70துகளில் எனது ஹீரோ திருமழிசைபிரான்….இவர் எழுதிய ‘’திருச்சந்த விருத்தம்’’ வாசித்துக் கொண்டேயிருப்பேன்….அந்தப் பிரேமையில் எழுதியது அன்று….இன்று என் ஹீரோ கேசவ் கண்ணன்….சமர்ப்பணம்….

“பெருமாள் புகழ்’’
—————————–

1bf9c2cb-12e4-461d-8c8f-a8c032e47ec6
பொன்மகள் அமர்ந்து பாத பங்கயம் பிடித்திட
பொன்னிசூழ் அரங்கில் ஆதி சேடனார் படுக்கையில்
தென்னிலங்கை வென்ற சோர்வில் கண்துயின்றவன் புகழ்
பண் சிறக்க பாரதம் வடித்த வாரணம் சரண்….(1)

கயல் ஆமை பன்றியோடு கோர சிம்ம வாமனம்
புயல் பரசுராம ராம பலராமக் கண்ணனாய்
அயக்ரீவ கல்கியென அவதரித்து அதர்மநாள்
துயர் துடைக்கும் நாரணன் தூய தேசு பூரணன்….(2)

பஞ்ச பூத சேர்க்கையில் பிரபஞ்சமாய் விரிந்தவன்
செஞ்சரண் பணிந்த அன்பர் நெஞ்சகம் நிறைந்தவன்
அஞ்சு புலன் ஆண்டவர்க்கு ஆத்மஞான தேசிகன்
மஞ்சு வண்ண முழுமுதற்ப் பொருள் அனாதி கேசவன்….(3)

சொல்லவன் சொலப்படும் சொல் அருத்தமானவன்
அல்லுபகல் அந்திமாலை அர்த்த சாமமானவன்
புல்லவன் கல்லவன் பல்லுயிர் புகுந்துவாழ்
தொல்பொருள் தொடர்ச்சியாய் துலங்கு தாமோதரன்….(4)

உண்ட அன்னமாகி அதை உதரமிருந்து உண்பவன்
உண்டை செரித்து உபரி ஒதுக்கும் உந்திகனலவன்
மண்டையேறி ஐம்புலன் ஆடுமாடு மேய்ப்பவன்
அண்டவாணர் பண்டைமுனிகள் அடியுறைகொள் அச்சுதன்….(5)

விழியிரெண்டின் ஜோதிகண்டு வெட்கும்சோம சூரியன்
பொழியும்தேன் மலரோவென மதுகரம்மருள் பதயுகம்
மொழிவாணியை மெளனமாக்கும் மதுரமான சொல்அதரம்
தொழில்தவம் அரன்தழுவு எழில்வடிவ மோகனன்….(6)

ஈவிரக்கமற்ற கம்சன் காவலுற்ற தாய்வசு
தேவகிக்குடல் விளக்க ஆவாகனித்து ஓர்
ரேவதியில் அட்டமிநாள் ராத்திரியில் உதித்தபின்
ஆவலோடு ஆயர்பாடி அசோதைபால் புகுந்தவன்….(7)

தன்னையே மறந்துநாளும் தவமியற்றும் நாரதாதி
புண்ணியர்கள் பார்த்திராத ப்ரபஞ்சமாய தத்துவம்
இன்னதென்ற உண்மையை இடைச்சி அன்னைமட்டும் காண
மண்னையுண்ட செம்பவளச் சின்னவாய் திறந்தவன்….(8)

நஞ்சு காளியன் சிரத்தில் பிஞ்சுகால் பதித்தவன்
தஞ்சமென் றுஒடுங்க ஒயில் தாண்டவம் புரிந்தவன்
வஞ்சபேய் முலைச்சி தந்த நஞ்சு பாலினோடவள்
சஞ்சலங்கள் ஏதுமின்றி நெஞ்சுயிர் சுவைத்தவன்….(9)

