சித்திரை சிங்கர்.

தன்னை சரியாக வளர்த்து, ஒரு நல்ல படிப்பு கொடுத்து சமுதாயத்தில் ஒரு நல்ல மனிதனாக உருவாக துணை இருக்கும் பெற்றோரை பராமரிக்காத பிள்ளைகளுக்குத் தண்டனை என்பது கண்டிப்பாக வழங்கப்பட வேண்டியதுதான். இதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், எத்தனை பெற்றோர்கள் இப்படி தனது கடமையைச் செய்து வழிகாட்டியாக இருக்கிறார்கள் என்றால் விரல் விட்டு எண்ணி விடலாம்.

இப்போது உள்ள பெற்றோர்களில்(முதியவர்கள்) பெரும்பாலானோர் தனது மூதாதையர்களின் சொத்துக்களை வைத்துக் கொண்டு அனுபவித்துக் கொண்டு ஆட்டம் போட்டவர்கள்தான் அதிகம். அப்படிப்பட்ட வழி முறையில் வந்த பிள்ளைகள் எப்படி தனது பெற்றோர்களை வைத்து பார்ப்பார்கள் என்று நம்பிட முடியும் ?

மேலும், அப்போ எல்லாம் ஒரு குடும்பம் என்றால், ஒரு குடும்பத்தில் ஒரு தாத்தா பாட்டி,  அம்மா அப்பா, பிள்ளைகள் என்று ஒரு வரை முறைக்குள் இருக்கும். நமது பிள்ளைகளுக்கும் பிறந்து வளரும் போது,வளர்கின்ற குடும்பச் சூழ்நிலையின் காரணமாக, இயற்கையாகவே ‘நம்ம அப்பா,அவுங்க அம்மா அப்பாவை வைத்து வாழ்கிறார்கள் அது போல, நாமும் நமது அம்மா அப்பாவை வைத்து கொள்ள வேணும்.’  என்ற உணர்வுகள் தானாகவே தோன்றும் வகையில் குடும்ப வாழ்க்கை அமைந்து இருந்தது.

இப்போ, இப்படிப்பட்ட சூழ்நிலையில் உள்ள குடும்பங்கள் ரொம்ப கம்மி என்பதுதான் உண்மை. இப்போது உள்ள குடும்பங்களில் அப்பா அம்மா பிள்ளை என மூவருடன் இருக்கும் குடும்பங்கள்தான் அதிகம். சில குடும்பங்களில் பிள்ளைகள் அதிகம் இருந்தாலும், அவர்களின் குடும்ப வருமானம் காரணமாக வறுமையான சூழ்நிலையில் சிரமத்துடன் வாழும் சூழ்நிலைதான் இருக்கும். அப்படிப்பட்ட குடும்பத்தில் கூட பெற்றோர்கள் தனது இயலாமையை ஒப்புக் கொள்ள முடியாமல் குடும்ப தலைமைப் பொறுப்பினையும் விட முடியாமல், பிள்ளைகளை குறை சொல்லிக் கொண்டே காலம் தள்ளுவதை காண முடிகிறது.

இப்படிப்பட்ட குடும்பத்தில் உள்ள பெற்றோர் வீட்டில் உள்ள மூத்த பிள்ளை ஓரளவுக்கு சம்பாதிக்கும் நிலையை அடைந்ததும், அவனை கலந்தாலோசித்து எல்லா குடும்பச் செயல்களையும் செய்தால், அந்தப் பையனுக்கு பொறுப்பு கண்டிப்பாக வரும். அதை விட்டு விட்டு குடும்பத்தில் மூத்த பையன் என்ற ஒரே காரணத்துக்காக பொறுப்புக்கள் அனைத்தையும் அவன் தலையில் கட்டுவது, என்பது பொறுப்பில்லாத பெற்றோரின் செயலாக கருதப்படும். இப்படிப்பட்ட நிலையில் உள்ள பையன் தனது தந்தையின் மீது எப்படிப்பட்ட பாசம் வைப்பான் அல்லது உருவாகும் என்பது யோசிக்கப்பட வேண்டியதுதான்.

ஆனால், இப்போதுள்ள பிள்ளைகள் ரொம்ப நல்ல விதமாக சிந்தித்துச் செயல் படுவதாகத்தான் எனக்கு தோன்றுகிறது. தன் குடும்பம் மனைவி, பிள்ளைகள் என செயல் படுவதில் வல்லவர்களாக உள்ளார்கள். அதே நேரத்தில் தனது பெற்றோர்களையும் கை விட்டு விடுவதில்லை.

வசதியுள்ளவர்கள் பெற்றோர்களை அவர்கள் வசிக்கும் இல்லத்தில் விட்டு விட்டு, தான் பக்கத்தில் தனிக் குடித்தனம் வந்து விட்டு, அவ்வப்போது பெற்றோரையும் கவனித்துக் கொள்வதில் வல்லவர்களாக, நல்லவர்களாக உள்ளார்கள். இதற்கு இப்போது இயங்கி வரும் அந்நிய நாட்டு அலுவலங்களின் செயல்பாடுகளும் முக்கியப் பங்கு வகிக்கிறது. இது ஒரு புறம் என்றாலும், நமது பெற்றோர்கள் மாறி வரும் சூழ் நிலைகளுக்குத் தகுந்தவாறு, கொஞ்சம் தன்னையும் மாற்றிக் கொள்ள வேண்டும்.

இப்போதுள்ள அவசரமான அலுவலகப் பணிகள் காரணமாக வீட்டில் வேலைக்குச் செல்லும் மகன்,மருமகள், பேரப்பிள்ளைகளின் பள்ளிக்கூடம் என அவரவர்களது பணிக்கு செல்லும் நேரம் முதலியவற்றைப் பார்த்து கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்து போக சில பெரியவர்களுக்கு மனமிருப்பதில்லை.

இந்த அட்ஜஸ்ட் செய்யும் தன்மை இருக்கும் இடத்தில் உள்ள பெற்றோர்கள் நெஜமாகவே சந்தோசமாக உள்ளார்கள். இந்த அட்ஜஸ்ட்மென்ட் இல்லாத இடத்தில்தான் பெற்றோர்கள் பிரச்சனையின் தன்மையை உணராமல், ‘தான் பிடித்த முயலுக்கு மூணு கால்’ என்ற பிடிவாதத்துடன் தானும் சந்தோசமாக இருக்காமல் உடனிருப்பவர்கள்யும் சந்தோசமாக இருக்க விடாமல் முதியோர் இல்லங்கள் உருவாக முக்கிய காரணமாக உள்ளார்கள்.

மொத்தத்தில், பெற்றோரைப் பராமரிக்காத பிள்ளைகளுக்கு தண்டனை என்ற நிலையில் சிந்திக்கும் போதும், தண்டனை வழங்கும் போதும், மேலுள்ள சந்தர்ப்ப சூழ்நிலைகளையும் நன்கு ஆலோசித்து ‘தண்டனையா…? அறிவுரையா…?’ என்று முடிவு செய்து செயல் பட வேண்டும் என்பதுதான் எனது ஆசை.

” தண்டனை என்றால் பிள்ளைக்கு…! அறிவுரை என்றால் பெற்றோருக்கு ….!”

என்ன சரிதானே?

படத்திற்கு நன்றி.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *