நாஞ்சில் நாடனுடன் பயணம் (9 – II)

0

தி.சுபாஷிணி.

குடும்பத்தின் தலைப்பிள்ளையாய், 1972ல் தொடங்கிய பயண வாழ்க்கை, பெண் பிள்ளைகளின் பால் உள்ள கரிசனம், பெண்களின் இயற்கை உபாதைகளின் அவஸ்தையை உணர்ந்தவராய் ஒரு கட்டுரையை அளித்து விட்டார் நனி நாகரிகன் நாஞ்சிலார். பொது இடங்களில் பெண்களுக்கான வசதிகள் என்று பார்த்தால், மூன்றாவது உலக நாடுகளில் நாம் மூன்றாவது இடத்தில்தான் இன்னமும் இருக்கிறோம்.  காரணம், ஆண் மனோபாவம் இன்னும் தாராளமானதாக மாறவில்லை.

“சில நாட்கள் முன்பு, இரவு 10 மணிக்குப் பேருந்தில் வீடு திரும்பிக் கொண்டு இருந்தேன்.  சில இருக்கைகளில் உதிரியாகச் சில பெண்கள்.  எனக்கு முந்திய இருக்கை ஒன்றில் பணி முடிந்து திரும்பும் சிறு வயதுப் பெண் ஒருத்தி.  சிக்னலில் பேருந்து நின்றது.  எங்கள் இடது பக்கம் அதிகக் குதிரை சக்தி கொண்ட நவீன இரு சக்கர வாகனங்கள் மூன்றோ நான்கோ வந்து நின்றன.  எல்லோரும் சம வயது வாலிபர்கள்.  பார்ட்டி முடிந்து திரும்புபவர் போலத் தெரிந்தனர். குடித்திருக்கவும் கூடும். அது அவர்கள் பிரச்சனை.” (அது அவர்கள் பிரச்சனை இல்லை நாடன் அவர்களே! அவர்கள் செலுத்திக் கொண்ட பானம் கொடுத்த தைர்யம் சார்)

“ஆனால் முன் பின் தெரியாத, தனியாகப் பயணம் செய்யும் தமது வயது உள்ள ஒரு பெண்ணைப் பார்த்து ஊளை, விசில், பாட்டு, ‘போடி’ எனும் அதட்டல்கள்.  இவ்விதம் அவமானப்படுத்தும் மனோபாவத்தை வழங்கியது எது? நான் சற்றுத் தீவிரமாக அவர்களைப் பார்த்தேன்.  எனக்குக் கிடைத்த சன்மானம், “டேய் மாமா, பொத்திகிட்டுப் போடா!” தாய் மாமனையும் அவ்விதமே அருள்வார்கள் போலும்!

இரு சக்கர, நாற் சக்கர வண்டியோட்டிப் போகும் பெண்களைக் கேட்டுப் பாருங்கள். வேகம் கூட்டி, குறைத்து, ஒலிப்பான் ஒலித்து, பிரேக் போட்டு, வழி கொடுக்காமல், இடதும் வலதும் போகும் வழி மறித்து, காது கேட்கச் செல்லமாக வசை மொழிந்து, அற்ப மொழி பேசி என நமது கலாச்சாரம், கண்களையும் செவிகளையும் கூசச் செய்யும்.

ஒரே அலுவலகத்தில் பணி புரியும் இளைஞர்கள் தமது சக பணியாளர்களைக் குறிக்கும் சொற்களாக, குள்ளி, குண்டு, ஒல்லி, கருப்பி, பல்லி என அவரவர் உடற்கூற்றுத் தன்மை காரணமாக இளக்காரமாகப் பலர் முன்னிலையில் கூறுகின்றனர். இது கேவலம் என்று ஏன் அவர்களுக்கு உறைப்பதில்லை? மாதச் சம்பளம் 2ஆயிரம் என்றாலும் 80 ஆயிரம் ஆனாலும் மனோபாவம் மாறுவதில்லை! மனோபாவம் என்பது கல்வி சார்ந்தோ, வருமானம் சார்ந்தோ மாறி விடுவதில்லை.  மேன் மக்கள் என்பவர் ஒரு குலத்தில், ஓர் இனத்தில், ஒரு மதத்தில் இருந்து மட்டுமே உதித்து வருபவர்களும் இல்லை.

ஒரு மாநகரில் இருந்து இன்னொரு மாநகருக்கு இரவு நேரங்களில் உல்லாச, சொகுசு, குளிர்சாதன, அதி விரைவு, நவீனப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இரவு எட்டு மணிக்கு மேல் 10 மணிக்குள் கட்டணம் ரயில் கட்டணத்தைப் போல இரு மடங்கு மட்டுமே! எல்லாம் காற்றில் மிதக்கும் ஏர் பஸ்கள், விசை கூடிய டர்போ, ஏர்ஜெட் இன்ஜின். பிக் அப், வேகம், பவர் ஸ்டீயரிங், தானியங்கிக் கதவுகள், இருக்கைக்கு மேல் தலைமாட்டில் விமானங்களில் இருப்பது போல் ஒளி ஒலி, குளிர் காற்று கூட்ட, குறைக்க ஏற்பாடுகள். சொல்லப் போனால் பணிப் பெண்களும் வால் பகுதியில் கழிப்பிடமும் மட்டும் கிடையாது. அங்குதான் பிரச்னையே!

இரவு 8 மணிக்கு வீட்டில் இருந்து புறப்பட்டு, இரவு 9 மணிக்கு பேருந்தில் அமர்ந்தால், மறுநாள் காலை 7 மணிக்கு இறங்கி 8 மணிக்குத் தங்குமிடம் சேரும் வரை 12 மணி நேரம் சிறுநீர் கழிக்கப் பெண்களுக்கு வசதி கிடையாது. ஆண்கள் அனைவரும், சாயா பருக வண்டி நிற்கும் இடங்களில் எந்த நாணமும் இன்றி ஒதுங்கி ஒன்றுக்குப் போய்விடலாம்.  சில நிறுத்தங்களில் கட்டணக் கழிப்பிடம் என ஒன்று இருக்கும். அங்கு பன்றிகளே ஆனாலும் மூக்கைப் பொத்திக் கொண்டே போக இயலும்.  பல நிறுத்தங்களில் அதுவும் இருக்காது. வயதான நோய்ப்பட்ட பெண்களே ஆனாலும் அடக்கிக் கொண்டு உட்கார வேண்டும்.  பல பெண்கள் பயண நாட்களில் மத்தியானத்துக்குப் பிறகு தண்ணீர் குடிப்பதில்லை என்பதை நீங்கள் அறிவீர்களா?

பெரும்பாலான பள்ளிகளிலும் இதுவே நிலைமை. காலை 7.30 மணிக்கு வீட்டில் இருந்து கிளம்பும் சிறுமியர், மாலை 4.30 மணிக்கு வீட்டுக்கு வந்ததும் அவசர அவசரமாக கழிவறைக்கு ஓடுவார்கள்.  மருத்துவர் கூறுவது 3.30 மணிக்கு ஒரு முறை 3.50 மி.லி. சிறுநீர் பிரிவது நல்லது என. இயற்கைக்கு மாறாகச் செயல்பட சிறுநீரகத்தை, சிறுநீர்ப் பையை, மூத்திரக் குழாயைத் தூண்டும் சூழலுக்கு நாம் சிறு பருவத்திலிருந்தே பெண்களைத் தள்ளுகிறோம். பலருக்கு சிறுநீர்ப் பையில் கற்கள் ஏற்பட இதுவே காரணம்.  தப்பித் தவறி பொதுக் கழிப்பிடங்களுக்குப் போக நேரிட்டால், மூத்திரக் குழாய் நோய்கள் உறுதி.

சின்னக் கடைகளில் ஃபேன்சி ஸ்டோர்ஸ், மெடிக்கல் ஷாப், பாத்திரக் கடை, ஜவுளிக் கடை என வேலை பார்க்கும் இடங்களில் பெண்களுக்கு பாத்ரூம் வசதி கிடையாது. பல அரசு நூலகங்களில், பாட சாலைகளில் வசதி இல்லை.  ஆனால், வேலையில் பெண்கள் நிறைய உண்டு.

கோயிலுக்குப் போய்த் திரும்பும் பெண்களுக்கும் இந்த நெருக்கடி உண்டு.  தொன்மையான ஆலயங்களின் சுவரைத் தொட்டு, மட்டன் மற்றும் பரோட்டா கடைகள் அனுமதிக்கப்படுமாம்.  ஆனால், சுகாதாரமான கழிப்பிடம் அமைந்தால், தெய்வக் குற்றம் வந்து விடுமோ? பல அடுக்கு மாடி நவீன ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ்களில் லேபர் இன்ஸ்பெக்டர்களின் நிர்ப்பந்தத்தால், கழிப்பறை என ஒன்றிருக்கும். ஆனால், அது பூட்டப்பட்டு இருக்கும். அதன் சாவி எவரிடம் என்று எவருக்கும் தெரியாது.

அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் 60-க்கும் மேற்பட்ட ஆண்டுகள் நாம் நல்லாட்சி நடத்துகிறோம்.   காமராசர் ஆட்சி, அண்ணா ஆட்சி என்று வித்தாரமாகப் பேசும் வீரத் தலைவர்கள் தங்கள் தாய்மாரை, பெண்களை, பெண் பிள்ளைகளை, மச்சினிகளை, மருமக்களை, பேத்திகளை, சின்ன வீடுகளை, சின்னச் சின்ன வீடுகளை இந்த கழிப்பிடங்களில் அனுமதிப்பார்களா! அவர்கள் தேவலோகத்துக் குடிகள்.  நம் பெண்கள் என்ன, பன்றியின் குருளைகளா?

விரைவுப் பேருந்துகளை இயக்குபவர்களுக்கு இது பற்றி எந்தக் கவலையும் இல்லை. அவர்களுக்கு பணப்பெட்டி நிரம்பினால் போதும். அரசினருக்கு அதைவிட முக்கியமான பண்பாட்டுக் கவலைகள் பல உண்டு. ஆனால், ஓட்டுநர்களும் நடத்துநர்களும் நம்மைப்போல இலவச டி.வி. க்கும் 1 ரூபாய் அரிசிக்கும் உட்கட்சி சிபாரிசு பிடிக்கும் எளிய மனிதர்கள்.  பெண்கள் வேண்டினால், கூட்டுக் கொள்ளை நடக்க வாய்ப்பில்லாத காட்டுப் பிரதேசங்களில் சாலையோரம் வண்டியை ஒதுக்குவார்கள்.  ‘ஆண்கள் இறங்க வேண்டாம்’ என்று வேண்டுகோளையும் வைக்கிறார்கள் மனித நேயத்துடன். அவர்களைக் குறை சொல்வதற்கில்லை.

மேல் வலிக்காமல் கேட்பார்கள், ‘ஏன் ரயிலில் போவதுதானே?’ என.  45 நாட்களுக்குள் எந்த ரயிலில் ஐயா இடம் கிடைக்கிறது?  ரயிலில் பயணச் சீட்டுகள் கிடைக்காத போது அவசரமாகப் புறப்பட நேர்கிறபோது பேருந்துகளைத்தான் நாட வேண்டியுள்ளது யாவருக்கும். அதனாலென்ன? அரசியல் தலைவர்கள் பங்கேற்கும் விழா மேடைகளின் பின்பக்கம், குளிர்பதன கழிப்பறைகள் கட்ட பொதுப்பணித் துறைகள் தமது உடல், பொருள், ஆவியை தொடர்ந்து அர்ப்பணிக்கட்டும்!வந்தேமாதரம்!”

நண்பர்களே! நமக்கு நாம் தான் குரல் கொடுக்க வேண்டும்.  ஒரு நாஞ்சில் நாடன் சொல்லட்டும் என்று விடுவதிற்கில்லை.  அவர் ஒரு பெண்ணின் கணவராய், ஒரு பெண்ணிற்குத் தகப்பனாராய், சக மனுஷியின் மனுஷராய்க் கூறிவிட்டார்.  என் மகள்கள் படித்த பள்ளியில் பாத்ரூம் சென்று பார்த்து விட்டுப் போய் தலைமையாசிரியையிடம் சுத்தம் பற்றிக் கூறினேன்.  அவர்கள் மதித்துப் பாராட்டி, என்னை ஆறு வருடங்கள் பெற்றோர் சங்கத்தின் உறுப்பினராய் இருந்து அவ்வப்போது ஆலோசனை கூறுமாறு நியமித்தனர்.  ரூ.50,000-க்கு மேலாக பள்ளிக்கு ஃபீஸாக கட்டும் முன், பள்ளியில் கழிப்பறை எப்படி இருக்கின்றது பாருங்கள் தாய்மார்களே!  நம் பெண்கள் பற்றிய கவலை நமக்குத்தான் இருக்க வேண்டும் தோழியரே! ‘பாடசாலையில் சோதனைச் சாலை இருக்கிறதா?’ என்று பார்ப்பது போல் பாத்ரூம்களின் வசதியையும் கவனியுங்கள் தோழிகளே!

“அன்றெல்லாம் எங்கோ தொலை தூரங்களில் இருந்த சில கான்வென்ட்களைத் தவிர, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் பணமாகப் பயிராகி இருக்கவில்லை. இருந்தவை அரசினர், தனியார் அறக்கட்டளைப் பள்ளிகள் மட்டுமே. அங்கு பெண்களுக்கு மூத்திரம் போக, தோள் உயரத்துக்குக் கட்டை மண் சுவர் அல்லது ஓலை நிரைசல் மறைப்பு. ஆனால், வயதுக்கு வந்த பெண்களுக்கு அது போதவே போதாது என்ற உண்மை கோடைக் காலத்து உச்சி வெயில் போல இன்று தீயாகக் கொளுத்துகிறது. அன்று பெண்கள் கல்வியைத் தொடர முடியாமல் போனது எத்தனை பெரிய தேசிய நட்டம்.?

14 வயதில் பெண்கள் வயதுக்கு வருவது ஆரோக்கியமாகக் கருதப்பட்டது.  இன்று பெண் பிள்ளைகள் எட்டு வயது முதலே வயதுக்கு வருகிறார்கள். காரணங்களென ‘போஷாக்கான உணவு, தேவையற்ற அலோபதி மருந்துகள், நோய் வராமல் இருக்கவும்,  கொழுக்கவும், கோழிகளின் உணவில் சேர்க்கும் வேதிகைகள்’ என அடுக்கிக் கொண்டு போவார் மருத்துவர்.  இத்தனை சிறு பருவத்தில் பருவம் எய்துவது ஆரோக்கியமானதல்ல என்றும் கூறுகிறார்கள். ஐந்தாவது படிக்கும் மாணவி, 28 நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய்ச் சுழற்சிக்கு ஆட்பட வேண்டியுள்ளது.

பெரும்பாலான பள்ளிச் சிறுமிகள் மூத்திரம் போவதற்கே சுகாதாரமான சூழல் இல்லாத போது, மாதவிடாய்ச் சுழற்சியில் இருக்கும் பெண் பிள்ளைகள் என்ன செய்வார்கள்?.  இன்றும் பெரும்பாலான அரசு, நகர்மன்ற, மாநகர் பள்ளிகளில், கோயில்களில் பொங்கல் வைப்பதற்கு என அடுப்புக் குழிகள் வரிசையாக அமைக்கப்பட்டு இருப்பதைப் போன்றுதான் சிறுநீர் கழிக்க ஏற்பாடு உள்ளது.

வாசற் கதவு கிடையாது, தண்ணீர்க் குழாய் கிடையாது, தண்ணீர்த் தொட்டி இருந்தால் அதனுள் தண்ணீருக்குப் பதிலாகக் கண்டான் முண்டான் சாமான்கள் கிடக்கும்.  குழாய்கள் இருந்தால் அவற்றில் காற்று கூட வராது.  ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். பெண்களுக்கான உறுப்பு ஆண்களைப் போன்ற அமைப்பு அல்ல.  பெண்களால் மரத்து மூட்டில் ஒளிந்து நின்றும் போய்விட இயலாது.  உறுப்பைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.  மல வாசலுக்கும் சிறுநீர் வாசலுக்கும் இடைவெளி சில அங்குலங்களே! எளிதாக நோய்ப் பிடிப்பால் வாந்தி, வலி, காய்ச்சல், எரிச்சல், ரத்த நிறத்தில் விட்டு விட்டு சிறுநீர்ப் போக்கு எனத் தாங்க இயலாத துன்பம்.

பள்ளி வளாகங்களினுள் கோயில்கள் கட்டி வைக்கத் தெரிந்த நமக்குச் சுகாதாரமான கழிப்பிடங்கள் அமைக்கத் தெரியவில்லை.  கோயில் வளாகங்களில் பாத்திரக் கடை, பாசிக் கடை, பலகாரக் கடை, புரோட்டாக் கடை என அனுமதிக்கும் நமக்கு, பெண்கள் வசதி சுருதி சுத்தமான கழிப்பிடங்கள் அமைக்கத் தெரியவில்லை.

அணுகுண்டுகள் வெடித்தோம்;  ஏவுகணைகள் கண்டம் விட்டுக் கண்டம் பாயத் தயாராக உள்ளன. ‘சந்திராயன்‘ அனுப்பினோம். எண்ணற்ற வகையில் முன்னேறியுள்ளோம்.  மறுப்பதற்கு இல்லை. மகிழ்ச்சியாக இருக்கிறது.  தேசம் செம்மாந்து நிற்கிறது. ஆனால், சரிக்குச் சமமான இந்தியப் பெண் வாரிசுகளின் சுகாதாரத் தேவை பற்றிய நமது பொறுப்பு என்ன? தண்ணீர் வசதியற்ற, துர்நாற்றம் வீசுகிற, புழுக்கள் குதிக்கிற, நோய்க் கிருமிகள் மலிந்த, அசுத்தமான பள்ளி, கல்லூரிக் கழிப்பறைகள்தாம் அவர்களின் விதியா?”

கலைமாமணி ‘மகளிர் தினம்’ பற்றி என்ன கூறுகிறார் என்று பார்க்கலாம்.”மகளிரைப் போற்றவும் ஏற்றவும்தான் மகளிர் தினம் என்பது நமக்குப் புரியாமல் இல்லை.  நமது கவிதான், ‘மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்’ என்றான். நமது கவிதான், ‘மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டும் அம்மா’ என்றான். ஆனால், ‘ஆடுகள் தினம்’ கொண்டாடி, அதற்குப் பொட்டிட்டு மாலை சூடி, பாடி ஸ்ப்ரே தெளித்து, வெட்டி பிரியாணி சமைப்பது போன்ற வெட்கக்கேடுதான் சமூகத்தில் தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கிறது.

ஒரு பெண் கவி என்னிடம் கேட்டாள், ‘ஆண் கவிகள் துடி இடை, கொடி இடை, மின் இடை, இள வன முலை, பார இளநீர் சுமக்கப் பொறாத இடை, அபினி மலர் மொட்டுப் போன்ற முலைக் காம்பு, மூங்கில் தோள், ஆரஞ்சுச் சுளை அதரம், வண்டோ விழி, மேகக் கூந்தல், பச்சரிசிப் பல், அரவத்தின் படம் போன்ற, மான் குளம்பு போன்ற அல்குல், வாழைத்தண்டோ கால்கள், முன்னழகு, பின்னழகு, புலியின் நாக்கு போன்ற பாதம், வில்லினை நிகர்த்த புருவம், பால் நிற மேனி, பளிங்கு போல் மேனி, மாம்பழக் கன்னம் என்றெல்லாம் பெண்களை வர்ணிப்பது போல், நாங்கள் உவமை சொல்ல ஆரம்பித்தால் என்ன ஆகும்?’

எனக்கு உண்மையில் திகிலாக இருந்தது. உண்மைதான்.  குற்றால அருவியில் குளிக்கும் ஆண் உடல்களைச் சற்றுக் கூர்ந்து பாருங்கள். நமது வெளிப்பாடு என்னவாக இருக்கும்? உடனே கேட்பவர் கற்பைக் கேள்வி கேட்க மாட்டோமா?

நிறையச் சம்பளம் வாங்குகிற, மெத்தப் படித்த, விரைவில் வெளிநாடு போகும் தயாரிப்புகளில் இருக்கின்ற புது மணமகன் தனது இளம் மனைவியை அறிமுகப் படுத்திக் கேட்கிறான், “என் மனைவி எப்படியிருக்கிறாள்?..” என. அவள் என்ன புதிதாக அவன் வாங்கிய ஆடம்பர வாகனமா?  கட்டி முடித்துப் பால் காய்ச்சிய வீடா?  அவளுடனான ஓர் இரவை நண்பர்களுக்குத் தலைக்கு ஒன்றெனப் பகிர்ந்து அளித்தும் கேட்பாயா?”  படிப்பு, பணம், பதவி, பண்பாடு எல்லாம் நமக்கு எதைக் கற்றுத் தந்தன நண்பர்களே?

” ‘செம கட்டை’ எனும் வடமொழிக் கலப்பற்ற தூய தமிழ்ச் சொல்லை மொழிக்குள், பண்பாட்டுக்குள் உருவாக்கி உலவவிட்ட பீடங்கள் எவை?  பெண்ணை ஃபிகர் என்று சொல்லக் கூசவில்லையே நமக்கு? அதைச் சொல்லாத சேனல்கள், எஃப்.எம்.,  அலை வரிசைகள், சினிமாக்கள், பருவ இதழ்கள், விளம்பரங்கள் உண்டா நமது மொழியில்? எவனும் வெட்கமின்றிச் சொல்வானா, தன்னுடன் வரும் பெண்ணை ஃபிகர் என்று? இந்த ஃபிகர் என் தங்கை, அந்த ஃபிகர் என் மனைவி, பின்னால் வரும் ஃபிகர் என் தாய், முன்னால் வேகமாக நடக்கும் ஃபிகர் என் மகள் என எவனும் முன்மொழிவானா? அதை நீங்கள் வழிமொழிவீர்களா?

முட்டை போடும் பெட்டைக் கோழி, அடுப்பூதும் பெண், பொட்டப்புள்ள, பொட்டச்சி, ஊரான் சொத்து, இன்னொருத்தன் வீட்டுக்குப் போறவ, பொம்பள சிரிச்சாப் போச்சு, உண்டி சுருக்குதல் பெண்டிர்க்கு அழகு’ எனும் பிரயோகங்கள் நம் நாடு தவிர வேறெங்கும் உண்டா? மகளிர் தினம் கொண்டாட நமக்கு என்ன யோக்கியதை? அல்லது, மக்கள் சம்பந்தம் அற்ற அரசு விழாவா இது! சுதந்திர தினம், குடியரசு தினம், கொடி தினம், தியாகிகள் தினம், தேசிய ஒருமைப்பாட்டு தினம், எய்ட்ஸ் ஒழிப்பு தினம், சாலைப் பாதுகாப்பு தினம், சிறு சேமிப்பு தினம், ஆசிரியர்கள் தினம், தாய்மார்கள் தினம், உலகச் சுகாதார தினம் போல?

பிறகென்ன, மகளிர் தினக் கொண்டாட்டங்கள்? தாய்க்கு ஒளித்த மகளின் சூல் போலத் தெரியவில்லையா? முதுகில் வேல் வாங்கிய கோழைக்குப் பால் கொடுத்த தாய், தன் மார்பை அறுத்து எறிவேன் என வெஞ்சினம் உரைத்த சங்கப் பாடல் உண்டு நம்மிடம்.  ஐம்பதாண்டு கால அரசியல் வரலாற்றில், கேட்டுக் கேட்டுக் காது புளித்துப் போன பாடல். எல்லோர்க்கும் பொதுவாக என்னிடம் ஒரு கேள்வி உண்டு. அங்ஞனம் அறுத்து எறிவது என ஆரம்பித்தால், அறுக்கப்படாத தாய் மார்புகள் எத்தனை மிஞ்சும் நம்மிடம்?

பெண்கள் ஒன்றை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.  நீங்கள் எவருக்கும் இளைத்தவரோ சளைத்தவரோ அல்லர். எவரிடமும் உமது உரிமைக்கு யாசிக்கும் நிலையிலும் இல்லை. தங்கத் தட்டில் வைத்து பட்டுத் துணி பொதித்து, தாமாக ஆண்கள் நீட்டவும் மாட்டார்கள்.

வில் வண்டி வைத்திருப்பவர்கள், காளைகளை அடித்து ஓட்ட சாட்டைக் கம்பு வைத்திருப்பார்கள்.  சாட்டையின் நுனியில் பட்டுக் குஞ்சம் கட்டி இருப்பார்கள்.  அந்தப் பட்டுக் குஞ்சம் காளைகள் கண்டு ஆனந்திக்க அல்ல.  அடித்தால் வலிக்கும்; முதுகில் தடம் பதியும். துடித்துத் துள்ளிக் காளைகள் ஓட வேண்டியது இருக்கும்.  அந்தக் குஞ்சம் போலத்தான் இந்த மகளிர் தின மாயைகளும்.

பிறகு எதற்காக, யார் உத்தரவுக்குக் காத்து நிற்கிறீர்கள்? வீடு தேடுவது என்பது சாமான்யமான விஷயம் அல்ல. வாடகைக்கு இலக்கு, காப்புத் தொகை வைப்பு தவிர, மற்றும் பல இன்னல்கள் உண்டு. பார்ப்பனர், மற்றவருக்கு வீடு தருவதில்லை. இஸ்லாமியருக்கு இந்துக்கள் வீடு தர மாட்டார்கள். மும்பையில் எனது ஆருயிர் நண்பன், இரு சிறுநீரகங்களும் பழுது பட்டு இறந்துபோன, ‘ஞானபாநு’ எனும் பெயரில் எழுதிய ‘அசதுல்லா கான்’ வாழ்ந்திருந்தபோது, வீடு தேடி அலைந்து கால் நகக்கண்களில் குருதி கசிந்ததுண்டு.

சாதி இந்து, தலித்துக்கு வீடு தர மாட்டார். கிறித்துவர் தமக்குள்ளும் ரோமன் கத்தோலிக்கா, புராட்டெஸ்டென்ட்டா என பேதம் பார்ப்பார். மாமிசம் சமைத்தால் சிலரும், சமைக்காவிடின் வேறு சிலரும் வீடு தருவதில்லை” என்று, வாடகை வீடு தேடுவது பற்றிய இன்னல்களையும் பலவித வதந்திகள் பற்றியும், ‘அக்கரை பச்சை’ எனும் கட்டுரையில் அக்கரை மோகத்தின் வெளிப்பாடாய் 60 வயதுக்கு மேற்பட்டவர் என்னதுவெனத் தெரியாது உண்ட நூடுல்ஸ் பற்றியும் கூறி விளக்கி இருக்கிறார்.

“ஈழத் தமிழனுக்கு நம்மால் என்னதான் செய்ய முடியும் என்று கேட்கிறார்கள்.  வேண்டுமானால் அவர்கள் துன்பத்துக்கு இரங்கி, முகத்தில் சற்றும் வாட்டமின்றி அறிக்கை வெளியிடலாம்,  கவிதை எழுதலாம், கையெழுத்துப் போராட்டம் நடத்தலாம், தந்தி அடிக்கலாம், எஸ்.எம்.எஸ்., அனுப்பலாம்,  மனிதச் சங்கிலி நடத்தலாம்,  அடையாள ஆறு மணி நேர உண்ணா நோன்பு இருக்கலாம், சட்டையில் கறுப்புத் துணி குத்திக் கொள்ளலாம், ஊர்வலம் போகலாம், கோஷம் போடலாம்…. மறுநாள் கோலாகலமாக ‘ஹேப்பி திவாலி’ சொல்லிக் கொண்டாடவும் செய்யலாம்.

வேற்று மாநிலத்தவர் நம்மை வேடிக்கை பார்க்கிறார்கள். சீதையை ராவணன் சிறையெடுத்துச் சென்ற போது தடுத்துப் போரிட்ட ‘சடாயு’ என்ற பறவைக்கரசுவை வாளால் துணித்து வீழ்த்துகிறான் ராவணன். சடாயு இறந்தபோது ராமன் பாடிய இரங்கற் பா ஒன்றுண்டு கம்பனிடம்.

‘என்தாரம் பற்றுண்ண என்தாயைச் சான்றோயைக்

கொன்றானும் தின்றான் கொலையுண்டு நீ கிடந்தாய்

வன்தாள் சிலை ஏந்தி வாரிக்கடல் சுமந்து

நின்றேனும் நின்றேன் நெடுமரம் போல் நின்றேனே’

இதற்கு ‘எனது தாரம் கவர்ந்து, என் தாய் போன்ற சான்றோனாகிய சடாயுவைக் கொன்றவனும் நின்றான், கொலைப்பட்டு நீ கிடந்தாய், வலிய பெரிய வில் ஏந்தி, கடல் போல் அம்புகள் சுமந்து நானும் நின்றேன், நெடுமரம் போல் நின்றேன்’ என்பது பொருள்.

ஆம், ஈழத் தமிழன் மீது உண்மையான அக்கறை கொண்டவர் கையாலாகாமல் பார்த்துக் கொண்டு நிற்கிறார்கள். ஆனால், தமிழ் எங்கள் மூச்சு! தமிழ் எங்களுக்குத் தங்கக் காசு! வாழ்க தமிழ்!  “என்று ஈழத் தமிழரைப் பற்றிய கட்டுரை பகர்கின்றது.

கிராமத்தில் குரூரமான சொலவம் ஒன்று உண்டு; ‘மலடி, அடுத்த வீட்டுக் குழந்தையின் அணவடைத் துணியை மோந்து பார்த்தது போல!’ என்று, பாரம்பரியப் புகழ் மிக்க நினைவுச் சின்னங்கள் ஏதுமற்ற பல நாட்டினரும் தமது சின்னச் சின்ன வரலாற்றுச் சின்னங்களைக் கூடப் போற்றிப் பாதுகாத்து வெளிநாட்டுப் பயணிகளுக்குக் காட்டிக் காட்டி மகிழ்கின்றனர். தொல் வரலாறு உடைய பிற நாட்டினர், ஆயிரக்கணக்கான ஆண்டுப் பழமையுடைய தமது இடிபாடுகளைப் பொன்னே போல், கண்ணே போல் காத்துப் பராமரிக்கின்றனர்.

இந்திய நாடு சிற்ப, ஓவிய, கட்டக் கலைச் செல்வங்கள் உடையது.  ஆனால், நமது குடிமக்கள் பலருக்கும் அதன் விலை மதிப்பற்ற தன்மை பற்றி போதுமான அறிவு இருக்கிறதா என்ற ஐயம் எழுகிறது.  முன்னால் கிடக்கும் கொற்கை நல் முத்துகளை ஏதோ வெண்ணிற மல்லாட்டைப் பயிறு என்று எண்ணி, இரண்டிரண்டாக உடைத்துத் துப்பும் பன்றிகள் போல், நமது கலைச் செல்வங்களை உடைத்தும், உரித்தும், சுரண்டியும், தட்டியும் பார்த்து, பொறுப்பற்று அழித்துக் கொண்டு இருக்கிறோம்.

சொந்த வீடு கட்டி 25 ஆண்டுகள் ஆகிவிட்டன.  ஆனால் புதிதாக ஓர் ஆணி கூட அடித்ததில்லை என்றும், சுவருக்கு வண்ணம் பூசி ஏழு ஆண்டுகள் ஆகிவிட்டன.  இன்னும் நேற்று அடித்தது போல் புதுக் கருக்குடன் வைத்திருக்கிறோம் என்றும் பெருமை பேசுபவர் உண்டு நம்மிடம்.

கற்சிலைகளின் கொங்கைகளின் மீது, பிறப்புறுப்புகள் மீது ஏன் இத்தனை காழ்ப்பு என்பது புரிவதில்லை. கன்னியாகுமரி மாவட்டத்தில் ‘சிதறால்’ மலையில் அற்புதமான கலைச் சிற்பங்கள் உண்டு.  அதிகமாக யாரும் அறிந்திராத பிரதேசம். அது சுற்றுலா தலமாக அறிவிக்கப்பட்ட பிறகு, நல்ல சிற்பங்களின் முலைகள் உடைத்துப் பெயர்க்கப் பட்டுள்ளன.  இதுவரை பல இடங்களில் பல்வேறு சிலைகளின் முலைகள், மூக்குகள், கரங்கள், வீரர்களின் வாள்கள், யாளிகளின் துதிக்கைகள், யானையின் தந்தங்கள், கால்கள், தலைகள் என கண்டபடி உடைக்கப் பட்டாயிற்று.

வரலாற்றில் நமது கலைச் செல்வங்கள் மீது மதங்கள் நடத்திய அழிவு ஒரு புறம் எனில், கற்ற இளைஞர் செய்யும் சேதங்கள் மறு புறம். தமது சொந்த வீட்டில், தாயின் படத்தின் மீது கீழான சொற்களை எவராலும் எழுத இயலுமா?

நமது பள்ளிகளில், கல்லூரிகளில், கலைச் செல்வங்களைப் பாதுகாப்பது பற்றியும் ஆசிரியர்கள் சொல்லித் தர வேண்டும். ‘அப்பா உபயோகித்த கைக்கடிகாரம், பேனா, சைக்கிள்’ எனப் பெருமை பேசும் மனிதன்,  ஆயிரம் ஆண்டுகள் முன்பு நமது மூதாதையர் விட்டுச் சென்ற பொக்கிஷங்களைப் பாதுகாக்க வேண்டாமா?  கடவுள் மறுப்பு என்றாலும் கூட, கலைச் செல்வங்களைச் சேதம் செய்தல் தகுமா? எல்லாம் அரசாங்கமே செய்ய வேண்டும் என எதிர்பார்ப்பது சரியா?

புறநானூற்றில் பொன்முடியார் பாடல் ஒன்று.

‘ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே

சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே

வேல்வடித்துக் கொடுத்தல் கொல்வதற்குக் கடனே

நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே

ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக்

களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே!’

ஆம், களிறு எறிந்து பெயர்தல், யானையை வேல் எறிந்து திரும்புதல் வீரனுக்குக் கடமை. கல் எறிந்து பெயர்தல் அல்ல!” என்று உள்ளம் நொந்து உரைக்கிறார் நாஞ்சில்.

ஐ.டி வாழ்க்கையின் அவஸ்தைக்காகவும், அவர்களும் நம் பிள்ளைகள் தானே என இரங்கும் தகப்பனாய்க் காணப்படுகிறார், இக்கட்டுரையில் நாஞ்சில் நாடன். தாலி, கொளிமடம், தாய்க்கோழி, பிழையற மொழிதல், காதலினால் மானுடர்க்கு கலவி உண்டாம் எனக் காதலின் பயனைப் பகிர்ந்து நாட்டார் கலைகள் பற்றி விவரித்து இந்திய விவசாயிக்கு வருகிறார் ஆசிரியர். “விவசாயி என்பவன் பயிர் வளர்ப்பவன். எனவே, உயிர் வளர்ப்பவன். ‘சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்’ என்றும் ‘உழவே தலை’ என்றும் சொல்கிறார் திருவள்ளுவர். விவசாயியின் ஆதாரம் எனப்படுபவை மண்ணும், மழையும், சூரியனும், காற்றும், ஆகாயமும். எனவே, விவசாயி பஞ்சபூதங்களையும் மதித்தான், தொழுதான். இது சகல உலகத்து உழவர்க்கும் பொதுவானது.

பயிர் அவனுக்கு உயிர் எனும்போது, அது தாய், தெய்வம், தோழன், காதல் மனையாட்டி, பிள்ளை என சகலத்தையும் அடக்கித்தான். உழைப்பே அவனுக்கு தெய்வம். உழைப்புக்கான பயனை மட்டும் அவன் எடுத்துக்கொள்கிறான். விவசாயி என்பவன் வியாபாரி அல்லன். நீங்கள் உழவர் சந்தைக்கு வழக்கமாகப் போகிறவர் என்றால், சந்தையில் உட்கார்ந்து விற்பனை செய்பவரைப் பார்த்தால் தெரிந்துபோகும், அவர் உழவரா, வியாபாரியா என்பது. விவசாயி, பக்காப்படிக்கு முக்காப்படி அளக்க மாட்டார். சொத்தைக் கத்தரிக்காயோ, உடைந்த தக்காளியோ கண்ணில் பட்டால் அவரே எடுத்து மாற்றுவார். வியாபாரி எனில் கண்டும் காணாமல் நிறுத்துப் போடுவார்.

விளைந்த நெல் அறுவடையாகி வீடு வந்து சேர நான்கு அல்லது ஐந்து மாதங்கள் ஆகும். அறுக்கு முன் பெருமழை பெய்தால், வைக்கோல் கூடக் கிடைக்காது. வாழை நட்டுக் குலை வெட்டு முன் கொடுங்காற்று வீசி இரண்டாக முறிந்து போனால், உழைப்பு போச்சு. விவசாயிக்கு என்ன பாதுகாப்பு? நகரத்து மனிதனுக்குத் தினமும் ஏழெட்டு இன்ஷூரன்ஸ் கம்பெனிகள் தொலைபேசியில் தொடர்பு கொள்கின்றன. விவசாயியிடம், ‘இருக்கிறாயா, செத்தாயா’ என்று கூட எவரும் கேட்பதில்லை. பஞ்ச காலங்களில் அவன் பம்மிப் பம்மி நடமாடுகிறான்.”

‘நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை’ கம்பனின் வரிகள். அதை கட்டுரைத் தலைப்பாக்கியிருக்கிறார் நாடன்.

காடுகள் நிறைந்து இருந்தது நம் நாடு!

‘மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்

காடும் உடைய தரண்.’ என்பது திருக்குறள்.

ஆங்கிலேயர் வரவுக்கு முன் நம்மிடம் நிலப் பிரப்பில் 35 சதவிகிதம் காடுகள் இருந்தன என்கிறார்கள் பூகோள அறிஞர்கள். 200 நெடிய ஆண்டுகள் நம்மை ஆண்ட ஆங்கிலேயர் தேசம் விட்டு ஓடியபோது, காடுகள் 26 சதவிகிதமாகக் குறைந்திருந்தது. இன்று நம்மிடம் இருக்கும் காடுகளின் பரப்பு 15 சதவிகிதமே!ஆங்கிலேயர் 200 ஆண்டுகளில் அழித்த காடுகளின் பரப்பு ஒன்பது சதவிகிதம் எனில், சுதந்திர இந்தியாவில் 60 ஆண்டுகளில் அழிபட்ட காடுகள் மேலும் 11 சதவிகிதம். அதை பாகிஸ்தானிய தீவிரவாதிகள் வந்து அழித்து விட்டுப் போகவில்லை. நமது ஆண்ட வர்க்கம், அதிகார வர்க்கம், வணிக வர்க்கம்தான் அழித்தது என்று சொல்லக் கூசுகிறது நமக்கு.

காடு அழிவது பற்றி இவ்வளவு கவலை எதற்கு? என்றொரு கேள்வி பலருக்கும் ஏற்படுவதுண்டு.காடு என்பது மனித குலத்துக்குத் தண்ணீர் தருவது. ஆயிரக்கணக்கான மரம், செடி, கொடிகள், விலங்குகள், பறவைகள், பிற உயிரினங்கள், நுண்ணுயிர்கள் எனக் காபந்து செய்து வைப்பது காடு.

காடுகளில் மனிதர்கள் வாழ்கிறார்கள். அவர்களைக் குறிக்க மெத்தப் படித்த நாகரிகர்களான நாம் பயன்படுத்தும் சொற்கள் காட்டாளன், காட்டு மனிதன், காட்டுமிராண்டி, காட்டான் என்பவை. ஆனால், அவன் காட்டைக் காத்தான்; நாம் அழித்துக் கொண்டு இருக்கிறோம்” என்று கவலைப் படுகிறது இக்கட்டுரை.

“தீதும் நன்றும்” இக்கட்டுரைத் தொகுப்பு மூலமாய், கலைமாமணி திரு.நாஞ்சில் நாடன் அவர்கள், ஒரு தகப்பனாய், ஒரு பெண்ணின் தேவை மதித்துணர்ந்து எடுத்துரைக்கும் ஆணாய், சமூக அக்கறையாளனாய், இயற்கையின் காவலனாய், விவசாயியின் மகனாய், வரலாற்றுச் சின்னங்கள் காப்பாளனாய், சுவைஞனாய், தாய் மொழிப் பற்றாளனாய், படைப்பாளனாய்ப் பலப்பல வடிவம் எடுத்து இருக்கிறார்.

“தொடக்கம் முதலே கிடைத்த வாசக ஆதரவு, உற்சாகம் ஊட்டுவதாக இருந்தது. உடனுக்குடன் கிடைத்து வந்த பின்னூட்டங்கள் ஆக்கப் பூர்வமான சிந்தனைக்கு உதவின. இட நெருக்கடிக்காக ஒன்றிரண்டு சொற்றொடர்களை நீக்கியதன்றி எனது கருத்தோட்டத்தில், சுதந்திரத்தில் ஆனந்த விகடன் எந்த விதத்திலும் குறுக்கிடவே இல்லை. இது எனது வாக்குமூலம். சில வேளைகளில், எழுதுவதற்காக நான் குறித்திருந்ததுவும், அவர்கள் கற்பித்ததுவும் அபூர்வமாக ஒன்றாக இருந்தன!

எனது எழுத்துப் பயணத்தில் என்றுமே நான் வாசகனின் தேவைக்கு எழுதியவன் இல்லை என்றாலும், எழுத எழுத இந்தக் கட்டுரைத் தொடருடன் என்னோடு சேர்ந்து பயணமான வாசகர் தொகை பெரிது. பேரிதழ்களில் எழுதுவதன் பண்பும் பயனும் அது. கிழமை தோறும் லட்சக் கணக்கான வாசகரைச் சென்று சேர இருக்கிறோம் எனும் உணர்வு எனது பொறுப்பை அதிகரித்தது. சில வாரங்களிலேயே எனது தடம் தெரிந்துபோனது” என்கிறார் நாஞ்சில் நாடன்.

தமிழ் இலக்கிய உலகில், பொருள் பொதிந்த சொல்லாலும், வசீகர எழுத்து நடையாலும் அழுத்தமான தடம் பதித்தவர் நாஞ்சில் நாடன். எந்த ஒரு பிரச்னையையும் சமூக அக்கறையோடு அலசி, அதனை விவாதப் பொருளாக்கி விடும் ஆற்றல் இவரது எழுத்துக்கு உண்டு. எழுதுவது கதையாயினும், கட்டுரையாக இருப்பினும், கவிதையாகப் பூத்தாலும் அதில் தனி முத்திரையைப் பதிக்கத் தவறாதவர்.

” ‘தீதும் நன்றும்’ என்ற தலைப்பில் ஆனந்தவிகடனில், ஒவ்வொரு வாரமும் நாஞ்சில் நாடன் எழுதிய கட்டுரைகள் ஒவ்வொன்றும், அரசியல் மற்றும் சமூக அந்தஸ்து பெற்று, வாசகர்களிடையே விழிப்பு உணர்ச்சியை ஏற்படுத்திய கட்டுரைகள்! அவற்றின் தொகுப்பே இந்த நூல்” என்று புகழ்கிறார் விகடனின் ஆசிரியர்.

நாஞ்சில் நாடன் இலக்கியத் தடத்தை கனவில் காண்கிறார். இந்நூலைத் தன் ஆன்மத் தேடலின் நாயகியான ‘பச்சை நாயகி’க்குக் காணிக்கையாக்குகிறார்.

“இவர்களில்———————– திருவருள் என்பீர்களா?” என்று வினவும் நாடனின் வினாவிற்கு என்ன விடை?

 

படத்திற்கு நன்றி.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.