கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
”ஸ்ரீனிவாசப் பெருமாள்’’….
———————————————————-
கேசவ் வரைந்த சீனுவாசப் பெருமாளைப் பார்க்கையில்…. வருடாவருடம் விடிகாலை வெளிச்சமாய் எங்கள் எதிர் வீட்டுக்கு, தாயார் சமேதராய் மயிலை ஸ்ரீனிவாசப் பெருமாள் எழுந்தருளல் ஞாபகம் வந்தது….அப்போது எழுதியது….அப்போதைக்கிப்போதே….
’’சேதியொன்று கேளீரோ வீதியுலா செங்கமல
மாதுவுடன் சீனு மயிலையில் -காதினில்
கொட்டொலி கேட்கிறது விட்டொழி தூக்கத்தை
சட்டென வாராய்வா சல்’’….(1)
’’பேயோடு பொய்கையும் பூதமும் பாடிய
மாயோன் மணிவண்ணன் மாம்பழ -வாயோன்
வருகின்றான் வாசலுக்கு வந்தவனை வந்தி(வணங்கு),
தருகின்றான் நாளும் தவம்’’….(2)
’’வாநீவா சல்பக்கம் வீதியுலா வந்துள்ளார்
தூணிவாச சிங்கன் திருமார்பன் -சீனிவாசன்
பிம்மாலைப் போதில் பெருமாளை சேவிக்க:
நம்மாள் அருள்வான் நலம்’’….(3)
பிம்மாலை -(விடிகாலை வைணவ பரிபாஷையில்….)
“வானுலாவும் வாமனன், தூணுலா வும்சிங்கன்,
மீனுலாவும் பாற்கடலோன், மைலாப்பூர் -சீனுஉலா,
எங்களெதிர் இல்லத்திற்(கு) ஏளல், அலமேலு
செங்கமலத் தாயுடன் சேர்ந்து”….(4)
’’சுற்றிடும் ஆழியை(சுதர்ஸனம்), சூழ்கடல்வெண் ஆழியைப்(வெண்சங்கு)
பற்றி, எதிற்புரம் பத்தினிகள் -நிற்றிருக்க
புள்ளனெழாப் போதினிலே பல்லக்கில் ஊர்வலமாய்
கள்ளனென வந்தவரே காப்பு’’….(5)….
சீனுவாசப் பெருமாள் மீது எழுதிய சந்தக் கவிதை(அருணகிரி பாணியில்….)
—————————————————————————————————————————————–
பெருமாள் திருப் புகழ்….
தான தானன தனன தனத்த
தான தானன தனன தனத்த
தான தானன தனன தனத்த -தனதான
சீனிவாச பெருமாள்
————————————-
“மாலை நாடகம் மதியம் உறக்கம்
காலை ராவினில் கவிதை வழக்கம்
நாளும் வாழ்ந்திடும் நிறைவை எனக்கு -அருள்வாயே
கோல வாகன மயிலில் குறத்தி
தேவ யானையும் அருகில் இருக்க
வான வீதியில் விரையும் குகற்கு -முறைமாம
சேலை மோகமும் சினமும் செருக்கும்
ஆசை ஆர்வமும் அறிவு மயக்கம்
மோச மாகுமுன் முளையில் எடுக்க -வருவாயே
ஊறும் ஆணவம் உதியும் இடத்தில்
நானை யாரென நினைவு படுத்தி
பேசி டாதுயர் பிரம நினைப்பில் -ரமணேசர்
கோலம் கோவணம் கடமை இருப்பு
பாறை யாசனம் பதவி ப்ரபத்தி
சோணை ஈசனின் சரண முனைப்பு -எனவாழும்
வாழ்வு நானுற வழியை வகுத்து
கோழை யானவில் விஜயர் தமக்கு
கீதை யாலுரம் அளியும் அச்சுத -தருவாயே
காலில் பூமகள் களைய சொடுக்கை
பாலி னாழியில் படவி டமெத்தை
சாயும் யோகசு கமதை விடுத்து -எழுவாயே
ஏறு வாகனம் வினதை பிறப்பில்
சேரு மோகனென் அகம தில்நிற்க
சீனு வாசம ழைமுகில் நிறத்து -பெருமாளே”….(6)….கிரேசி மோகன்…