனைப் புரிந்துகொண்டு சந்தைப்படுத்துதலின் தேவை ஆகியவற்றை விரிவாக விளக்கினார். தொழில்நுட்ப அறிவோடு மென்திறன்கள், நல்ல நுண்ணறிவுத் திறன் அதோடு குறிக்கோள் உள்ளவர்களால் மட்டுமே இன்றைய சந்தை நிலவரத்தில் வெற்றிப்பெற இயலும் என்பதனை எடுத்துரைத்தார்.

பிரபல பத்திரிக்கையாளர் ஆழி. செந்தில்நாதன் செல்பேசிக் கணிமையும் மொழிக் கணிமையும் என்னும் தலைப்பில் பல்வேறு அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.தொழில்நுட்ப வல்லுநர்கள் நுட்பவியலாளர்களுக்கு செலவு செய்கிறார்களே தவிர, மொழிபெயர்ப்பாளர்களுக்கோ உள்ளடக்க உருவாக்குநர்களுக்கோ செலவு செய்ய முன்வருதில்லை. உலக வணிகவியலாளர்கள் சந்தைப்படுத்துதலில் தாய்மொழியின் பங்கினை உணர்ந்து அவரவர் மொழியில் கொடுக்கவேண்டும் என்பதைப் புரிந்திருக்கிறார்கள். தமிழ்நுட்ப வணிகத்தினர் இதனைப் புரிந்துகொள்ளவில்லை என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

மைக்ரோ சாப்ட் நிறுவனம் சார்ந்த வெங்கடரங்கன் குறுஞ்செயலிகள் உருவாக்க தொழில்நுட்பம் என்னும் தலைப்பில் உரையாற்றினார். அதில் குறுஞ்செயலி உருவாக்கத் தொழில்நுட்பம் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். எந்த இயங்குதளத்தைத் தேர்ந்தெடுப்பது, எந்த நிரல்மொழியில் எழுதுவது என்பது குறித்தும் பொது இயங்குதள நிரல் மொழிகள் எவை முதலான பல்வேறு தொழில் நுட்ப தகவல்களை எடுத்துரைத்தார்.

எழுத்தாளர் என்.சொக்கன் தமிழ் ஆர்வலர்களும் செல்பேசி கணிமையும் என்ற தலைப்பில் உரையாற்ற்றினார். குறுஞ்செயலி உருவாக்கத்திற்கும் சந்தைப்படுத்துதலுக்குமான தகவல்கள் 24 கருத்துகளாகப் பட்டியலிட்டு விளக்கினார். பல ஆயிரம் மனிதர்கள் ஈடுபட்டுள்ள குறுஞ்செயலி உருவாக்கக் களத்தில் அதனை எவ்வாறு உற்றுநோக்கி சந்தையைப் புரிந்து தேவையானவற்றை உருவாக்குவதன் தேவையை விளக்கினார்.

பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி அலைபேசிகளில் ஒளியுணரிகளை (OCR) இணைப்பது குறித்துப் பேசினார். OCR, ICR தமிழில் உருவாக்குவதில் தன்முனைப்போடு செயல்பட்டுக் கொண்டிருக்கும் பேராசிரியர் OCRஐ செல்பேசிகளில் இணைப்பதின் இன்றியமையாத் தேவையையும் தமிழ் ஓசிஆர் செயல்பாட்டில் உள்ள சிக்கல்கள் அதில் தொடர்ந்து செயல்பட்டு வெற்றிக்காண்பதன் தேவை ஆகியவற்றை விரிவாக எடுத்துரைத்தார்.

 உத்தமத்தின் தலைவர் இனிய நேரு அவர்கள் நன்றி கூறினார். அன்றைய நிகழ்ச்சிகளை பேராசிரியர் சாசலின் பிரிசிலில்டா தொகுத்து வழங்கினார்.. இந்த விழாவில் இலங்கையிலிருந்து சிவாஅனுராஜ், மலேசியாவிலிருந்து கிங்ஸ்டன், உத்தமத்தின் பொதுக்குழு உறுப்பினர்கள் முனைவர் தி.நெடுஞ்செழியன், பன்னிருகை வடிவேலன், இல.சுந்தரம்,  அரவிந்தன் கிருஷ்ணமூர்த்தி, குணசீலன், பேராசிரியர்கள் காமாட்சி, பத்மநாபபிள்ளை, சிதம்பரம், பிரிசில்டா, கீதா, இரமேஷ் சாமியப்பா, ஆரோக்கிய செல்வி, , செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் முருகசுவாமிநாதன், அகிலன் மற்றும் தமிழ் இணையக் கல்விக் கழகம் சார்ந்தவர்கள், அண்ணாப் பல்கலைக்கழகத் தொழில்நுட்பத் துறை மாணவர்கள் என சுமார் 100 பேர் இத் தொடக்கவிழாவில் கலந்துகொண்டனர்.

06.02.2016 சனிக்கிழமை பயிலரங்கின் 2ஆம் நாள் நிகழ்வுகள் நடைபெற்றன. உத்தமத்தின் செயல் இயக்குநர் செல்வமுரளி அவர்கள் செல்பேசி நிரலாக்க அடிப்படை என்னும் பொருண்மையில் கருத்துரை வழங்கினார். திறன்பேசியின் பயன்பாடு, தேவைகள், அடிப்படைத் தொழில்நுட்பங்கள் குறித்து பயிற்சி அளித்தார். அடுத்து, விஷூவல் டெக்னாலஜியின் ஆண்டிரய்டு நிரலாளர் திரு லோகேஷ்குமார் ஆண்டிரய்டு மென்பொருள் உருவாக்கப் பயிற்சி வழங்கினார். ஆண்டிராயிடின் வரலாறு, வளர்ச்சி, பயன்பாடு, தொழில்நுட்பம் குறித்து கருத்துரைகள் வழங்கினார். இந்தியா டு டேயின் கலைவடிவ இயக்குநரும் எழுத்துரு வல்லுநருமான நாராயணன் அவர்கள் கணினியில் எழுத்துருவின் வளர்ச்சி தமிழ் எழுத்துருகளின் வடிவமைப்பு குறித்து கருத்துகளை எடுத்துரைத்தார்.

நீச்சல்காரன் தமிழ்க்கணினி பிழைத்திருத்திகள் வாணி மற்றும் நாவி குறித்து விளக்கினார். மேலும் தமிழர்களின் தொண்மை விளையாட்டான ஆடுபுலி ஆட்டம், மென்கோலங்கள் என்று பல்வேறு கலைகளை கணினி மயமாக்கும் உத்திகள் பற்றியும் கூறினார். தொடர்ந்து கணினி உத்திகள் ஆலோசகர் ஜி,வி,முத்துக்குமார் பொது நிறுவன தமிழ்க்கணிமைக் குறித்துக் கருத்துரை வழங்கினார். தேடல், தேவை, புதியச்சிந்தனை, கணிமையாக்கம், சந்தைப்படுத்துதலின் அவசியம் பற்றியும் உரையாற்றினார்.

SSN கல்லூரி பேராசிரியர் நாகராஜன் “அலைபெசிகளின் TTS நுட்பத்தினை இணைக்கும் முறைக்குறித்து பயிற்சி வழங்கினார். செல்பேசிகளின் ஒலி நுட்பத்தின் அவசியம்பற்றியும் தெளிவுப்படுத்தினார்.

இறுதியாக நிறைவு விழாவில லண்டன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சிவாப்பிள்ளை, இலங்கை கணிப்பொறியியல் நிறுவனர் அனுராஜ் அவர்கள் நிரைவுரை வழங்கினார். மென்பொருளையும் குறுஞ்செயலியையும் இலவசமாகக் கொடுக்க வேண்டாம். குறைந்த பணத்தில் வெளியிட வேண்டும் என்றார். இறுதியாகப்  பயிற்சியில் கலந்துகொண்ட  100 க்கும் மேற்பட்டோர்களுக்குச் சான்றிதழ் வழங்கப்பட்டது. இறுதியாக முனைவர் துரை.மணிகண்டன் அவர்கள் நன்றியுரையாற்றினார். இக்கருத்தரங்கில் பெரியார் பல்கலைக்கழகம், அண்ணாத் தொழில்நுட்ப கல்லூரி, அண்ணாப் பல்கலைக்கழகம், ஜெருசலம் பொறியியல் கல்லூரி சவிதா பொறியியல் கல்லூரி மாணவ மாணவிகள் விழாவில் கலந்துகொண்டனர்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.