இங்கிலாந்திலிருந்து ஒரு மடல். . . (231)

0

அன்பினியவர்களே!

அன்பான வணக்கங்களுடனும் துயரம் மிகுந்த நெஞ்சத்துடனும் உங்கள் முன்னே அடுத்த மடலுடன் நான். இவ்வாரம் வரும் ஞாயிறு அதாவது 26ஆம் திகதி இங்கிலாந்தில் “அன்னையர் தினம்” கொண்டாடப்படுகிறது. அன்னையின் தினத்தின் அருமைகளைப் பற்றியும் எனது அன்னையின் நினைவுகளைப் பற்ரியும் மடல் மூலம் உங்களுடன் உறவாட எண்ணியிருந்த எனக்கு இம்முறை அன்னையர் தினத்தின் போது மூடத்தனமான பயங்கரவாதச் செயலுக்கு தமது உயிரை இழந்து விட்ட துயர எண்ணங்களுடன் மடலை வரைய வேண்டிய நிர்ப்பந்தத்தைக் காலம் என்மீது திணித்து விட்டது.

eng1ஆம், நேற்று அதாவது 22ஆம் திகதி இங்கிலாந்து நேரப்படி மதியம் சுமார் 2.40 மணியளவில் இங்கிலாந்தின் தலைநகரமான இலண்டனின் இதயமாகக் கருதப்படும் லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் பகுதியில் மிலேச்சத்தனமான பயங்கரவாதத் தாக்குதல் ஒன்று நிகழ்த்தப்பட்டதை ஊடகங்களின் மூலம் வாசகர்கள் அறிந்திருக்கலாம்.

என்ன உலகில் பல நாடுகளில் அன்றாடம் போர்களின் மூலம் உயிரிழந்துகொண்டிருப்போர் எத்தனையோ பேர் இல்லையா? பின் இதென்ன பெரிய விடயம்? எனும் கேள்வி எழுவது நியாயமே! போர் எனும் நிகழ்வின்போது உயிர்கள் இழப்பது துயரம் மிகுந்த சம்பவமாக இருந்தாலும் அது ஓரளவு எதிர்பார்க்கப்பட்ட நிகழ்வே! ஆனால் எதுவிதமான தடயங்களும் இல்லாமல் தமது அன்றாட அலுவல்களில் ஈடுபட்டிருக்கும் அப்பாவிப் பொதுமக்களின் மீது நிகழ்த்தப்படும் தாக்குதல்கள் உள்ளத்தில் ஒருவித மனக்கிலேசத்தை, அச்சத்தை ஏற்படுத்துவது தவிர்க்க முடியாததே!

பிரான்சு, ஜேர்மனி என்று ஐரோப்பிய முக்கிய நாடுகளில்eng2 சமீபகாலங்களில் மதத்தின் பெயரால் அப்பாவி மக்களின் உயிர் காவு கொள்ளப்பட்ட செய்தியின் போது உள்ளம் பதைத்தது.ஆனால் இங்கிலாந்தில் 2005ஆம் ஆண்டு ஜூலை மாதம் 7ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னால் உள்ளத்தைப் பதைக்க வைக்கும் நிகழ்வாக நேற்றைய நிகழ்வே அமைந்துள்ளது. வறட்சியால் ஏற்படும் பட்டினி, போரால் ஏற்படும் பட்டினி, பயங்கரத் தொற்று நோய்களால் ஏற்படும் உயிரிழப்புகள், இயற்கை அனர்த்தங்களினால் ஏர்படும் உயிரிழப்புகள் என உலகில் மக்கள் எதிர்கொள்ளும் இக்கட்டான சூழ்நிலைகள் எத்தனையோ! இவைகளின் மத்தியில் மதத்தின் பெயரால், தாம் தம்முடைய மேலாதிக்கத்தை நிலைநிறுத்த வேண்டும் எனும் முனைப்பால் மிலேச்சத்தனமாக மற்ற மனித உயிர்களை, அதுவும் அப்பாவிகளான மனித உயிர்களைக் காவு கொள்ளும் மிருகத்தனமான செயல்களின் நிகழ்வுகள் உள்ளத்தில் ஆறாத துயரத்தை ஏற்படுத்துகிறது.

