பாடலாசிரியர் பிரியன் நேர்காணல்
செல்வரகு
தமிழ்சினிமாவில் பாடல்களுக்கு என்றுமே தனி இடம் உண்டு. வெளிவந்த காலகட்டத்திற்கு மட்டுமே படங்கள் பேசப்படும். பாடல்கள் காலம் கடந்தும் நிற்பவை. ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு ரகம். சில பாடல்கள் கேட்ட உடன் மனதை ஈர்ப்பவையாக அமையும். சில பாடல்கள் கேட்கக் கேட்கப் பிடித்துப் போகும். சில பாடல்கள் கேட்கும் பொழுது ஒரு உணர்வையும், படத்தோடு, படத்தின் காட்சியமைப்போடு பார்க்கும் பொழுது ஒரு உணர்வையும் தரக்கூடியவை. அவ்வகையில் தற்போது திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் “பிச்சைக்காரன்” திரைப்படத்தில் பாடலாசிரியர் பிரியன் எழுதி இருக்கும் “உனக்காக வருவேன்” பாடல் அனைவரின் மனதையும் வெகுவாக கவர்ந்திருக்கிறது.
இவர் ஏற்கனவே “அஞ்சாதே” படத்தில் “மனசுக்குள் மனசுக்குள் புதுமழை..”, “நினைத்தாலே இனிக்கும்” படத்தில் “செக்சி லேடி கிட்ட வாடி”, “உத்தமபுத்திரன்” படத்தில் “உசுமுலாரசே உசுமுலாரசே”, “வேலாயுதம்” படத்தில் “வேலா வேலா வேலாயுதம்”, “நான்” படத்தில் “மக்காயாலா மக்காயாலா”, “கோலிசோடா” படத்தில் “ஜனனம் ஜனனம்”, “சலீம்” படத்தில் “மஸ்காரா போட்டு மயக்குறியே” என பல ஹிட் பாடல்கள் கொடுத்தவர்.
தற்போது சசி இயக்கத்தில், இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நடித்திருக்கும் “பிச்சைக்காரன்” திரைப்படத்தில் உணர்ச்சிமிக்க பாடலாக பெருவெற்றி பெற்றிருக்கும் “உனக்காக வருவேன்” பாடல் குறித்து அவரிடம் கேட்ட பொழுது….
ஒரு பாடலாசிரியனுக்கு ஒவ்வொரு பாடலுமே முதல் பாடல்தான். இதுவரை ஏறக்குறைய நானூறு பாடல்களைக் கடந்திருக்கிறேன். ஒவ்வொன்றும் ஒவ்வொரு அனுபவம். என்னைப் பொறுத்தவரையில் பொதுவான பாடல்களை விட கதையோடு பொருந்திவருகிற பாடல்களே வலிமை மிக்கவை.
அப்படிப் பார்க்கும்பொழுது “பிச்சைக்காரன்” படத்தில் எழுதிய “உனக்காக வருவேன்” பாடல் முழுக்க முழுக்க கதைக்குச் சொந்தமானது. பாடல் பற்றிய தகவலை சொல்லும்பொழுது கவித்துவமாக இல்லாமல் எளிமையாகவும் காதலின் உணர்வை பேசக்கூடியதுமாக வரிகள் இருந்தால் நல்லது என்றார் விஜய் ஆண்டனி. அதனால் எளிய மனிதர்களின் வார்த்தைகளை.. எவருக்கும் புரியக்கூடிய மிக எளிமையான வரிகளைப் பயன்படுத்தி.. முழுக்க முழுக்க காதலின் ஆழமும்.. உணர்ச்சியும் மட்டும் பயணிக்கும் பாடலை எழுதிக் கொடுத்தேன். கிட்டத்தட்ட பத்து பல்லவி, பத்து சரணங்கள் எழுதி அதில் இருந்து தேர்ந்தெடுத்த வரிகள்தான் அவை.
படம் பார்த்துவிட்டு பாடல் குறித்து திரைத்துறை பிரபலங்கள் பலர் போன் மூலம் வாழ்த்துகள் சொன்னார்கள். ஒரு நாளைக்கு குறைந்தது ஐம்பது பேருக்கு மேல் போன் வழியாகவும்.. பேஸ்புக் வழியாகவும்.. பல வழிகளிலும் வாழ்த்துகள் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
ஒரு நல்ல பாடலை.. கதைக்கு கச்சிதமாகப் பொருந்தக்கூடிய பாடலை.. காதலின் உன்னத வலியை விளக்கக்கூடிய பாடலை.. எனது பயணத்தில் இன்னொரு வெற்றிபாடலை சாத்தியமாக்கிய அனைவருக்கும் இத்தருணத்தில் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வழக்கம்போல் எனக்கு இன்னொரு வெற்றிப்பாடலைத் தந்த அன்பு இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி அவர்களுக்கும்.. அற்புதமான சூழலை கொடுத்த இயக்குநர் சசி அவர்களுக்கும் இதயத்தில் இருந்து நன்றிகள்.
பல்லவி :
உனக்காக வருவேன்..
உயிர் கூடத் தருவேன்..
நீ ஒரு பார்வை பார்த்திடு போதும்
உனக்கு எதையும் நான் செய்வேன்..
ஞாபகம் முழுதும் நீ வந்து நிறைய
உனது நிழலென இருப்பேன்..
நீ யாராய் இருந்தாலும்
உன்னை ஏற்றுக் கொள்கிறேன்..
என்னைப் பிரிந்தால் அந்த நொடியே
நான் இறந்து போகிறேன்.. – உனக்காக வருவேன்..
சரணம் : 1
யார் என்ன சொன்னாலும்
என்னை இங்குக் கொன்றாலும்
நான் உந்தன் பாதி புரிந்து கொண்டேன்..
யார் கூட வந்தாலும்
என்னோடு நின்றாலும்
உன் பேரைச் சொன்னாலே திரும்பி நின்றேன்..
இந்தக் காதல் உனக்காக
என்றும் தீராது..
உயிர் போகும் என்றாலும்
அது போகாது.. – உனக்காக வருவேன்..
சரணம் : 2
கண்ணோடு கண் பார்த்து
கையோடு கை கோர்த்து
உன்னோடு நான் போக விரும்புகிறேன்..
துளியன்பு மாறாமல்
நொடிகூடக் குறையாமல்
உயிருக்குள் உனையள்ளி நிரப்புகிறேன்..
ஒரு வாழ்க்கை உன்னோடு
அது போதாது..
நீ கனவில் பிரிந்தாலும்
மனம் தாங்காது.. – உனக்காக வருவேன்..