செ. இரா.செல்வக்குமார்

இந்த வாரத்தின் வல்லமையாளர் அருமையான நற்பணிகள் ஆற்றிவரும் ஓர் இளம் பெண். மிகவும் பயனுடைய கணினி மொழிகள், கணினி நிரல்நுட்பங்கள் பற்றிய ஏழு (7) மிக அருமையான, மின்னூல்களைத் தமிழில் எழுதியுள்ளார் திருவாட்டி நித்தியா துரைசாமி (“நித்யா துரைசாமி”) அவர்கள்

இதில் இன்னொரு சிறப்பு என்னவென்றால், இந்நூல்கள் அனைத்தையும் இலவசமாக அனைவரும் தரவிறக்கிப் பயன்கொள்ளும்படியாகக் “கிரியேட்டிவ் காமன்சு” (Creative Commons) என்னும் உரிமத்தின் கீழ் வழங்கியிருக்கின்றார். இந்நூல்களை யாரும் திருத்தியோ விரிவாக்கியோ சுருக்கியோ மீண்டும் இதே உரிமத்தின் கீழ் அதன் விதிகளுக்குட்பட வெளியிடலாம். பிறருடன் பகிரலாம். வணிகநோக்கில் ஆசிரியர் பெயருடனும் இதே உரிமத்தின் கீழ் வெளியிடலாம். நித்தியா அவர்களின் நூல்கள் கணியம் வெளியீடுகளாக அவருடைய கணவர் வல்லமையாளர் திரு. த. சீனிவாசன் அவர்கள் நடத்தும் “Free Tamil EBooks” (இலவசத் தமிழ் மின்னூல்கள்) அமைப்பின் வழி வெளியிட்டுள்ளார்கள்.

திருவாட்டி நித்தியா அவர்கள் எழுதிய நூல்களைக் கீழே பட்டியலில் காணலாம்.


மேலுள்ள நூல்களைக் கணியம் வலைத்தளத்திலிருந்து பெற்றுக்கொள்ளலாம் (http://www.kaniyam.com/)

திருவாட்டி நித்தியா சென்னையில் பிறந்தவர். காஞ்சிபுரத்தில் உள்ள சிரீ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணினிப் பயன்பாடுகளில் இளங்களைப் பட்டம் (B.C.A) பெற்றார். காகினிசண்டு (Cognizant) நிறுவனத்தில், தரவுக்கிடங்கு செய்தேர்வுத் துறையில் (Datawarehouse Testing) பணிபுரிகிறார். அண்மையில் சிலகாலம் இங்கிலாந்தில் மாஞ்செசுட்டர் (Manchester) நகரத்தில் பணியாற்றிவிட்டு இப்பொழுது தாம்பரத்தில் இருந்து பணியாற்றுகின்றார்.

இவருக்கு எப்படி இந்த நூலாக்கப்பணிகளுக்கு உந்துதல் ஏற்பட்டது என்று கேட்டபொழுது அவர் கூறியது:

“எனது உந்துதலுக்கு காரணம் – நான் என்னை மேம்படுத்திக் கொள்வதற்காக எடுக்கும் பல முயற்சிகளில் ஒரு முயற்சியாக முதன் முதலில் ஒரேஒரு கணினி சார்பான நூலை தமிழில் எழுதினேன். அதற்கு மாபெரும் வரவேற்ப்பு கிடைத்தது. பலரும் “உங்களது நூல் பயனுள்ளதாக இருக்கிறது; தமிழில் படிக்கும் போதுதான் எங்களுக்கு முழுதாகப் புரிகிறது” என்று மின்னஞ்சல் அனுப்பினார்கள். அவர்களே நான் தொடர்ந்து பல நூல்களை எழுதுவதற்கு காரணமானவர்கள்.”

பாரதியாரின் கனவாகிய “தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும். பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும்” என்பனவற்றை நிறைவேற்றுவதில் தன்னுடைய பங்களிப்பு இருப்பதை மகிழ்வுடன் கூறுகின்றார்.


கணினிநுட்பம் பற்றி இதுகாறும் 7 மின்னூல்கள் எழுதிய நூலாசிரியர் நித்தியா துரைசாமி . படம் அவருடைய முகநூலிலிருந்து

இவர் தன்னுடைய முதல் நூலாகிய

எளிய தமிழில் MySQL என்னும் நூலை எழுதியதைப் பாராட்டி செல்வா-குமரி அறக்கட்டளை சார்பாக இவருக்கு உருபாய் 5000 பரிசு வழங்கப்பெற்றது. சென்னையில் செப்டம்பர் 30, 2013 இல் நடந்த தமிழ் விக்கிப்பீடியாவின் 10-ஆவது ஆண்டுநிறைவு விழாவில் இவருடைய மற்ற நூலுக்கும் உருபாய் 6500 பரிசு வழங்கப்பெற்று பாராட்டப்பெற்றார்.


கணினிநுட்பம் பற்றிய மின்னூல்கள் எழுதிய நூலாசிரியர் நித்தியா துரைசாமி அவர்கள் தமிழ் விக்கிப்பீடியாவின் 10-ஆவது ஆண்டுநிறைவு விழாவில் பரிசு பெறுகிறார் . படம் அவருடைய முகநூலிலிருந்து

திருவாட்டி நித்தியா அவர்களின் எதிர்காலத்திட்டங்கள் குறிக்கோள்கள் பற்றிக் கேட்டபோது, கீழ்க்காணுமாறு கூறினார், “எதிர்காலக் குறிக்கோள் – தமிழில் புத்தகங்களை புதுப்புது தொழில் நுட்பங்களுக்கு ஏற்ப எழுதிக்கொண்டே இருக்க வேண்டும். சிறந்த பேச்சாளராக ஆகவேண்டுமென்ற ஆசையும் உண்டு. எந்தஒரு கால கட்டத்திலும் நான் பார்க்கும் வேலையை விட்டுவிடாமல், அதில் பெரிய மேலாளர் பதவியை அடைய வேண்டும் என்றும் ஆசை. சமீப காலமாக நடனத்தில் ஈடுபாடு வந்துள்ளது. எனவே சிறப்பாக நடனம் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசையும் வந்துவிட்டது”. இப்படியாகப் பல நல்ல குறிக்கோள்களுடன் அருமையாக உழைத்து வருகின்றார்.

குறுகிய 3 ஆண்டுகளில் 7 அருமையான கணினிநுட்ப நூல்களை இவர் எழுதியதைப் பாராட்டி திருவாட்டி நித்தியா துரைசாமி (“‘நித்யா துரைசாமி”) அவர்களுக்கு ஆகத்து மாதம் 29 ஆம் நாளுக்கான இந்த வார வல்லமையாளராக அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றோம். கணவர் த. சீனிவாசன் அவர்களும் வல்லமையாளர் ஆகையால் இளம் வல்லமையாளர் குடும்பமாகவே ஆகிவிட்டனர். இவர்களுக்கு வியன் என ஒரு மகன் இருக்கின்றார்.

.

[சில வரிகள் சேர்த்துப் புதுப்பிக்கப்பட்ட நாள் செப்டம்பர் 7, 2017]

5 thoughts on “இந்த வார வல்லமையாளர்

 1. தொடர்ச்சியாய்க் கணித் தமிழ்ப் பணியாற்றும் வல்லமையாளர் நித்தியா அவர்களுக்கும் அவருக்கு ஊக்கமும் உற்சாகமும் ஊட்டும் சீனிவாசன் அவர்களுக்கும் உளமார்ந்த பாராட்டுகள்.

 2. நண்பர் செல்வக்குமார்,

  இந்தப் பெண் வல்லமையாளர் தமிழகத்தில் எங்கு பிறந்தவர், படித்தவர், எதனால் உந்தப்பட்டு கணித்தமிழில் பணியாற்றும் நிலைக்கு வந்தவர், இவரது எதிர்காலக் குறிக்கோள்கள் என்ன என்று மேலும் விபரமாய் எழுதினால் வாசகர் முழுமை யாக நித்தியாவைப் பற்றி அறிந்து கொள்ள வாய்ப்பளிக்கும்.

  நன்றியுடன்
  சி. ஜெயபாரதன்

 3. அன்புள்ள செயபாரதன் ஐயா, நீங்கள் கேட்டிருந்த செய்திகளைத் திருவாட்டி நித்தியா அவர்களிடம் கேட்டு, இப்பொழுது கட்டுரையில் சேர்த்திருக்கின்றேன். பார்க்கவும். உங்கள் ஆர்வத்த்துக்கும், கேள்விகளுக்கும் நன்றி. -செல்வா

 4. நண்பர் செல்வக்குமார்,

  இப்போது கட்டுரை முழுமையாக இருக்கிறது.

  நன்றி, பாராட்டுகள்.

  சி. ஜெயபாரதன்.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க