சூறைவாயு போலவந்த சகடரக்கன் அச்சிலே
பாறையாய் அமர்ந்துஅவன் ஆரவாரம் அடக்கிவான்
கூரைதாண்டி கொண்டுபோய் குப்பையாய் எறிந்தவன்
நூறைஐந்து வென்றுஆள பாரதம் வகுத்தவன்….(10)

அங்கைநான்கில் ஆழிசங்கு அபயவரம் மாரில்பார்
நங்கையும் நறுந்துழாய் நலிந்தநாதர் செங்கண்மால்
இங்குளான் என்றுஈன் றதையிகழ் இரண்யன்முன்
அங்குஉள்ள தூண்பிளந்து சிங்கமாய் குதித்தவன்….(11)

அங்கைநான்கில் ஆழிசங்கு அபயவரம் மாரில்பார்
நங்கையும் நறுந்துழாய் நலிந்தநாதர் செங்கண்மால்
இங்குளான் என்றஈன் றதைஇகழ் இரண்யன்முன்
அங்குஉள்ள தூண்பிளந்து சிங்கமாய் குதித்தவன்….(11)

பரந்தமார் தனில்துழாய் பூவிருந்த கோமளை
சிரங்கள்நான்கு கொண்டஅயன் சிவந்தநாபி தாமரை
இருந்தவாறு பாற்கடல் அனந்தன்மேல் கிடந்துநீள்
அருந்தவம் புரிந்திடும் நிரந்தரப் பரம்பொருள்….(12)

இராம வென்றிறைஞ்சி வந்த இராக்கதன் விபீடணன்
தராதரம் விசாரியாது அவர்க்கடைக் கலத்தையும்
இராவணன் தொலைத்திலங்கை ஆட்சியும் அளித்தவன்
அண்ட சராசரங்கள் ஆள்பவன்….(13)

மூவடிக்கு மண்நயத்த மாணிக் குறளன்தனை
தேவுஎன்று அறியாமல் ஆவலோடு தாரைவார்
மாவலி விதிர்க்க மூ உலகளந்த விக்ரமன்
சேவடி கோன் சென்னிவைத்து சிரஞ்சீவி ஆக்கினன்….(14)

கரிராஜன் கஜேந்திரன் கால்கராம் வயப்பட
’’அரிமுகுந்த அச்சுதா’’ அபயம்என்று பிளிறிட
துரிதமாய்ப் பருந்திலே தடாகம் ஏகிகாத்தவன்
பரிமுகத்து தேசிகன் பரிவில்தாய் நிகர்த்தவன்….(15)

வேதம்நாலும் வேதியர் ஆகமங்கள் சாத்திரம்
பூதமைந்தும் ஆதிசங் கரர்அமைத்த ஷண்மதம்
தீதுகொல் தீர்த்தமேழும் தகவுசேர் யோகமெட்டும்
ஓதுயாகம் ஒன்பதும் பாதம்கொள் பவித்திரன்….(16)

போர்களம் புகமறுத்து பார்த்தனன்று வேர்த்ததும்
தேர்தளம் அமர்ந்துதிவ்ய கீதைசொல்லி தேற்றிபின்
ஆர்ப்பு பாஞ்சசைன்யம் ஊதிஅகைப்பு செய்தபாரதம்
நேர்த்தியாய் நடத்திநல் தர்மம்வெல்ல வைத்தவன்….(17)

திரிதராட்டினன் போல பெரிய பாட்டனார்களும்
துரியோதனன் செயலை தூசனித்து விழிமூட
அரிவை பாஞ்சாலி துகிலை உரித்த துச்சாதனன்
சரியசோர்வில் சேலைபெய்து தையல்மானம் காத்தவன்….(18)

துருவனுக்கு வானமும், துரோபதைக்கு மானமும்
தருமனுக்கு ஆட்சியும், கர்ணனுக்கு காட்சியும்
திருவை சுதாமனுக்கும் தோழமையை மாருதிக்கும்
சிறுமைக்கும் பெருமைசேர கருமைகாயம் கொண்டமால்….(19)

வனிதைபொன் மடந்தையும் வையகத்து மங்கையும்
புனிததுயில் அணங்கையும் பரமபதம் கொண்டுவாழ்
வினதைமகன் வாகனன் விண்ணளந்த வாமனன்
மனிதஜென்மம் எடுத்து மனுதர்மம் நாட்டும்மாதவன்….(20)

ஊழிதோறும் பாலனகி உலகனைத்தும் உண்டுஅலை
ஆழிமேல் ஆலிருந்து ஏழ்பிறப்பு லோகசிருஷ்டி
நாழிகைப் பொழுதிலே நினைப்பிலே படைப்பவன்
ஆழிசங்கு ஏந்துகின்ற ஆழிவண்ண ஊழியன்….(21)

சோவென்று இடிமின்னலோடு தேவேந்திர மாரிபெய்ய
கோவர்த்தன குடைபிடித்து கோகுலஇடர் தீர்த்தவன்
நாவனர்த்த சிசுபாலன் உவலைநகுதல் நூறுமீற
கோவமுற்று அவன்சிரத்தை சீவதிகிரி விடுத்தவன்….(22)

விருப்புடை உருப்பினிக் கரம்பிடித்து ஊர்தியில்,
இருத்திவாயு வல்லைகொள்ள துரத்திவந்த தமையனார்
உருப்பனை விரட்டிஊர் திருத்தலம் துவாரையில்
வரித்தவள் கழுத்தினில் தெரியலிட்ட திண்புயன்….(23)

கலநேமி வக்கிரன் கேசிகம்ச பவுண்டிரன்
மாலிகன் கரன்முரன் மதுகைடப தேனுகன்
கேலிசெய்த இரணியன் கோதைகள்வ ராவணன்
காலனோடு கூடவைத்து ஞாலஇடர் தீர்த்தவன்….(24)

கூடுகவிச் சேனையோடு கடல்கடந்து ராவணன்
நாடிலங்கை யோடவனை நசித்தசோக வனத்தினில்
வாடு சீதையோடு கூடி வான ஊர்தி வாயிலாய்
ஆடுவாகை சூடிசீர் அயோத்திபுக்கு ரகுவரன்….(25)

கேசவன் நாராயண மாதவன் குறள் இருடீ
கேசவன் சீதரன் குறையிலா கோவிந்தன்
வாசபத்ம நாபவிஷ்ணு விண்ணளந்த விக்கிரமன்
பாசதா மோதரன் மாசிலா மதுசூதனன்….(26)

தாதைவாக்கு மந்த்ரமென்ற தொன்மைசொல் தழைத்திட
சீதையோ டிலக்குவன் சேரதண்ட காவனம்
பாதம் நோகபுக்க மூலராம சந்த்ரமூர்த்தியே
வேதம்வந்து எதிரொலிக்கும் வடவேங்கட கீர்த்தியே….(27)

ஒருவனுக்கு ஒருத்தியென்ற நெறிதனைப் புகட்டினாய்
திருமுகத்து ஜனகமகள் அரவணைத்திண் புயத்தினாய்
கருநிறத்து அண்ணலே கவிமாருதி நண்பனே
வருபவர்க்கு அன்பனே வடவேங்கட இன்பமே….(28)

ஆசையோ டளித்தது அழுகலாய் இருப்பினும்
கூசமின்றி அமுதமாய் கொள்ளல்தகவு சொல்லவே
பாசமோடு சபரியுண்ட பழமிச்சம் உண்டவா
வீசுதென்றல் தேசுபாடும் வடவேங்கட ஈசனே….(29)

நிராயுதன் நசித்தல்போர் நீதியல்ல என்றுணர்த்த
இராவணா இன்றுபோய் நாளைஇகல் வாஇயம்பு
இராமனே இறைவனே இரவிகுலத் தோன்றலே
முராரியே முகுந்தனே மலைவேங்கட மாலனே….(30)

இரவிசோம சந்தியில் இடைகழி படிவாயிலில்
நரசிங்க உருவினில் நின்றதூண் பிளந்துஅயில்
கரநகமால் இரணியன் குடலுரித்து மாலையாய்
உரமார் பகமணிந்து உம்பரிடர் தீர்த்தவா….(31)
———————————————————————-

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *