Advertisements
தலையங்கம்

உயிர்காக்கும் துறைதானா?

பவள சங்கரி

தலையங்கம்

பலகால தாமதங்களுக்குப் பிறகு மத்திய அரசு 344 வகையான மருந்துகளைத் தடை செய்வதாக அறிவித்துள்ளது. அந்த 344 மருந்துகளைத் தயாரிக்கக்கூடிய அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் உடனடி தடை செய்வதை நிறுத்தி வைக்கக்கூடிய நீதிமன்ற ஆணையைப் பெற்றன. இன்று அது மேலும் ஒரு வாரத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளன. இந்தத் தடை சில்லரை விற்பனை முகவர்களுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும் என்று காரணம் காட்டி இந்த நீட்டிப்பு வழங்கப்பட்டது. தடை செய்யப்பட்ட சில மருந்துகளின் தயாரிப்பாளர்கள் தங்கள் உற்பத்தியை நிறுத்திவைக்க முடிவு செய்தனர். நீதி மன்றங்கள் ஏனைய வழக்குகளைப்போல இதையும் ஒரு வழக்காக ஏற்றுக்கொண்டு நிறுத்தி வைப்பதற்கான ஆணையைப் பிறப்பித்துள்ளன. இந்த 344 மருந்துகளில் அதிகபட்சமான மருந்துகள் மேற்கத்திய நாடுகளில் ஏற்கனவே தடை செய்யப்பட்டவை. இவைகள் வெகு காலத்திற்கு முன்பே மேற்கத்திய நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளவை என்பதும் குறிப்பிடத்தக்கது. பன்னாட்டு நிறுவனங்கள் இந்திய மருந்துச் சந்தையைக் குறிவைத்தே பல ஆயிரம் கோடி டாலர்களை சம்பாதித்துக்கொண்டிருக்கின்றன. அவர்களுக்கு நம் மக்களின் உயிர் பற்றிய அக்கறை இல்லை. நீதிமன்றங்கள், தடையை நிறுத்தி வைப்பதற்கான ஆணையை பிறப்பிப்பதற்கு முன்பு எந்தெந்த மருந்துகள் வெளி நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளன என்பதை மத்திய மருந்து ஆணையத்திடமும், மருந்து தயாரிப்பு நிறுவனங்களிடமிருந்தும் கோரிப் பெற்றிருக்க வேண்டும். அதற்குப் பிறகே அந்த மருந்துகளைத் தவிர்த்து மற்ற மருந்துகளுக்கு நீதிமன்றங்கள் பரிகாரம் செய்திருக்கவேண்டும். இது மக்களின் உயிர் சம்பந்தப்பட்ட பிரச்சனை என்பதால் நிதியைப் பற்றிய கவலையை விட்டொழிக்க வேண்டியதே அவசியம். ஆகவே இந்த ஒவ்வொரு வாரம் நீட்டிப்பின்போதும் பல ஆயிரம் கோடி ரூபாய்கள் விற்பனை செய்து தங்களுடைய நட்டத்தைத் தவிர்த்துக்கொள்ளும்பொருட்டு இதுபற்றியெல்லாம் விழிப்புணர்வு ஏதும் அறியா மக்களைப் பலியிடுவது முறையாகுமா? மக்கள் நலம் சார்ந்த இதுபோன்ற விசயங்களில் நீதித்துறை தலையிடுவதற்கு முன்பு மருத்துவ ஆணையத்திடம் தகுந்த விளக்கங்கள் பெற்றிருக்கவேண்டியதும் அவசியம். நீதித்துறையும் மத்திய அரசும் இதுபோன்ற அத்தியாவசிய கருத்துகளை கவனத்தில் கொள்வதே மக்களுக்கு உயிர்காக்கும் நன்மை பயக்கும். ஈரோடு மாவட்ட வேதியியலாளர் மற்றும் மருந்துக்கடைக்காரர்கள் சங்கத் தலைவர் திரு காளியண்ணன் அவர்கள், ஒவ்வொரு விற்பனையாளரும் தடை செய்யப்பட்ட மருந்துகளை விற்காமல், அவையனைத்தையும் ஒரு அட்டைப் பெட்டியில் போட்டு, ‘இவை விற்பனைக்கு அல்ல’ என்று மக்களின் கண்ணில்படும்படி எழுதி வைக்கவேண்டும். மேலும் விற்பனையாளர்கள் அனைத்து தடை செய்யப்பட்ட மருந்துகளையும் மொத்த வியாபாரிகளுக்கோ அல்லது மருந்து தயாரிப்பாளர்களுக்கோ திருப்பி அனுப்புவதன் மூலமாக தங்கள் நட்டங்களை குறைத்துக்கொள்ளலாம் என்றும் கூறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளின்படி மிருகவதை தடுப்புச் சங்கம், மருந்துகளின் ஆய்வுகளுக்கு விலங்குகளை உட்படுத்தக்கூடாது என்று அறிவித்துள்ளனர். காலங்காலமாக மருத்துவத் துறையின் ஆய்வுகளுக்கு எலி, குரங்கு, போன்ற மிருகங்களே பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. புதிய மருந்துகளை அவைகளுக்குக் கொடுத்து சோதித்துப் பார்த்துவிட்டு, அதற்குப் பின்பு அனுமதியுடன் இறுதியில் மனிதர்களுக்கும் கொடுத்து ஆய்வு செய்கின்றனர். அதன் பின்பே மக்களுக்கு பயன்பாட்டில் வருகின்றன. வாயில்லா சீவன்களை வதைப்பது இதன் நோக்கம் என்பதைக்காட்டிலும் அதற்கு மாறாக பல இலட்சம் உயிர்களைக் காப்பதே இதன் முக்கியமான நோக்கம் என்ற வகையிலேயே இந்த முறை தொடரப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த சங்கத்தினர் இதற்கான மாற்று உபாயம் குறித்து கருத்து தெரிவிப்பார்களேயானால் அது ஆக்கப்பூர்வமாக அமையும் என்பதும் நிதர்சனம்.

