கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
”கண்ணன் அனுபூதி’’
—————————————-
கூப்பிட்டால் ஆயர்க்காய்க் கூச்சலிட்டால் ஆனைக்காய்ச்
சாப்பிட்டால் நட்புக்காய்ச் சோர்வின்றிக் -காப்பிட்ட
ராதை கரம்விலக்கிக் கீதை உரைநிறுத்தி
ஆதரவுக்(கு) ஓடும் அரி….(16)
அரியா தவனை அறியா தவரே
அறிய முயல்வர் அறிவால் -எறியா(து)
ஒளிந்த நெருப்பை உணர மரத்தைப்
பிளந்த குருடனைப் போல்….(17)
‘போலெ’ன்(று) உவமை புகல முடியாது
மாலென் றனரோ மகாகவிகள் -கேளொன்று
சிந்தனை தேவையா சித்திரத்திற்(கு) ஓவியா
எந்தனை வேறுவடி வாக்கு….(18)
வாக்கிலே பாரதி வார்த்தைகள் வந்திட
நாக்கிலே நம்மாழ்வார் நின்றிட -நோக்கிலே
ஆண்டாளின் பக்தி அகலா(து) இருந்திட
வேண்டினேன் கண்ணா வழங்கு….(19)
வழங்கினாய் செல்வம், வழங்கினாய் சேலை
வழங்கினாய் கீதை வணக்கம் -வழங்கிடும்
காலம் முடிந்ததோ கண்ணா மவுனமாய்
ஆலில் படுத்தாயோ ஆழ்ந்து….(20)
வாவென்றால் வாலிபன், வாக்கில் வயோதிகன்
தாவென்றால் கற்பகத் தாயவன் -சோவென்று
மாரியருள் பெய்கின்ற காரிருள் கண்ணனே
வேறிருள் போக்கும் விளக்கு….(23)
விளக்கீசல் போலே வியனுலகில் ஈசா
உளத்தாசை கொண்டிங்(கு) உதிர்ந்தேன் -அளப்பரிய
ஆதியே உந்தனனு பூதியில் மூழ்கிடும்
தேதியைச் சொல்லியெனைத் தேற்று….(24)….கிரேசி மோகன்….
”கோவிந் தனைச்சுற்றி கும்மி அடிக்குது
ஆவின் தனங்கள்(மடி) அமுதளித்து(பால்சொரிந்து) -மேவுமந்த
வெற்பேழை(திருமலை) விட்டிறங்கி, வாடும் அலமேலு
கற்பரசியை கோவிந்தா காண்’’….கிரேசி மோகன்….
’’ஈற்றடிக்கு மாற்றடி’’….
——————————————–
ஜரகண்டி சத்தத்தில் ஏன் சாம்பாதிக்கணும்
செல்வ மகள் பத்மாவதி கீழ் திருப்பதியில் இருக்க….
’’கோவிந் தனைச்சுற்றி கும்மி அடிக்குது
ஆவின் தனங்கள்(மடி) அமுதளித்து(பால்சொரிந்து) -மேவுமந்த
வெற்பேழை(திருமலை) விட்டிறங்கு ,வாடும் அலமேலு
கற்பரசி தானுந்தன் காசு’’….கிரேசி மோகன்….