செ. இரா.செல்வக்குமார்

இந்தக்கிழமையின் வல்லமையாளர் புற்றுநோய்க்குப் புதிய மருந்தைக் கண்டுபிடித்துப் பதக்கம் பெற்றவர்

 a2

முனைவர் வினோது கண்ணப்பன்

மருத்துவத்தில் நாளும் புதுமைகள் நடக்கின்றன. நோய்களில் மிகவும் கூர்ந்து கவனிக்கப்படும் ஒன்று புற்றுநோய். புற்றுநோயில் பற்பல வகைகள் உள்ளன.  நோயைக் கட்டுப்படுத்தவும் தீர்க்கவும் பற்பல ஆய்வுகள் நடக்கின்றன. அவற்றுள் ஒன்று புதிய கோணத்தில் ஆய்வுசெய்து இங்கிலாந்து ஆய்வாளர்களையும் உலக ஆய்வாளர்களையும்  வெகுவாக ஈர்த்திருக்கின்றது. இதனைச் செய்தவர் வினோது கண்ணப்பன் என்னும் கோயம்புத்தூரைச்சேர்ந்த இளைஞர்.  இவர் இச்செயலைத் தன் ஆய்வணியினருடன் சேர்ந்து செய்திருக்கின்றார். இவருக்கு ஐக்கிய இராச்சியத்தின்  நாடாளுமன்ற அறிவியல் குழு வெள்ளிப்பதக்கம் தந்து பெருமைப்படுத்தியிருக்கின்றது (‘’ Silver Medal from the United Kingdom Parliamentary and Scientific Committee for research work’’)[1].

 a2

தைம்சு ஆஃபு இந்தியா நாளிதழில் (Times of India) முனைவர் வினோது கண்ணப்பன் பற்றிய செய்தி

வினோது கண்ணப்பன் கோயம்புத்தூரில் உள்ள பூ.சா.கோ கலை அறிவியல் கல்லூரியில் படித்த மாணவர். இங்கிலாந்தின் நடுமேற்கே உள்ள மேற்கு மிட்லாண்டு வட்டத்தில் (West Midlands county) உள்ள உவுல்வராம்பிட்டன்  பல்கலைக்கழகத்தில் (University of Wolverhampton) சூன் 2015 இல்  இவர் முனைவர்ப்பட்டம் பெற்றுள்ளார்.

நீடித்த கள்குடிப்பழக்கத்துக்கு வயப்பட்டவர்களுக்கு அதிலிருந்து மீள 1920-களில் கண்டுபிடித்த ஒரு மருந்து தைசல்ஃபிரம் (Disulfiram, டை’சல்ஃபிரம்)  என்னும் வேதிப்பொருள்.  இது ஆன்றாபியூசு அல்லது ஆன்ட்டாபியூசு (Antabus, Antabuse) என்னும் வணிகப்பெயரில் விற்கப்படுகின்றது.   கள்ளை அருந்திய  பிறகு அதிலுள்ள சாராயம் (ஆல்கஃகால் ) அசிட்டால்டிகைடு (acetaldehyde)  என்னும் வேதிப்பொருளாக நம் உடலில் மாறுகின்றது.  இதனால் குடிப்பவர்களுக்கு  மறுநாள் தலைவலி போன்ற ஒவ்வாமையுணர்வுகள்  (‘’hangover’’) எழுகின்றன.  ஆனாலும் இவ்வுணர்வுகள் நீங்கி இயல்புநிலைக்கு வர நம் உடலில்  இயற்கையாகவே சுரக்கும் ஒரு நொதி அல்லது நொதியம் (enzyme) உதவுகின்றது.  இந்த  நொதி  தலைவலி முதலியனவற்றை ஊட்டும் அசிட்டால்டிகைடு என்னும் பொருளைச் சிதைக்கின்றது. இந்த நொதியத்தின் பெயர் அசிட்டாலடிகைடு டி-ஐதரோசெனேசு (Acetaldehyde dehydrogenase) என்பதாகும்.  இந்த நொதியை உருவாக்க நம் உடலில் உள்ள ALDH1A1, ALDH2, என்னும் மரபணுச்சரங்களும் (மரபீனிகளும்) அண்மையில் கண்டுபிடித்த  ALDH1B1 என்னும் மரபீனியும்  இயங்குகின்றன (தொழிற்படுகின்றன). 1920-களில் கண்டுபிடித்த தைசல்ஃபிரம் என்னும் வேதிப்பொருள் என்ன செய்கின்றது என்றால் இந்த நொதி நம் உடலில் உருவாவதைத் தடுக்கின்றது.  எனவே தைசல்ஃபிரம் என்னும் மருந்தின் விளைவால் கள்குடித்த சில மணித்துளிகளிலேயே  தலைவலி போன்ற ஒவ்வாமை உணர்வுகள் வந்துவிடும்.  இந்த உணர்வுளை ஊட்டும் அசிட்டால்டிகைடு உடல் இரத்தத்தில்  இயல்புக்கு மாறாக 5-10 மடங்கு அதிகமாக இருக்கும்.   இதனால் குடிப்பது ஒவ்வாமை உணர்வை ஊட்டி குடிப்பழக்கத்திலிருந்து விடுபட உதவுகின்றது. தைசல்ஃபிரம்,  இந்த நொதி உருவாவதைத் தடுப்பது போலவே புற்றுநோய் உண்டாக்கும் புற்றுக் குருத்தணுக்கள் (cancer stem cells)  உருவாவதையும் தடுக்கவோ அவ்வுயிரணுக்களை அழிக்கவோ பயன்படுத்தமுடியுமா என செய்முறையில் செய்துபார்த்திருக்கின்றார்கள்.

 a2

ஒரு கிளைக்கு 2  கந்தக அணு என இருகிளைகளாக நான்கு கந்தகவணுக்களோடு அமைந்திருக்கும் தைசல்ஃபிரம் (Disulfiram, டை’சல்ஃபிரம்) (C10H20N2S4) என்னும் மூலக்கூறு அல்லது மூலகம்.[3]

 a2

தைசல்ஃபிரம் (Disulfiram, டை’சல்ஃபிரம்) என்னும் மூலகத்தின் பந்துக்குச்சி அணுப்படம். மஞ்சள் நிறத்தில் உள்ளவை கந்தக அணுக்கள். நீலம்-நைதரசன், கறுப்பு-கரிமம், வெள்ளை-ஐதரசன். படம் [4]

பொதுவாக புற்றுநோயைக் கட்டுப்படுத்த, உடலிலுள்ள புற்றுநோயுடைய உயிரணுக்களைக்கொல்ல (cancer cells) கடுமையான நச்சுத்தன்மை கொண்ட வேதிப்பொருள்களை உட்செலுத்தும் கீமோதெரப்பி (chemotherapy) என்னும் மருத்துவம் வழக்கில் உள்ளது. இந்த வேதிமருத்துவத்தின்வழி புற்றுநோய்க் குருத்தணுக்களையும் பெரும்பாலும் கொல்லமுடியும் எனினும் விடுபட்டுப்போகும் சிலவற்றால் மீண்டும் புற்றுநோய் தொடரக்கூடும் வாய்ப்பு உண்டு.  இதற்குமாறாக தைசல்ஃபிரம் மருந்தைப் பயன்படுத்தி குருத்தணுக்கள் உருவாவதையே தடுக்கலாம்.  இப்படிச்செய்யக்கூடும் என்றாலும் இம்மருந்து குருதியில் 2 மணித்துளிகள் மட்டுமே மாறாமல் இருக்கின்றது. இதனை நானோ-தொழினுட்பத்தின்வழி குருதியில் 8 மணிநேரம் வரை இருக்குமாறு புதிய முறையில் கண்டுபிடித்துச் செய்திருக்கின்றார் வினோது கண்ணப்பன்.

 மருத்துவத்துறையில் செய்துகாட்டலுக்கு அடிப்படையான விலங்கினச்சோதனையில் இவ்வகையான தீர்வில்  வெற்றிகண்டு, இப்பொழுது மாந்தர்களுக்குச் செய்முறைச் சோதனையில் உள்ளது.

தன்னுடைய முனைவர்ப்பட்ட ஆய்வில் இவர் தைசல்ஃபிரம் என்னும் வேதிப்பொருள் எவ்வாறு  கி’ளியோபிளாசிட்டோமா மல்ட்டிஃபோரம் (கி’ளி-பி-ம) (Glioblastoma Multiforme, ”GBM””) எனப்படும் மூளைப்புற்றுநோயில் செயற்படுகின்றது என ஆய்வு செய்திருக்கின்றார் [2].  இந்த ஆய்வில் தைசல்ஃபரம் மருந்தோடு செம்பும் (Cu) கலந்துதந்து கி’ளி-பி-ம (”GBM”) –வின் வேதியெதிர்ப்பை (chemoresistance) மாற்றிக்காட்டியிருக்கின்றார். இந்தச் செப்புக்கலப்புடைய தைசல்ஃபரம்,  கி’ளி-பி-ம புற்றுநோய் உயிரணுக்களை அழிக்கும் தன்மையுடயது என நிறுவினர் [2]. (”In this study, we used Disulfiram (DS), an anti-alcoholism drug, in combination with copper (Cu) to target the hypoxia-NF-B axis and inhibit ALDH activity to reverse chemoresistance in GBM CSCs. We showed that DS/Cu is cytotoxic to GBM cells and completely eradicated the resistant CSC population at low nanomolar levels in vitro. We also demonstrated that DS/Cu effectively inhibited GBM in vivo using newly formulated PLGA-DS nanoparticles.”[2])

இப்புதிய ஆய்வுக்காகத்தான் இவருக்கு வெள்ளிப்பதக்கத்தை ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்ற அறிவியல் குழுவே தந்துள்ளது. இப்பரிசுக்குத் தேர்வாகும்முன்  இவர் பிரித்தானிய நாடாளுமன்ற  மக்களவையில் (House of Commons) தன் ஆய்வைப்பற்றி விளக்கவுரையை அறிஞர்கள் முன் ஆற்றினார்.

கடைசியாக இன்னொன்றையும் சொல்ல வேண்டும். இவருடைய 410 பக்க முனைவர்ப்பட்ட ஆய்வு ஆழுரையில் 3-ஆவது பக்கத்தில் அவருடைய படைப்பைத் தன் தாய்தந்தையருக்குக் காணிக்கையாக்கியிருக்கின்றார். அதில் இரண்டு திருக்குறள்களைத் தமிழிலேயே எழுதியும் இருக்கின்றார்.  இது நடந்திருப்பது இங்கிலாந்தில் என்பதும் குறிப்பிடத்தகுந்தது. இதனைப் படத்தில் பார்க்கவும் .

 a2

முனைவர் வினோது கண்ணப்பன் அவர்களின் முனைவர்ப்பட்ட ஆய்வு ஆழுரையின் 3-ஆவது பக்கத்தில் இரண்டு திருக்குறளைச் சுட்டி தன் தாய்தந்தையருக்குக் காணிக்கைசெய்த பக்கத்தின் படி.

முனைவர் வினோது கண்ணப்பன் அவர்களின் அறிவியல் வெற்றியைப் பாராட்டி மேன்மேலும் சிறக்கவேண்டும் என்று வல்லமை வாழ்த்துகின்றது.

[1] தைம்சு ஆஃபு இந்தியா செய்தி (Times of India), ‘’Coimbatore youth wins accolades in U.K for work on anti-cancer drug’’
[2] Vinodh Kannappan,  ‘’ Investigation of the anticancer activity and molecular mechanisms of Disulfiram in Glioblastoma Multiforme’’  Ph.D Thesis, June 2015, University of Wolverhampton
[3] ஆங்கில விக்கிப்பீடியா பக்கம்: https://en.wikipedia.org/wiki/Disulfiram#/media/File:Disulfiram2.svg
[4] ஆங்கில விக்கிப்பீடியா பக்கம் https://en.wikipedia.org/wiki/Disulfiram#/media/File:Disulfiram_3D_ball.png படம் ஆக்குநர்: பயனர் Jyntoவ்

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “இந்த வார வல்லமையாளர்!

  1. அருமையான தகவல்… வாழ்த்துகள். எல்லாவற்றினும் பெற்றோரைப் போற்றும் பண்பும், தமது தாய் மொழிக்கு உரிய மதிப்பளித்தமையும் போற்றுதலுக்குரியவை. வாழ்த்துகள்.

  2. மெச்சத்தக்கத் தேர்வு.  டாக்டர் வினோத் கண்ணப்பனுக்கு என் வாழ்த்துக்கள்.

  3. சிறப்பான தெரிவு. புற்றுநோய்க்கான மருந்து கண்டுபிடித்தமை, பெரிதும் பாராட்டுக்குரியது. வல்லமையாளர் வினோத் கண்ணப்பன் திறமும் புகழும் நாளும் பொழுதும் வளர்க.

    என் தந்தையார், இந்தப் புற்றுநோயினால் அண்மையில் மறைந்தார். இந்த நோய்க்கு ஆட்பட்ட  பலரையும் இந்த மருந்து மீட்கட்டும். 

    புற்றுநோய் எதனால் வருகிறது? அதை வருமுன்னே தடுக்க இயலுமா? எல்லா வகையான நோய்களையும் இந்தப் புதிய மருந்து குணமாக்குமா? எப்போது பயன்பாட்டுக்கு வரும்? என அறிய விழைகிறேன். 

  4. மிக்க நன்றி அண்ணா கண்ணன். தங்கள் அருமைமிகு தந்தையார் அண்மையில் மறைந்த துன்பச்செய்தி நினைவில் இருந்தது.  நம்முடைய தற்கால வாழ்க்கைமுறையால், பல்வேறு வேதிப்பொருள்களும் கதிர்களும்  நம்முள்ளே செல்கின்றன. அவை புற்றுநோயை ஊட்டும் தன்மையுடையவை என்கின்றார்கள். அவை பலருக்கும் பலவிதமான தாக்கங்களை ஏற்படுத்துகின்றன.  இவை தவிர, நம் மரபணு அமைப்பிலேயே ( எ.கா. பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய்), சிலவகையான புற்றுநோய்க்கு உள்ளாகும் தன்மை இருக்கலாம் என்றும்,   உணவில் சீரான சரியான ஊட்டப்பொருள்கள் இல்லாமை, உடற்பயிற்சியின்மை இப்படி பலவும் காரணமாக இருக்கும் என்றும் சொல்கின்றார்கள். சுருக்கமாக அறிய கீழ்க்காணும் பக்கத்தைப் பார்க்கலாம். சிலவகையான புற்றுநோய்களைத் தீர்க்கவோ நோயின் தன்மையைத் தணிக்கவோ முடியும் என்கின்றார்கள். கட்டாயம் நிறைய ஆய்வு செய்து அறியவேண்டியவை உள்ளன. http://www.cancer.org/cancer/cancercauses/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.