உலகிலேயே காச நோயால் பாதிக்கப்பட்ட மக்கள் அதிகமாக உள்ள நாடு சீனா. அதைக் கட்டுக்குள் கொண்டுவர பெரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தியாவிலும் இந்நோயை முற்றிலும் ஒழிப்பதற்கான முயற்சியில் நம் அரசு ஈடுபட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இதற்கான விலையுயர்ந்த மருந்துகள் கட்டுப்பாட்டு விலையிலும், அரசு சுகாதார மையங்கள் மூலமாக இலவசமாகவும் கிடைப்பதற்கும் அரசு ஆவன செய்துள்ளதும் வரவேற்பிற்குரியது.

கோவை மாநகரில் போக்குவரத்து மிகுந்த ஒரு சாலையில் ஒரு நாள் மட்டும் பேருந்துகளோ அல்லது சிற்றுந்துகளோ இல்லாமல் மிதி வண்டியை மட்டும் உபயோகப்படுத்தி சமுதாயத்தைப் பாதுகாக்கக்கூடிய நல்லதொரு வழியை இந்து நாளிதழும், கோவை மாநகராட்சி பொது மக்களும் சேர்ந்து செயல்படுத்தி வருவது பாராட்டுதலுக்குரியது. அரசின் கவனத்தில் உள்ள, 15 – 20 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழைய வாகனங்களுக்குப் பதிலாக புதிய வாகனங்கள் வாங்கப்படவேண்டும், அப்படி வாங்குபவர்களுக்கு அதனுடைய விலையில் 15% தள்ளுபடி செய்வதாகவும் பரிசீலனையில் உள்ளதும் வரவேற்கப்படவேண்டிய செயல். இது போன்ற செயல்களால் மாசுக்கட்டுப்பாட்டிற்கு வழியமைவதால் காச நோய் போன்றவைகள் பெருமளவில் குறைவதற்கான வாய்ப்புகள் அதிகரிப்பதும் நல்ல செய்தி. கோவையைப்போன்று இந்தியாவில் உள்ள அனைத்து நகரங்களிலும் வாகனங்கள் ஒரு நாள் நிறுத்தி வைத்தாலே அந்நிய செலாவணி சற்றேனும் குறைவதுடன் மாசுக்கட்டுப்பாட்டிற்கும் வழிவகுக்கும் என்பதும் திண்ணம்.

Print Friendly, PDF & Email
Download PDF
Advertisements
Share

Comments (1)

  1. Avatar

    சரியாகச் சொன்னீர்கள்!! 
    //நீதிமன்றங்கள், தடையை நிறுத்தி வைப்பதற்கான ஆணையை பிறப்பிப்பதற்கு முன்பு எந்தெந்த மருந்துகள் வெளி நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளன என்பதை மத்திய மருந்து ஆணையத்திடமும், மருந்து தயாரிப்பு நிறுவனங்களிடமிருந்தும் கோரிப் பெற்றிருக்க வேண்டும். அதற்குப் பிறகே அந்த மருந்துகளைத் தவிர்த்து மற்ற மருந்துகளுக்கு நீதிமன்றங்கள் பரிகாரம் செய்திருக்கவேண்டும். இது மக்களின் உயிர் சம்பந்தப்பட்ட பிரச்சனை..//

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க