ஸ்ரீஜா வெங்கடேஷ்.

22.8.2011 அன்று, சென்னை தன்னுடைய 369-ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறது. இன்று தமிழகத்தின் தலை நகரமாக இருக்கும் நம் சிங்காரச் சென்னை தோன்றி கிட்டத்தட்ட 4 நூற்றாண்டுகள் முடிந்து விட்டன. வரலாற்று ஆசிரியர்கள் சென்னை அதை விடவும் பழமையானது என்று கூறுகிறார்கள். சென்னையின் புராதனத் தன்மையை நாம் புரிந்து கொள்வதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

ஆங்கிலேயர்கள், போர்த்துகீசியர்கள், மற்றும் பிரெஞ்சு மக்கள் நம் இந்தியாவுக்குள் நுழைவதற்கு முன்னமே சென்னை இருந்திருக்கிறது. சென்னை என்ற பெயரில் அல்ல, ஆனால் திரு மயிலை, திருவல்லிக்கேணி, திருவான்மியூர் என்று சிறு சிறு கிராமங்கள் இருந்திருக்கின்றன. கி.பி ஏழாம் நூற்றாண்டிலேயே மயிலை கபாலீஸ்வரர் கோயிலும்,  திருவல்லிக்கேணி பார்த்த சாரதி பெருமாள் கோயிலும் இருந்ததற்கான ஆதாரங்கள் நம் தமிழ் இலக்கியத்தில் காணப் படுகின்றன.

சைவ சமயக் குரவர்களான மூவர் (அப்பர்,சுந்தரர்,சம்பந்தர்) பாடிய தேவாரப் பாடல்களும், ஆழ்வார்கள் திருவல்லிக்கேணிப் பெருமாளை மங்களாசாசனம் செய்து பாடிய பாசுரங்களும், நமக்கு அக்கோயில்களின் தொன்மையை விளக்குகின்றன. திரு மயிலை, சம்பந்தர் பூம்பாவையை உயிர்ப்பித்த இடமாகச் சொல்லப் படுகிறது. அந்தக் கிராமங்கள் தவிர கடற்கரை ஓரமெங்கும் மீனவர்கள் குடிசைகள் திருவொற்றியூர் வரை நீண்டிருந்ததாக ஆங்கிலேயர்களின் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

முதல் முதலில் சோழ மன்னர்கள் தான் இப்பகுதியை ஆண்டதாகத் தெரிகிறது. இந்தப் பகுதி நிலம் முழுவதும் ‘இளம் கிள்ளி’ என்ற சோழ இளவரசனுக்கு உரியதாக இருந்திருக்கிறது. பின்னர் பல்லவர்களும், சேரர்களும், அதற்குப் பிறகு விஜய நகர அரசர்களும் ஆண்ட பூமியாக விளங்கியிருக்கிறது இந்த நிலப் பகுதி. இப்பகுதியை ‘தொண்டை மண்டலம்’ என்று அழைத்தனர். அரசன் தொண்டைமான் ஆண்ட பகுதி என்பதால் தொண்டை மண்டலம் எனப் பெயர் பெற்றது எனவும்,  இப்பகுதியில் தொண்டைக்காய்கள் (கோவைக்காய்கள்) நிறைந்து இருந்தமையால் இப்பெயர் பெற்றது எனவும் இரு மாற்றுக் கருத்துக்கள் நிலவுகின்றன.

விஜய நகர ஆட்சியின் பின் அந்த மன்னர்கள் நியமித்த தளபதிகள் சுதந்திர மன்னர்களாக ஆனார்கள். அவர்களுக்கு நாயக்கர்கள் என்று பெயர். அவர்களில் ஒருவர் தான் ‘சென்னப்ப நாயக்கன்’. அவரிடமிருந்து ஆங்கிலேயர்கள் இவ்விடத்தை வாங்கியதால் இந்த நகரத்திற்கு ‘சென்னப்பட்டணம்‘ என்று பெயர் கொடுத்தார்கள் என்பது சிலர் கருத்து.

சென்னை அக்காலத்தில்.

ஆனால் ஒரு சில வரலாற்றாசிரியர்கள் இதிலிருந்து மாறு படுகிறார்கள். “சென்னி” என்றால் தூய தமிழில் முகம் என்று பொருள். அந்தப் பெயருடைய பெருமாளும், சிவனும் எழுந்தருளியுள்ள காரணத்தால் தான் இந்தப் பெயர் ஏற்பட்டது என்பது அவர்கள் வாதம். இன்றும் ஜார்ஜ் டவுன் என்று அழைக்கப் படக்கூடிய (அதன் பெயர்க்காரணம் பின்னால் கூறப்படும்) நெரிசல் மிகுந்த பகுதியில் சென்ன கேசவ பெருமாளும், சென்ன மல்லீஸ்வர ஸ்வாமியும் நமக்கு அருள் பாலித்துக் கொண்டிருப்பதை இப்பெயருக்குச் சான்றாக அவர்கள் முன் வைக்கிறார்கள்.

மன்னர்களின் ஆட்சிக் காலத்துக்குப் பிறகு ஆங்கிலேயர்களும், போர்த்துகீசியர்களும், பிரெஞ்சு மக்களும் அதிகம் வந்து போகக் கூடிய இடமாக இருந்தது பட்டணம். ஆங்கிலேயர்களை எதிர்த்து மைசூர் திப்பு சுல்தான் போரிட்ட களமாக இருந்தது பட்டணம். 17ஆம் நூற்றாண்டில் நடந்த அந்தப் போரில் பட்டணக் கோயில்கள் என்று அழைக்கப் பட்ட சென்ன கேசவ, மற்றும் சென்ன மல்லீஸ்வர ஸ்வாமி கோயில்கள் தரை மட்டமாக்கப் பட்டன.

மேலும் பிரெஞ்சு நாட்டுக் காரர்களும், ஏற்கனவே இருந்த போர்த்துக்கீசியர்களும் ஆங்கிலேயரோடு பட்டணத்தில் போரிடத் துவங்கினர். இந்த நிலையில் ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பனிக்கு நிறைய நிலமும், கட்டட வசதிகளும், ஆட்களும் தேவைப்பட்டனர். பட்டணப் பகுதி அதற்கு ஏற்றதாக அவர்களுக்குத் தோன்றவே அந்த பெரு நிலப் பகுதியை சென்னப்ப நாயக்கரிடமிருந்து 1939ஆம் வருடம் ஆகஸ்டு 22ஆம் தேதி வாங்கினர் என்று ஒரு கூற்றும், ‘வெங்கடாத்ரி நாயக்குடு’ என்பவரிடமிருந்துதான் இந்த நிலப்பகுதி வாங்கப் பட்டன எனவும் சொல்லப் படுகின்றன. வாங்கிய துரையின் பெயர் ‘ஃப்ராஸிஸ் டே’ என்பதாகும்.

அதன் பிறகு திரு. ஜார்ஜ் துரை அவர்களால் புனித ஜார்ஜ் கோட்டையும், அதனுள் இருக்கும் தேவாலயமும் கட்டப் பட்டன. அவரே கடைகளும், குடியிருப்புகளும் நிறைந்த ஜார்ஜ் டவுண் பகுதியை அமைத்தார். இந்தியாவின் முதல் வைஸ்ராயான திரு. ராபர்ட் கிளைவ் அவர்களின் திருமணம், புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள தேவாலயத்தில் தான் நடந்தது. அந்தத் திருமணச் சான்றிதழ் இன்றளவும் பத்திரப் படுத்தப் பட்டுள்ளது.

ஆங்கிலேயர்களுக்கு முன்னதாகவே இந்தியாவில் கால் பதித்த போர்த்துகீசியர்கள் 16ஆம் நூற்றாண்டில் கட்டியது தான் பிரகாச மாதா ஆலயமும் சான் தோமே தேவாலயமும். போர்த்துகீசிய மொழியில் லுஃஜ் (LUZ) என்றால் ஒளி மயம், பிரகாசம் என்று பொருள் படும். அதனால் தான் அந்த தேவாலயம் இருந்த பகுதி ‘லுஃஜ் சர்ச் ரோடு’ என்று, இன்றும் அழைக்கப் படுகிறது.

சாந்தோம் சர்ச்.

அதே போன்று ‘சாந்தோம்’ என்பதுவும் போர்த்துகீசிய சொல்லே. சான் என்றால் புனித என்று போருள். தோமே என்பது ஏசு நாதரின் நேரிடையான சீடர்களில் ஒருவரான தாமஸ் என்பவரைக் குறிக்கும். அவரது புனித உடல் அடக்கம் செய்யப்பட்ட இடம் என்பதால் இந்த இடத்திற்கு ‘சான் தோமே (புனித தாமஸ்)’ என்று பெயர் ஏற்பட்டு, அது நாளடைவில் சாந்தோம் என்று வழங்கி வருகிறது. எழுத்தாளர் ‘சாரு நிவேதிதா’ தான் வசிக்கும் இந்தப் பகுதியைக் குறிப்பிடும் பொழுது ‘சான் தோமே’ என்றே குறிப்பிட்டு வருகிறார்.

ஆராய்ந்து பார்த்தோமானால் சென்னையில் இப்படி காரணம் தெரியாமல் உலவும் பெயர்கள் பல இருக்கலாம். அவற்றை எல்லாம் கூர்ந்து நோக்கினால் சென்னையின் வரலாறு இன்னும் முழுமையாக நமக்குக் கிடைக்கும்.

மெட்ராஸ் என்றும், மட்ராஸப் பட்டினம் என்றும் சென்னை அழைக்கப் பட்டதற்கான காரணம் மட்டும் இன்று வரை தெளிவாக இல்லை. கடற்கரை சார்ந்த பகுதிகளை போர்த்துகீசிய மக்கள் அவர்கள் மொழியில் மெட்ராஸ் என்றோ அல்லது அங்கு அவர்கள் கட்டிய தேவாலயத்தின் நினைவாக ‘சர்ச் டி மெட்ரசே’ என்றோ அழைத்திருக்க வேண்டும். அதுவே நாட்டு மக்கள் வழக்கில் ‘மெட்ராஸப் பட்டினம்’ என்றும், ‘சென்னப் பட்டினம்’ எனவும் வழங்கி இறுதியில் ‘சென்னை’ என்று நிலைத்து விட்டது.

எப்படி எந்தப் பெயரால் அழைத்தால் என்ன? வந்தாரை வாழ வைக்கும் சென்னை, தரும மிகு சென்னை தன் இயல்பிலிருந்து மாறாமல் வளர்ச்சிப் பாதையில் போய்க் கொண்டேயிருக்கும். மக்களின் கடின உழைப்பு ஒன்றையே மூலதனமாகக் கொண்ட சென்னை, இந்தியாவிலேயே தலை சிறந்த தொழில் நகரமாக மாற வேண்டும் என்பதே, எல்லா சென்னை வாசிகளையும் போலவே எனது விருப்பமும். அதற்காக சென்ன கேசவப் பெருமாளையும் , சென்ன மல்லீஸ்வர ஸ்வாமியையும் பிரார்த்தித்துக் கொள்வோம்.

 

சாந்தோம் சர்ச் படத்துக்கு நன்றி.

அக்காலத்து சென்னையின் படத்துக்கு நன்றி.

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “சென்னை – ஒரு அறிமுகம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *