சிரிப்பின் ஸ்தல புராணம்….ஒருமுறை சிவனைப் பார்க்க கைலாஸம் சென்ற மஹாவிஷ்ணுவின் , சக்கரத்தைப் பிள்ளையார் வாயிலிட்டு விழுங்கிவிட்டாராம்….வினாயகரோ, பெரிய வீட்டுப் பிள்ளை(சிவனின் சீமந்தப் புத்திரன்)….அதட்டவும் முடியாது….பார்த்தார் விஷ்ணு….தனது நான்கு(தோர்பி) கைகளால் காதைப்(கர்ணம்) பிடித்து….தோர்பி கர்ணம்தான் நாளடைவில் மருவி தோப்புக் கரணம் ஆனது…. நெடுமால் மேலும் கீழும் எழுந்து அமர்ந்து வேடிக்கைக்(ஸ்லாப்ஸ்டிக் ஹுயூமர்) காட்ட….குழந்தை வினாயகர் சிரித்ததில், வாயிலிட்ட சக்கிரம் உருண்டு விழுந்ததாம்….விஷ்ணு அதை எடுத்துக் கொண்டு சென்றாராம்….இதுதான் ‘’ஹாஸ்யம்’’ பிறந்த கதை….உபயம்-காஞ்சி பெரியவா….அதன் வெண்பாவாக்கம் கீழே….

‘’காப்புக் கரம்கொண்டு, காதைப் பிடித்துமால்,
தோப்புக் கரணமிட தந்தியின்முன், -சாப்பிட்ட,
சக்கிரம் வீழ சிரித்தனன், அக்கணம்,
பொக்கென ஹாஸ்யம் பிறப்பு’’….(1)
—————————————————————————————————————–

‘சிந்திக்கும் வேளை சிரிக்க இறைவனை,
சந்திக் கலாமே சகஜமாய், -பந்திக்கு
முந்துதல் போல முறுவலைப் பூத்திட,
உன்திக்கில் வெற்றி உதிப்பு”….(2)
—————————————————————————————————————–
‘சிரிமுடிந்தால் சிந்தி, சிரமமென்றால் மேலும்
சிரி”சிரித்த பின்மூக்கை சிந்தி, -விரிசிறகை
வானில் பறந்திடுவாய் வாய்விட் டுநகைக்க,
ஊனில் குறையே(து) உனக்கு”….(3)
——————————————————————————————————-
“வாகான வாயுனக்கு வந்ததேன்! , வீழ்த்திடும்,
சோகானு பூதியைச் சொல்லவல்ல, -ஆகாயம்,
கீழுள்ள ஆய கலையில் சிரிப்பின்றேல்,
பாழுந்தன் வாய்ப்பந்தல் பேச்சு”….(4)

————————————————————————————————————–

“சிந்தனை தோன்றும்முன், சீறிக் குதித்திடும்,
பந்தென வாய்க்குள் பளேர்சிரிப்பு, -சிந்தனை,
வாராது போனாலும், வாய்விட் டுச்சிரிக்க,
வாராது நோயுன் வழிக்கு”….(5)
————————————————————————————————————-

‘கொல்லையில் பூத்து கொடியில் மணத்திடும்,
முல்லையைப் போல முறுவலிக்க, -வல்லமை,
தாராய் பராசக்தி, துன்பத்தில், தோல்வியில்,
மாறா சிரிப்பாய் மலர்”….கிரேசி மோகன்….(6)
————————————————————————————————————-
”வேண்டுதல் வேண்டாமை விட்டோன் சிரிப்பினில்,
மூண்டெழும் மோன முகம்துதிக்க, -தீண்டுமோ,
தீமைகள் நம்மை, திருவருணை யோகியார்
ஆமை,நாம் குஞ்சாம் அவர்க்கு”….(7)
—————————————————————————————————

”எல்லோரும் இன்புற்(று) இருப்பதல்லால், வேறொன்றும்
சொல்லார், சிரிக்கவும் சிந்திக்க, -வல்லார்கள்,
முல்லாபீர் பால்ராமன், மூஞ்சி சிடுசிடுப்பை,
இல்லாமல் செய்யும் இறை”….(8)
———————————————————————–

‘’சிரிப்பொரு சஞ்சீவி, சீக்காளி தன்னை,
உருக்கும்நோய் தீர உதவும், -இருக்கலாம்,
பத்தியம், மாத்திரை, பக்க விளைவின்றி
சத்திய மேவ சிரிப்பு’’….(9)
——————————————————————————

”இப்பநான் பீச்சில் இறைக்க நடப்பது,
உப்பெடுத்து இவ்வுடலை ஒப்பேற்ற, -அப்பெருமான்,
காந்தி மகான்தன், கனிவான பொக்கையில்,
சேந்திய உப்பே சிரிப்பு”….(10)
———————————————————————————

‘’உம்மணா மூஞ்சியோ! , உல்லாஸ மூஞ்சியோ !,
எம்மனார் கூப்பிட்டால் ஏளணும், -சும்மனாங்
காட்டி சிரித்திட, காயம் மரிக்கையில்,
சூட்டிகை, ஆக்கும் சிரிப்பு’’….(11_

எதுகைக்காக ‘’எமனார் எம்மனார்’’….
காயம் -உடம்பு….
——————————————————————————————–

‘’ஏகாந்தம் கொள்ளுதற்கு, ஏனிமயம் போகணும்,
தேகான்ம பாவம்(BHAAVAM) தொலைத்தவர்க்கு, -ஆகா
இருக்கிங்(கு) இமயம் இழுத்துவர உண்டாம்,
சிரிப்பிருக்(கு) பேரதற்கு சோ’’….(12)
————————————————————————————————–

’’என்னைத் தவிரவேறு ஏதிங்(கு) இருப்பதற்கு,
முன்னைப் பழம்வினைகள் மாயமே! -சென்னையில்,
கூவத்தின் தீரம் கொசுகடித் தாலுமே,
ஜீவித்(து) இருப்பாய் சிரித்து’’….(13)
————————————————————————————————————

விடிகாலை வெளிச்சம்”
——————————

“சிரிப்பதிகாரம்”….
———————–

“உள்ளது ஒன்றே உணர்வது, மாயையால்,
கள்ளதைப் பாலாய்க் குடித்திடும்; -பிள்ளாய்,
சுரக்கும் பசும்பால், கறக்கும் வரைதான்,
சிரிப்”பால்” கறந்திடுஸீ ஸே”….(14)
———————————————————————————————-

”வாய்வரும்முன் கண்ணால் வெடித்து சிரிப்பவர்,
நோய்வரும்முன் காக்கும் நிறைமதியார்: –தாய்வரும்முன்,
சேய்வருதல் போல, சிரிக்கப் பழகியவர்
பாய்வரும்முன் தூங்கு பவர்”….(15)
——————————————————————————————

”செருப்பால் அடித்தின்னா செய்தவர் நாண
சிரிப்பால் அடித்துநன்மை செய்யும், -பொருப்பால்
உயர்ந்த மனிதன் உருவாக வாய்ப்பு
அயர்ந்திடா(து) ஹாஸ்யம் அணி”….

(OR)—————————————————, -பொருப்பால்
திருக்குறள் ஆவாய், திருவ்வருணை ஆவாய்,
கருப்பொருளாய் ஹாஸ்யத்தைக் கொள்”….(16)
———————————————————————————————-

”’நகைச்சுவை நாணல் நதிவாழ்வு சீற,
திகைக்கா(து) உறுதியாய் தப்பும்: -பகையாம்
இடுக்கண்வந் தாலென் இரண்டு செவியில்
கடுக்கன் சிரிப்பினைக் கொள்”….(17)
———————————————————————————-

”பத்தினி சொல்லியும் பெய்யா மழைசிரிப்பால்,
சித்திரையில் சோவென்று ஜில்லாக்கும்: -பித்தன்போல்,
கிச்சுகிச்சு மூட்டினாலும், கேலியேதும் செய்யாது,
வச்சுக்க, வையாதே WIT”….(18)
————————————————————————————-

”வாத கபபித்தம், வாட்டும் பழவினைகள்,
ஜாதக தோஷங்கள் ,சீண்டாது, -மோதக
மூஷிக வாகனனால், மூண்ட சிரிப்பிருக்க,
தூஷணையும் தோத்திரம் தான்”….(19)
—————————————————————————————

”சிலர்சிரிப்பார், வேறுசிலர் சிந்திப்பார், ஆனால்,
கலர்சிரிப்பே கண்ணுக்கு கூலிங், -மலர்சிரிப்
போடுசேர்ந்து சிந்திக்கும் புத்தி மணத்திடும்,
நாடு மணக்க நகை”….(20)
——————————————————————————–

”சிரிப்பதிகாரம்”
———————————-
”தாய்சிரிக்கத் தானழுது சேய்பிறக்கு மாற்போல்நீ,
வாய்சிரிக்க, சிந்திக்க வைநெஞ்சே, -பாய்விரிக்கும்
மூப்பில் வருமே முனகல்தான், புன்னகைக்
காப்பில் இருக்கக் களிப்பு”….(21)
———————————————————————-

”கழுதையின் பாலைக் குடித்திடல் வேண்டாம்
அழுத மகன்வாய் அகண்டு, -பொழுதுபோக,(ராத்திரி)
கண்ணயர்ந்த வேளையில், காட்டிடுவார் கண்ணபிரான்
புன்னகைக்க உம்மாச்சி பூ”….(22)
—————————————————————————

”உன்னைப்பார்த்(து) இந்த உலகம் சிரிக்கட்டும்,
எண்ணைவார்த் துத்தீ எரிதல்போல், -முன்னை
சிரித்தீசன் முப்புரம் சாம்பலில் மூழ்த்த,
விரித்தனன் நெற்றி விழி”….(23)
———————————————————————————-

“தோத்திரம் செய்தாலும், தூஷணை செய்தாலும்,
ஆத்திரம் வேண்டாமே, அக்ஷயப், -பாத்திரமாய்,
அன்னத்தைப் பூர்ணமாய், இன்னாசெய் தோர்க்குமளி,
என்னத்தைக் கண்டாய் எதிர்த்து”….(24)
——————————————————————————————-

”பல்லுபோய் ஆவோம்நாம் பொக்கையாய், ஆனாலும்
சொல்லுதான் போகும், சிரித்திடும் -கொல்லுபோமோ!(கொல்லென்ற சிரிப்பு)
ஏந்திடு வாயில் எதுவந்த போதிலும்,
சாந்தி முகூர்த்த சிரிப்பு’’….(25)
—————————————————————————————————-

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.