திறந்த கொள்முதல் ஒப்பந்தங்கள்
பவள சங்கரி
அனைத்துத் துறைகளிலும் வெளிப்படைத்தன்மையோடு கூடிய செயல்பாடுகளாகிய மத்திய அரசின் புதிய அணுகுமுறை ஏகோபித்த முறையில் பாராட்டு பெற்றுவரும் நிலையில் அனைத்து மாநில அரசு தொடர்பான கோரிப்பெறப்படும் ஒப்பந்தங்களும் வெளிப்படைத் தன்மையுடையதாக இருத்தல் அவசியம். பொது மக்களுக்கு அளிக்கக்கூடிய சமையல் எரிவாயுவிற்குரிய மானியத் தொகையோ, அல்லது விவசாயிகளுக்கு அளிக்கப்படும் மானியத்தொகையோ அனைத்தும் வங்கிகளில் நேரடியாகச் செலுத்தப்படுகின்றன. இதன் மூலமாக போலி கணக்குகள் ஒழிக்கப்பட்டு பல கோடி ரூபாய்கள் சேமிக்கப்பட்டுள்ளன. இதுபோல் மாநில அரசுகள் கொள்முதல் செய்யும் அனைத்து இனங்களும் வெளிப்படைத் தன்மையோடு கூடிய ஒப்பந்தங்களே கோரிப் பெறப்படவேண்டும். இதன் மூலமாக பல ஆயிரம் கோடி ரூபாய்கள் முறைகேடான முறையில் செல்வது தடுக்கப்படும். சமீபத்தில் உலக வங்கி சென்ற ஆண்டான 2016இல் மட்டும் 14 இலட்சம் கோடி கருப்புப் பணமாக வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாகவும், சுமார் 6,000 கோடி கருப்புப்பணமாக இந்தியாவிற்குள் வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. பிரதமரின் கருப்புப் பணத்தை ஒழிக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாக அனைத்து ஒப்பந்தங்களும் (transparent tender) வெளிப்படையாக இருந்தால் இதில் ஒரு நல்ல முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. சமீபத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய்க்கான நிலக்கரி கொள்முதல் செய்யப்படும் என்று மாநில மின்சாரத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். இந்த கொள்முதல் நெய்வேலி நிலக்கரி சுரங்கத்திலிருந்து பெறப்படுமா அல்லது இந்தியாவிலுள்ள நிலக்கரிச் சுரங்கங்களிலிருந்து வெளிப்படையான ஒப்பந்தங்கள் மூலமாக கொள்முதல் செய்யப்படுமா, அதற்குரிய தரங்கள், விலைகள் வெளிப்படையாக அறிவிக்கப்படுமா போன்ற தகவல்கள் ஏதும் வெளிவரவில்லை. இந்தியாவிலுள்ள பல தனியார் நிறுவனங்கள் இந்தியாவிலேயே நிலக்கரியை கொள்முதல் செய்கின்றனர். அவர்கள் தரமும், விலையும் பார்க்காமல் கொள்முதல் செய்ய வாய்ப்பில்லை. திறந்த சந்தை கொள்முதல் முறைப்படி நமது அனல் மின் நிலையங்களுக்குத் தேவையான நிலக்கரிகளை கொள்முதல் செய்தால் பல ஆயிரம் கோடி ரூபாய் மீதமாகும். பொறுப்பில் உள்ளவர்கள் இதுபற்றி சிந்திப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்.