வல்லமை – சிந்தனை, செயல், முன்னேற்றம் – தலையங்கம்.
பவள சங்கரி
ஊழல் எனும் புற்று நோய்!
ரகுபதி ராகவ ராஜாராம்! பதீதபாவன சீதாராம்!
கரையானைப் போன்று நம் நாட்டின் வளத்தையே அரித்துக் கொண்டிருக்கிற ஊழல் எனும் பேயை விரட்ட ஒரு மாபெரும் யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது! யுத்தம் செய்பவர் ஒரு இளம் வீரரா என்றால் அதுவும் அல்ல. ஒரு 74 வயது முதியவர், தன் உயிரைப் பணயம் வைத்து உண்ணாவிரதம் என்ற காந்தியப் பாதையைத் தேர்ந்தெடுத்துப் போராடிக் கொண்டிருக்கிறார். இந்தத் தள்ளாத வயதில் என்ன செய்யப் போகிறார் இவர் என்ற ஆதங்கத்தில் சமூக ஆர்வலர்கள் நால்வர் அவர் பின்னால் நிற்க, இன்று ராமலீலா மைதானமே மக்கள் வெள்ளமாக நிரம்பி வழிகிறது. 50,000க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து அண்ணாவிற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். பள்ளி மாணவர்கள் முதல் குடும்பத் தலைவிகள் வரை அனைவருக்கும் பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது இந்தப் போராட்டம்.
யார் இந்த அண்ணா ஹசாரே? ஜன் லோக்பால் மசோதாவை ஆகஸ்ட் 30ம் தேதிக்குள் மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும். இல்லாவிட்டால் பதவியை விட்டு அரசு விலகட்டும். நாங்கள் ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்ற நாடு தழுவிய மாபெரும் போராட்டத்துக்கும் தயாராக இருக்கிறோம் என்று சவால் விடும் இந்த மனிதரின் பின்னனிதான் என்ன? தில்லியில் 8 வது நாளாக இன்று உண்ணாவிரதம் தொடர்கிறது. மக்களின் ஆதரவோ பெருகிக் கொண்டே வருகிறது. இவர் ஏற்கனவே 400 க்கும் அதிகமான அதிகாரிகளை ஊழலைக் காரணம் காட்டி பதவி இறங்கச் செய்தவர்!
”கடந்த 74 ஆண்டு காலத்தில், என் மீது எந்த களங்கமும் வந்ததில்லை. நான் சுத்தமானவன். அதுதான் ஊழலை எதிர்த்து நான் போராட எனக்கு துணை நிற்கும் ஆயுதமாகும்” என்கிறார் ஹஸாரே.
இது போல ஏன் மற்ற தலைவர்களால் துணிந்து சொல்ல முடியவில்லை. சமீபத்தில் யாஹீ செய்திகளில் வெளியிட்டிருந்த ஊழல் புரிந்தவர்கள் பட்டியலில் ராஜா, கல்மாடி,சரத்பவார் கருணாநிதி, ல்ல்லு பிரசாத் யாதவ், மாயாவதி,ஜெயலலிதா என்று பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. ஆனால் இதனை மறுத்து சம்பந்தப்பட்டவர்கள் ஒருவரும் கருத்து தெரிவிக்காதது ஆச்சரியப்பட வைக்கிறது.
பிரதமர், உச்ச நீதிமன்ற நீதிபதிகள், அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரையும் விசாரிக்க அதிகாரம் உள்ள வகையில் லோக்பால் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்தி ஆகஸ்ட் 16-ம் தேதியிலிருந்து ஹசாரே உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். இன்று பெங்களூரு மற்றும் தமிழ் நாட்டின் திரைப்படத்துறையினரும் போராட்டத்தில் பங்கு கொண்டுள்ளனர். ரஜினிகாந்த் முழு ஆதரவு அளிப்பதாக அறிக்கை கொடுத்துள்ளார். ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் குருஜி அண்ணாவிடம் பேச்சு வார்த்தை நடத்த வந்திருக்கிறார். ராகுல் காந்தி பிரதம மந்திரியிடம் அண்ணா ஹசாரேயின் கோரிக்கை சம்பந்தமாக பேச்சு வார்த்தை நடத்தச் சென்றுள்ளார்.
மக்களின் பேராதரவைப் பார்க்கும் போது ஊழல் என்ற பெரும் பிரச்சனையினால் எந்த அளவிற்கு அவர்கள் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்பது தெள்ளத் தெளிவாகிறது. ஒரு தொலைக்காட்சியில் ஒரு இளைஞர், தன் சகோதரன் ஒரு விபத்தில் இறந்த போது கூட உடலை வாங்குவதற்கு 15,000 ரூபாய் லஞ்சமாக பெறப்பட்டது குறித்து நெகிழ்வாக சொன்னது வேதனைக்குரிய விசயம். பெரும்பாலும், இளைஞர்களும், மத்தியதர மக்களும் பங்கு கொள்ளும் எந்த ஒரு போராட்டமும் வெற்றி அடைவதில் தடை ஏற்படுவதில்லை. அந்த வகையில் ஊழலுக்கு எதிரான இந்தப் போராட்டம் வெற்றி பெறும் என்பதில் ஐயமில்லை.
இந்தப் போராட்டத்தை மக்களிடமிருந்தே ஆரம்பித்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். இலவசங்களில் ஆரம்பித்து, வாக்களிப்பதற்கு, பணம், பொருள் என்று தருவது வரை மக்கள் ஒவ்வொருவரும் இனி எதற்கும், எந்த காரியத்திற்கும் பணம் கையூட்டு கொடுப்பதும் இல்லை, வாங்குவதும் இல்லை என்று உறுதி கொண்டால் மட்டுமே இந்தப் போராட்டத்திற்கு முழு வெற்றி என்பதும் நிதர்சனம்.
“ஊழல் என்னும் புற்றுநோய்” – தலையங்கம் நடுநிலையோடு எழதப் பட்டுள்ளது.
அன்னாஹசாரே உண்ணாவிரதத்தை ஆரம்பிக்கும் முன்னரே வீட்டில் கைது
கைது செய்யப்பட்டவுடன் அரசியல் கட்சிகள் மறுநாளே அகில இந்திய அளவுக்கு
“பந்த்” என்று அறிவித்திருக்கவேண்டும். அவர்கள் அவ்வாறு செய்யவில்லை.
காங்கிரஸ் ஆளாத மாநிலங்களான தமிழ்நாடு, கர்நாடகா, ஒரிஸ்ஸா,பீகார்,
உ பி, குஜராத் ஆகிய மாநிலங்களை ஆளும் அரசுகளாவது ஒரு நாள் “பந்த்”
அறிவித்திருக்க வேண்டும். எனவே ‘லோக் பால் மசோதா’ தங்களுக்கு
எதிரானது என்று அவர்களும் எண்ணுகிறார்களோ என்னவோ! “காங்கிரஸ் கட்சியும்
அன்னா ஹசாரேயும் சண்டை போட்டுக்கொள்ளட்டும், நாம் தூண்டி விட்டு
வேடிக்கை மட்டும் பார்ப்போம்” என்று இருக்கிறார்களோ என்னவோ?
இரா. தீத்தாரப்பன், ராஜபாளையம்.
அண்ணா ஹசாரே என்றே எழுதலாமே.
அண்ணா, ஆயி – மராட்டிய மொழியிலும் உண்டு.
நாம் வழிபடும் காத்தாயி போல அங்கு ‘மங்களாயி’
வழிபாடு உண்டு.
’துக்கன்’ கல்வெட்டில் காணப்படும் ஒரு பழைய தமிழ்ப் பெயர் .
துகா ராம், துகோபா – மராட்டியப் பெயர்கள்
தேவ்