பவள சங்கரி

Narasiah
நம் இந்தியக் கப்பற்படையில் பணியாற்றியவரும், நம் நாடு சுதந்திரம் பெற்றிருந்த காலகட்டங்களில் பொறுப்பான பதவிகளில் இருந்தவர் மட்டுமல்லாது, ஒரு மீப்பெரும் எழுத்தாளராகவும் இருக்கும் ஒரு ஆளுமையைச் சந்திக்கப்போகிறோம் என்ற பேராவல் உடன்வர பேராசிரியர் நாகராஜன் ஐயா அவர்களும் நான் நரசய்யா ஐயாவை சந்திக்கப்போவது தெரிந்தவுடன் உடன் வருவதாகக் கூறிவிட்டார்கள். அவர்தம் இல்லத்தின் எல்லையைத் தொட்டவுடன் கட்டிடப் பாதுகாவலர், ‘இதோ இந்த வீடுதான். ஐயா உங்களுக்காகத்தான் காத்திருக்கிறார்’ என்றார். வீட்டிற்குள் நுழைந்தவுடன் தம்பதி சமயதராக வந்து வரவேற்று அன்பாக இருக்கையில் அமரச் செய்தார்கள். இலக்குமி கடாட்சம் முழுமையாக நிறைந்திருந்த இல்லம் அது. நாங்கள் அமர்ந்திருந்த, சற்றே பள்ளமாக அமைந்திருந்த வரவேற்பறையின் நேர் எதிர்புறம் முதன்முதலில் கண்களில் பளிச்சிட்டது பரந்த அழகானதொரு ஓவியம். இரண்டு, மூன்று முறை திரும்பத் திரும்ப என் பார்வை அதன் மீதே செல்வதைக் கண்ணுற்றவர் குறிப்பால் என் எண்ணம் உணர்ந்தவராக அது செருமனியில் இருக்கும் ஒரு கோட்டை என்றும் அந்த ஓவியத்தைத் தீட்டியதும் தான் தான் என்ற ஆச்சரியமான தகவலையும் அளித்தார். பன்முக நாயகரின் மற்றொரு முகத்தையும் அறிந்த திருப்தி எங்களுக்கு. அம்மையாரின் அன்பான உபசரிப்புடன் எங்கள் உரையாடல் துவங்கியது.

bbb7c505-ab26-4d72-a71b-a70d3d821dab

பணியையும், எழுத்தையும், வாழ்க்கையையும் சமமாக பாவிக்கும் மனித நேயமிக்க ஒரு எழுத்தாளர் திரு நரசய்யா அவர்கள். அதாவது எந்த முகமூடியுமில்லாத வெளிப்படையான பேச்சே இவருடைய மொத்த உருவமாக உயர்ந்து நிற்கிறது! சமகால எழுத்து மட்டுமன்றி, தொல்லியல் சார்ந்த பதிவுகள், வரலாற்றுத் தகவல்கள், விமர்சனங்கள், நாட்டு நடப்பு என பல்வேறு தளங்களில் மிக அமைதியாக, தன் போக்கில் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக மிக சுறுசுறுப்பாக இயங்கி வருபவர் இவர். பெரும்பாலும் பிரபலமான அனைத்து தினசரிகள், வார இதழ்கள், இணைய தளங்கள் என பல்வேறு பத்திரிகைகளில் இவரது படைப்புகள் வந்தவண்ணம் இருக்கின்றன. எந்த ஒரு விசயத்தையும் ஆய்வுப்பூர்வமாக அணுகி அதன் நன்மை, தீமைகளை எந்தவிதமான மேற்பூச்சுமின்றி வெளிப்படையாக விவரிப்பதில் வல்லவர் இவர். அனைத்திற்கும் மேலாக வார்த்தைகளில் தெளிவும், எவரையும் புண்படுத்தாத நளினமும் இவருடைய தனித்தன்மை. அந்த வகையில் அன்பான மனைவியையும், பண்பான இரு மகன்களும் கொண்ட அழகான குடும்பத்தின் சொந்தக்காரர் இவர். இரண்டு மகன்களும் திருமணமாகி குழந்தைகளுடன் நல்ல நிலையில் வாழ்ந்து வருகிறார்கள். ஒரு மகன் தன்னைப் போலவே கப்பற் பணியில் ஈடுபட்டு இளம் வயதிலேயே மிக உயர் பதவியை வகிப்பதை பெருமை பொங்கக்கூறுகிறார். அமைதியும், அருளும் நிறைந்த அழகிய குடும்பத்தின் தலைவராக இருக்கும் , நரை, திரை மூப்பைக் கடந்த இந்த இளைஞருக்கு 83 வயது என்று சொன்னால் நம்புவது சற்று கடினமாகத்தான் உள்ளது. புலவர் பிசிராந்தையாரிடம் ஒரு வழிப்போக்கர் அவருடைய இளமையின் இரகசியம் குறித்து கேட்டபோது அவர் பாடிய அந்த புறநானூற்றுப் பாடல்தான் நினைவிற்கு வந்தது.

” யாண்டு பலவாக நரையில வாகுதல்
யாங்காகியர் என வினவுதிராயின்,
மாண்ட என் மனைவியொடு மக்களும் நிரம்பினர்
யான் கண்டனையர் என் இளையரும் வேந்தனும்
அல்லவை செய்யான் காக்கும் அதன் தலை
ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச்
சான்றோர் பலர் யான் வாழும் ஊரே.”

திரு நரசய்யா அவர்கள் தமிழ் மரபு அறக்கட்டளையின் செயற்குழு உறுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. நான் முதன்முதலில் ஐயாவைச் சந்தித்ததும் இக்குழுவின் துணைத்தலைவர் முனைவர் சுபாஷிணி அவர்கள் நடத்திய புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில்தான். அந்த நிகழ்ச்சியில் என் நான்கு நூல்களும் அறிமுகம் செய்யப்பட்டது. அதில் ஒரு நூலுக்கு ஐயா அவர்களின் அணிந்துரை பெற்றிருந்ததும் என் வாழ்நாள் நினைவுகூரத்தக்க செய்திகள் என்றால் அது மிகையாகாது! அவருடைய வரலாற்று ஆய்வுகளின் விருப்பமான ஒரு வாசகியாக, அவர்தம் பணிசார்ந்த ஆளுமையை வியப்புடன் நோக்கும் ஒரு சாதாரண இந்தியக் குடிமகளாக அவரைச் சந்திக்கச் சென்றவள் மனிதம் நிறைந்த அந்த இணையரைச் சந்தித்துவிட்டு ஒரு அன்பு மகளாய் திரும்பி வந்தேன் என்றுதான் சொல்லவேண்டும்.

99d5cab1-8444-44ed-917a-defa7c80afb2

எடுத்த எடுப்பில் ஆணித்தரமான வாதங்களை வெகு எளிதாக இருவரும் துவங்கிவிட்டனர். இடையிடையே விட்ட இடத்தை இணைத்துப் பிடிக்கச் செய்வதும், எனது ஐயங்களை தீர்த்துக்கொள்ள எழுப்பிய வினா மட்டுமே எனது பணியாக இருந்தது. சம்பிரதாயமான விசாரிப்புகளுக்குப் பிறகு தமது நூலக அறைக்கு அழைத்துச் சென்றார் மிகப்பெருமையாக. தலையணி அளவிற்கு பெரிய, பிரபலமான பன்னாட்டு எழுத்தாளர்களின் ஆங்கிலப் புத்தகங்கள் நிரம்பியிருந்த அறையில், பல தமிழ் நூல்களும், இரண்டு புராதன பெரிய பிரம்பு இருக்கைகளையும் காண முடிந்தது. எண்பது ஆண்டுகள் பழமையான அந்த நாற்காலிகளை தம் மகன் மூலம் விரும்பி பரிசு பெற்றதாக பெருமை பொங்கக் கூறியபோது ஒரு குழந்தையின் மகிழ்ச்சியை அவர் முகத்தில் காண முடிந்தது. பல அரிய நூல்களுக்கு மதிப்புரை வழங்கியுள்ளவருக்கு சம்பந்தப்பட்ட அயல்நாட்டு ஆளுமைகளிடமிருந்தும் கிடைத்த பாராட்டுக் கடிதங்களையும் பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. சில அரசு அலுவலகங்களில் தகுந்த ஆவணங்கள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை என்பது பற்றிய பேச்சை மிக ஆக்கப்பூர்வமாக அதே சமயம் நகைச்சுவையாக ஆரம்பிக்க பேரா. நாகராசன் அவர்களும், ‘inclination’ (Inclination is defined as a tendency towards something, such as a behavior or a habit) என்ற பண்பாடு, அதாவது ஏதாவது ஒரு விசயம் பற்றிய மாற்று கருத்தை முன்வைக்கும்போது அதை நாசூக்காக கையாள வேண்டியது பற்றிய சிறு விவாதம் வந்தது.

06cf7c51-3a8a-45e5-aa0b-bc35f056741b

நரசய்யா அவர்கள் சரிதான் என்று ஆமோதித்தவர், “நம்ம ஆட்கள் ஆதாரங்கள் ஏதும் இல்லாமலே நல்ல கதை விடக் கற்றுவைத்திருக்கிறார்கள். அதுதான் எனக்கு வேடிக்கையாக இருக்கிறது. எழுத்தாளர் ஜெயமோகன் மீது எனக்கு எப்பொழுதும் மரியாதை உண்டு. ஆனால் அவர் சொன்ன அந்த பக்கிங்காம் கால்வாய் குறித்த விசயத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. அதற்கு பதிலாக, வரலாற்றுத் தகவல்களை சரியாக அறிந்துகொள்ளாமல் கற்பனையாக எதுவும் எழுதுவது சரியல்ல என்று எழுதிவிட்டேன். பக்கிங்காம் கால்வாய் பகுதிகளின் முந்தைய நிலையை நன்கு அறிந்தவன் நான். ஒரு பெரிய பொறியியல் வல்லுநர் இது குறித்து எழுதிய ஆய்வுத் தகவல்களை வாசித்திருக்கிறேன். அதற்கான ஆதாரங்களாக என்னிடம் படங்கள் உள்ளன. பக்கிங்காம் கால்வாய் அப்போது மிக சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்த ஒரு படக்குத்துறை. அங்கு குறைந்தது 30 படகுகள் நின்றுகொண்டிருக்கும். இப்போது அங்கு எப்படியிருக்கிறது என்று அனைவருக்கும் தெரியும். அதேபோல் சிலர் எடுத்ததற்கெல்லாம் லெமூரியாக் கண்டம் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். எதற்கும் அடிப்படை ஆதாரங்கள் இல்லாத ஒரு விசயத்தை திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருப்பதில் சலிப்புதான் மிஞ்சுகிறது.

திரு நரசய்யா அவர்கள் குறிப்பிட்ட, எழுத்தாளர் திரு ஜெயமோகன் அவர்களின் ஒரு கட்டுரையின் பக்கிங்காம் கால்வாய் பற்றிய பகுதி கீழ்வருமாறு:

“இந்தியாவில் எப்போதுமே வரட்சி உண்டு. நூற்றாண்டுகளாகவே மழைபொய்த்து வரும் வரலாறு நமக்குண்டு. மழை பொய்க்கும்போது நாம் பஞ்சம்பிழைக்கச்செல்வோம். இந்தியாவின் மேற்குப்பாதியில் நல்ல விளைச்சலிருந்தால் கிழக்குப்பாதியில் மழை இருக்காது. இங்கே ம்ழை இருந்தால் அங்கே இருக்காது. இதுதான் இங்குள்ள இயற்கை. மக்கள் மழை இல்லாவிட்டால் மறுபாதிக்கு கிராமங்களையே காலிசெய்துவிட்டுச் சென்றுவிடுவார்கள். இஸ்லாமிய ஆவணங்களில் அப்படி மக்கள் கூட்டம் கூட்டமாக இடம்பெயர்ந்து ஊர்கலும் நகரங்களும் காலியாகக் கிடப்பதைப்பற்றிய வரிவசூலதிகாரிகளின் குறிப்புகள் பல உள்ளன.
ஆனால் இந்த உப்புவேலி அந்த இடப்பெயர்வை தடுத்துவிட்டது. பஞ்சம் இருந்த இடங்களுக்கு தானியம் செல்வதையும் அது தடுத்துவிட்டது. தஞ்சைக்கும் ராமநாதபுரத்துக்கும் நடுவே ஒரு பெரிய மதில்கட்டினால் என்ன ஆகும்? அதுதான் நடந்தது

இரண்டாவது பெரும் பஞ்சம் வந்ததற்குக்காரணம் ரயில்பாதைகள்தான். அவ்வருடங்களில் பஞ்சாபில் மிகச்சிறந்த விளைச்சல் இருந்தது. மொத்த தானியத்தையும் வெள்ளையர் ரயில்பாதைகள் வழியாக துறைமுகத்துக்கு திரட்டிக்கொண்டு சென்று ஏற்றுமதி செய்தார்கள். உலகமெங்கும் போரிட்டுக்கொண்டிருந்த தங்கள் ராணுவத்துக்கு அந்த உணவை அளித்தார்கள்
பஞ்சத்தில் மக்கள் கோடிக்கணக்காகச் சாகும்போது துறைமுகங்களில் உணவு மலைமலையாகக் குவிந்துகிடந்தது. ஆறுமாதம் உணவு ஏற்றுமதியைத் தடுத்து நிறுத்தினால்போதும் பஞ்சத்தைத் தடுத்துவிடலாம் என பிரிட்டிஷ் மனிதாபிமானிகளே கண்ணீர் விட்டு கெஞ்சினார்கள். ஆதிக்க அரசு செவிசாய்க்கல்வில்லை.

அந்த பெரும்பஞ்சத்தில் சென்னையை ஆட்சி செய்வ்ர் பக்கிங்ஹாம் பிரபு. அவர் இங்கே பணம் சேர்ப்பதற்காகவே அனுப்பப்பட்டவர். அவரது குடும்பம் நொடித்துப்போயிருந்தது. அவர் பிரிட்டிஷ் ஆட்சிக்கு விசுவாசமாக இருந்ததனால் அவரை பணம் நிறையக்கொட்டும் இடமான சென்னைக்கு அனுப்பினார்கள். நண்பர்களே அக்கால சென்னை வெள்ளை கவர்னர்கள் அடித்த கொள்ளையை இன்றைய மதிப்புப்படி பார்த்தால் 2ஜி எல்லாம் சும்மா பொரிகடலை மாதிரி.

பக்கிங்க்ஹாம் பஞ்சத்தைப்பணமாக்கினார். இந்தியாவிலிருந்து கோடிக்கணக்கான கூலிகளை கப்பலில் ஏற்றி கிழக்கே நியூசிலாந்து முதல் மேற்கே கரீபியன் தீவு வரை, மலேசியா இலங்கை ஆப்ரிக்கா என கொண்டு சென்று அடிமைவேலை வாங்கினார்கள் வெள்ளையர். அப்படிக் கொண்டுசெல்பவர்களில் பத்தில் ஒருவரே தேறுவார்கள், மிச்சபேர் நோயிலும் குளிரிலும் மடிவார்கள். ஆகவே பத்து மடங்கு ஆட்களைக் கொண்டுசெல்லவேண்டியிருந்தது. அதனா இங்கே பஞ்சம் குறையக்கூடாது என ஆசைப்பட்டனர் வெள்ளை நில உடைமையாளர்கள். பஞ்சத்தை குறைக்காமலிருக்க அரசுக்கு கப்பலுக்கு இவ்வளவு என்ற கணக்கில் பணத்தை கொட்டிக்கொடுத்தனர்.

கடைசியாக பக்கிங்காம் கண்டுபிடித்த வழிதான் பக்கிங்ஹாம் கால்வாய். சென்னைமுதல் விசாகப்பட்டினம் வரை ஒரு தரைவழிக் கடல்பாதை. பக்கத்தில்தான் கடல் இருக்கிறது. இந்தப்பாதை அவசியமே இல்லை. ஆனால் கோடிக்கணக்கான மக்களை ஒருவேளை கஞ்சி மட்டும் கொடுத்து வேலைவாங்கி அதைக் வெட்டினார்கள். கூலி இல்லை. கூலி முழுக்க செலவாகக் காட்டப்பட்டு கோடிக்கணக்கான ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது. அந்தக்கால்வாய் சில வருடங்கள் கூட பயன்படவும் இல்லை.”

மேலும் ஆர்வமாகத் தொடர்கிறார்.

வ.ரா., சிட்டி, கு.ப.ராஜகோபால், பிச்சமூர்த்தி போன்ற பெரும் எழுத்தாளர்களை நான் சந்தித்திருக்கிறேன். எத்தனை பெரிய ஆளுமைகள் அவர்கள்! ஒரு முறை சிட்டி அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது, ஒரு சம்பவத்தை நினைவுகூர்ந்து சிரித்தார். உலகத்திலுள்ள அனைத்து மொழி வார்த்தைகளுக்கும் தமிழில் வேர்ச்சொல் உள்ளது என்கிறார்களே.. நான் ஒரு வார்த்தை சொல்கிறேன் அதற்கு வேர்ச்சொல் சொல்லுங்கள் என்றாராம் ஒருவர். ‘insect’ என்ற ஆங்கில வார்த்தைக்கு வேர்ச்சொல் சொல்லுங்கள் பார்க்கலாம் என்றாராம். பின் அவரே அதற்கு, ‘இம்சைக்குட்டி’ என்ற சொல்லாடல் தான் ‘insect’ ஆனது. ஆங்கிலேயர் ஒருவர் ஒரு பூச்சியைப் பார்த்து இது என்ன என்று கேட்கப் போக அதற்கு ஒருவர் போகிறபோக்கில் ‘இம்சைக்குட்டி’ என்றாராம். உடனே ஆங்கிலேயர் பேச்சு வழக்கில் இம்சைக்குட்டி என்று சொன்னதைக் கேட்டவன் ‘insect’ என்று பெயர் வைத்துக்கொண்டானாம் என்று கிண்டலாகச் சொல்லிச் சிரிப்பார். சிட்டி அவர்களிடம் நிறைய பேசியிருக்கிறேன். எனக்கு நெருங்கிய உறவு முறை அவர் என்பதும் ஒரு காரணம். மிகப்பெரிய ஆளுமை அவர். நகைச்சுவையாகப் பேசுவதில் வல்லவர். என்னுடைய ‘கடல்வழி வணிகம்’ நூலுக்கு அணிந்துரை எழுதச்சொன்னபோது அப்போதுதான் அவர் ஒரு அறுவைச் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியிருந்தார். இருந்தாலும் நான் இந்த நூலை எழுதிக்கொண்டிருக்கும்போதே அடிக்கடி என்னைத் தொடர்புகொண்டு மிக ஆர்வமாக செய்திகள் அனைத்தையும் கேட்டு அறிந்து உள்வாங்கிக்கொண்டிருந்தார். பின் அவரே அணிந்துரையும் எழுதிக்கொடுத்தார். அப்படி எழுத்தாளர் என்பவர்களுக்கு நிறைய பக்குவம் தேவை. சிட்டி அவர்களின் வாழ்க்கை வரலாறை, ‘சாதாரண மனிதன்’ என்ற தலைப்பில் எழுதியிருக்கிறேன்.

சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து.

என்பார் வள்ளுவர். அதுபோன்ற சொற்கள் மட்டுமே ஆக்கங்களாக இருக்கவேண்டும். அதை இன்றைய எழுத்தாளர்கள் கட்டாயம் வளர்த்துக்கொள்ள வேண்டும்”.

இடையில் பேரா. நாகராஜன் அமெரிக்க உளவியல் துறை ஆய்வாளர்களின் கண்டுபிடிப்பு குறித்து பகிர்ந்துகொண்டார். இன்றைய நவீன உளவியல்துறை சார்ந்த மருத்துவம் என்பது அன்றைய புத்த மத முக்கிய கோட்பாடுகளின் வழியே வந்தவைதான். புத்த பிட்சுகளை தெருவோரங்களில் கண்டால் பிடித்துக்கொண்டு வாருங்கள் என்பார்களாம். ஆரம்ப காலங்களில் உளவியல் சார்ந்த பல கருத்தாக்கங்களை புத்தமதங்களிலிருந்துதான் வந்தது என்றார்.

அடுத்து கீழை நாட்டு நாகரீகம் (orientalism) குறித்த பேச்சு வந்தது. இவை பற்றியும், நரசய்யா அவர்கள் எப்படி, ஏன் கப்பற்படை பணியைத் தேர்ந்தெடுத்தார் என்பது போன்ற சுவையான தகவல்களை இவர்களின் குரல் மூலமாகவே கேட்டுத் தெரிந்துகொள்வோமே..

தென் அமெரிக்காவில் வாழும் இலா காந்தி மகாத்மா காந்தியின் பேத்தி. இவர் மணிலால் காந்தி என்பவரின் மகளும், பீனிக்சு செட்டில்மெண்ட்டில் வளர்ந்து பட்டம் பெற்றவருமாவார். இவர் ஒரு சமூக சேவகியாக வெரூலம் குழந்தைகள் மற்றும் குடும்ப நலத்துறையில் 15 ஆண்டுகளும், தர்பன் இந்தியக் குழந்தைகள் மற்றும் குடும்ப நலத்துறையில் ஐந்து ஆண்டுகளும் பணிபுரிந்தார். இலா காந்தி அதன் துவக்கத்திலிருந்து 1991 வரை பெண்கள் நதால் நிறுவனங்களின் நிர்வாகக்குழு உறுப்பினராகப் பணியாற்றினார். நிறவெறி தீவிரமாக இருந்த (1975) காலகட்டங்களில் இவர் அரசியல் நடவடிக்கைகளிலிருந்து தடை செய்யப்பட்டு 9 ஆண்டுகள் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்தப் பழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டி மறைமுகமாகவும் செயல்பட்டார். இனவெறிக்கு எதிரான போராட்டத்தின்போது இவருடைய மகன் ஒருவரும் கொல்லப்பட்டார். தமது விடுதலைக்கு முன்பு நெல்சன் மண்டேலாவை சந்தித்த ஐக்கிய ஜனநாயக முன்னணி உறுப்பினர்களில் இவரும் ஒருவர். பாராளுமன்றத்தின் சேவைக்குப் பிறகு காந்தி, உள்நாட்டு வன்முறைக்கு எதிராக ஒரு 24 மணி நேரத் திட்டம் உருவாக்கியதோடு, காந்தி மேம்பாட்டு அறக்கட்டளையையும் நிறுவி, மத அலுவல்கள் குழுவின் உறுப்பினராகவும் பணியாற்றியதோடு ஒரு மாதப்பத்திரிகையின் மேற்பார்வை பணியிலும் ஈடுபட்டிருந்தார். மகாத்மா காந்தியின் தண்டி யாத்திரை குழுவிலும், மகாத்மா காந்தி மேம்பாட்டு அறக்கட்டளையிலும் தலைமைப் பொறுப்பேற்றிருந்தார். இலா காந்தி பல ஆண்டுகளாக டெக்னாலஜி டர்பன் பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும் பணியாற்றினார். 2007 இல், இவருக்கு பத்ம பூஷன் விருதும் வழங்கப்பட்டது.

இலா காந்தி மற்றும் மகாத்மா காந்தியின் பெயரர் கோபாலகிருஷ்ண காந்தி இருவரும் தமது மதிப்புரைக்கு அளித்த அங்கீகாரத்தை மனமகிழ்ந்து நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார் திரு நரசய்யா அவர்கள்.

இந்து நாளிதழில் வெளியான இந்நூலின் மதிப்புரை:

http://www.thehindu.com/books/literary-review/kra-narasiah-reviews-the-south-african-gandhi-stretcherbearer-of-empire/article8058578.ece

03sm_gandhi_jpg_2680646g

She commented on my review:

“This article [my review] points out that the book is a distortion of facts and I agree with that fully. It is difficult to understand why the vicious attack as a follow up support to Arundhati Roys book. I want to make three comments. 1. Madam Roy and her supporters should concentrate on boosting the image of their Hero Dada Ambedkarji by publicising his own work and his own contribution to the liberation of India rather than by attacking Gandhiji.

2. This book is a build up from two previous publications by Deedat and Swartz . I draw this conclusion because they clearly ignore the many articles in the Indian Opinion both in relation to African people as well as in relation to the plight of the indentured .

3. Gandhiji indeed was human and his work, qualities and commitment to the betterment of humanity and the universe needs to be acknowledged so that future generations can learn from it not worship it.”
A reader named P rajeswaran said:
“I fully agree with Mr Narasiah! The book fails miserably in proving that Gandhi was a racist..well Gandhi might have had different views (of indifference) at some earlier stages in his life in South Africa but they all changed over time to make him what he later came to be known famously for. Nothing wrong in such attempts at discrediting a world famous figure like the Mahatma. They could have been a little more fair in their treatment of the issues and their viewing angles, perhaps!”

Gopalkrishna Gandhi grand son of both Mahatma and Rajaji wrote to me

Dear and esteemed sir
Of course I remember you !
Thank you for your gracious observations on my Colombo speech.
I did indeed read your review and found it eminently fair.
MKG will never be free of his prejudices detractors, just as he will never be free of his uncritical devotees.
And he will survive both.
By a coincidence, only this morning I was with Mrs Mina Swaminathan at a talk on music and the brain by Dr ES Krishnamoorthy.
With regards,
Gopal

நன்றி : காணொலிப் பதிவு – பேரா. நாகராஜன்

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “‘கடலோடி’ நரசய்யா (2)

  1. நல்லதொரு கட்டுரை பவளா..
    நரசய்யா அவர்கள் எல்லோருக்கும் உதவும் மனப்பான்மை உள்ளவர். என் முதல் புத்தகமான வம்சதாரா புத்தகப் பதிப்பாளரான நர்மதா பதிப்பகத்தை எனக்கு அறிமுகப்படுத்தியவர். வம்சதாரா நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தவர். 

    அவரின் மிகச் சிறந்த நூல்களில் ஒன்றான மதராசபட்டினம் நான் அடிக்கடி படிக்கும் புத்தகம். எத்தனை எத்தனை தகவல்கள்.. ஒரு முனிவர் போல தவம் செய்து எழுதிய புத்தகம் இது.

    நல்லதோர் கட்டுரை வல்லமையில் எழுதி பதித்தமைக்கு நன்றி பவளா!

  2. அருமையான கட்டுரை. சுவையான, ஆதாரபூர்வமான தகவல்கள். நரசய்யா அவர்களின் பன்முகங்களை அறிந்துகொள்ள பெரிதும் உதவியது. மிக்க நன்றி பவளா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *