தேடியும் அள்ளிக் கொடுத்த அழகன்

0

மு​னைவர் கி.கா​ளைராசன் B.Sc, P.G.D.C.A., M.A., M.Phil., Ph.D.,

சிவகங்​கை மாவட்டம் தமறாக்கி கிராமத்தை பூர்வீகமாகக் கொண்ட முனைவர் திரு காளைராசன்,கா​ரைக்குடி அழகப்பா பல்க​லைக்கழகத்தில் உதவிப் பதிவாளராகப் பணி புரிகிறார்.தமிழில் M.A.., மற்றும் M.Phil.தமிழ் (திருப்பூவணம் திருக்​கோயில் ஆய்வு)Ph.D.,தமிழ் (திருப்பூவணப் புராணம் ஆய்வு) PGDCA – கணினியில் பட்டயப் படிப்பு ஆகியவைகளில் தேர்ச்சி பெற்றிருப்பதோடு. 1) திருப்பூவணக் காசி 2) திருப்பூவணப் புராணம் 3) புவனம் ​போற்றும் பூவணம் என்ற மூன்று நூல்க​ளை எழுதி ​வெளியிட்டுள்ளார்.

இவரது திருப்பூவணக் காசி என்ற முதல் நூல் திருப்பதி தேவஸ்தானத்தின் நிதியுதவி பெற்று அச்சிடப்பட்டு 24-09-2007 அன்று தவத்திரு குன்றக்குடிப் பொன்னம்பல அடிகளார் அவர்களால் திருப்பூவணநாதர் திருக்கோயிலில் வைத்து வெளியிடப்பெற்றது. இவரது கட்டுரைகள் தினபூமி, தினமலர், மஞ்சரி, தமிழ் மாருதம், செந்தமிழ்ச் செல்வி, ஓம்சக்தி, மெய்கண்டார், கண்ணியம் ஆகிய இதழ்களில் வெளிவந்துள்ளன.

ஆற்றின் குறுக்கே 1008 லிங்கம், ஆன்மிக அறிவியல் கட்டுரைகள் ,விஞ்ஞானத் தொலைகாட்சிப்பெட்டியும் மெய்ஞ்ஞானக் கோயில்களும் , திருக்குறள் ஆய்வுக் கட்டுரைகள் போன்று, அவருடைய பல கட்டுரைகள் பாராட்டுக்குரியவைகளாகும்.

 

——————————————————————————————————————————————————————————————————–

 

கல்வி நிறுவனங்கள் சிறந்த முறையில் நடத்தப்படுவதற்கு நிதியுதவி தேவையான போதும் அவர்கள் கேட்பதற்கு முன்பே  எந்தக் கல்வி நிறுவனத்திற்கு எவ்வளவு நிதியுதவி தேவைப்படுகிறது எனபதை அறிந்து கொண்டு, அதற்கேற்றாற்போல் அவர்கள் கேட்காமலேயே அள்ளி வழங்கும் வள்ளல் அழகப்பச் செட்டியார். அவரது இச்செயலைப் போற்றும்  வகையில்,  வள்ளல் அழகப்பரின் வாழ்த்துப் பாடலில், “தேடியும் அள்ளிக் கொடுத்த அழகன்” என்று ஒரு வரி வரும்.

ஒருநாள் மதியம், அலுவலக நண்பர்கள் ஒன்று சேர்ந்து உணவு உண்ணும் நேரத்தில் பேசிக்கொண்டே சாப்பிட்டுக் கொண்டிருந்தோம்.  இந்தப் பாடல் வரிகள் பற்றி அவரவர் கருத்தைக் கூறிக் கொண்டிருந்தனர்.

எனக்கு அப்போது காரைக்குடி அருகில் உள்ள அரியக்குடியில் நின்றருளும் திருவேங்கடவன் என்னைத் தேடிவந்து அள்ளிக் கொடுத்த பிரசாதம் நினைவிற்கு வந்தது!  நான் அந்த மறக்கமுடியாத நிகழ்ச்சி பற்றி எனது நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டேன்.

“ஏன்சார்,  கொண்டக்கடலைச் சுண்டல்  என்ன பத்துப் பைசா பெறுமா?, இதைப் போய்க் கொடுக்க முடியாதைக் கொடுத்தது போல்  பெரிசா கிடைக்காதது கிடைத்தது போல் பேசுகின்றீர்களே!”  என்ற கேட்டார் என் நண்பர் ஒருவர்.

“நண்பரே, எனக்குக் கிடைத்த பொருளின் பண மதிப்பு (Money value)  எவ்வளவு என்று நீங்கள் மதிப்பிடுகிறீர்கள்!, ஆனால் நானோ அப்பொருளின் ​பொருள் (Moral value) எவ்வளவு என்று தான் மதிப்பீடு செய்கிறேன்” எனறேன்.

“அவித்த கடலைக்கு அப்படியென்ன மதிப்பு?” என்றார் என் நண்பர்.

“அது வெரும் பத்துப்பைசா பொருளாக இருக்கலாம்! ஆனால் அது அந்தப் பரந்தாமனால் அருளப்பட்டது. அது எளிதில் எல்லோருக்கும் கிடைக்கக் கூடியதாக இருக்கலாம்! ஆனால் அது அந்த அரியக்குடி இறைவனால் அருளப்பட்டது. எல்லோருக்கும் கொடுக்கப்பட்டதே எனக்கும் கொடுக்கப்பட்டதாக இருக்கலாம்! ஆனால் அது தேடிவந்து “அள்ளி”க் கொடுக்கப்பட்டது. வேண்டியவுடன் வேண்டியது அருளப்பட்டது” என்றேன்.

எங்களுக்கும் இதுபற்றிக் கூறுங்களேன் என்றார் மற்றொரு நண்பர்.அவர் பொருட்டு அப்போது கூறியதை, எல்லோர் பொருட்டும் இப்போது இங்கே கூறுகிறேன். மெய்யன்பர்கள் படித்துப் பயன்பெற வேண்டுகிறேன். அரியக்குடித் திருவேங்கடவனின் திருவருளை வேண்டிக் கேட்டுப் பயன் பெற வேண்டுகிறேன்.

காரைக்குடி அருகில் உள்ள அரியக்குடியில் திருவேங்கடவன் நின்றருளுகிறார்.  ஒவ்வொரு ஆண்டும் திருப்பதிக்கு நடந்தே சென்று திருவேங்கடவனைத் தரிசித்து காணிக்கை செலுத்தி வந்தார் வணிகம் செய்யும் நகரத்தார் ஒருவர்.  வயோதிகம் ஏற்பட்ட காலத்தில் ஒருமுறை அவரால் திருவேங்கடம் செல்ல இயலவில்லை.  அவரது மனம் சொல்லொனாத துயரத்தில் ஆழ்ந்தது.  ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் சென்று வந்தோமே!  இந்த ஆண்டு சென்று வர முடியாமல் உடல் குன்றி விட்டதே என மிகவும் வருந்தினார்.

இறைவன் எம்பெருமான் திருவேங்கடவன் அவரது கணவில் தோன்றி”நீயே ஒரு கோயில்கட்டிக் கும்பிடு, அதில் எழுந்து அருளுவோம்” என்று திருவாய் மலர்ந்தருளினான்.  விடிந்ததும் விடியாததுமாக  கருடன் வலம் வந்து திருக்கோயில் கட்டுவதற்கான இடத்தைக் காண்பிக்க அந்த இடத்தில் திருவேங்கடவனுக்கு ஒரு திருக்கோயிலை கட்டுவித்துள்ளார்.  தான் பெற்ற உபதேசத்தையும் ஊராருக்கு உபதேசித்த ஸ்ரீராமானுஜர் வழிபட்ட திருமூர்த்தம் இங்கே உற்சவ மூர்த்தியாக உள்ளது. ​பொதுவாக “அழகன்” என்று முருக​னைத்தான் கூறுவர். ஆனால் “அழகன்” என்ற ​சொல் அந்த அரியக்குடி உற்சவருக்​கே ​பொருந்தும், அப்படி​யொரு அழகு.

எனது மகள் திருச்சியில் படித்துக் கொண்டிருந்த காலம் அது.  என்னுடன் பணியாற்றும் சகோதரிகள் இருவர் சனிக்கிழமை தோறும் அரியக்குடி சென்று திருவேங்கடவனைத் தரிசித்து வருவார்.  அன்று அவர்கள் என்னிடம், ”அண்ணே நீங்கள் ஒருமுறை அண்ணியையும், நித்தியாவையும் அழைத்துக் கொண்டு அரியக்குடி சென்று வழிபட்டு வாருங்கள்” என்றனர்.   தங்கைகள் இருவரது வழிகாட்டுதலையும் ஏற்று, நானும் எனது மனைவியும் எனது மகளும் திருவேங்கடவனைத் தரிசிக்க வேண்டி அரியக்குடி சென்றோம்.

வழிபாடு எல்லாம் முடித்துக் கொண்டு வெளியில் வந்தோம்.  வாயிலில் நின்ற பட்டாச்சாரியார் என்னிடம், “என்ன இன்றைக்கு வந்துள்ளீர்கள்! நாளைக்கு சாயங்காலம் வாருங்களேன்.  நல்ல விசேடமாக இருக்கும் என்றார்.  எனது மகளின் விருப்பத்திற்காக நானும் மகளுடன் மறுநாள் கோயிலுக்குச் சென்றேன்.

அன்று ஸ்ரீ கிருஷ்ணஜெயந்தி,கோயிலில் நல்ல கூட்டம்,உரியடி, வழுக்கு மரம் ஏறுதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் உற்சவரின் திருமுன் நடைபெற்று அர்ச்சனை ஆராதனை என்று  முடிந்தது.   நானும் என் மகளும் வீட்டிற்குச் செல்ல எத்தனித்தோம்.  அந்த நேரத்தில் கோயில் வெளி வாயில் அருகே உள்ள கருடன் உள்ள தூணின் அருகே ஸ்ரீகண்ணனனுக்கு நைவேத்தியம் செய்யப்பட்ட சுண்டலை எல்லோருக்கும் விநியோகிக்க ஆரம்பித்தார் ஒருவர். கூட்டம் என்றால் அப்படி ஒரு கூட்டம்,  அவர்களுள் பெரும்பாலும் விளையாட்டில் கலந்து கொண்ட வாலிபர்களும் இருந்தனர்.  எனவே பிரசாதம் வழங்கியவரைச் சுற்றிலும் கூட்டம்,  ஒரே தள்ளு முள்ளு!

நான் கோபுர வாயிலில் நின்று கோபுரத்தைப் பார்த்துக் கும்பிட்டு விட்டு வீட்டிற்குக் கிளம்ப எத்தனித்தேன். ஆனால் எனது மகள் என்னுடன் வரவில்லை.
கோபுர வாயிலிலேயே நின்று கொண்டிருந்தாள்.

“ஏம்மா! வரவில்லையா? ” என்றேன்.
“அப்பா, எனக்கும் நைவேத்தியப் பிரசாதம் வேண்டும்” என்று கேட்டாள்.

பெத்தபிள்ளை ஒத்தப்பிள்ளை, ஆசையோடு கேட்பதை வாங்கிக் கொடுக்காவிட்டால் வாழ்ந்தென்ன? வீழ்ந்தென்ன?

நானும் கூட்டத்தோடு கூட்டமாகக் கலந்து அந்தச் சுண்டலை வாங்க முயற்சித்தேன். யானைக் கூட்டத்தில் சிக்கிய மாடு போன்று என நிலைமை மாறியிருந்தது.   என்னைக் கசக்கி பிழிந்து விட்டார்கள்.  ஒருவாளி, இரண்டு வாளி என்று வாளிவாளியாகப் பிரசாதத்தை வழங்கிக் கொண்டே இருந்தனர்.  ஆனால், எனக்குக் கால்களில் மிதி வாங்கியது தான் மிச்சம்.  என்னால் முடிந்த அளவிற்குப் போராடிப் பார்த்தும், பொழுது போனதுதான் மிச்சம்.  அந்த சுண்டல் பிரசாதம் கிடைக்கவே இல்லை.

நான் கூட்டத்தில் கிடந்து மிதிபடுவதைப் பார்த்த என் மகள் என்னைத் திரும்பி வருமாறு கூப்பிட்டாள்.  நானும் கூட்டத்தை விட்டு வெளியேறி அவளிடம் சென்றேன்.  “என்னம்மா! இன்னும் சற்று முயன்றால் வாங்கி விடலாம், அதற்குள் ஏன் கூப்பிட்டாய்!” என்று கூறிச் சமாளித்தேன்.

“இந்தக் கூட்டத்தில் நீங்க என்னத்தே… … வாங்கினீர்கள், வாங்கப்பா போகலாம்! ” என்றாள்.  இந்தப் பிரசாதம் வாங்குபவர்கள் ஒரு வரிசையாக நின்று வாங்கக் கூடாதா? என்று அங்கலாய்த்துக் கொண்டாள்.

எனது மனம் எனது இயலாமையை எண்ணி வருந்தியது.கோயிலின் இடதுபுறம் சுற்றுச் சுவரில் உள்ள அனந்தசயனப் பெருமாளுக்கு கீழே எங்களது இரு சக்கர வாகனத்தை நிறுத்தி வைத்திருந்தேன்.  கோபுர வாசலைக் கடந்து வண்டி இருக்கும் இடத்திற்குச்  செல்ல வேண்டும்.அவ்வாறு கடந்து செல்லும் போது, கோபுர வாசலில் நின்று கொண்டு பெருமாளே! எனக்காகக் கேட்க வில்லை,என் பிள்ளைக்காகக் கேட்கிறேன்.

“சுண்டல்” என்று என் மகள் என்னிடம் கேட்கவில்லை!”பிரசாதம் வேண்டும்” என்றுதான் என்னிடம் கேட்டாள்!அவள் வயிறு நிறையச் சாப்பிடக் கேட்கவில்லை,அவள் வாயில் போட்டுக் கொள்ள வேண்டிக் கேட்கிறாள்.ஒரே ஒரு சுண்டல் கடலை அவளுக்குக் கிடைத்தால் கூடப் போதும், எனக்குக் கூட ஒன்றும் வேண்டியதில்லை,உன்னை வந்து வழிபட்டபோது நான் எதையும் வேண்டிக் கொள்ள வில்லை, இப்போது உன் கோயில் வாசலில் நின்று இதை வேண்டுகிறேன்,  அருள்கூர்ந்து அன்புடன்  அருளிச் செய்ய வேண்டும் என வேண்டிக் கொண்டேன்.

கோபுரத்தைப் பார்த்துக் கூம்பிட்டு விட்டு எனது மகளைப்  பின் தொடர்ந்து எனது வாகனம் இருக்கும் இடத்திற்குச் சென்றேன்.  இதோ, என் மகள், நிராசையோடு வண்டிக்கு அருகில் சென்று விட்டாள்.

எனது மனம் கனத்து இருந்தது.  மெதுவாக சுனங்கியபடி நடந்தேன். இன்னும் நான்கைந்து அடி நடந்தால் வண்டியை அடைந்திருப்பேன். வண்டியில் ஏறி வீட்டிற்குச் சென்றிருப்போம். அப்போது ஓர் ஆச்சரியம் காத்திருந்தது!

சுண்டல் பிரசாதம் விநியோகம் செய்து கொண்டிருந்த இடத்தில் தள்ளுமுள்ளு அதிகமானது.  பிரசாதம் வழங்குபவரால் அதைக் கிரமமாகக் கொடுக்க இயலவில்லை.  ஒரே நெரிசல், ஒரே கூச்சலும் குழப்பமுமாக இருந்தது.  பிரசாதம் கொடுத்துக் கொண்டிருந்தவரால் அந்தக் கூட்டத்தைச் சமாளிக்க இயலவில்லை.  ஆளை விட்டால்  போதும் என்பது போல், பெரிதாக சத்தம் செய்தார், நான் யாருக்கும் இனிமேல் கொடுக்க மாட்டேன் போங்கள் என்று பிரசாதம் வழங்குவதையே நிறுத்தி விட்டார்.  யாருக்கும் வழங்காமல் சுண்டல் இருந்த வாளியை மேலே தூக்கிப் பிடித்துக் கொண்டார்.  ஆனால், அவரை யாரும் சட்டை செய்ய வில்லை.  அசட்டையாக, எல்லோரும் வாளியைப் பறித்து விடுவார்கள் போல் தோன்றியது.

அந்த ஆள் அந்தக் கூட்டத்திலிருந்து தப்பிக்க வேண்டி, கூட்டத்தைவிட்டு வெளியே ஓடிவந்தார். ஓடிவந்து…..
​​தேடிவந்து ……

எங்களது வண்டியின் மீது அந்த வாளியை வைத்துக் கொண்டார். தனக்கும் வாங்குவர்களுக்கும் இடையே எனது வண்டி இருக்குமாறும் அமைத்துக் கொண்டு அவர் வண்டியின் மறு பக்கம் நின்று கொண்டார்.

இப்போது,  பிராசாதச் சுண்டல் இருந்த வாளிக்குள்ளே கையை விட்டு அள்ளினார், கொடுத்தார்.  இப்போது,

வண்டிக்கு மிக அருகில் நின்ற எனது மகள் தன் கைநிறைய  அதைப் பெற்றுக் கொண்டாள்.  எனக்கும் அவருக்கும் இப்போது இரண்டு மூன்று அடிகூட இடைவெளி இல்லை.   இருவருக்கும் இடையே என் வண்டிதான் இருந்தது.  எனது மகளை அடுத்து,  இரண்டாவதாக நான் கைகை நீட்டினேன்.  எனது இரண்டு கைகளும் கொள்ளமுடியாத அளவிற்கு பிரசாதத்தை அள்ளிக் கொடுத்தார்.

அவ்வளவுதான், அடுத்து அரை நொடி கூட ஆகியிருக்காது. அந்த அளவிலாத கூட்டம் அப்படியே ஓடிவந்து எனது வண்டியைச் சுற்றி நின்று கொண்டது.  அவரும் எல்லோருக்கும் உண்டு, ஒழுங்கா, வரிசையா வாங்க என்று கத்திக் கொண்டே பிரசாதத்தை கொடுத்துக் கொண்டே இருந்தார்.  ஆனால் எல்லோரும் தாங்கள் நிற்பதே வரிசை என்று நினைத்துக் கொண்டு ஒரே கும்பலாக கூட்டமாக நின்று வாங்க முயன்றனர்.

எனது மகள் தனக்குப் பிரசாதம் கிடைத்ததைப் பெருமையாக எண்ணி அதை உண்டு கொண்டிருந்தாள்.  நானும் கோபுரத்தைப் பார்த்தபடி என் வாயில் சிறிது சிறிதாக எடுத்துப் போட்டுக் கொண்டிருந்தேன்.

“அப்பா, பெருமாள் என்னை வெரும் கையோடு வீட்டிற்கு அனுப்பியதே இல்லை, அப்பா!”   என்றாள் என் மகள்.

அவளது அந்தச் சொல் எனக்கு ஒன்றும் அதிசயமாகத் தோன்ற வில்லை.  நான் வேண்டிக் கொண்டு சில வினாடிகள் கூட ஆகியிருக்காது.  கேட்ட இடத்திலிருந்து நான்கைந்து அடிகள்தான் நானும் நகர்ந்திருப்பேன்.

இன்னும் நான்கைந்து அடிகள் நடந்திருந்தால் எனது வண்டியை எடுத்துக் கொண்டு வீட்டிற்குக் கிளம்பியிருப்பேன். எனது வண்டியை நான் எடுக்க விடாமலும், எனது மகளுக்கு முதலாவதாகவும்,எனக்கு இரண்டாவதாகவும் எந்த விதமான கூட்ட நெரிசலும் இன்றி, இரண்டொரு வினாடிகளுக்குள்,
என்​னைத் ​”தேடிவந்து அள்ளிக் ​கொடுத்த அழகனின் திருவரு​ளை” எண்ணி எண்ணி வியந்து நின்றேன்.

இதன் பின்னர் எத்தனை ஆண்டுகள் ஆனாலும்,  உத்திரகோசமங்கை நாயகன் மேலணிந்த சந்தனத்தையே எனக்குத் திருவேங்கடவன்  வழங்கியிருந்தாலும், இன்னும் எத்தனை எத்தனையோ எனக்கு வழங்கியிருந்தாலும்,  இந்த நிகழ்வு மட்டும் நீங்காமல் என் உள்ளத்துள்ளே உறைந்தே உள்ளது.

அரியக்குடியை எண்ணும் போதெல்லாம், என் மனக்கண் முன்னே இந்த நிகழ்வே வந்து நிற்கிறது. ஸ்ரீ கிருஷ்ண ​​ஜெயந்தி வரும் நாள் எல்லாம் அந்த அரியக்குடி அழகன் ​தேடிவந்து அள்ளிக் ​கொடுத்த அந்த அற்புதமான நிகழ்​வே என் மனத்தில் நி​லைத்து நிற்கிறது.

நாயன்மார் திருவடியை மட்டுமே நாடியிருந்த நான், நானே அரியக்குடித் திருவேங்கடவன் திருவடிக்கே அடிமை செய்தேன்.  ஆழ்வார்கள் திருவடிகளுக்கும் அடிமை செய்தேன்.

கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா
கீதையின் நாயகனே கிருஷ்ணா கிருஷ்ணா

நீங்களும் கேளுங்கள்,கேட்டது கிடைக்கும் நினைத்தது நடக்கும்.

நமோ நாராயணாய நம.

கி.கா​ளைராசன்

http://www.freewebs.com/thirupoovanam/
திருப்பூவணப் புராணம் மற்றும் திருப்பூவணக்காசி  படியுங்கள்,

 

 

 

படத்திற்கு நன்றி

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.