Paramedics treat an inured person after an incident on Westminster Bridge in London, March 22, 2017. REUTERS/Toby Melville

மதம் என்பது இறைவன் எனும் ஓர் ஆன்மீக ஒளியை நோக்கிய பயணத்திற்கு ஏற்படுத்தப்பட்ட பாதை. அவ்வான்மீக ஒளியின் உண்மை வடிவம் அன்பேயாகும். உலகில் உள்ள மதங்கள் குறிப்பிடும் இறை வடிவங்கள் அனைத்தும் அன்பின் அடையாளங்களே! இவ்வன்பும், மனிதத் தன்மையும் அறிமுகமில்லாத மனிதர்களாகவிருப்பினும் அவர்கள் மீது கருணை கலந்த மனிதாபிமானத்தைக் காட்டுவதையே அடிப்படையாகக் கொண்டுள்ளன. இறை மார்க்கத்தை அடையும் இப்பாதையின் மீது கொள்ளும் வெறியால் மற்றொரு மனித உயிரைப் பறித்துக் கொள்வது எவ்வகையில் அவ்விறைக்கு நாம் செலுத்தும் காணிக்கையாக முடியும்?

18 வயதில் இந்நாட்டிற்கு வந்த எதுவித அறிமுகமற்ற எனக்கு ஆதரவளித்து கல்வியூட்டி தம்முடைய சமுதாயத்திலே ஓர் அங்கமாக இணைத்து எனக்கு இந்நாட்டிலேயே வசதிமிக்க வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக் கொடுத்தது இங்கிலாந்து. என்னுடைய இந்த 42 வருட கால இங்கிலாந்து வாழ்வின் அனுபவத்தில் என்னை நோக்கி வீசிய வெறுப்புக் கணைகள் மிகவும் சொற்பமே! இனத்துவேஷம், நிறவேற்றுமை என்பன சிலரது மனங்களில் இருந்தாலும் பெரும்பான்மையாக வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் எனக்குக் கைகொடுத்து உயர்த்தி விட்டவர்கள் அநேகம் பேர்.

அதேபோல நான் பிறந்த எனது தாய்நாட்டில் எனது சகோதர சகோதரிகள் அல்லலுற்று அகதிகளாக இங்கு தஞ்சமடைந்தபோது அவர்களுக்கு வாழும் வகையை ஏற்படுத்திக் கொடுத்தது இங்கிலாந்து. நான் பிறந்து எனக்குத் தமிழ் கொடுத்த என் தாய் மண்ணிற்கு அடுத்து, தமிழ் தோன்றி வளர்ந்த பாரத தேசத்திற்கு பின்னால் என்னெஞ்சில் அதிமுக்கிய இடத்தை வகிப்பது இங்கிலாந்து. இவ்வினிய நாட்டில் நேற்று வெஸ்ட்மினிஸ்டர் பாலத்தில் நடைபாதையோரத்தில் நடந்து கொண்டிருந்தவர்கள் மீதும், இவ்வழகிய லண்டன் நகரின் அழகினை, தேம்ஸ் நதியின் அழகினை அப்பாலத்தில் நின்று ரசித்துக் கொண்டிருந்த அப்பாவி உல்லாசப் பிரயாணிகள் மீதும் சிற்றூர்தியை மோதவிட்டு மிலேச்சத்தனமான தாக்குதலை நடத்தியுள்ளான் ஒரு வெறியன். அது மட்டுமன்றி இங்கிலாந்து பாராளுமன்ற வளாகத்தினுள் கத்தியோடு ஓடி தடுப்பதற்கு முனைந்த காவற்துறை அதிகாரியின் மீது கத்தியைப் பாய்ச்சி உயிரைப் பறித்திருக்கிறான்.

உலக ஜனநாயக நாடுகளுக்கு எடுத்துக்காட்டாக முன்மாதிரியாக இயங்கிக் கொண்டிருப்பது உலகின் அதி பழமையான இங்கிலாந்துப் பாராளுமன்றம் என்றால் மிகையாது. இத்தகைய ஒரு சரித்திரப் பிரசித்தி பெற்ற அமைப்பின் மீது, அங்கே ஜனநாயகத்தின் அடிப்படையில் விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில், இத்தகைய அசம்பாவிதத்தை இத்தகைய மூடக்கும்பல் ஏற்படுத்தியது உலக ஜனநாயகத்திற்கே விடும் சவாலாகத்தான் தெரிகிறது.இக்கண்மூடித்தனமான தாக்குதலில் நால்வர் உயிரிழந்திருக்கிறார்கள். வெஸ்ட்மினிஸ்டர் பாலத்தில் சிற்றூர்தியால் மோதுண்டு 48 வயதுப் பெண்மணியும், 50 வயது ஆணும் உயிரிழந்திருக்கின்றனர். காரைப் பாலத்தில் மோதவிட்டுவிட்டுக் கத்தியோடு பாராளுமன்றத்துக்குள் இப்பயங்கரவாதி நுழைய முற்பட்டபோது அதைத் தடுக்க முனைந்த காவற்துறை அதிகாரி இப்பயங்கரவாதியின் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். இப்பயங்கரவாதியை காவற்துறையினர் சுட்டுவீழ்த்தியுள்ளனர். துப்பாக்கிக் காயங்களினால் இப்பயங்கரவாதியும் உயிரிழந்துள்ளான். அதைத்தவிர சுமார் 40 பேர்வரை அப்பாலத்தின் மீது நடந்த விபத்தில் படுகாயங்களுக்குள்ளாகியிருக்கிறார்கள்.

இத்தகைய மூடர்களின் செய்கைக்கு அவர்கள் சார்ந்துள்ள மதம் எவ்வகையிலும் பொறுப்பாகாது. ஆனால் இதன் தீமையான விளைவு என்னவென்றால் தொடர்ந்து நிகழ்த்தப்படும் இத்தாக்குதல்களுக்கு மதத்தின் பெயரை இவர்கள் உபயோகிப்பதால் பொதுவாகவே மக்களுக்கு இம்மதத்தைச் சார்ந்தவர்களின் மீதான கண்ணோட்டத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இத்தகைய தாக்குதல்களைத் தடுப்பதற்காகவேதான் சில கடுமையான சட்டங்களை இயற்றுகிறேன் எனக் கொக்கரிக்கும் டொனால்ட் ட்ரம்ப் போன்றவர்களின் கை வலுவடைய இடமளிக்கிறது. வெளிநாட்டுக்காரரின் தொடர் வருகை இந்நாட்டின் இறைமைக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது என வாதிடும் இனத்துவேஷிகளின் வாதத்தை இவ்வகையான கோழைத்தனமான, மிலேச்சத்தனமான எதுவித நியாயங்களுமற்ற தாக்குதல்கள் நியாயப்படுத்துகின்றன.

ஆகமொத்தம் தனது மதத்தின் பெயரால் அன்னையர் தினத்துக்கு முன்பாக சில குழந்தைகளின் அன்னையரையும், சில அன்னைகளின் குழந்தைகளையும் மோசமான விளைவுகளுக்குளாக்கியிருப்பதைத் தவிர இப்பயங்கரவாதி வேறொன்றையும் சாதிக்கவில்லை. பயங்கரவாதத்தினால் ஜனநாயகத்தை சீர்குலைக்க முடியாது என்று இன்று வழமை போல் இங்கிலாந்துப் பாராளுமன்றம் தமது அன்றாட நிகழ்வுகளை நடத்துகிறது.

தவறு செய்பவன் மனிதன்; தண்டனை இறைவனுக்கும், மதத்துக்குமா?

மீண்டும் அடுத்த மடலில்…

அன்புடன்
சக்தி சக்திதாசன்

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *